வெள்ளி, 18 ஜனவரி, 2008

யேசுராசாவின் 'குறிப்பேட்டிலிருந்து'

நூல் விமர்சனம்

'குறிப்பேட்டிலிருந்து'

'அலை' யேசுராசா

பக்கங்கள்: 132

வெளியீடு: அலை, இல: 1, ஓடக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்

விலை: 200 ரூபா


--------------------------------------------------------------------------------

அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து (எமக்குத் தெரிந்தவரை) ஈழத்தமிழுலகில் இலக்கியத்துறையில் அறியப்பட்டவரான 'அலை' யேசுராசாவின் ஏழாவது படைப்பு இது.

அவர் வாழ்ந்த சூழலில் அவர் வாழ்ந்த சமூகமும், அவர் கண்ட மனிதர்களும் அவரை எவ்வாறு பாதித்தன என்பதை அவரது பாணியில் தந்திருக்கிறார். இயல்பாகவே எழுத்தாளனுக்குரிய விசனமும் விரக்தியும் ஏமாற்றமும் வரிக்கு வரி பின்னூடாகத் தொடர்வது வாசகனுக்கு ஏமாற்றத்தைத் தரவில்லையாயினும் ஈழத்து இலக்கிய வானில் நித்திய பிரகாசிகைகளாக இரவலொளி தந்து கொண்டிருந்த பன் முக நட்சத்திரங்களை தனது முப்பதாண்டு காலப் பட்டறிவின் மூலம் மீண்டும் மீண்டும் உரசிக் காட்டும் பணியில் யேசுராசா வெற்றி பெறுகிறார்.

'எமது கலை இலக்கியவாதிகள் மேன்மையானவர்கள்தானா? இவர்களது கலை, இலக்கியப் பிரகடனங்கள், விருதுகள், புகழ் எந்தளவிற்கு நேர்மையானவை? இவர்களுக்கு ஏன் ஒன்றிற்கு மேற்பட்ட 'முகங்கள்'? பட்டம், பதவி, பணம் - பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தோர், அரசாங்க அதிகாரிகள், வியாபாரிகள் பின்னால் 'அந்தரப்பட்டுச் சென்றுதானே தம்மை நிலை நிறுத்த முயல்கின்றனர்!

கோமாளித்தனங்கள், மோசடிகள், தன்னலம் மிக்க தந்திரச் செயல்களுடன் - ராஜ கம்பீரராய்ப் பெருமம காடிடிப் பவனி வருகின்றனர்! அதிசய ஆடை அணிந்த அரசனின் நிர்வாண உண்மை நிலை சொன்ன தூயமனக் குழந்தையாய் நம்மிற் பலர் ஏனில்லை?

நம்பிக்கை, எழுத்து, செயல் என்பவற்றுக்கிடையே இடைவெளி இல்லாத -

இயன்றவரை நேர்மையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டுமென்ற-

அறம் சார்ந்த நிலைப்பாடு தளர்ச்சியுற்ற சூழல் தொடர்வது பெருமைக்குரியதல்ல.'

என்று தான் சார்ந்த இலக்கியச் சூழலைக் கரித்துக் கொட்டுவதில் மேலும் பல கலை இலக்கிய வாதிகளுடன் இவர் ஒத்திசைகிறார். இருப்பினும் இவரின் சாடலிலிருந்து தப்பித்த நல்ல பல இலக்கியவாதிகள் பற்றி நாமறியும் வாய்ப்பும் இங்கு கிடைக்கிறது.

கரங்களுக்குப் பாரமில்லாத, தூக்கம் தராத நடை. வாசிக்கலாம்.

-சிவதாசன்

கருத்துகள் இல்லை: