செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கனடிய அரசியலில் தமிழர்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கனடாவில் தமிழரின் பெருமளவிலான குடி வரவு ஆரம்பித்தது 1982 ம்; ஆண்டளவில் தான். இதை ஆரம்பித்து வைத்தவர்களாக ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரியிருந்த தமிழர்களைக் குறிப்பிடலாம். அப்பொழுது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நுழைவு முன் அனுமதி பெறாமலேயே  கனடாவில் கால் பதிக்கலாம் என்ற விதி இருந்தது.  இச் சலுகையைச் சாதகமாக்கிக் கொண்டு பல தமிழர்கள் கனடாவின் பல இறங்கு துறைகளில் வந்திறங்கி அகதி நிலை கோரினார்கள். அப்போது பிரதமராக இருந்த பியர் ட்ரூடாவின் அரசும் அதைத் தொடர்ந்து வந்த பிரதமர் மல்றோனியின் அரசும் (இடையில் மூன்று மாதங்கள் ஜோன் ரேணர் அரசும் இருந்தது) தமிழ் அகதி நிலைக் கோரிக்கை விடயத்தில் மிகவும் அனுதாபத்தோடு செயற்பட்டார்கள்.

இந்த முதலாவது தமிழர் வருகை அலை பெரும்பாலும் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரை நோக்கியே இருந்தது. அதற்கு அடுத்த படிகளில் டொரோண்டோ, வான்கூவர், மனிடோபா நகரங்கள் இருந்தன. 

கியூபெக் மாகாணத்தில் மொழி பரிச்சயமற்ற நிலைமையிலும் பெரும்பாலான தமிழர்கள் அங்கு சென்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புதிய குடிவரவாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றது ஒப்பீட்டளவில் குறைந்த வாழ்க்கைச் செலவு. 1982-1983 காலப் பகுதிகளில் அங்கு புதிதாகக் குடிவந்த தமிழர்களின் எண்ணிக்கை ஓரிரு நூறுகளில் இருந்திருக்கலாம்.

நான் 1983 ஆவணி 31ல் மொன்றியால் நகருக்குக் குடி பெயர்ந்தேன். அப்போது மொன்றியல் நகரில் சுமார் நூறு தமிழர்கள் இருந்திருக்கலாம். தொழில் நிமித்தமாக எழுபதுகளில் குடியேறியிருந்த சில தமிழர்கள் மொன்றியால் நகருக்கு வெளியே, புறோசார்ட், வெஸ்ட் ஐலன்ட் போன்ற இடங்களில் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒரு சில ஈழத் தமிழர்களும் பல தமிழ் நாட்டுத் தமிழர்களும் இருந்தார்கள். பொங்கல் விழாவை இவர்கள் ஒன்றிணைந்து நடத்துவார்கள். அதைத் தவிர இந்த 'முது குடித்' தமிழர்கள் சமூகமாக ஒன்றிணைந்து வாழவில்லை என்று கருத இடமுண்டு.

ஈழத் தமிழர்களின் சமூக உருமாற்றத்திற்கு ஐரோப்பாவில் இருந்து கனடாவிற்கு வந்த தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவோ அல்லது மணமுடித்திருந்தால் குடும்பங்களை ஐரோப்பாவிலோ அல்லது ஈழத்திலோ விட்டு விட்டு வந்தவர்களாகவோ இருந்தார்கள். அவர்கள் படித்திருந்தாலும் அலுவலக வேலைகளைத தேடி ஓடாமல் எந்தவித அடி நிலை வேலைகளைச் செய்வதற்குத தயங்காதவர்களாகவும் கூட்டாக வாழ்ந்து பணத்தைச் சேமித்து தமது குடும்பங்களைப் பராமரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அதே வேளை தாய் நாட்டில் வீறு கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்பவர்களாகவும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பேணுபவர்களாகவும் இருந்தார்கள். 

அது தாய் நாடாகவிருந்தாலும் சரி வாழும் பிற நாடுகளாகவிருந்தாலும் ஈழத்தமிழர்களின் ஒரு பண்பு சனா சமூக நிலையங்கள், வாசிக்க சாலைகளை அமைத்து சமூக நலன்களை செய்வது. அமைப்புக்களை உருவாக்கி ஒழுங்கு படுத்தப்பட்ட சமூகமாக வாழ்வது அவர்களது வழக்கம். அத்தோடு உச்சம் பெற்றிருந்த விடுதலைப் போராட்டம் இவர்களின் தமிழ் மற்றும் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் முனைப்போடு செயற்பட வைத்தது. இதுவே அவர்களின் பின்னாளைய தாம்  வாழும் நாடுகளில் அரசியற் பிரவேசத்திற்கு வித்திட்டது எனச் சொல்லலாம்.

அப்போது மொன்றியால் நகரில் பல விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் கிளைகள் இருந்தன. அவர்கள் தம்மை ஒழுங்கு படுத்தப்பட்ட சிறிய கட்டமைப்புக்களாக உருவாக்கி இருப்பினும் ஒரு பொதுவான மக்கள் அமைப்பாக உருவெடுத்த முதல் அமைப்பு 'ஈழத் தமிழர் ஒன்றியம்' எனவே சொல்லலாம். 

1982 பிற்பகுதி அல்லது 1983 முற்பகுதியில் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர்களில் குறிப்பிடக் கூடியவர்கள் பொன்னுச்சாமி, முல்லைத் திலகன் மற்றும் மறைந்த நந்தகுமார் ஆவர். 

முல்லைத் திலகனின் கையெழுத்தில் கனடாவின் முதல் தமிழ்ச் சஞ்சிகையான 'தமிழ் எழில்' இச் சங்கத்தினால் வெளியிடப்பட்டது. 

ஈழத் தமிழர் ஒன்றியத்தைத் தொடர்ந்து 'தமிழர் ஒளி' என்ற அமைப்பும் தமிழ்க் கலாச்சார அமைப்பாக உருவெடுத்தது. எந்தவித அரச, சமூக உதவிப் பணங்களையும் பெறாது அங்கத்தவர்களின் பணத்தைக் கொண்டு நடத்தப்பட்ட ஈழத்தமிழர் ஒன்றியம் புதிய குடிவரவாளர்களுக்கு உதவிகளை வழங்கியதன் மூலம் மத்திய, மாகாண அரசுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இதே காலத்தில் டொரோண்டோ நகரில் வாழ்ந்த சில மூத்த தமிழ்க் குடிகளும் சில புதிய குடிவரவாளரும் சேர்ந்து தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி புதிய தமிழ்க் குடிவரவாளருக்குப் பல உதவிகளைச் செய்தும் கலாச்சார நிகழ்வுகளை நடாத்தியும் வந்தனர். 

இதே வேளை தலை நகர் ஒட்டாவாவில் அரச பணி புரிந்து வந்த கலாநிதி இலகுப்பிள்ளை போன்றோரம் புதிய குடிவரவாளருக்கு மிகுந்த உதவிகளைச் செய்து வந்தனர். ஒட்டவா நகரிலும் தமிழர் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு மத்திய அரசுடன் உறவை ஏற்படுத்தி புதிய குடிவரவாளருக்கு மட்டுமல்லாது தாய் நாட்டிலுள்ள மக்களின் விடுதலைக்காகவும் இவர்கள் செயற்பட்டனர். ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் கனடாவின் பல நகரங்களிலும் செயற்பட்ட சங்கங்கள் இணைந்து செயற்பட்டன. மத்திய கட்சிகளான லிபரல் கட்சியும் பழைமைவாதக் கட்சியும் தமிழ்ப் புதிய குடிவரவாளருக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு இச் சங்கங்கள் பெரும் உதவிகளைச் செய்தன.

இக் கால கட்டத்தில் தமிழர்களின் வாக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் இல்லாவிடினும் ஈழத் தமிழர்களின் சமூகமான வளர்ச்சி சகல நிலைகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. தமிழர் சங்கங்களின் பிரதிநிதிகள் அப்போதைய மத்திய அரசியல்வாதிகள் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பல நற்பணிகளைச் செய்தனர். அப்படியான அரசியல்வாதிகளில் மல்றோனி அரசில் குடிவரவு அமைச்சராகவிருந்த கியூபெக்கின் பியர்போன்ட்-டோலார்ட் தொகுதியின் பிரதிநிதி ஜெரி வீனெர் என்பவரும் பியர் ட்ரூடோ ஆட்சியில் குடி வரவு அமைச்சராகவிருந்த லோயிட் அக்ச்வேர்தி (மனிடோபா)ஆகியோர் தமிழருக்குப் பல சகாயங்களைச் செய்தனர். பிரதியுபகாரமாக தமிழர்களின் வாக்குகள் இவர்களை மட்டுமல்ல இவர்களது கட்சிகளையும் சென்றடைந்தது. பிற்காலத்தில் தமிழர்களின் அரசியற் பிரவேசத்திற்கான முதல் அடிக்கு வித்திட்டவர்கள் இப்படியானவர்களே.

ட்ரூடோ, மல்றோனி போன்றோரின் ஆட்சிக் காலங்களில் தமிழ்க் குடி வருவோரின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்காகப் பெருகியது. அத்தோடு கூடவே தமிழ் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியும் வேகம் கண்டது. பொதுவாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருந்த சங்கங்கள் இயக்கங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. ஈழ விடுதலையை மனதில் வைத்து இத்தகைய விடயங்களை மக்கள் பெரிதும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

தொண் நூறுகளின் ஆரம்பத்தில் தமிழர்களில் பல இளைய தலைமுறையினர் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர். பல குழுக்களாகப் பிரிந்து தம்மிடையே மோதிக்கொள்ளவும் செய்தனர். அதே வேளை வெள்ளையரல்லாதோர் கனடாவிற்குள் வருவதை எதிர்க்கும் பல அரசியல் வாதிகள் தமிழர் வன்முறையையும் இதர புதிய குடிவரவினரின் வன்முறைகள் போன்றவற்றையும் உதாரணமாகக் காட்டி நமது மக்களின் குடிவரவுக்கு முட்டுக்கடை போட்டனர். கனடிய பிரதான ஊடகங்களும் இதற்குத் தூபம் போட்டன . அரசு குடிவரவுச் சட்டங்களை மேலும் இறுக்கமாக்கியது. 2001 இரட்டைக் கோபுரத்  தாக்குதலைத்  தொடர்ந்து உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குள் கனடியாத தமிழர் தலைவிதி மட்டுமல்ல ஒட்டு மொத்த தலை எழுத்தும் மாற்றி எழுதப்பட்டது. இதனால் கனடிய தமிழர் அமைப்புக்களின்  நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. இறுதியில் விடுதலைப் புலிகளின் அமைப்பான உலகத்த தமிழர் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டது.

இது வரையில் தமிழர் அமைப்புக்களோடும் சமூகங்களோடும் ஊடாடி வந்த அரசியல் வாதிகள் ஒதுங்கத் தலைப்பட்டனர். கடும் போக்கான கன்சர்வேட்டிவ் கட்சி குடிவரவினருக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்க லிபரல் கட்சி ஓரளவு நட்புறவைப் பேணி வந்தாலும் பகிரங்கமான உறவாக அது இருந்ததில்லை. 

இருப்பினும் தமிழர் அமைப்புக்கள் பல எடுத்த தொடர் முயற்சிகளின் பயனாக சில அரசியல்வாதிகள் (மூன்று நிலை அரசுகளிலிருந்தும்) தமது சுய வாக்குத் தேவைகளுக்காக தமிழர் அமைப்புக்களையும் சமூகத் தலைவர்களையும் நாடி உறவுப் பாலங்களைப் புதுப்பித்துக் கொண்டனர். தமிழரது வாக்குப் பலத்தைத் தமிழர் உணர்ந்து கொண்ட தருணமிது.

கனடாவில் தாய் நாட்டிலுள்ள பெரும்பாலான விடுதலை அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது கிளை அமைப்புக்களை இங்கு நிறுவிக் கொண்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் அமைப்பே ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்றதும், அங்கத்தவர் எண்ணிக்கை கொண்டதும் ஓரளவு ஒழுங்கமைக்கப்பட்டதுமாக இருந்தது. புலிகள் தாய்நாட்டில் பலமான அமைப்பாக இருந்ததும் வெளிநாடுகளில் அதிக மூல வளங்களையும் அதிகாரத்தையும் அவர்கள் தம் கைவசப்படுத்தக் காரணாமாக இருந்திருக்கலாம். 'அவங்கள் தானே நிண்டு அடிபடுகிறாங்கள்' என்ற பொது மனோனிலையும் மக்களை அவர்கள் பக்கம் சாய வைத்தது.

கனடாவில் உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்படும் வரை அவர்களே தமிழரின் ஏகோபித்த பிரதினிதிகள் என்ற நிலைப்பாட்டை அவர்கள் வரித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் இங்குள்ள அரசியல்வாதிகளும் அவர்களுடன் உறவைப் பேணியிருந்தனர். உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்பட்ட பின்னர் அரசியல்வாதிகள் உண்ணி கழர்வது போல் கழர ஆரம்பித்ததும் தமிழர் மத்தியில் விழிப்புணர்வு உருவாகியது. இதன் பலனாக தமிழர் வாக்கு வங்கிகளைப் பயன்படுத்தி ஏன் தமிழ்ப் பிரதினிதிகளை இங்குள்ள மூன்று நிலை அரசுகளுக்கும் இதர சபைகளுக்கும் அனுப்பக் கூடாது என்றொரு முனைப்பும் தமிழரிடையே எழுந்தது. இதன் வெளிப்பாடாக வின்சண்ட் வீரசுந்தரம், டாக்டர் இலகுப்பிள்ளை போன்ற பலர் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிட்டனர். அவர்களால் வெற்றியீட்ட முடியவில்லை எனினும் அவர்கள் திறந்து விட்ட அரசியல் மடையில் தொடர்ந்தும் பல தமிழர்கள் ஓடினார்கள். நீதன் சான், லோகன் கணபதி, யுவனிதா நாதன் போன்ற பலர் கலிவிச் சபைகளுக்கும் நகரசபைக்கும் தெரிவாகினர்.

2009 இல் தாய்னாட்டில் போராட்டம் முடிவுக்கு வந்த போது, பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கனடாவில் தமிழர்கள் மேற்கொண்ட கவனஈர்ப்புப் போராட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கனடிய அரசியல்வாதிகள் ஆதரவைத் தரவில்லை. தமிழர் தரப்பு நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தாலும் அவற்றை இவ்வரசியல்வாதிகள் உதாசீனம் செய்தனர் என்றே சொல்ல வேண்டும். இதில் இங்குள்ள இரண்டு பிரதான மத்திய அரசியல் கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சியும் லிபரல் கட்சியும் தமிழருக்குத் துரோகமிழைத்து விட்டதாகவே பெரும்பாலான தமிழர்கள் நம்பினர்.

ஆனால் புதிய ஜனனாயகக் கட்சியின் (மத்திய) தலைவரான ஜாக் லெய்ட்டன் மட்டும் தமிழரின் கொறிக்கைகளை மதித்து அவர்களோடு பேசி தனது ஆதரவைத் தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல அவராகவே முன் வந்து தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ தொகுதியில் 2011 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளரைத் தரும்படி வேண்டிக் கொண்டார். அது வரையில் லிபரல் கட்சியோ அல்லது கன்சர்வேட்டிவ் கட்சியோ தமிழர் ஒருவரை வேட்பாளர் போட்டியிடுவதற்கான எதுவித் சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை. 

புதிய ஜனனாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெயிட்டனின் வேண்டுகோளை ஏற்று தமிழர் அமைப்பான கனடிய தமிழர் பேரவை தமிழர் சமூகத்தின் ஆதரவோடு ராதிகா சிற்சபைஈசனைத் தேர்ந்தெடுத்து ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் மத்திய பாராளுமன்றத்துக்கான புதிய ஜனனாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்தினர். இதற்கு இதர தமிழ் அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கின.  ஒருங்கிணைந்த தமிழர் ஆதரவுடன் கனடிய தமிழார் சமூகம் கனடாவின் முதல் தமிழ் வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினரைக் கனடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரின் வெற்றிக்கு இரண்டு காரணிகள் முன்னின்றன. ஒன்று-ஜாக் லெய்ட்ட்ன் என்ற மாபெரும் மனிதர். இரண்டு- 2009க்குப் பின்னான தமிழரின் உணர்வு பூர்வமான முனைப்பு. 

ராதிகா சிற்சபையீசனின் கனடிய பாராளுமன்றத் தெரிவு இரண்டு முக்கிய படிப்பினைகளைத் தந்தது. ஒன்று- இதர கனடிய பெரும் சமூக கட்சிகளித் தமிழரைப் பொருட்படுத்த வைத்தமை. இரண்டு - தமிழ் வாக்காளர்கள் எந்த வகையிலும் இளிச்ச வாயர்கள் அல்ல என்பது. 

ராத்திகா சிற்சபைஈசனின் தேர்தல் விடயத்தில் மிக முக்கிய பங்காய் வகித்தவர் என்ற வகையில் இக் கருத்துக்களுக்கு ஓரளவு அங்கிகாரம் இருக்குமென்ற நம்பிக்கையுடன் நான் இக் கருத்துக்களை முன் வைக்கிறேன். 

ராதிகா சிற்சபைஈசனின் தேர்தலில் நான் ஏற்கெனவே கூறியது போல ஜாக் லேய்ட்டன் அலை மட்டுமே அவரது வெற்றிக்குகே காரணம் என்று நம்புபவர் சிலருண்டு. தமிழ் மக்களின் ஒற்றுமையான உணர்வு பூர்வமான முயற்சியின் வெளிப்பாடு தான் வெற்றிக்கு காரணம் என்பவர் சிலர். தன்னுடைய திறமையும் ஆளுமையும் தான் காரணம் என்று நம்பும் ராதிகாவும் ஒரு பக்கம். என்னைப் பொறுத்தவரை முன்னைய இரண்டுடன் மூன்றாவதற்கும் ஓரளவு பங்கை நாம் வழங்கவேண்டும்.