திங்கள், 21 நவம்பர், 2011

ஒரு பூவரசமரத்தின் கதை

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

என்னவோ எனக்கு கதை சொல்வது மிகவவும் பிடிக்கும்.

எனக்கு எத்தனை வயதென்பதே எனக்குத் தெரியாது. நூறு வயதுக்கு மேலிருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. மூலை வேலிக்கு உறுதி தருவதற்காக என்னை ஒரு மனிதப் பிறவி இம் மண்ணிற் பதித்திருக்க வேண்டும். அதன் பிறகு நானும் என்னைப் போல இன்னும் பலரும் அநாதைகள் போல இக் கடற்கரையில் கிடைத்ததை உண்டு குடித்துக் கொண்டு வாழ்கிறோம். உங்கள் விழாவுக்கு என் பெயரையே வைத்திருக்கிறீர்கள். நான் யாரென்று இப்போது புரிகிறதுதானே?

கழுதைப்பிட்டி துறைமுகம் புங்குடுதீவின் மேற்குக் கரையில் இருக்கிறது. இருபிட்டி கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான தெரு இத் துறைமுகத்தில் தான் சங்கமிக்கிறது. தெருவின் இருமருங்கிலும் இருக்கும் தென்னந் தோப்புகளின் எல்லைப் பாதுகாவலர்களாக எனது சமூகமே இருக்கிறது. அதில் இடது கரையிலிருக்கும் மணியம் கடையின் ஓரமாக அகலக் கால்பரப்பிக்கொண்டு நிற்பவளே நான்.

உங்களைப் போல் என்னால் என் மண்ணை விட்டு ஓடிவிட முடியாது. எனக்கு என் மண்மீது அபாரமான பிரியம். இந்த உப்புக்கரிக்கும் கடற்கரையிலும் எனக்கு நன்னீரூட்டி இவ்வளவவு காலமும் வளர்த்தவளாய்ச்சே எனது தாய் மண். அவளை விட்டு எப்படிப்பிரிவது?

முன்பு போலெல்லாம் எனக்கு இப்பொழுது மனித நண்பர்கள் கிடைப்பதில்லை. கிராமத்தவர்கள் எல்லோரையூம் போரும் போர் பெற்றுத் தந்த சந்தர்ப்பமும் நாடோடிகளாக ஆக்கிவிட்டன. என்னைப்போல் இந்த மண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டு என் கால்களில் தினமும் உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்கும் பொன்னம்பலத்தாரும் பாடையில் போய்விட்ட பின்பு நான் தனித்துப் போனேன். அவரோடு நெஞ்சாங்கட்டையாக உடன்கட்டை ஏறமுடியவில்லையே என்று நான் கவலைப்படுவதுண்டு.

எனது நிழலில் நிறையப் பேர்கள் தங்கிப் போயிருக்கிறார்கள். உள்ளுர் வெளியூர்க் காரர்கள், தமிழர், சிங்களவர், முஸ்லிம், பரங்கி, வெளிநாட்டுக்காரர் என்று அத்தனை பேரையயும் நான் கண்டிருக்கிறேன், கேட்டிருக்கிறேன். சிங்கள கடற்படையினரும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு சில தமிழர்களும் இந்த நிலத்தையயும் அபகரித்து உல்லாசக் கேளிக்கை மாடங்களை நிர்மாணிக்க உத்தேசிப்பது போல் தெரிகிறது. என்னை அவர்கள் அறுத்து விழுத்துவதற்கு முன்னர் எனது கிராமத்தின் கதையை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.

புங்குடுதீவிலிருந்து அயல் தீவூகளான நெடுந்தீவு, நயினாதீவு , அனலைதீவு களுக்குப் போகும் துறைமுகங்களாக ஒரு காலத்தில் குறிகாட்டுவான், புளியடி மற்றும் கழுதைப்பிட்டித் துறைமுகங்கள் இருந்தன. இவற்றில் புங்குடுதீவு  கிராமசபையின் பராமரிப்பில் செல்லப்பிள்ளையாக அப்போது இருந்தது புளியடித் துறைமுகமே. அதிலிருந்துதான் நயினாதீவுக்குப் பயணிகளும் பக்தர்களும் போய்வருவார்கள். கழுதைப்பிட்டிப் பாலம் முன்பு இருந்திருக்கவில்லை. இயந்திரப்படகுகளில் வரும் பயணிகள் சிறிய ஓடங்களின் மூலம் கரைக்குக் கொண்டுவரப்படுவர். இதற்கு எப்போதும் உதவியாக பிள்ளையான் என்பவருடைய வள்ளம் தயாராக இருக்கும்.

பயணிகளின் சிரமத்தைக் கண்ட சில கிராமத்து இளைஞர்கள் இணைந்து கடற்கரையில் பெறப்பட்ட கற்களைக்  கொண்டு 1950 களில் ஒரு சிறிய பாலத்தை அமைத்தார்கள். அதன் பிறகு கிராமசபை இத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாலத்தை விஸ்தரித்தது. அதற்கான செலவை (ஆயம்) வசூலிக்க ஆயக் கொட்டில் (சாவடி) ஒன்றை நிறுவி பயணிகளிடம் சிறிய தொகையை அது பெற்றுக் கொண்டது.

சுமாராக என் உடம்பு பருமையானது. என் வேர்கள் கொழுத்துப்போயிருந்ததால் பலருக்கு அது இருக்கைகளாகவே பயன்படுவதுண்டு. வருடத்துக்கு ஒரு முறை யாழ்ப்பாணத்துப் புகையிலைத் தோட்டங்களுக்குப் பசளையாக்கவென எனது தலைமுடி கத்தரிக்கப்படும். அவ்வப்போது எனது சில கம்புகளை ஒடித்து உள்ளுர் ஆசிரியர்கள் உங்களது குண்டிகளைப் பதம்பார்த்திருக்கவும் கூடும். அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்.

கழுதைப்பிட்டித் துறை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்னர் ஏனைய தீவுகளுக்குப் போகும் வணிகப் பொருட்கள் வத்தைகள் எனப்படும் பாரிய மரக்கலங்களினாலேயே விநியோகிக்கப்படுவதுண்டு. புளியடிப் பாலத்துக்கும் நயினாதீவுக்குமிடையில் மணற்திட்டு இருப்பதால் ஆழமான கடலைத்தேடி இக் கலங்கள் குறிகட்டுவானுக்கும் கழுதைப்பிட்டுத் துறைக்குமே வரும். மாலை வேளையில் இம் மரக்கலங்கள் பொன்னொளி தகக்கும் அமைதியான கடலில் பாய்களை விரித்துக்கொண்டு மிதப்பதைப் பார்ப்பது ஒரு பரவசம் தரும் அனுபவம். இயந்திரப் படகுகளின் வருகைக்குப் பின்னர் இக்கலங்கள் அத்துறையை விட்டுப் போய்விட்டன.

வாரம் ஏழு நாட்களும் இத்துறை ஆரவாரமாகவே இருக்கும். குடு குடுப்பை எனச் செல்லமாக அழைக்கப்படும் நயினாதீவு கிராமச் சங்கத்துக்குரிய இயந்திரப்படகின் மூலம் தினமும் நயினாதீவூக்குரிய தபால் விநியோகம் நடைபெறும். அத்தோடு நயினாதீவைச் சேர்ந்த செல்லையர், நாகேசர் மற்றும் புத்த கோவிலுக்குரிய இயந்திரப்படகுகளும் பயணிகளை ஏற்றி இறக்கும். துறையில் வந்திறங்கும் பயணிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்குத் தயாராக பஸ் வண்டிகளும் தனியார் மோட்டார் வண்டிகளும் இத் துறைமுகத்தில் தயாராக இருக்கும். 

இத் துறைமுகம் பிரபலமாகுவதற்கு முன்னர் தீவுப் பகுதிக்கான பொதுப் போக்குவரத்திற்கென ஒரு பஸ் நிறுவனம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதன் மத்திய நிலையம் வேலணையில் இருந்தது. பச்சை நிறமான பஸ் வண்டிகள் அப்போது போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன. பின்னர் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சிவப்பு நிற வண்டிகள் யாழ்ப்பாணம் பெரியகடையை மத்திய நிலையமாக வைத்து நிர்வகிக்கப்பட்டன.

இரவு  பட பஸ் என அழைக்கப்படும் கடைசி வண்டிகள் இத்துறையில் தங்கி அதிகாலை வேலைக்குப் போகும் பயணிகளை ஏற்றிச் செல்லும். அவை புறப்படுவதற்கு முன்னராகவே தனியார் மோட்டார் வண்டிகள் பயணிகளை அள்ளி அடுக்கிக்கொண்டு சென்றுவிடுவதுமுண்டு.

சில பயணிகள் விசேடமாகப் பொன்னம்பலத்தாரின் வாகனத்திற்காகக் காத்திருப்பார்கள். அவரது வீடு துறைமுககத்துக்கு அருகிலேயே இருந்தது. எந்த நேரமும் மலர்ந்த முகத்தோடு சந்தனப் பொட்டோடு அவரும் தயாராகவிருப்பார். எண்ணைத் தலைகளோடு வருபவர்களை மட்டும் அவருக்குப் பிடிக்காது. அப்பழுக்கின்றிப் பராமரிக்கும் அவரது வாகனத்தின் கூரை அசுத்தப்படுவதை அவர் விரும்புவதில்லை.
பொன்னம்பலத்தாரைப் போன்று இன்னுமொரு விசேடமான மனிதர் சிவப்பிரகாசம். இ.போ.ச. பஸ் சாரதியாகவிருந்த அவரது வண்டியில் பயணம் செய்யப் பலரும் விரும்புவர். கட்டப்பொம்மன் மீசையோடு வெற்றிலையால் சிவந்த உதடுகளோடு அவர் சாரதி ஆசனத்தில் இருந்து வண்டியை இயக்கினால் பயணிகள் விமானத்தில் பறப்பதாகவே உணர்வர். 776 பஸ் இலக்கத்தோடு யாழ்ப்பாணம் போகும் அந்த பஸ் அவருக்கு தனி விலாசத்தையே பெற்றுக் கொடுத்தது.

எத்தனை விதமான மனிதர்கள் என் நிழலில், என் பாதங்களில் உட்கார்ந்து இளைப்பாறிப் போனாலும் சிலர் அவ்வப்போது என்னை அவமதிப்பதுமுண்டு. போட் செல்லையரின் அண்ணர் தாமோதரம்பிள்ளையர் அவர்களில் ஒருவர். மணியம் கடையில் அவர் வெற்றிலை வாங்கும்போதே எனக்கு உடல் கூச ஆரம்பித்துவிடும். சுட்டு விரலால் தேவைக்குமதிகமான சுண்ணாம்பை எடுத்து அதில் கொஞ்சத்தை மட்டுமே வெற்றிலையின் பின்பக்கத்தில் பூசிக்கொள்வார். பாக்கை வெற்றிலைக்குள் வைத்து மடித்து வாய்க்குள் திணித்ததும் மீதிச் சுண்ணாம்பை என் முதுகில் அழுத்தித் தேய்ப்பார். நாலு தரம் மென்றுவிட்டு இரண்டு விரல்களை உதட்டில் வைத்து எச்சியை என் கால்களுக்கிடையில் பீச்சிவிட்டுத்தான் அவர் அன்றைய நாளின் அடுத்த அலுவல்களைப் பார்ப்பார். என் உடல் வெள்ளையாகியதற்கு அவர்தான் காரணம்.

மணியம் கடைக்குப் பின்னால் என்னைவிட அதிக வயதுடைய ஒரு புளிய மரம் நிற்கிறது. என்னைவிட அது பத்து மடங்கு பருமன். ஆறு பேர் ஒரே நேரத்தில் அதன் பின்னால் நின்று சலம் கழிக்கலாம். மணியம் கடையில் களவாக விற்கும் சாராயமாயிருந்தாலும்சரி, மணியத்துக்குச் சொந்தமான பனை தென்னைகளிலிருந்து இறக்கப்படும் உடன் கள்ளாகவிருந்தாலும்சரி குடிப்பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் மறைப்புக் கொடுப்பது இந்தப் புளிய மரமே.

கழுதைப்பிட்டித் துறைமுகத்துக்கு அந்தப் பேர் எப்படி வந்தது என்று உங்கள் பலருக்குத் தெரிந்திருக்காது. பெயர் குறிப்பதுபோல் துறைமுகம் இருக்குமிடம் ஒரு மேடுதான் (புட்டி). எனக்குத் தெரிந்தவரை 1960 பதுகள் வரையில் இப் புட்டியில் இரண்டு கழுதைகள் மேய்வதைப் பார்த்திருக்கிறேன்.  இதற்கு முன்னர் அதிக கழுதைகள் இங்கு இருந்திருக்கலாம். அதனால் தான் இந்த இடத்திற்கு அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு.

பிற்காலத்தில் நெடுந்தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு குதிரை ஐயர் ஒருவருக்கு கொஞ்சக் காலம் வாகனமாக இருந்தது.  ஒருநாள் அவர் கோவிலுக்குப் பூசை செய்வதற்காக ஒய்யாரமாக குதிரைப் பயணம் செய்து கொண்டிருந்தபோது பின்னால்  வந்த பஸ் வண்டி ஓட்டுநர் ஹோர்ன்  அடித்த போது குதிரை அவரை வயலுக்குள் தூக்கி எறிந்துவிட்டு என் சுற்றம் தேடி வந்துவிட்டது. அதுவும் என்னைப்போல அநாதையாகித் துணையின்றித் தனியே அலைந்து திரிந்தபின் மாயக் குதிரையாகிவிட்டது.

துறைக்கு அருகே ஒரு சிறிய காடு, ஒரு தடாகம், அதன் கரையில் பருத்து விளைந்த ஆலமரம் இருந்தன. தடாகத்தை அண்டி பரந்த புற்தரை. மாலையிலும் விடுமுறை நாட்களிலும் கிராமத்துச் சிறுவர்கள் பட்டம் விடுவார்கள். என்னைப் போலவே இச்சிறிய காட்டிடமும் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. ஆடு மாடுகளுக்குப் புல் செருக்குவதற்காக உழவாரை கடகங்களுடன் வரும் பெண்டிர்களும், தோட்டம், கூலி வேலைகளை முடித்து கந்தனின் கள்ளுக்காக வரும் ஆடவர்களும் இக்கதைகளுக்குள் சிலவேளைகளில் பாத்திரங்களாகலாம்.

கழுதைப்பிட்டித் துறை இயற்கையாகவே குடாவாக அமைந்திருப்பதால் அங்கு வெளியூரிலிருந்து வரும் ஆழ்கடல் மீனவர்கள் வாடிகள் அமைப்பதுண்டு. பாசையூரிலிருந்து அப்படியாக வந்த ஏணேசையும், வட்டுக்கோட்டைப் பிள்ளையானையூம் இக்கிராமம் தனதாக்கிக் கொண்டது. தகிக்கும் வேனிற் காலத்தில் என் நிழலில் இருந்து அவர்கள் வலை செப்பனிடுவதுகூட பார்ப்பதற்கு அழகுதான்.

கச்சானில் என் கால் கழுவும் கடல் சோழகத்தில் வற்றி ஒரு மைல் தூரத்துக்குத் தன்னைச் சுருட்டி உறங்கப் போய்விடும். இந்தக் காலத்தில் கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள் எல்லாம் நீரில்லாக் கடலில் நர்த்தனமாட ஆரம்பித்து விடுவார்கள். மேற்கத்திய முறுக்கு நடனம் ஆடுவதுபோல் குதிக்காலால் நிலத்தை அழுத்தி இளவெயிலைக் காண ஆவெனத் திறக்கும் மட்டிகளைத் தோண்டி எடுத்துத் தமது பைகளை நிரப்பிக் கொள்வார்கள். அழகிய இளம் பெண்கள் நீளப் பாiவாடைகளை ஒரு கையில் பற்றிக் குனிந்து மட்டி பொறுக்கும் காட்சியைக் கம்பன் காணாமற் போனது துர்ப்பாக்கியம்தான்.

மாலையாகியதும் என் சுற்றம் இன்னுமொரு உலகமாகிவிடும். பொன்னம்பலத்தார் அன்றய கடின உழைப்பு முடிந்து வாகனத்தைப் புட்டி வயல் கிணற்றில் கழுவித் தானும் குளித்து வீடு வந்து உணவருந்தியதும் ஒரு சுருட்டைப் பற்றிக் கொண்டு என் பாதங்களில் உட்காரும்போது இரவு  எட்டு மணியாகிவிடும். ஒன்பது மணியளவில் கனகசபை வாத்தியாரும் சுருட்டு சகிதம் பாலத்தில் ஒரு நடை போய் வருவார். நிலாக் காலமாகில் கிராமத்து இளைஞர்கள் பாலத்து நுனியிலமர்ந்து நெடுநேரம் வம்பளப்பர். நிலவற்ற காலங்களில் பல மாயமனிதர்களின் கேளிக்கைகளும் என் சுற்றத்திலேயே அரங்கேறுவதுமுண்டு.

இப்போதெல்லாம் நானும் என் கிராமமும் அநாதைகள் போலவே வாழ வேண்டியிருக்கிறது. மணியம் கடை இருந்த தடயம் எதுவுமில்லை. குறிகாட்டுவான் துறைமுகம் பாவனைக்கு வந்த பின்னர் எமது துறையை எவரும் இப்போது நாடுவதில்லை. ஏணேசும் பிள்ளையானும் எங்கு போனார்களோ தெரியாது. பிள்ளையார் கோவில் திருவிழாவை ஒப்பேற்றி விட்டுப் பொன்னம்பலத்தாரும் போய்ச் சேர்ந்து விட்டார். கச்சான், வாடை, கொண்டல், சோழகக் காற்றுகள் எதுவும் என்னைச் சீண்டுவதில்லை. என் கிராமத்தில் கழுதை, குதிரையென்ன மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்று என் மடியிருத்திக் கதை சொல்ல என் குழந்தைகள் நீங்கள் இங்கு இல்லை.

என் முதுகில் சுண்ணாம்பு பூசுவதிலும்இ என் கால்களிடையே காறி உமிழ்வதிலும் இருக்கும் அருவருப்பு தனிமையைவிடச் சுகம் தரக்கூடியதென்று இப்போதுதான் புரிகிறது.

முடிந்தால் திரும்பி வாருங்கள். இருந்தால் இன்னும் கதை சொல்வேன்.

சிவதாசன் 
கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கத்தின் பூவரசம் பொழுது விழா மலருக்காக எழுதப்பட்டது.