வெள்ளி, 18 ஜனவரி, 2008

இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி

இலங்கையின் கள நிலவரம்: ஜே.வி.பி யின் வெற்றி


இன்றய இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தின் இதுவரை அறிவிக்கப்பட்டாத முடிவுகளில் ஜே.வி.பி யினருக்கே அதிக புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அதிக சாணக்கியத்தோடும் மிடுக்கோடும் களமிறங்காமலே (றிமோட்டில்) காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தியா படுதோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசீயக் கட்சியைத் தன் கால்களில் நிபந்தனை ஏதுமின்றி வீழ்த்திய இறுமாப்புடன் மீசையை முறுக்கிக் கொண்டு நிற்கும் சுதந்திரக்கட்சியையும் அதன் அடிமைக் கட்சிகளையும் பார்த்து ஜே.வி.பி பரிகாசமாகச் சிரிக்கின்றது. இவை எல்லாவற்றையும் பார்த்து சர்வதேச சக்திகள் தமக்குக் காரிய சித்தி கைகூடும் நாட்களை எண்ணிக் களிப்புடன் இருக்கின்றன.

தமிழர் தரப்பு? ஒத்திகையில் பிசியாகவிருக்கிறது.

இலங்கையின் தலைநகரில் பரபரப்பாகவிருக்கும் செய்தி ஜே.வி.பி. யினரின் ஆதரவோடு சரத் பொன்சேகா தலைமையில் இராணுவ சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டம் தீட்டுகிறார் என்பது. நகைச்சுவை உணர்வோடு இதை நீங்கள் படித்தால் அது உங்கள் வெற்றி. ஆனாலும் இலங்கை அரசியலில் சமீப காலங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பார்க்கின் இச் செய்தியைப் பொய்யென்று உதாசீனம் செய்ய முடியாது.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் அசலாகச் சிந்திக்கவோ செயலாற்றவோ முடியாதவர்கள் என்பதைப் பல தடவைகள் நிரூபித்திருக்கிறார்கள். தென் லெபனானில் இஸ்ரேலிய விமானங்கள் பாலங்களைத் தகர்க்க ஆரம்பித்ததும் கிழக்கிலங்கையில் கிபீர் விமானங்கள் கிராமங்களின் ஒற்றையடிப் பாதைகளையெல்லாம் தகர்க்க ஆரம்பித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன் மந்திரி பரிவாரங்களுடன் நியூ யோர்க் வீதிகளில் பவனிவரும்போது தாய்லாந்தைப் பார்த்துவிட்டு சரத் போன்சேகா ஒரு கணம் தாய்லாந்து இராணுவ அதிகாரியாகத் தன்னை வரித்துக் கொண்டுவிட்டார். பேச்சுவார்த்தை என்று அறிவித்த பின்னர்தான் புலிகள் புதிய நிபந்தனைகளை அள்ளி வீசுவார்கள் என்று குற்றம் சாட்டிய அரசு இப்போது புலிகள் பேசாமல் இருக்கத் தாமே நிபந்தனைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்த தன்னை ஒரு இஸ்ரேலிய பிரதமராகவும் இலங்கை இராணுவம் தன்னை இஸ்ரேலிய இராணுவமெனவும் தற்செயலாகச் சிந்திக்க ஆரம்பித்து சம்பூர் வெற்றிக்குப் பின்னர் புலிகளை பலஸ்தீனியர்களாகவே உருவகித்துவிட்டார். தென் லெபனானில் மக்கள் படுகொலை செய்யப்படும்போது எப்படிச் சர்வதேச சமூகமும் குறிப்பாக அயல் நாடுகளிலுள்ள அண்ணன் தம்பிகளும் வாளாவிருந்தார்களோ அப்படியே தான் ஈழத்தமிழரது நிலையும் இருக்கக்கூடும் என்று மஹிந்த போட்ட கணக்கு சரியாவே வந்துவிட்டது. எனவே, தான் இஸ்ரேலிய பிரதமர் எஹ_ட் ஒல்மேர்ட் இனது ஒரு ‘குளோன்’ என்றே உள்ளுர நம்ப ஆரம்பித்துவிட்டார். தனது ‘இஸ்ரேலிய பாதுகாப்பு படை’ யான இராணுவத்தினால் எதையுமே சாதிக்க முடியும் என்று மிகவும் திடமாக நம்ப ஆரம்பித்து விட்டார்.

இதில் அவர் வெற்றி பெற்றுமிருக்கிறார். ‘விடுதலைப் புலிகளைச் சம்பூரிலிருந்து ஓட ஓடக் கலைத்துவிட்டோம்… ஏனைய அரங்குகளிலும் வெளுத்து வாங்குகிறோம’; என்று தென்னிலங்கையில் அரசு செய்யும் பரப்புரைகளை ஐக்கிய தேசீயக் கட்சியே நம்பிக்கொண்டு நிபந்தனையற்ற கட்டியணைப்பில் ஈடுபட்டிருக்கிறது என்றால் சாதாரண மக்கள் எந்தளவுக்கு? புலிகள் பலவீனப்பட்டிருக்கிறார்கள் என்று தென்னிலங்கை மிகவும் உறுதியாக நம்புகிறது. தென்னிலங்கையில் ஒரு காலத்தில் ‘கொட்டியா’ விற்கு இருந்த பயம் இப்போது அகல ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நாமே என்று ஜே.வி.பி. யினர் பட்டி தொட்டியெங்கும் பரப்புரை செய்ய ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தியதே நாங்கள்தான் என்று அவர்களும் உறுதியாக நம்புகிறார்கள். தென்னிலங்கையிலுள்ள பெரும்பான்மையான தொழிற் சங்கங்கள் - குறிப்பாக மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள், பிக்குகள் சங்கம்- என்று எல்லாமே வரிந்து கட்டிக்கொண்டு ஜே.வி.பி. யின் பின்னால் அணி திரள்கிறார்கள். இராணுவத்தில் கணிசமான பங்கினர் ஜே.வி.பி. யினரின் கட்டளைக்குள் பணியாற்றுபவர்கள் என்ற வதந்தியை உண்மையாக்குமாற்போல் சமீபத்தில் சரத் பொன்சேகாவுடன் அவர்கள் காட்டும் உறவுகள் சமிக்ஞைகளைத் தந்தவண்ணமிருக்கின்றன. தென்னிலங்கையில் மட்டுமல்லாது மலையகத்திலும் ஜே.வி.பி. யினருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஜே.வி.பி. எதிர்காலத்தில் தனியாகவே ஆட்சியமைக்கக் கூடிய பலமான கட்சியாக வளரும் என்று ஆரூடம் கூறப்படுகிறது. இது ஐ.தே.க. மற்றும் சு.கட்சிகளுக்கு அதி பீதியைக் கொடுத்திருக்கிறது.

இப்பின்னணியில் ஐக்கிய தேசீயக் கட்சி- சுதந்திரக் கட்சி இணைந்து ஒரு தேசீய அரசை அமைக்குமானால் அது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவர உதவுமென்று எதிர்பார்க்கப்பட்டாலும் இவ்வுறவு ஜே.வி.பி யினiரு ஓரம் கட்டிவிட்டு ஆட்சியைக் கூட்டாக அமைப்பதே பிரதான நோக்கமாகவிருக்கும். இந்நிலையில் இராணுவச் சதியொன்றின் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற கோஷத்தோடு ஜே.வி.பி யினர் தம்மையே ஆட்சியில் அமர்த்துவதாகவே முடியும்.

ஜே.வி.பி. யினர் இதற்கான திட்டமிடலை வெகு கச்சிதமாகவே கையாண்டு கொண்டு வருகிறார்கள். நாட்டில் இனங்களுக்கிடையேயான கலவரங்களை உருவாக்குவதும் விடுதலைப் புலிகளுக்கெதிரான ‘கொரில்லாப் போர்களை’ உதிரி இராணுவத்தினரைக் கொண்டே நடாத்தி வருவதும் பலரும் அறிந்த விடயம். நாட்டில் அமைதிப் பேச்சு பற்றிய பேச்சுக்கள் எடுக்கப்படும் போதெல்லாம் குழப்பங்களை உருவாக்கி புலிகளின் மீது பழிகளைச் சுமத்துவதன் மூலம் இனங்களுக்கிடையேயான மோதல்களை ஆரம்பிப்பதும் இவர்களது நோக்கம். நாடு அல்லோல கல்லோலப்படும்போதுதான் இராணுவ ஆட்சிக்கான களம் பதமாகவிருக்கும்.

தென்னிலங்கையில் ஐ.தே.க. – சு.க. கூட்டின் பயனால் ஒரு தேசீய அரசாங்கம் உருவாகி அதனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படப் போகிறதென்ற செய்தியே நாட்டில் குழப்ப நிலை உருவாக ஆரம்பமாகவிருக்கும். விடுதலைப் புலிகளைப் பங்காளிகளாக்கிய எந்தத் தீர்வையும் Nஐ. வி. பி அங்கீகரிக்காது. எனவே போர் தொடரும்.

தேசீய அரசின் தீர்வு சமஷ்டி முறையில் இல்லாத வரைக்கும் எத் தீர்வையும் தமிழர் மீது திணிக்க சர்வ தேசங்களினால் முடியாது. எனவே தேசீய அரசுக்கும் ஜே.வி.பி யினருக்குமிடையேயான போர் ஆரம்பிப்பது தவிர்க்க முடியாதது.

இத்தருணத்தில் விடுதலைப் புலிகளின் ஒத்திகை பூரணமாகவிருக்கும் என்றே நம்பலாம். தேசீய அரசினால் சமஷ்டித் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் விடுதலைப் புலி;கள் தமிழீழப் பிரகடனத்தைச் செய்ய இதுவே தருணமாகவிருக்கும்.

இதையெல்லாம் தவிர்த்து சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுத்தரும் வல்லமை இன்னும் இந்தியாவுக்கு மட்டுமேயுண்டு. தன் அயலுக்குள் இவ்வளவும் நடைபெற வாளாவிருந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் இப் பிராந்திய சதுரங்கத்தில் தோல்வி இந்தியாவிற்கு – வெற்றி ஜே.வி.பி யிற்கு என்பதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.

September 30,2006

கருத்துகள் இல்லை: