ஞாயிறு, 27 மே, 2018

'இனப்படுகொலை நாட்களில்' நூல் வெளியீடு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
மாமுலனின் 'இனப்படுகொலை நாட்களில்' நூல் வெளியீடு 
ரொறொண்டோ மே 27, 2018

 மாமூலன் / வின்சன்ட் போல் / வரன் / ரஃபேல்  என்ற பல் வாடி நண்பரின் நூல் 'இனப்படுகொலை நாட்களில்: குரலற்ற பத்தி எழுத்துக்கள்' என்ற நூல் இன்று அரங்கேறியது. சங்கப்  பலகையை சு.மு. என்கின்ற சுவிஸ் முரளி கொண்டு வந்தார். நானும் மூர்த்தியும் (கனடா / ரொறொண்டோ/ மொஸ்கோ / சிங்கப்பூர்) நூலைப் பலகையில் ஏற்றினோம். 

மண்டபம் நிறைந்த கூட்டம். நீண்ட காலமாகச் சலிச்சுப் போயிருந்த இலக்கிய முகங்கள் பல சிரித்ததைக் கண்டது சந்தோஷமாயிருந்தது. 

நானும் மூர்த்தியும் அரை / அரை மணித்தியாலங்கள் பேசவேண்டும் என்பது முரளியின் கட்டளை. மூர்த்தி உசுப்பியும் நான் சொதப்பியும் பலகையைத் தள்ளிக் கரை சேர்த்துவிட்டோம். 

புத்தகம் ஈழத்தமிழரின் இனப்படுகொலை காலத்தில் அது தளம் கொண்டிருந்த ஒரு நிலத்தில் இருந்துகொண்டு இயலாமையில் வெளிக்கொணர்ந்த ஒரு வகைக் குமுறல். 2009 மே மாத்ம் முதல் அக்டோபர் வரை அக்குமுறல் ஒலித்திருக்கிறது. 

தமிழர் வாழ்ந்த இடமெல்லாம் ஈழப்போராட்டம் தளம் கொண்டிருந்தத்து. இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த ஒவ்வொரு தளமும் அதிர்ந்து கொண்டிருந்தன. அவற்றில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழனும் குமுறிக் கொண்டுதான் இருந்தான். வரைபடக் கருவி போல ஒவ்வொரு தமிழனின் கரத்திலும் பேனா பொருத்தப்பட்டிருக்குமானால் காகிதம் கிழிந்தே போயிருக்கும். அப்போது மாமூலன் கரத்தில் ஒரு பேனா மட்டுமல்ல வாயினுள் உரமான நாக்கும் இருந்தன.

அவை எழுதியும் பேசியும் கிழித்தவற்றை முரளிதரன் ஒட்டித் தந்ததுதான் இந்த நூல்.

மாமூலனை எனக்கு கிட்டத்தட்ட 15 வருடங்களாகத் தெரியும். நண்பர் திலிப்குமார் அறிமுகம் செய்து வத்தவர். பாரிஸ் நகரில் கலை இலக்கியச் சந்து வாழ்வை விட்டு வந்தவர். பழகுவதற்கு இலகுவானவர் என்று சொல்ல முடியாது ஆனால் புரிந்தவர்களால் அவரது நட்பை உதறித் தள்ளிவிட முடியாது. குடைந்த ஆனால் நஞ்சில்லாத திருப்பாற்கடல். இனப்படுகொலை அவரை மீண்டும் குடைத்திருந்தது. சமரசம் செய்ய மறுக்கும் உள்ளம் அமைதியாவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

அவரது இயல்பைச் சொல்லி நூலைப் பற்றிச் சொல்வதில் ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. அவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி, தமிழ் மீது அளவிலாக் காதல் கொண்டவர். திட்டித் தீர்த்தாலும் தமிழர் மீதும் அப்படித்தான்.

இன்னூலில் அவர் எழுதிய கட்டுரைகள் பல இந்த அளவிலாக் காதலின் பால் ஏற்பட்ட வெப்பியாரத்தின் சில வடிவங்களே. அவை எழுத்திலும் ஒலியிலும் வராவிடில் எங்கள் வார இறுதி வாடிகளில் சுவர்களில் மோதிக்கொள்ளலாம். எப்படியாயினும் அவை வந்தேயாகும். 

இனப்படுகொலைக் காலத்தில் அவர் பார்த்த, கேட்ட, ஊகித்த விடயங்கள் இங்கு பல கட்டுரைகளிம் முகம் காட்டுகின்றன. அந்த விடயங்களை அவர் தரவுகளாக முன்வைத்த பிறகு அவற்றின் மீதான விமர்சனங்கள் நிழலாகத் தொடரும். மாமூலனைத் தெரிந்தவர்களுக்கு இந்த விமர்சனங்களே முக்கியம். வரலாற்று மாண்வனுக்கு அவர் தரும் தரவுகள் முக்கியம். 

இந்த நூலை அவர் வரலாற்று மாணவனுக்காக எழுதவில்லை. இத ஒரு வரலாற்று நூல் என்றும் அவர் சொல்லவில்லை. இது ஒரு கால முத்திரை குத்தப்பட்ட, காலப் பேழையில் அடைக்கப்பட்ட ஒருவரின் கதறல்கள். இன்னொரு காலத்தில் கேட்பவருக்கு இது ஒரு வரலாற்றுத் துளி.

எனக்குத் தெரிந்த ஒரு வரலாற்று மாணவி (முனைவராவதற்கான் படிப்பை இங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் கற்றுக் கொண்டு வருபவர்) இந்த இனப்படுகொலை நாட்களில் கனடாவின் பிரதான ஊடகங்கள் எப்படியான செய்திகளை வெளியிட்டன. அவை இனத் துவேசத்தினால் மாசு படுத்தப்பட்டனவா? என்கின்ற ஆய்வைச் செய்து வருகிறார். வீதி மறிப்புப் போராட்டம் கனடாவிற்குப் புதிதாக இல்லை எனினும் சில பெரும் சமூக ஊடகங்கள் அதற்குப் பயங்கரவாதப் பரிமாணத்தைக் கொடுத்தன. ஒரு வரலாற்று மாணவன் கற்கைத் தேடுகையில் தரவுகள் மாசுபட்டவையாக இருக்க முடியாது.

மாமூலனின் இன்னூலில் விசேடம் என்னவென்றால் அவர் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தும் போது அவற்றின் நிழல்களாக வந்தவையே தரவுகள். அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருக்க முடியாது ஏனெனில் அவர் வரலாறு எழுத முனையவில்லை.  

ஈழப்போராடடத்தின் இறுதிச் சாட்சியம் என்று எதையும் உத்தரவாதத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனது கண்களில் இதுவரை படவில்லை. வந்துள்ள பல anecdotal என்ற செவி வழிச் செய்திகளின் பதிவுகளாகவே உள்ளன.

புஸ்பராஜனின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' எமது போராட்ட வரலாற்றின் ஒரு காலக் கூற்றைச் சொல்லியது. சுந்தரம், அய்யர், சாத்திரி, யோ கர்ணன் என்று பலர் தங்கள் காலப் பதிவுகளை மேற்கொண்டார்கள். இவை எல்லாம் ஒரு வகையில் வரலாற்றுச் சிதறல்கள் எனவே கொள்ளலாம். வரலாற்று மாணவனுக்கு இவை போதாது. இவை ஒரு perspective என்ற ஒப்பு நோக்குதலுக்கு உதவி புரியலாம்.

சமீபத்தில் வந்த மூன்று நூல்கள் இரண்டு வேறு விதமான ஒப்பு நோக்கலை  எனக்குத் தந்தன. The Sesons of Trouble by Rohini Mohan , The Road to Mulli Vaaikkal by Kamal Gunaratne and The Long Watch by Ajith Boyagoda. இவை மூன்றும் தனித்துவமானவை.

ரோகினி Mohan  ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ்ப் போராளிப் பெண்ணையும் கொழும்பிலிருந்து ஒரு தமிழ் இளைஞரையும் பாத்திரங்களாகக் கொண்ட நாவலாக இந்நூலைப் படித்திருந்தாலும் மறைமுகமாக இது ஒரு வரலாற்றுத் துகள் தான். ஒரு வகையில் பாத்திரங்களின் சுய விசாரணைகளின் தொகுப்பு. தீர்ப்பு வாசகரிடம் விடப்படுகிறது.

அஜித் பொயாகொட வின் நூல் ஒரு சிங்கள கடற்படை அதிகாரி புலிகளினால் நீண்ட காலம் சிறைவைக்கப்படட காலத்தின் அனுபவங்களின் விவரணை. போராடடத்தின் மீதான நியாயத்தை தன மக்களுக்குச் சொல்வதான  கதை. தன் மக்களின் சார்பான சுய விசாரணை.

கமால் குணரட்ன ஒரு சிங்கள இராணுவ டிவிஷன் கொம்மாண்டர். போரின் இறுதிக்கு கட்டம் அவர் கால்களிலேயே கிடந்தது என்கின்ற அளவுக்கு குறிப்புகளை முன்வைக்கிறார். அவருடைய பார்வை முற்றிலும் 'நான் ஒரு தேசிய பாதுகாவலன்' என்கின்ற தோரணையில் இருந்தாலும் சிங்கள இனவாதம் அவர் குறிப்புக்களில் நிழலாகப் பின் தொடர்ந்தது.

எந்தவிதமான வரலாற்றுக்கு குறிப்புக்களும் பாராபட்சமற்று எழுதப்படும்போது எதிர்குரல்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. அதுவேதான் வெற்றியும் கூட. இல்லாவிடில் அது வெறும் பிரச்சார வெளியீடே .

இவையெல்லாம் ஈழத்தைத் தளமாகக் கொண்டவை. ஈழப்  போராட்டம் ஈழத்தை  மட்டும் தளமாகக் கொண்டிருக்கவில்லை. தமிழர்கள் உலகின் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் எமது போராடடம் தளம் கொண்டிருந்தது. எனவே அந்தந்த நாடுகளிலும் வரலாற்றுத் துணுக்குகள் உண்டு.

மாமுலனின் 'இனப்படுகொலை நாட்களில்' அப்படியான ஒன்று.

2009 மே  இலிருந்து அக்டோபர் வரை என்று தலைப்பிட்டிருந்தாலும் ரொறொண்டோவைத் தளமாகக் கொண்ட ஈழப்  போராட்ட வரலாற்றின் ஒரு காலக்  கூ(ற்)று  அது.

அந்த வரலாற்றைப் பார்க்குமுன்  மாமுலன் என்ற படைப்பாளியையும் பார்க்க வேண்டும். நான் இதைச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு.

இயக்கங்களில் ஏதோ ஒரு வகையில் தம்மை இணைத்துக் கொண்டோர் சிலரிடம் ஒரு கருத்து நிலவுகிறது. போராட்டம் பற்றிய விடயங்களில் கருத்துக் கூறுவதற்கு அதில் சம்பந்தப்படாதவர்களுக்கு அருகதையில்லை என்பது போல. 'இவருக்கு என்ன தெரியும். இவர் அப்ப எங்க இருந்தவர்' என்ற தோரணையில் அமையும் வினாக்களுக்கு விடை சொல்வது தேவையற்றது.

வரலாறு என்பது ஒரு spectrum. ஆதி அந்தம் தெரியாத ஒரு நிறமாலை. இதற்கு  எவரும் பங்களிக்கலாம். அது பார்வையாகவோ, அவதானிப்பாகவோ கருத்தாகவோ இருக்கலாம். அந்த நிறமாலையின் காலகிரமத்திற்கும் ஒழுங்கிற்கும் ஒத்துவராதவற்றை அது நிராகரித்துவிடும். A kind of self testing mechanism.

மாமுலனின் 'இனப்படுகொலை நாட்களில்' ஒரு வரலாற்றுத் துண்டு. ரொறொண்டோவைத் தளமாகக் கொண்டது. அது சரியா தப்பா என்பதை வரலாறு பார்த்துக்கொள்ளும்.
மாமுலன் ஒரு தமிழ் மொழி, இனப் பற்றாளர். அரசியலில் எந்த நிலைப்பாடடையும் எடுத்தவர் அல்லர். சமரசம் செய்யாதவர் அதனால் பிழைப்புவாதத்துக்கு இடமில்லை. ஒரு குறுகிய நட்பு வட்டமே  அதற்குச் சாட்சி.

2004 / 05 காலப்பகுதியில் நண்பர் திலீப்குமார் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் ஒரு fake news தயாரிப்பாளர் அல்ல. சாய்வு நிலை (bias) அவரது எழுத்துக்களை பாதிப்பதில்லை. தேடல் மிக்கவர். பிரச்சார எழுத்துக்களை வெறுப்பவர்.


இந்த பின்னணியில் அவரது 'இனப்படுகொலை நாட்களில்' நுலைப் பார்க்கலாம்.
இதில் வரலாறு அல்ல முக்கியத்துவம் பெறுவது. ranting என்ற அவரது பொருமும் சுபாவமே எழுத்துக்களாக வருகின்றது. சமூகத்தில் நடைபெறுகின்ற பல விடயங்களை அவர் தன் பாணியில், தனது அளவுகோலில் அளந்து அவை உடன்படாத பட்ச்சத்தில் (பெரும்பாலும்) பொருமுவார். அவை ஒன்றில் எழுத்துக்களாக வரும் அல்லது நண்பர்கள் சந்திக்கும் போது கோபக் குறிப்புக்களாக வரும். பெரும்பாலான தருணங்களில் அவரது பொருமல்கள் நியாயமானவை. பல காலம் கடந்த பின்னரே நிரூபணமானவை.

இத்தகைய மாமுலனின் இந்தப் படைப்பு ஒட்டுமொத்த தமிழினமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது எழுதப்படடவையானால் எப்படியானவையாக இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்.

மே  முதல் - அக்டோபர் வரையிலானதாக குறிப்புக்கள் தலைப்பிடப்படடாலும் அவை அப்பாலும் இப்பாலுமாக நீட்டிக்கப்பட்டே  இருக்கின்றன.  ரொ ண்டோ தமிழர்களின் நடவடிக்கைகள் எப்படியாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எப்படியான விளைவுகளை அவை சந்திக்கும் என அப்போதே ஆருடம் கூறியிருந்தார். நமது சமூகத்திலிருக்கும் ஒழுங்கீனங்களை அவர் சொல்லிக் கொண்டே போகிறார். அது தான் அவர். இது என்ன வரலாறா என வாசகரம் பொருமலாம்.

மகாபாரதம், இராமாயணம், விவிலியம் போன்ற நூல்களில் parables எனப்படும் உப / கிளைக் கதைகள் வரும். அவற்றின் தேவை பல்முகப்பட்டது. ஒன்று பெருங்கதைகள் வாய்வழியாகச் சொல்லப்படும்போது இயல்பாக ஏற்படும் தளர்வைக் குறைக்க பிரசங்கியாரால் கொடுக்கப்படும் ஒரு வகையான உற்சாக dose. இரண்டாவது அக்கதைகளினால் சுட்டிக்காட்டப்படும் தர்மம்.

மாமுலன் கட்டுரைகளில் இது reverse ஆகப் பிரயோகம் பெறுகிறது. அதாவது அவரின் பொருமல்களின் பின்னால் தர்மம் இறைஞ்சப் படுகிறது. அதே வேளை அப் பொருமல்கள் ஒரு வரலாற்றின் தொங்கு புள்ளிகளாகவும் பரிணாமம் பெறுகின்றன.  பல சம்பவங்கள் காலக் கிரமத்துடன் சொல்லப்பட்ட்டபின் அவற்றின் மீதான பொருமல்கள் தொடர்கின்றன. ஒரு வகையான உற்சாக dose.

கனடாவின் பெரும்பாலான வாசகர்களுக்கு பல சம்பவங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் மாமுலன் ஒரு படி உள்ளே போய் அச் சம்பவங்களுக்கான காட்சிப் படிமங்களையும் சில இடங்களில் நிஜமான பாத்திரங்களையும் குறிப்பிடுவதன் மூலம் அச் சம்பவங்களின் பின்னாலுள்ள உண்மைத்தன்மையை நிரூபிக்கிறார். அவரது குறிப்புகளுடன் உடன் படாதவர்கள் மறுதலிக்க முடியாதவாறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதர நாடுகளின் வாசகர்களுக்கோ அல்லது வரலாறுத் தொகுப்பாளனுக்கோ  இச் சம்பவங்களினுடு இழையுடும் வரலாற்றுத் துணுக்குகள் பயனுள்ளனவாக அமையும்.

இந்த வரலாற்றுத் துணுக்கில் மாமுலனின் பொருமல்களில் இடம்பெறாத ஒருவர் இந்த சுவிஸ் முரளி. அவரும்  ஒரு கதை சொல்லி அத்தோடு பல கதைகளின் கதை மாந்தர். இங்கு அவர் வரலாற்றுப்  'புள்ளி'

அவரின் நச்சரிப்பால் தான் இந்த நூல் சாத்தியமானது என்றும் மாமுலன் பொருமியிருக்கிறார். அவரின் பொருமல்கள் நன்றாகவே முடிகின்றன என்பதற்கு இப் புத்தகம் ஒரு சாட்சி.
உள்ளே  போய் வாசித்து கிரகித்து, பொருமல்களின் பிடிடியிலிருந்து வராற்றைப் பிரித்தெடுத்து சேமித்துக் கொள்வது உங்கள் கடமை.