சனி, 26 மார்ச், 2016


றொப் போர்ட் - ரொறோண்டோவின் மக்கள் திலகம்

பலருக்கு இது விசனமாகவே இருக்கும். ஆனால் நான் மதிக்கும்  மனிதருள் ரொறொண்டோவின் முன்னாள் நகர பிதா றொப் போட்டும் ஒருவர். இந்த வாரம் அவரது உடல் ரொரொண்டோ மாநகரசபைக்  கட்டிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நான் அவர்மீது வைத்திருக்கும் மதிப்பிக்குக் காரணம் தன் மனதில் பட்டத்தை ஒளிவு மறைவின்றிக் கூறுவது - அது அப்பட்டமான பொய் என்று தெரிந்தும்கூட. அது ஒரு குழந்தைக்கான குணம். ஒரு குழந்தையின் குழப்படிகளைக்  கொண்ட ஒரு முழு மனிதர். அதனால் தான்  ரொறோண்டோ பெரும்பாக மக்கள் மட்டுமல்ல உலகத்தின் கோடிகளில் இருக்கும் மக்களுக்கும் அவரது இழப்பு கவலையைத் தருகிறது.

அவர் ஒரு திமிர் பிடித்தவர் இ குடிகாரர்இ போதை வஸ்து பாவிப்பவர்இ கேடிகளோடு சகவாசம் வைத்திருப்பவர் என்பனவெல்லாம் ஊடகங்களால் ஊதப்பட்டன. பலரும் அதை நம்பினார்கள். அதில் சிலவற்றில் உண்மை இருப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் மக்கள் அவருக்காகக் கண்ணீர் விடுகிறார்கள் என்றால்?

இன்றய உலகில் எந்தவொரு குடும்பத்திலுமோ அல்லது அவர்களது உறவினர்களின் குடும்பங்களிலுமோ இப்படியொரு 'குழ்ந்தை' இல்லாமல் இருக்க  வாய்ப்பில்லை. அக் குழந்தையால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது தான் அக் குழந்தையின் குற்றம் கவனத்தில் எடுக்கப்படுகிறது.
ரொறொண்டோவின் 'குழந்தையால்' நகருக்கு ஏற்பட்ட நன்மைகள் அதிகமென்று நம்புபவர்களே அதிகம்.

றொப்  போட்டின் வீழ்ச்சிக்கு அவரது எதிரிகள் காரணமல்ல. அவரைச் சூழ்ந்திருந்தஇ அவரால் பயன் பெற்றஇ அவரை உசுப்பேத்திப் பின்னர் கைவிட்டு முதுகில் குத்திய நண்பர்கள் தான் காரணம். நண்பர்களுக்காக எதையும் செய்தத் துணிந்த வகையினரில் ஒருவர் தான் போட். அவரைப் போட்டுக் கொடுத்த ப்ரூட்டஸ்கள் அவரது சகபாடிகள் தான்.

றொப்  போட்டின் குற்றம் குறைகள் திடீரென்று அறியப்பட்டவையல்ல. அவற்றை ஊட கங்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் பலரும் அவரை விட அதிகம் கறை படிந்தவர்கள். நாற்சந்தியில் அவரது மானம் தூக்கிலிடப்பட்ட போதும் மக்கள் அதைக் கண்டு கொள்ளவுமில்லைஇ கை கொட்டிச் சிரிக்கவுமில்லை. மாறாக அவரைத் தம் குழந்தைகளில் ஒருவராகவே தத்தெடுத்துக்  கொண்டனர்.

அவரது முகத்தில் ஒரு குழந்தையின் களையே எப்போதும் தெரியும். எழுதுகோல்களைத் துப்பாக்கியாகப் பாவிக்கும் உடகங்ககளை அவர் மதித்ததில்லை. ஆனால் அவர்களை எதிர் கொள்ளாது அவர் போவதுமில்லை. ஊடகங்களை நையாண்டி செய்யும் அளவுக்குத் தைரியமுள்ள ஒரு அரசியல்வாதி அவர்.

அவர் மீது காட்டப்பட்ட அழுக்குகள் அவரில் குறைகாணும் எல்லோரிடமும் இருந்திருக்க வேண்டும்.  அவர்களது அரசியல் கவசங்கள் (pழடவைiஉயட உழசசநஉவநௌள) அவற்றை மறைத்து விடுவதுண்டு. கவசம் போடாமல் இருந்ததுதான் றொப் போட்டின் பிரச்சினை. தன் வார்த்தைகள் எவரையும் புண்படுத்துமா என்பதை யோசியாது மனதில் பட்டதை அப்படியே சொல்லும் பழக்கம் அவருடையது. பெண்களையும்  மாற்று நிறத்தவர்களையும் தூற்றுபவர். ஆனால் அவரது இழப்பின் பின்னர் மரியாதை செலுத்துவதற்கு முண்டியடித்துக் கொள்பவர்களில் இந்த இரண்டு சாராருமே முன்னணியில் நிற்கிறார்கள்.

காரணம் யதார்த்தம். நாம் யாரும் செய்யாத விடயங்களை அவர் செய்யவில்லை. நாம் யாரும் சொல்லாத விடயங்களை அவர் சொல்லவில்லை. ஒய்வு நேரங்களில் பணம் ஏதும் அறவிடாமல் வறிய குழந்தைகளுக்கு விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். குடியானவர்களில் எந்த ஒருவர் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தார். இதுவெல்லாம் சபைக்கு வந்தது இப்போதுதான்.

இது சமூக உறவாடல் தளங்களின் காலம். செய்திகளைத் திரிபு படுத்தித் தம் சுய திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள்  ஒதுக்கப்பட்டு உண்மையான 'மக்கள் தீர்ப்புகள்' வெளிப்படும் காலம்.  றொப்  போட் ஒரு சாதாரண மனிதர் என்பதை அவர்கள் கண்டுகொண்டு விட்டார்கள். தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் அத தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள றொப் போட்  உயிரோடு இல்லை.

போதைச் சிகிச்சை பெற்று மீண்டபோது றொப் போட் தனது 'திருந்திய' இரண்டாவது வாழ்வுக்கான ஏக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டதாகச் சொன்னார்கள். தன் மனைவி குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமென அவர் கூறியதாகக் கேள்வி.

றொப்  போட்டின் பதவிக் காலத்தில் அவரது சகோதரர் டக் போர்ட்  தனது தம்பியை நிழல் போல் தொடர்வார். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் இருந்த பாசம் அதிசயமாகவிருந்தது. மரணத்துக்குப் பின் தாயாரின் கூற்றிலிருந்தும் ஒரு உண்மை புலப்பட்டது. வீட்டிலுள்ள குழப்படியான கடைக்குட்டியின் மீது எவ்வளவு பாசத்தைப் பொழிவோமோ அதுவே தான் போட் குடும்பத்திலும். அவர்கள் நம்முடையதைப் போல ஒரு சாதாரண குடும்பம்தான். அவர் நகரபிதாவாகியது தான்  அசாதாரணம். சாதாராண மக்கள் விட்டு விடுதலையாகி விட்டதற்கான அறிகுறியே அவர் நகரபிதாவாகியது. அதுவே அவர் அடுத்த சந்ததிக்கு விட்டுப் போகும் குறிகாட்டி.


றொப்  போட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது பல. அவர் தன மனத்தைப் பேசியவர். நடிக்கவில்லை. அவர் பணக்காரராயினும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். குறைகளுடையாதாயினும் 'அது என் குழந்தை' என முத்தம் பொழியும் ஒரு தாயின் உணர்வுடனே மக்கள் அவரை நேசித்தனர். அதைத் தெரிந்துகொண்டு மனநிறைவுடன் மரணத்தை எதிர்கொண்டதே அவரது பலம்.

So long Rob!

ஆயுதம் ஏந்தாத வீரர்களும் நிபந்தனையற்ற நேசமும் (Unarmed Troops and Unconditional Love)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இன்று (தை 12, 2015) அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது எட்டாவதும் இறுதியானதுமான State of the Union பேச்சை நிகழ்த்தினார் . பெரும்பாலான நேரங்களில் இத் ஒரு வெறும் சடங்காகவே எனக்குத் தெரிவதுண்டு. இன்றய நாள் இச் சடங்கை விரும்பிப் பார்த்தேன்.

ஒரு அடிமையின் வழித்தோன்றல் அமெரிக்கப் பிரதிநிதியாய் வந்தது அந்த அடிமை குலத்துக்குப் பெருமை சேர்த்திருப்பினும் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து முழுமையாக எட்டாண்டு காலம் ஆள வைத்த அந்த மற்றய குலத்துக்கே அதிகப் பெருமை சேரவேண்டும். கென்னெடி, மாட்டின் லூதர் கிங் வரிசையில் இன்னுமொரு துப்பாக்கிக் குண்டுக்கு வேலை வந்துவிடக் கூடாதென்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். வந்தபோது முழங்கியது போலவே போகும்போதும் முழங்கிப் போகிறார்.

மாற்றம் வேண்டுமென்று இன்றய அரசியல்வாதிகள் போடும் கூச்சலை ஆரம்பித்து வைத்தவர் ஒபாமா.  நேர்மையானவர்கள்  அரசியலில் நிலைப்பது கடினம். ஜிம்மி கார்ட்டர், போப் ரே போன்ற சிலரது அகால ஆட்சி முடிவுகள் நல்ல உதாரணம்.

கூச்சல் கலாச்சாரம் ஜனநாயகத்தின் ஒரு கூறாக மாறிவிட்ட காலத்தில் நாம் வாழ்வதால் அவரது கூச்சலை செவிக்குறை கொண்டவர்களுக்கென ஒதுக்கிவிட்டுப் பார்க்கலாமெனச் சமாதானம் கொண்டு மீதியைப் பார்க்கலாம்.

ஒபாமாவின் பேச்சு ஏனைய முன்னாள் பீற்றல் பிரங்கிகளினது பேச்சுக்களை விட வித்தியாசமாகவிருந்தது. ஒபாமா சாதித்தவற்றைப் பற்றி அதிகம் பீற்றிக் கொள்ளவில்லை. அவர் பலவற்றைச் சாதித்திருக்கிறார். 18 மில்லியன் மக்கள் நலக்காப்புறுதி பெற்றிருக்கிறார்கள்.  போர் சிதைத்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி என்ற வரலாற்றுச் சிறப்பையும் தட்டிக் கொண்டார்.

இன்றய பேச்சில் அவர் முக்கியத்துவம் கொடுத்தது தன்னால் செய்ய முடியாமற் போனவற்றிற்காக. இரண்டு கட்சிகளிடையேயும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வைக் கொண்டுவந்து நாட்டுக்குத் தேவையான நல்ல பல விடயங்களைச் செய்ய முடியாமற் போனதையிட்டு அவர் கவலைப்பட்டார். ஆயுதங்களுக்குப் பலி போகும் குழந்தைகள் பற்றிக் கவலைப்பட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலம் மட்டுமல்ல உலகின் எதிர்காலமும் அவரது கரிசனைக்குள் அகப்பட்டிருந்தது. பொருளாதாரம், சுற்றுச் சூழல் என்று இன்னோரன்ன விடயங்களில் அமெரிக்க சிந்தனைக்கு ஒவ்வாதிருந்தது அவரது அக்கறை.

எதிர்காலம் பற்றி நம்பிக்கையோடு  இருந்தாலும் உலகுக்குத் தலைமை தாங்கும் நாடென்ற விடயத்தில் அமெரிக்கா இன்னும் மாற வேண்டுமென்பதில் அவரது விருப்பு ஒன்று - அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் வேண்டுமென்பது.

இவ்வளவு நல்லவரையும் நான் பல தடவைகள் விமர்சித்ததுண்டு. இப்போதும் தான். அமெரிக்க ஆயுத மோகத்தையும் குழந்தைகள் பலியெடுக்கப்படுவதையும் சகிக்காது கண்ணீர் விடும் ஒரு மனிதர் குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுக்கும் ஆளில்லா விமானங்களை ஏவி விடும் கட்டளைகளை வாரா வாரம் பிறப்பிக்கும் கொலைகாரனாகவும் இருக்கிறார்.

தன்  பேச்சை முடிக்கும்போது ஒபாமா மாட்டின் லூதர் கிங் அவர்களுடைய மேற்கோள் ஒன்றைக் கூறினார். அது தான் 'Unarmed troops and Unconditional love' என்பது. அமெரிக்கா ஒரு ஆயுதமேந்தாத வீரர்களைக் கொண்டதும்  நிபந்தனையற்ற நேசத்தை வெளிப்படுத்துவதுமான நாடாக இருக்க வேண்டுமென டாக்டர் கிங் விரும்பியதாக அதைச் சாரம் கொள்ளலாம்.

டாக்டர் கிங் கின் விருப்பத்தை ஒபாமா ஒரு வகையில் நிறைவேற்றியிருக்கிறார். அமெரிக்க வீரர்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு அவர்கள் கைகளில் ஆளில்லா விமானங்களின் இயக்கிகளைக் கொடுத்தமை. அமெரிக்கா மீது அதன் மக்களை நிபந்தனையற்ற நேசத்தைப் பொழிய வைத்தமை.

அமெரிக்காவில் எவர் ஜனாதிபதியானாலென்ன நிழல் ஜனாதிபதிகளே ஆட்சியை நடாத்துகிறவர்கள் என்றொரு கதை கர்ணபரம்பரையாக வருகிறது. கட்டளைகளை அவர் பிறப்பிக்காமலும் இருக்கலாம். மேனியைக் கொல்வதும் வீரத்தில் ஒன்று தானே!

சில வேளைகளில் வெள்ளையை அதிகம் பார்த்தால் தான் கறுப்பின் அருமை தெரியும். சமீப காலங்களில் ட்ரம்ப் என்றொரு பிறவி தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் அலங்கரிக்கிறது. இதைச் சுற்றி நின்று காவடி எடுக்கும் பிறவிகளின் கூச்சல்களோ காதைப் பிளக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக அது வந்துவிடுமென்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒரே ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன். தயவு செய்து அமெரிக்காவில் இன்னும் மாற்றம் வேண்டுமென்று கேட்காதீர்கள். உங்கள் விருப்பம் ட்ரம்ப் போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி விடலாம்.

மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கே மாற்றம் பயன் தரும். அது நம்ம நாட்டிலும் தான்.