திங்கள், 3 செப்டம்பர், 2007

தாய்லாந்து

சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தேன். இது இரண்டாவது தடவை எனினும் பல புதிய தரிசனங்கள் கிடைத்தன. 

 சில வேளைகளில் சில மக்களின் குணவியல்புகளைப் பொதுமைப்படுத்தும்போது குறும்பார்வைத் தன்மைகள் முகம் காட்டலாம். அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கமாட்டேன். மாற்றியல்புகளோடு அம் மக்கள் மீண்டும் தோற்றமளிக்கும் வரை. 

 தாய்லாந்தில் தென்னிந்திய, குறிப்பாகத் தமிழரின், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடுகள் கலந்துறவாடுகின்றன. அது புத்த சமயத்தின் பாதிப்பாக இருக்கலாம் என்றால் அதே பழக்க வழக்கங்கள் ஏன் இலங்கையிற் காணப்படவில்லை? 

 பாங்கொக், சியங் மாய் போன்ற இடங்களில் மக்கள் பெரும்பாலும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். இரு கை கூப்பி, தலை வணங்கி வரவேற்கிறார்கள். இயற்கையாகவே அழகானவர்கள். அவர்களது தேசிய உடைகள் அழகானவை. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை பட்டுச் சேலையைச் சுற்றிக் கட்டி, முழுக் கை நீளச்சட்டையோடு குறுந் தாவணி போட்டுக் கொள்கிறார்கள். வேற்றின மக்களைத் துவேஷத்தோடு பார்த்ததாக நான் அறியவில்லை. 

 தெற்கில் ஹுவான் ஹி என்ற கடற் கரை சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப் பட்டிருக்கிறது. தாய்லாந்து மன்னரின் கோடை வாடி இங்குதானிருக்கிறது. 

தெற்கில் அரைக்கரைவாசி நமது திராவிடக் கலப்புடன் மக்களைக் கண்டேன். பாவம் தாய்லாந்துக்காரர். அவர்களது அழகெல்லாம் இங்கு இழக்கப்பட்டிருக்கிறது. 

காலை 10 மணி போல் ஒருவர் வெறியோடு தள்ளாடிக்கொண்டு வந்தார். அவர் நமது திராவிடக் கலப்பினர். கலாச்சாரத்தையும் விடாது வைத்திருக்கிறார். 

கை கூப்பித் தலை வணங்குதல் இங்கு காணப்படவில்லை. அழகான பெண்களையும் காண்பது அரிதாகவே இருந்தது. 

 தாய்லாந்து மேற்கு நாடுகள் போல் வறியவர்களுக்கு சமூக மானியம் கொடுக்கும் நாடல்ல. எல்லோரும் உழைத்துத்தான் வாழ வேண்டும். 

தெருவோரச் சாவடிகள் பட்டி தொட்டியெங்கும் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள், வயதானவர்கள் பண்டங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவை உணவுப் பண்டங்களாகவோ அல்லது கை வினைப் பொருட்களாகவோ தானிருக்கும். 

 தாய்லாந்து காலனித்துவப் பிடியில் அகப்படாத நாடு. இப்பொழுதும் பெயரளவில் மன்னராட்சி. அரச குடும்பத்தை மக்கள் தெய்வத்திற்கிணையாக மதிக்கிறார்கள். அரசர், அரசி, இளவரசிகளது பெரிய படங்கள் தெருச் சந்திகளெங்கும் வைக்கப்பட்டிருக்கின்றன. எங்களூர்களில் போல சினிமா நடிகர்களினதோ அல்லது அரசியல்வாதிகளினதோ படங்கள் எங்கும் காணப்படவில்லை. 

தாய்லாந்து மக்கள் சுய உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டுமென்ற விருப்பில் மஹாராணியார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும்படி மக்களை ஊக்குவிக்கிறார். அதற்காக கைவினைப் பயிற்சிக்கூடங்களைக் கிராமங்கள்தோறும் அமைப்பித்து நிர்வகிக்கிறார். 

சூழற் பாதுகாப்பில் அரசர் அதிக அக்கறை காட்டுகிறார். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி இயற்கையான பசளை மற்றும் விவசாயப் பொருட்களைத் தயாரிக்க உதவுகிறார். 

 தாய்லாந்து பெரும்பாலும் சுற்றுலாத் துறையில் தன் வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறது. அதற்காக பழம்பெரும் ஆலயங்களையும் அரச மாளிகைகளையும் முன்நாள் அரண்மனைகளையும் பரிபாலித்து வருகிறது. இருப்பினும் ஆடை மற்றும் பாவனைப் பொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது. 

 நகரங்களில் வாகன நெரிசல் அதிகம். மோப்பெட்டுகள் முதல் மினி பஸ்கள்வரை தனியார் வாகனங்களும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பொதுப் போகுவரத்து சாதனங்களும் சேவையில் உண்டு. டாக்சிகள் ஏராளம். கட்டணம் அதிகமில்லை. சென்ற வருடம் புதிய விமானத்தளமொன்றைப் பாவனையில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அழகான பிரமாண்டமான தளம். முகப்பில் (தளத்தினுள்ளே) அசுரரும் தேவரும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியைச் சிற்பமாகச் செய்து வைத்ததிருக்கிறார்கள். சுமார் எழுபது அடிகள் இருக்கும். பொறாமைப்ப்டும்படியான - அழகான நாடு, அழகான மக்கள்.

புரிந்துணர்வைப் புரிந்துகொள்ளல்

புரிந்துணர்வைப் புரிந்து கொள்ளல்

சென்ற ‘வீடு’ இதழில் வெளியான கட்டுரை கொஞ்சம் பரபரப்பாகவிருந்ததென்று கேள்வி.

இதயங்களாற் சிந்திப்பதற்கும் மூளையாற் சிந்திப்பதற்குமிடையில் வித்தியாசமுண்டு என்பதை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அக் கட்டுரை ஆச்சரியத்தைத் தந்திருக்க முடியாது. அரசியல், மதம், காதல் இவற்றிலெல்லாம் மூளையை ஓய்வெடுத்துக் கொள்ளப் பழக்கப்பட்டிருப்பது துர்ப்பாக்கியமேதான்.

“If we embark on (these) romantic ideas to revive a mythical past of greatness and culture, we would be damned” என்று முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் சமீபத்தில் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றிற் கூறியிருந்தார். இதயங்களினாற் சிந்திப்பவர்களுக்கு இடம் கொடுக்காது தனது நாட்டை அவர் உருவாக்கியமையே இன்று அங்கு மதம், மொழி ஆகியவற்றுக்கு அரசாசனம் வழங்கப்படாது ஆட்சி நிர்வாகம் ஒழுங்காகக நடைபெறுவதற்குக் காரணம்.

பிரச்சினைகளுக்கு போர் அல்லது வன்முறை மட்டுமே தீர்வாகும் என்பதில்லை. சிறிய பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பல மில்லியன் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே வேளை அணுவாயுதப் போராக வெடிக்கவிருந்த பல பிணக்குகள் சில மனிதர்களின் சமயோசித உடன்படிக்கைகளினாற் தீர்க்கப்பட்டிருக்கின்றன. முதலாவதற்கு உதாரணம் சேர்பிய விடுதலைப் போராட்டம் பின்னர் ஆஸ்திரிய-ஹங்கேரிய போராக வெடித்து உலகப் போராக வெடித்தமை. இரண்டாவதற்கு உதாரணம் சோவியத் குடியரசின் வீழச்சி.

1917 அக்டோபர் புரட்சிக்குத் தேவையான ஆரம்ப பின்புலப் பண உதவியை அளித்தது மேற்கத்தய உலகப் பெரும் தனவந்தர்கள். அப்போது லியோன் ட்றொட்ஸ்கி நியூயோர்க்கிலிருந்து வெளிவந்த ‘த நியூ வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் நிருபராகப் பணிபுரிந்தார். அமெரிக்க காங்கிரஸ் ஆவணங்களின்படி போல்சவிச் புரட்சிக்கு பண உதவி செய்த தனவந்தர்களில் றொத்ஷைல்ட், ஜேக்கப் ஷிவ், ஜோர்ஜ் வால்க்கர் போன்றவர்கள் அடங்குவர். இந்த வாக்கர் என்பவர் தற்போதய அமெரிக்க ஜனாதிபதி புஷ் இனது பாட்டனாராவார். அக்டோபர் புரட்சியின் பெறுபேறாக இழக்கப்பட்ட உயிர்களும் உடமைகளும் பல மில்லியன்கள். ‘மனித சமத்துவம்’ வேண்டி நடத்தப்பட்ட இப் புரட்சிக்கு கொடுக்கப்பட்ட விலை மனித உயிர்களே.

இதே போன்று இப் புரட்சியின் பெறு பேறாகிய சோவியத் குடியரசைக் ‘கத்தியின்றி இரத்தமன்றி’ முடித்து வைத்த பொறுப்பும் அமெரிக்காவையே சாரும். இதற்கு அவர்கள் பாவித்த முதன்மையான கருவி மதம். அப்போதய கத்தோலிக்க தந்தை பாப்பரசர் ஜோன் போல் மற்றும் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி றேகன் இருவரும் இதற்குப் பொறுப்புடையவர்கள். சோவியத் குடியரசின் உடைவால் அமெரிக்க வணிக நிறுவனங்களும் கத்தோலிக்க திருச்சபையும் லாபமடைந்தன. அதே வேளை பாரிய உயிர் உடமை இழப்புகள் ஏதுமின்றி இப் புரட்சி நடைபெற்றதால் மானிடம் நன்மை பெற்றது. அதற்குரிய பெருமையும் இவ்விருவரையுமே சாரும்.

எமது ஈழப் போராட்ட வரலாற்றில் மேற்கூறிய இரு முறைகளும் நடைமுறைப் படுத்தப்பட்டன. இதயங்களினாற் சிந்திக்கின்ற மக்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்துவதற்காகப் பல ஆயிரம் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிலங்கை இனக்கலவரங்கள், இந்தியாவின் தூண்டுதலாற் செய்யப்பட்டது என்று கருதப்படும் அனுராதபுரப் படுகொலைகள என்று பல மக்களின் உணர்வுகளைக் கிளறி விடவும், அதன்பால் உருவேற்றப்பட்ட உணர்வுகளுக்குத் தீனி போடவும் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு இவை செயலாற்றப்பட்டவை.

மாறாக, 1987 இல் நடைபெற்ற இந்திய இராணுவத்தினரோடு விடுதலைப் புலிகள் செய்த போரின்போது புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் ‘புரிந்துணர்வு’ உடன்படிக்கை செய்வது அவசியமாகவிருந்தது. இதே போன்ற உடன்படிக்கைகள் சிங்கள – தமிழ் அரசியலில் நடைபெறாத ஒன்றல்ல. சோழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் சேரர்களுடனும் பாண்டியர்களுடனும் உடன்படிக்கை செய்து கொண்ட சம்பவங்களும் வரலாற்றிலுண்டு. அதே போன்று கருணாவின் கிளர்ச்சியைப் புலிகள் முறியடிக்க எடுத்த முயற்சியில் பாரிய உயிரிழப்பு ஏற்படாது வெற்றியை எட்டுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பல தந்திரங்களைக் கையாண்டார். தனித்தனி முகாம்களிலிருந்த போராளிகளைத் தனிமைப்படுத்தி அவர்களோடு பேச்சுக் கொடுத்து உளவியல் ரீதியாக அவர்களை மாற்றி எதிர்ப்புகளையும் இழப்புக்களையும் தவிர்த்து வெற்றியை ஈட்டினார். முழு அளவிலான போராக அது நடைபெற்றிருப்பின் பல ஆயிரக் கணக்கான போராளிகளின் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கும்.

பிணக்குகள் போர் முனையில் மட்டும்தான் தீர்க்கப்பட வேண்டியதல்ல என்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்களைக் காட்டலாம். அதே வேளை பல கொலைவெறி அபிலாட்சைகளைப் போர் மூலம் மட்டுமே நிறுத்தலாம் என்பதற்கும் உலகவரலாற்றில் பல தடயங்களுண்டு. பாபர் முதல் அவுரங்கஷீப் வரையிலான முகலாய சக்கரவர்த்திகளின் மத விஸ்தரிப்புப் போர்களைத் தடுப்பதில் இந்தியாவின் மராத்திய அரசர்களின் பங்கு முக்கியமானது. பிரித்தானியருக்கு எதிராகக் கிளர்ந்த சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதக் கிளர்ச்சி, தென் ஆபிரிக்க விடுதலைக்காக ஆயுதமேந்திய ஆபிரிக்க தேசீய காங்கிரஸின் ஆயுதக் கிளர்ச்சி, சிம்பாப்வே விடுதலையைப் பெற்றுத் தந்த முகாபே, நுக்கோமா போன்றவர்களின் ஆயுதப் போராட்டம் இவையெல்லாம் உலக வரலாற்றில் தேவை கருதி ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்கள்.

இப்பின்னணியில் தற்போதய ஈழப்போராட்டத்தை அணுகிப் பார்த்ததால் எனக்குக் கிடைத்த ஒரு பார்வைக் கோணமே சென்ற இதழ்க் கட்டுரையான ‘பொங்கு சிங்களம்’.

போராட்டத்தில் கால நேரத் தேவைகளுக்கேற்ப உத்திகளும், வடிவங்களும், வியூகங்களும், தந்திரோபாயங்களும் மாறும் என்பதை எல்லோரும்ஏற்றுக் கொள்வார்கள். அதை மாற்றும் தகமையும், வல்லமையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் இரு பகுதியினருக்குமே உண்டு. இதயங்களினாற் சிந்திக்கும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு உணர்வுகள் மட்டுமே வழிகாட்டும். இப்படியான மக்களின் உணர்வுகளை மதித்து அதற்காகவே போரை வழிநடத்தும் தேவை எல்லா சிங்கள அரசுகளுக்குமே இருந்துவந்திருக்கிறது. ஜனநாயக மரபிலான தேர்தல்களை நம்பி ஆட்சிநடத்தும் சிங்களக் கட்சிகளுக்கு அது தேவையானது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் போரில் தமிழர் தரப்பு வெல்லவேண்டும் என்ற உணர்வு வழிப்பட்ட வெளிப்பாடுகள் இருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் வெளியேறியது பற்றிய பார்வையில் தமிழ் மக்களுக்கு இரண்டு கோணங்களுண்டு. கிழக்கு மாகாணத்துக்கு வெளியேயிருந்து பார்ப்பவர்களுக்கு புலிகள் வெளியேறியது தந்திரோபாயமாகப் பார்க்கப்படலாம். ஆனால் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு தாங்கள் தமிழர் தரப்பினால் ‘கைவிடப்பட்ட’ மக்கள் என்ற எண்ணம் உருவாகும்போது தங்கள் காவலர்கள் தோற்றுப்போய் விட்டார்கள் என்ற நினைப்பு வருவதையும் தவறென்று கூறிவிட முடியாது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண மக்கள் (பாதிக்கப்பட்ட) இப்போதைக்குத் தங்களது உடனடியான அவலங்களுக்கான தீர்வொன்றையும் பின்னர் நீண்டகாலத்தை மையப்படுத்திய தீர்வொன்றையும் யார் பெற்றுத்தர வல்லவர்கள் என்பதைப்பொறுத்தே தமது ஆதரவை வெளிப்படுத்துவார்கள். சகல தமிழ் பேசும் மக்களும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். கருணா குழுவினரின் பிரிவு ஈழவிடுதலைப் பேராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு நமக்கு நாமே சொல்லிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. அதே வேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வொன்றை மட்டுமே ஏற்பதற்குத் தயாராகவுள்ளார் என்பதையும், வடக்கை மட்டும் தனது பரிபாலன பிரதேசமாக ஏற்றுக் கொண்டிருப்பின் இப்போது போர் நடைபெற்றுக்கொண்டிருக்காது என்பதையும் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வார்கள். வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழத்தின் தீர்வொன்றே தமிழ் மக்களின் அபிலாஷை என்பதை முன்வைத்தே அவர் அக்கோரிக்கையைத் தனது குறிக்கோளாக முன்வைக்கிறார். இவ்வேளை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பிரசன்னம் இல்லாதுபோய் கருணா குழவினரின் ஆதிக்கம் பரவலாக்கப்பட்டு அதன் மூலம் அம் மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறுமானால் அரசியல் ரீதியாகப் புலிகள் தோல்வியுற்றவர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

அதற்கு அடுத்த கட்டமாக கிழக்கு மாகாண மக்கள் தங்கள் நீண்டகால பிரதேச தனித்துவத்தைப் பற்றி யோசிக்கும் கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசின் வலிந்த குடியேற்றங்கள் காரணமாக தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் இழக்கப்பட்ட நிலையில் அதைத் தடுத்து நிறுத்த கருணா குழுவினர் எதுவுமே செய்யாதிருக்கும் பட்சத்தில் புலிகளை நிராகரித்ததற்காக அவர்கள் வருத்தமடையவே செய்வார்கள். இதுவரை கால இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழரிடமிருந்து அபகரிக்கப்பட்ட பிரதேசங்கள் மீட்டெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லாதபோது தற்போது இழக்கப்படும் பிரதேசங்களுக்கும் அதே கதிதான் என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே தற்போதிருக்கும் சூழ்நிலையில் பிரதேசங்களைப் பாதுகாப்பது தமழருக்கு மிக அவசியமானதொன்று. கிழக்கு மாகாணத்தில் அதைச் செய்யும் வல்லமை இப்போது விடுதலைப் புலிகளுக்கு உண்டா என்பது கேள்விக்குறி. கருணா குழுவினரால் அதைச் செய்யும் வல்லமை உண்டா என்றால் அதுவும் ஒரு மிகப் பெரியதொரு கேள்விக்குறி.

இந்நிலையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பு எப்படியிருக்கும். புலிகள் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களை மீட்டெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருக்கிறது. ஆனால் கிழக்கு மாகாண மக்களது உடனடியான மனநிலை அப்படியில்லை என்பதே எனது கருத்து. இதற்கான ஒரு தீர்வாக அம் மாகாண மக்களது பெரு விருப்பாக இருக்கக்கூடிய ஒன்று மீண்டும் தமிழர் தரப்பு ஒற்றுமையாக நின்று ஒரு நிரந்தரமான தீர்வைத் தமக்குப் பெற்றுத்தரவேண்டும் என்பதே. உணர்வுகளின் மேலீட்டால் நாம் இப்போது சொல்லிக்கொள்ள முடிவது – அது சாத்தியமாகாது என்பதே. ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமாகவிருக்கிறது என்பதையே நான் சென்ற இதழில் கோடிட்டுக் காட்டினேன்.

கருணாவுடன் எம். ஓ. யு. என்பது மேலோட்டமான பூடகமான ஒரு சொற்பதமென்பதை இதயங்களினாற் சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அதை நான் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் அப்பதத்தின் பின்னணியில் தொக்கி நிற்கும் விவாதத்திற்கான தேவையை தர்க்கரீதியாகச் சிந்திப்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். புரிந்துணர்வு என்பது இதய சுத்தியான ஒரு விடயமானாலும் தற்போது அது ஒரு தந்திரோபாய அரசியல் பதமாகவே பாவிக்கப்படுகிறது. எதிரியுடன் பேச்சுவார்ததைக்கான தளத்தைப் பண்படுத்துவதில் இச் செயல் முக்கியமானது. இன்னுமொரு தளத்தில் தற்காலிக இடைவேளை பெற்றுக்கொள்வதிலும் இது நிரம்ப உதவி செய்கிறது. எதிரியை ஊடறுத்துப் பலவீனமாக்குவதிலும் இது பயன்படுகிறது. புலிகள் இந்தப் புரிந்துணர்வைத் தமக்குச் சாதகமாகப் பலதடவைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப் பின்னணியில், சென்ற இதழில் நான் சொன்ன எம்.ஓ.யு. வைப் புலிகள் சாதகமாக்கினால் கிழக்கை அரசியல் ரீதியாக வென்றெடுக்க அது ஒரு வழி. அதன் பிறகு இராணுவ வெற்றியை அவர்கள் நிச்சயித்துக் கொள்வார்கள். வரியிடை வாசிப்பில் பரிச்சயமானவர்களுக்கு என் கருத்தின் பின்னணி புரிந்திருக்கும். புரியாதவர்கள் தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சம்பலை அரைத்துக்கொண்டுதானிருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டினைப் புரிந்து கொண்டவர்களுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்திருக்கும். தேவையேற்படின் அவர்கள் யாரோடும் பேசுவார்கள். யாரோடும் போர் புரிவார்கள். அது அவர்களது போரியல் தந்திரம். அச் செயற்பாடுகளின் வெற்றி தோல்விகளுக்கும் அவர்களே பொறுப்பாளிகள். உணர்வு மேலீட்டால் அதைச் செய்வதில்லை என்பதில் எனக்கு மிகவும் உடன்பாடு இருக்கிறது. இல்லாவிடில் ஈழப்போர்களின் எண்ணிக்கை இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்.

பேச்சுவார்த்தைகள் எதிரிகளைப் பலமிழக்கச் செய்வதற்கும் பயன்படலாமென்பதை மனதிற்கொண்டு பார்ப்பின் புரிந்துணர்வைப் புரிந்து கொள்வதில் சிரமமேயிருக்க முடியாது. இதற்கு மேல் அரைப்பவர்களுக்கு அம்மிதான் மிஞ்சும்.