வெள்ளி, 18 ஜனவரி, 2008

பழையதோர் உலகம் செய்வோம்

பழையதோர் உலகம் செய்வோம்

புதிய உலகம் ஏமாற்றம் தருவதாயிருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘உலகம் எப்படியெல்லாம் இருந்தது, நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம்’ என்று பழைய முதியவர்களும் புதிய முதியவர்களும் ஆதங்கத்தோடு கிசு கிசுத்துக் கொள்கிறார்கள். இரைச்சல் மிகுந்த புதிய உலகத்தில் உளறுவாய் வணிகர்களே மகாவித்துவான்களாயிருக்கிறார்கள். வணிகர்களின் அழுங்குப் பிடியிற் சிக்கியுள்ள அரசுகள் மக்களுக்காக எதையுமே செய்யமுடியாத நிலைமை. மக்களை வெறும் மந்தைகளாகவும் நுகரும் அஃறிணைகளாகவும் மட்டுமே வைத்திருக்க வணிகர் குழாம் முடிவெடுத்ததிலிருந்து உலகம் அழியத் தொடங்கிவிட்டது.

சென்ற வாரம் செய்தியொன்று வந்தது. மது, புகைத்தல், இராணுவத் தளபாட வணிகர்களது தொழில்கள் மிக அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்து வருகிறது என்பதே அது. மேற்கு நாடுகளில் புகைத்தல் தடை என்பது மிக வேகமாகப் பரவிவரும் ஒரு நடைமுறை. அதற்கு முக்கிய காரணம் அரசுகள் தமது மக்கள் மீது வைத்திருக்கின்ற கரிசனை அல்ல. மது, புகைத்தல், வெடியாயுதங்கள் மூலம் அரசுகளும் அதன் நண்பர்களான வணிகர்களும் சம்பாதிக்கின்ற வரியும், லாபமும் பெருந்தொகையானவை. அப்படியிருந்தும் புகைத்தலை அரசுகள் ‘மக்கள் நலம் கருதித்’ தடைசெய்கிறார்கள் என்றால் அது வெறும் முதலைக் கண்ணீரே. உண்மையில் புகைத்தலால் பாதிக்கப்படும் நோயாளிகளைப் பராமரிக்க ஆகும் அரச செலவு அதனால் கிடைக்கின்ற வருமானத்தைவிட அதிகமானது என்பதாலேயே அரசுகள் புகைத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கின்றன.

மக்கள் நலம் மீது அக்கறையிருப்பின் புகையிலைப் பொருட்கள் இறக்குமதியை ஒரேயடியாகத் தடைசெய்யலாம். சிறுதுப்பாக்கிகளால் வேட்டையாடப்படும் மக்கள் வடஅமெரிக்காவில் அதிகம். அப்படியிருந்தும் அமெரிக்காவில் மில்லியன் கணக்கில் ஆயுத உற்பத்தி தொடர்கிறது. மதுவால் சீரழியும் அமெரிக்க இந்திய சமூகத்தினர், போதைப்பொருட் பாவனையால் உருக்குலையும் கறுப்பின சமூகம் என்று எல்லோரும் வடஅமெரிக்க மக்களே. அப்படியிருந்தும் வியாபாரம் தடபுடலாக நடக்கிறதென்றால் அதற்கு அரச-வணிக கூட்டணியே காரணம்.

சென்றவாரச் செய்தியின் பின்னர் சீ.பி.சி. வானொலிப் பேட்டியின்போது செய்தியாளரின் கேள்விக்கு வணிக பிரதிநிதி அளித்த பதில் இது. “வடஅமெரிக்காவில் பொதுவிடங்களிற் புகைத்தல் தடைசெய்யப்பட்டதால் எமக்கு லாபம் அருகியது உண்மையே. ஆனால் அந்த இழப்பை இப்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளும் இதர மூன்றாமுலக நாடுகளும் ஈடுசெய்கின்றன. அது மட்டுமல்ல அங்கு எமது சந்தை மிக வகமாக வளர்ந்தும் வருகிறது”; என்றார். அதற்கு அடுத்தபடியாக அச் செய்தியாளர் கேட்டது “நீங்கள் புகைபிடிப்பதுண்டா?” என்று. “இல்லை” என்பது அவரது பதில்.

பல வருடங்களுக்கு முன் அமெரிக்க வணிக நிறுவனமொன்று புகைத்தற் பழக்கத்தை மூன்றாமுலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியபோது இலவசமாக அதிக நிக்கொட்டீன் செறிவுள்ள சிகரட்டுகளை இந்நாடுகளின் மக்களுக்கு வழங்கியது. கவர்ச்சியாக உடையணிந்த இளம் பெண்கள் சினிமா கொட்டகை வாசல்களில் நின்று இச்சிகரட்டுகளை வழங்குவார்கள். தென்கிழக்காசிய மக்கள் பலர் சிகரட், மது, அபின், சூது என்று பல பலவீனங்களுக்கு இலகுவாக அடிமையாவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. சீனாவோடு போர் தொடுத்து வெல்லமுடியாதென்றறிந்த பிரிட்டன் அபின் போரைத் (ழிரைஅ றயச) மூலமே அவர்களை வெல்ல முடிந்தது. வியட்நாம் போரின்போது சூதாட்டம் பரவலாகப் பாவிக்கப்பட்டது.

இப்போது சீனாவில் அமெரிக்க பெரும் வணிகர்களான புகையிலை வியாபாரிகள் கூடாரம் அடித்துள்ளனர். சீனாவின் அபரிமிதமான பொருளாதார, இராணுவ வளர்ச்சியைத் தோற்கடிப்பதற்கான ஒரு வழி அந்நாட்டு மக்களது பலவீனத்தைச் சாதகமாக்குவதே.

உலகம் முழுவதையும் ஒரு குடைக்குட் கொண்டுவர வேண்டுமென்ற பாரிய திட்டத்தின் பிரகாரம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பல. 1970களில் அமெரிக்க அரச தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்டர்நெட், இராணுவ தேவைகளுக்கென உருவாக்கப்பட்ட ஜீ.பி.எஸ் எனப்படும் பூகோளக் குறிகாட்டி மற்றும் செல் தொலைபேசிகள் போன்றவற்றை பொதுமக்களின் தேவைக்கென அறிமுகப்படுத்தியமை வெறும் வணிக நோக்குடனானதல்ல. சிலநாட்களுக்கு முன்னர் நண்பரொருவர் கேட்டார் “இந்த ர்ழவஅயடைஇ புஆயடைஇ யாஹ_ போன்ற இலவச ஈமெயிலைப் பொதுமக்களுக்குத் தருவதால் இந்நிறுவனங்கள் என்ன லாபத்தைச் சம்பாதிக்கின்றன?” என்று. இப்படியான கணனி மென்பொருட்களின் மூலம் மிகவும் சொற்பமான விளம்பரங்களே பயன் தருகின்றன. ஆனால் இவ்விலவசமான சேவைகளின் நோக்கம் அதன் பாவனையாளர்களைக் கண்காணிப்பில் வைத்திருப்பதே. இவ்விலவச நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் மேற்பார்வையில் இயங்குவன. தேசீய பாதுகாப்பு என்ற போர்வையில் தனி மனித சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மக்கள் தயார் என்றாலும் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பல வழிகளிலும் கண்காணிக்கப் படுகிறார்கள். சமீபத்தில் பல தமிழ் பல்கலைக்கழக இளைஞர்கள் கனடிய – அமெரிக்க பாதுகாப்புத் துறையினாற் கைதுசெய்யப்பட்ட போது அவர்களது ஈமெயில் தகவற் பரிமாற்றமே ஆதாரமாகக் காட்டப்பட்டது.

இப்போதெல்லாம் காகிதத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று கணனியிலேயே உங்கள் விண்ணபப்ங்களைச் செய்யச் சொல்கிறார்கள். வீட்டிலிருந்தே பல காரியங்களை இலகுவாக முடித்து பலமணி நேரத்தை மீதப்படுத்தலாம். ஆனால் கணனி மூலம் நாம் வழங்கும் பிரத்தியேகத் தகவல்கள் பிரதான சேமக் கணனியிற் (ஆயin ளுநசஎநச) நிரந்தரமாகச் சேமிக்கபடுமென்பதோ அத் தகவல்கள் தேசீய பாதுகாப்பு காரணத்திற்காக பல நாடுகளின் பாதுகாப்புத் திணைக்களங்களாற் பகிர்ந்து கொள்ளப்படுகிறதென்பதோ பலருக்குத் தெரியாமலிருக்கலாம். நாம் எமது கணனிகளில் அழித்துவிட்டோமென்று நினைத்துக் கொண்டிருக்கும் தகவல்கள் பல சேமக் கணனிகளில் நிரந்தரமாகப் பதியப்பட்டிருக்கும் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இப்படியான சேமக் கணனிகளோ அல்லது அவற்றில் சேமித்த தகவல்களைப் பாதுகாக்கும் டீயஉமரி ளுநசஎநச எனப்படும் கணனிகளோ எந்த நாட்டில் யார் பாதுகாப்பில் உள்ளன என்பதோ மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கலாம். எனவே ஒருவகையில் நாமெல்லோரும் உலக வலைக் கண்ணியில் சிக்குண்டவர்கள்தான்.

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பால்கன் போரில் அமெரிக்க விமானங்களின் தாக்குதலுக்கு முதலிற் பலியானது தொலைபேசித் தகவற் பரிவர்த்தனைக் கோபுரம். இதன் மூலம் தொலைபேசிச் சேவையைத் துண்டிப்பதன் மூலம் இரண்டு நோக்கங்கள் நிறைவேறின. ஒன்று ‘எதிரிகளின்’ தகவற் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது. இரண்டாவது அமெரிக்க செல் தொலைபேசி நிறுவனங்களின் வியாபாரத்தை அங்கு அதிகரிப்பது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் அங்கு முதன் முதலில் நிறுவப்பட்ட செல் தொலைபேசி நிறுவனத்தின் அதிபர் அப்போது ஜனாதிபதி கிளின்டனின் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த மடலின் ஆல்பிறைட் என்பவரே. இதன் பின்னணியில் இருக்கும் பிறிதொரு காரணமே அமெரிக்க இராணுவத்தின் முதல் நோக்கம். அதாவது செல் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதன் மூலம் எதிரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். அதேவேளை தேவையான நேரத்தில் இத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்து எதிரிகளின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தலாம். இதையேதான் இப்போது இலங்கை இராணுவமும் செய்கிறது. ஈராக்கிலும் இப்போதுள்ள செல் தொலைபேசிச் சேவைகள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கிறது.

இன்றய தொழில்நுட்பம் மனித குலத்துக்குக் கொடுத்த வஜ்ராயுதம் தகவற் சாதனமொன்றே. மனித குலத்தைப் பூண்டோடழிக்கக்கூடிய வல்லமை அதற்குண்டு. மக்களை இலகுவாகத் திசை திருப்பக்கூடிய வகையில் செய்திகளைப் பரிமாற்றி வாழிடங்களுக்குக் கொண்டுவரும் இச் சாதனங்களை நல்ல வழிகளிலும் பாவிக்கலாம். ஆனால் நவீன உலகில் நடைபெற்றதும் நடந்து கொண்டிருக்கின்றதுமான போர்களை எடுத்துப் பார்க்கின் அவற்றின் உருவாக்கத்திற்கும் முடிவுகளுக்கும் தகவற் சாதனங்களே காரணமாயிருந்திருக்கின்றன.

பெரும்பாலான ஜனநாயக மரபைப் பேணும் நாடுகள் போர்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதற்கு தம் நாட்டு மக்களின் ஆதரவைத் தேட முற்படுவார்கள். அதற்கு அவர்களுக்கு எப்போதும் துணையாக நின்றவை இத் தகவற் சாதனங்களே. பல தடவைகள் இச் சாதனங்கள் பொய்களைச் சொல்லியும், உண்மைகளைச் சொல்வாமல் விட்டும், திரித்துச் சொல்லியும் மக்களை உணர்ச்சிவசப் படுத்தி அதிகாரத்தில் இருபபவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுக்கின்றன. உதாரணமாக முதலாம் வளைகுடாப் போரில் குவைத் நாட்டின் மீது படையெடுத்த ஈராக்கிய படைகள் பொது மருத்துவ மனையொன்றிலிருந்து குழந்தைகளைக் கொன்றார்கள் என்று ‘கண் கண்ட’ சாட்சியென ஒரு பெண் அமெரிக்கத் தொலைக்காட்சியொன்றிற்குப் பேட்டி கொடுத்தார். போர் முடிவுற்ற பின்னர்தான் தெரிய வந்தது அப் பெண் அப்போதய குவைத் ராஜதந்திரியின் மகள் என்றும் அமெரிக்க தகவல் நிறுவனமொன்றின் பிரச்சாரத் தேவைக்காக அமெரிக்காவிற் தயாரிக்கப்பட்ட குறும் படமே அவ்விவகாரம் என்பதும்.

பெரும்பாலான உலக நாடுகளில் இப்போது நடைபெறும் பிரச்சினைகள் பல அரசியற் காரணங்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டவையே. மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இஸ்ரேல் பலஸ்தீனிய பிரச்சினை இன்றுவரை முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் அப் பூசலைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தகவற் சாதனங்களே காரணம். இரண்டு தரப்பிலும் அமைதியான தீர்வுக்கு மக்கள் ஆதரவில்லை, போர் மூலமே பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை இரு பக்க மக்களும் பரஸ்பரம் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தகவற் சாதனங்கள் கூறுகின்றன. அதுவேதான் மக்களின் உண்மையான கருத்தா அல்லது அவை தகவற் சாதனங்களால் உருவாக்கப்பட்டவையா என்ற ஐயம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் போர்கள் திணிக்கப்படுவதற்கு முன்னர் மேற்குலக நாடுகளில் தகவற் சாதனங்கள் பல விதமான பரப்புரைகளை முன்னீடுகளாகச் செய்து வந்தன. பல ஊடகங்கள் ஒன்றையொன்று மேற்கோள் காட்டி எல்லாமே ஒத்தூதி வந்தன. தேசீயப் பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி அவை எல்லாம் தேசீயத் தாளத்துக்கு நர்;த்தனமாடின. பொய்கள் உண்மைகளாக்கப்பட்டன. மக்கள் நம்பினார்கள். போருக்கு ஆதரவளித்தார்கள்.; உண்மைகள் மீண்டும் பொய்களானபோது இத் தகவற் சாதனங்கள் வேறிடங்களுக்கு நகர்ந்து அங்கும் மீண்டும் பொய்களின் தொழிற்சாலைகளாகத் தம்மை ஆக்கிக் கொண்டன.

உலகில் இயற்கை வளங்கள் அருகிப் போய்க் கொண்டிருக்கும் அதே வேளையில் இந்தியா, சீனா, மலேசியா போன்ற புதிய நுகர்வுக் களங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பொருளாதாரப் பட்டினியைத் தீர்க்க வல்ல புதிய வளங்களைத் தேடிப் போட்டிகள் உருவாகிவருகின்றன. இதனால் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா என்று பல வளமான பூமிகளைத் தம்வசப்படுத்தும் போட்டிகளில் பல அரசியல் நகர்வுகளும். பல இராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப் படுகின்றன. இப் போட்டிகளில் பல விசித்திரமான நட்புகளும் உறவுகளும் உருவாக்கப்படலாம். முன்னர் இருந்ததாகக் கருதப்படும் சித்தாந்த ரீதியான நட்புகள் திடீரென்று கைவிடப்படலாம். இப்படியான காய் நகர்த்தல்களில் இந்து சமுத்திரத்தில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் எதிர்கால நட்புகளும் புதிய வடிவங்களை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இப் பின்னணியில் இராமாயணத்து அணிலாக இலங்கை தன்னை உருவகப்படுத்தி வருவது தெரிகிறது. இந்தியாவோடு ஊடலும் கூடலுமாகவும், பாகிஸ்தான், சீனாவோடு கூடலுமாகவும் இந்து சமுத்திர ஆதிக்கப் போட்டிகளில் தன்னை ஒரு பங்காளியாகக் காட்ட இலங்கை பகீரத முயற்சி எடுத்து வருகிறது.
இலங்கையின் இந்த சர்வதேசங்களின் ‘செல்லப் பிள்ளை’ நிலை சர்வதேச தகவற் சாதனங்களையே அவர்களுக்குச் சாதகமாக மாற்றி வைத்திருக்கிறது. பயங்கரவாதம், தேசீய பாதுகாப்பு என்பன தனிமனித உரிமைகளை முன்னெப்போதுமில்லாத அளவுக்குப் பாதித்திருக்கிறது. தனிமனித உரிமைகளைப் பாதுகாக்க வல்ல தகவற் சாதனங்கள் அதிகாரங்களின் சாதனங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

வியட்நாம் போரின் தாக்கங்கள் மறக்கப்பட்டதற்கும், ஈராக் ஆப்கானிஸ்தான் போர்கள் மறைக்கப்பட்டதற்கும் தகவற்சாதனங்களே காரணம். ஆனாலும் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள். உண்மைகள் மெதுவாகவேனும் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. பொய்களைத் திணித்த தகவற்சாதனங்களை மக்கள் இனங்கண்டு ஒதுக்கிவிடும் நிலைமை ஏற்படும். ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்கு அடுத்ததாக உலகில் ஏற்படப்போகும் மாபெரும் புரட்சி இதுவேயாகவிருக்கும்.

போர்கள் எப்போதும் ‘தேசீய நன்மை’ என்ற காரணத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன. மக்களை வசப்படுத்தும் இக்கோஷங்கள் இனிமேல் எடுபடப் போவதில்லை. புதிய தலைமுறையினர் இவ் வேற்றுக் கோஷங்களை இனங்கண்டு அவற்றை ஒதுக்குவதற்கான புதிய புரட்சியை முன்னெடுப்பார்கள். பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கும் இப்புரட்சி போர்களை ஒழித்து சூழல் பற்றிய கரிசனையோடு செயற்படும். அப்போது இயற்கையே அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கும். தகவற்சாதனங்களை முறியடிக்கும் வல்லமை இயற்கையிடம் மட்டுமே உண்டு. இயற்கையால் மீள உருவாக்கப்பட்ட அந்தப் பழைய உலகத்தில் மட்டுமே அமைதி அமைதியாக வாழ இயலும்.


மாசி 2007

கருத்துகள் இல்லை: