திங்கள், 30 ஜூலை, 2018

மாயப் பெட்டி


மாயப் பெட்டி 

அறை - 1

நீண்டநாட்கள் மறைந்திருந்த அந்த nostalgia சங்கடம் கடந்த சில நாட்களாகத் தொல்லை தரத் தொடங்கி விட்டது. பல ஒளித்தட்டுக்கள் (ஒலியும் தான்)அடங்கிய பெட்டியொன்று ஒருநாள் என் மேசையில் குந்திக்கொண்டிருந்தது.

விடயம் இதுதான். எனது நீண்டகாலத் தேட்டமும் இரண்டாவது மிக விருப்பமானதுமான (முதலாவது தமிழ், இலக்கியம், எழுத்து) electronic hobby and serious stuff பலதுக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது என் மனைவிக்கு நல்ல  சந்தோசம். தட்டுகள் நிறைந்த புத்தகங்களுக்கு இன்னும் விதி வந்து சேரவில்லை. இப்போதைக்கு மகிழ்ச்சி. மனைவிக்கு தமிழ் தெரியாவிடடாலும் அவளும்  ஒரு புத்தகப் பிரியை என்பதாலும் இருக்கலாம்.

பெட்டிக்குள் இருந்தவையம் எனது நீண்டகாலத் தேட்டமான ஒலி, ஒளித் தட்டுக்கள். அவற்றுக்கும் பிரியாவிடை கொடுக்கும்படியான வேண்டுகோள் ( அல்லது பணிவாக உத்தரவு) தான் அந்த மாயப் பெட்டி.

1983 இல் கனடா வந்ததிலிருந்து நான் எழுதிய, பேசிய நண்பர்களோடு குலாவிய சமூக, இலக்கிய அரட்டல்களை அவ்வப்போது பதிவு செய்து சேமித்து வைத்தவையே அந்தப் பெட்டியில் இருந்தவை. இவற்றில் எனது இலக்கிய , அரசியற் கிறுக்கல்கள் முக்கியம் பெறாவிட்டாலும் பல நண்பர்கள், படைப்பாளிகள், சுற்றத்தில் இருக்கவேண்டும் என நான் நினைக்கும் சில மனிதர்கள் என்று பலரை உள்ளடக்கிய புகைப்படங்கள் மிகவும் பூதாகாரமாக எழுந்து எனது கரங்களைக் கட்டி விட்டன. அவற்றை குப்பைக்குள் சேர்த்துவிடுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன்.  அது மட்டுமல்ல அப்படங்களில் உள்ளவர்களில் பலர் அகாலமாகப் பிரிந்து விட்டார்கள்.  அந்தப் படங்கள்  ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது. என் பிரிவிற்கு முன்னர் அவற்றைத் தமிழ்ச் சமூகப் பொது வெளியில் உலவ விட வேண்டும் என்பதே என் பெரு விருப்பு.