செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

Crazy Rich Asians (Chinese) - Movie Review


இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு - ஒன்று அரசியல்.

இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு - சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு - தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு  ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து வெள்ளையரல்லாத நடிகர்களால் நடிக்கப்பட்ட படம். அந்த வகையில் இப் படம் அவர்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறது.

இப் படத்தைப் பற்றி சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன. அதை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இப் படம் ஆரம்பத்தில் Crazy Rich Chinese எனப் பெயரிடப்படவிருந்ததாகவும் பின்னர் சந்தைப்படுத்தல் / வியாபாரம் / அரசியல் காரணமாகப் பெயர் மாற்றப்பட்டதாகவும் ஒரு கொசுறு உண்டு.

படம் கெவின் குவான் என்ற சிங்கப்பூரிய- அமெரிக்கரால் எழுதப்பட்ட Crazy Rich Asians என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. நியூ யோர்க்கைச் சேர்ந்த ஒரு சீன வம்சாவழிப்  பெண் பேராசிரியர் ஒருவர் அவளது  காதலனின் நாடான செல்வந்த சிங்கப்பூருக்கு அவனின் உறவினனர்  ஒருவரின் கல்யாணக் கொண்டாட்டத்துக்குப்  போகிறாள். அங்கு சென்றபோது தான் அவள் தனது காதலன் அதி பெரும் செல்வந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதையும் அங்குள்ள சீன செல்வந்தர்கள் செல்வக் கொழுப்பில் வாழ்வதையும் அறிகிறாள். ஆனால் அவளோ ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து தந்தையார் கைவிடப்பட்டு தாயாரால் உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண பெண். அந்தஸ்த்துக்கும் காதலுக்குமிடையான போர். வில்லன், வில்லி, தோழன், தோழி, காமெடியன் ஆகிய அத்தனை தமிழ்த் திரைப்படப் பொருளடக்கங்களும் இங்குமுண்டு. ஒரு romantic comedy genre என்று சொல்லலாம். இறுதிக் கட்டத்தில் சோகம் பிச்சுக் கொண்டு வரும். முடிவைச் சொல்ல மாட்டேன்.

இப்படியான ஒரே கதையைப்  பல தமிழ்ப் படங்களில் பார்த்த feeling உங்களுக்கு வரும். ஆனால் அதுவல்ல இந்த விமர்சனத்தின் நோக்கம்.

படம்  இப்படியான மேற்கோளுடன் ஆரம்பிக்கிறது.

'China  is a sleeping giant. Let her sleep, for when she wakes she will move the world.' - Napoleon Bonaparte 

இந்தப்படம் உலகுக்கு, குறிப்பாக மேற்கு நாடுகளுக்கும் உலகளாவிய சீன வம்சாவழியினருக்கும் வெவ்வேறு செய்திகளைச் சொல்கின்றது. இதில் அரசியல் பின்னணி இருக்கிறது. இந்த நெப்போலியனின் மேற்கோள் ஒரு எச்சரிக்கை மணியோசை. 

இப் படத்தை Warner Brothers நிறுவனம் தயாரித்திருந்தது. Black Panther ரைத் தவிர  யூத இன அல்லது வெள்ளையின மக்களின் வாழ்வு கலாச்சாரங்களைக் கொண்டாடும் படங்களையே ஹொலிவூட் தயாரித்து வந்திருக்கிறது. முழுமையாக வெள்ளையரல்லாத பாத்திரங்களைக் கொண்டு ஹொலிவூட் படங்களைத் தயாரித்து மேற்கத்திய நாடுகளில் வணிக ரீதியாக வெற்றி பெறுவது கஷ்டம். இப் படத்தின் தயாரிப்பும் ஏகப்படட எதிர்ப்பின் மத்தியிலேயே நிறைவேறியிருக்கிறது. இதன் பின்னணியில் முழு சீன இனத்தின் உழைப்பும் ஒருமைப்பாடும் இருப்பது தெரிகிறது. நவீன சீனாவின் புதிய உலக ஒழுங்கின் பெரும் கட்டளைக் கோவையின் ஒரு sub routine தான் இது என்பது என் கணிப்பு.


இப் படம் மேற்குலகுக்குச் சொல்லும் செய்தி. உங்களைவிட நாங்கள் ஒரு காலத்தில் செழிப்பான கலாச்சாரத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழ்ந்தவர்கள். நாங்கள் இழந்த அந்த பொற்காலத்தை மீட்டுக் கொண்டுவிட்டோம். [இதற்குள் ஒரு உப கதை : ஒரு காலத்தில் பலமாக இருந்த சீனாவைப் பிரித்தானியர் அபினி யுத்தத்தினால் தான் (Opium War) வெல்ல முடிந்தது. சீனர்களின் பலவீனம் போதையும் சூதாட்டமும் என்பார்கள். ]  சிங்கப்பூரின் ஒரு செல்வந்தரின் வீடு ஒன்றைக் காட்டும்போது அதைச் சுவர்க்க புரியாககே காட்ட எடுக்கப்பட்ட முயற்சியும் பொருட் செலவும் தேவை கருதியது தான். இன்று மேற்கத்தியர்களுக்கு இருக்கக்கூடிய அதியுயர் பெருமை பக்கிங்ஹாம் மாளிகை எனின் இது அதைவிடப் பன்மடங்கு பிரமாண்டமானது அது. அது செயற்கையான பளிங்கு மாளிகையேயேயாயினும் அங்கு நடமாடிய பாத்திரங்களின், அக் கொண்டாட்டங்களின் பின்னணியில் ஒரு செய்தி இருக்கிறதை உணர முடிகிறது. அது தான் We are back...என்பது.

அத்தோடு இப்படம் உலகச்  சீன இனத்தாருக்கு, சீன வரலாறு கலாச்சாரங்களைத் தெரியாது வாழும் மேற்கத்தைய கலாச்சார வெள்ளத்தில் அடிபட்டுப் போய்க்கொண்டிருக்கும் இரண்டாம், மூன்றாம், நாலாம் தலைமுறைகளுக்கு ஒரு செய்தியையும் சொல்கிறது. 'நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டாடுமளவுக்கு உங்களுக்கு ஒரு கலாச்சாரப் பாரம்பரியமிருக்கிறது. தயவு செய்து மீண்டு வாருங்கள். இந்த அறைகூவலைச் செவ்வனே செய்திருக்கிறது இப் படம். பாத்திரத் தேர்வுகள் முதல் ஆடையணி, அலங்காரம், படாடோபம், அழகு, கவர்ச்சி, இளமை, டாம்பீகம் என்று எதையுமே விட்டு விடவில்லை. திரைக் கதையின் வரிகள் சீன கலாச்சாரத்தின் செழுமையைப் பேசும் அதே வேளை அமெரிக்க கலாச்சாரத்தை ஒப்பீடடளவில் இகழ்வதும் இப் படத்தின் நோக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. இளைய தலைமுறையினருக்கு நவீன இளைஞர்களுக்கும் பண்டைய முதியவர்களுக்கும் தம் இனத்தின் மீதான ஈர்ப்பை இப் படம் அதிகரிக்கச் செய்கிறது. 

இப் படத்தை  99% Asians என்று ஆரம்பத்தில் சொன்னேன். 'இந்திய' இனமாக அடையாளம் காணப்படும் எமக்கு ஒரு sore point இப் படத்தில் உண்டு. இந்த செல்வந்த சீன வீடுகளின் காவலாளிகளாகவும் வாகன தோட்டிகளாகவும் கீழ் மட்டமெனக்  கருதப்படும் வேலைகளை பார்ப்பவர்களாக இந்தியர்கள் / தமிழர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். யதார்த்தமும் அதுவேயானாலும் மேற்கத்தைய ரசிகர்களுக்கு நாம் மூன்றாம் பட்சமாகவே காட்டப்படுவோம். வீட்டுக்காரி வெள்ளைத் தோலுள்ள சிமிதாவாகவும் வேலைக்காரி கறுப்புத் தோலுள்ள காத்தாயியாகவும் பாத்திரம் படைக்கும் தமிழர்கள் இருக்கும்போது நான் சீனரைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அந்த 1% Asians இற்காகவேனும் யாரும் படமொன்று தயாரிக்க வேண்டும். 

மன்னிக்க வேண்டும் ஒரு தவறு. இதில் ஹீரோவாக வருபவர் ஒரு அரை வெள்ளையினத்தவர், Henry Holding. Nick Young என்ற திரைப் பெயரில் நடிக்கும் இவரது தாயார் ஒரு மலேசியர்  தந்தையார் ஒரு ஆங்கிலேயர். அதனால் 98.5% சீனர்கள் நடித்தது என்பதுவே சரி.



மூவேந்தர்க்களைச் சொல்லி திராவிடம் வளர்ந்தது. திராவிடத்தைக் காட்டி தமிழரசு (கட்சி) வளர்ந்தது. தமிழரசின் நிழலில் இயக்கங்கள் வளர்ந்தன. இயக்கத்தின் பெயர் சொல்லி புலம் பெயர் தமிழர் வளர்ந்தனர். பெருமை தரும் வரலாறும் ஒரு வகையில் சொல்லப்பட வேண்டியதே என்பதை இப் படம் எனக்கு சொல்லித் தந்ததாகவே நான் பார்க்கிறேன். 

போய்ப் பாருங்கள்.