சனி, 28 மே, 2022

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

நினைவு

28 மே 2022

*****

கோ.பி. (கோவிட்டுக்குப் பின்னான) இளவேனில் பொழுதொன்றில் செல்வத்தாரின் புத்தகக்டைக்குப் போகச் சந்தர்ப்பம் கிடைத்தது. பக்கத்து அறையில் 'இளங்கோவின் மூன்று நூல்கள்' சங்கப் பலகையில் சவாரி செய்வதற்குத் தயாராகியிருந்தன. சற்றே காலாறிக், கையாறி, வாயாறி வரச் சந்தர்ப்பம் கைகூடியது. மூன்று புத்தகங்களுடன் வீடு வந்தேன். அலுமாரியில் செல்வத்தாரின் கடை அப்படியே தெரிகிறது. இவை எல்லாவற்றையும் வாசித்து முடிக்க இன்னும் இரண்டு பிறவிகள் வேண்டும்.

ஃபோனை நோண்டும்போது காரணமில்லாமல் ஒரு படம் மின்னிப் போனது. ஜனவரி 2016 இல் நண்பர் முரளியின் மகளின் திருமணமன்று எடுத்தது. நான், பாபு, செழியன், சக்கரவர்த்தி, வை.கே., முரளி நிற்கும் படம். பாபுவும் செழியனும் அலுவலாக மேலே சென்றுவிட்டார்கள். உடம்பு சிலிர்த்தது.

அஃதே...அஃதே.

****

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

'காதிலர்' தினம்

*****

உன் கொலுசின் சத்தத்தில்

சொல்லி வைத்தாற்போல் 

துயிலெழுந்த காலம்...

உனக்குக் கேட்கிறதோ இல்லையோ

நினைவெல்லாம் இப்போது 

'கிளவுட் சேர்வரில்' பத்திரமாக இருக்கிறது.

இப்போதெல்லாம்

அந்த லூசான படிகளில் 

நீயேறும்போது 

நெரிபடும் உன் முழங்கால் எலும்புகள்

எழுப்பும் ஒலிகளே 

என் அலாரம்

அது உனக்குத் தெரிய வாய்ப்பில்லை

மூப்பின் பெயரால் 

அனைத்துக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு

ஒருக்களித்துப் படுத்திருக்கும் எனக்காக

உன் மனத்துக்கு மட்டும் ஓய்வை மறுத்தது 

எனக்கு மட்டுமே தெரியும்

வாழிய காதலி!

******

அசை சிவதாசன்

மாசி 14, 2022


ஞாயிறு, 9 ஜனவரி, 2022

தெரியாது

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தெரியாது

காலன் Zoom இல் வந்தான்'

என்ன திடீரென்று' என்றேன்'

Follow-up' என்றான்

புரியவில்லை...

கண்கள் சுருங்கின

அதுதான்..'வருடமிரண்டுக்கு முன் வந்தேனே'

'தெரியாது'

மருத்துவ மனையில்..

'அம்மா மடியில் போல் அமைதியாக உறங்கினாய்'

'தெரியாது'

'பிளந்த மார்பு, அருகே இதயம்

இதயத்துக்காக இயந்திரம் துடித்தது

மணிக் கணக்காக மருத்துவர்...

போராடிக்கொண்டிருந்தார்

வெளியே..மனைவி பிள்ளைகள் 

பசியோடு போராடிக்கொண்டிருந்தனர்'

ம்ம்..கண்கள் விரிந்தன

'மனம் கேட்கவில்லை -திரும்பிவிட்டேன்'

சிரித்தான்..

'தெரியாது'..என்றேன்

'எப்படி சுகமா?' என்றான்'

'பரவாயில்லை'

எட்டிக் கலண்டரைப் பார்த்தான்..

கதி கலங்கியது

சிரித்தான்

'எப்போ நேரில் வருவாய்' 

மீண்டும் சிரித்தான்'

வட்சப்பில் message வரும்'

மீட்டிங் ஓவர்..

மின்னி மறைந்தான் காலன்

-அசை சிவதாசன்

ஞாயிறு, 20 ஜூன், 2021

இறைவனுக்கு ஒரு வேண்டுதல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இறைவனுக்கு ஒரு வேண்டுதல் 

தயவு செய்து 

என் பிறப்பை அறுக்க வேண்டாம் 

உன் பாதடி  நிழலும் எனக்கு வேண்டாம் 

முக்தியும் வேண்டாம் 

என்னை என் மண்ணிலேயே மீண்டும் பிறக்க வை 

என் தேசம், என் மண், என் பெற்றோர் 

என் சகோதரர், என் உறவுகள், நண்பர்கள் 

தென்னங்கீற்று, தென்றல் காற்று, திரை கடல்...

இன்னும் அனுபவித்து முடியாத 

எச்சங்களை  அனுபவிக்க 

எனக்கு இன்னும் அவகாசம் தா

இந்த உலகமே எனது சொர்க்கம் 

பி.கு.

என் மனைவிக்கும் பிள்ளைகட் கும் 

அதே வரத்தைக் கொடு 

உனக்குத் தெரியாதா என்ன?

செவ்வாய், 1 ஜூன், 2021

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

முகநாள் 

***********

நீ பிறந்தாயோ, இன்று 

இறந்தாயோ - அறியேன் 

முகநூலைத் திறந்தவுடன் 

முழிக்கிறாய் 

அதே புன்னகை 

சட்டம் சிறை பிடித்த உன்னை 

எப்படித்தான் பார்ப்பது?

இறப்பையும் 

பிறப்பையும் 

ஒரு கோடே  பிரிக்கிறது 

அஞ்சலியையும் வாழ்த்துக்களையும் 

அவசரமாகத் துப்புகிறது

முகநூல் 

'லைக்' போட்டுவிட்டேன் 

நீ இறந்து போயிருந்தால் 

அது உன் கடந்துபோன பிறந்த நாளுக்கு..

விரல்கள் மரத்துப் போய்விட்டன வியாழன், 1 ஏப்ரல், 2021

குத்தூசி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குத்தூசி 

கையினை மெல்லப் பற்றிக் காவியோர் தட்டில் வைத்து 

மெல்லதாய் உரசி மேனி சின்னதாய்க் கழுவி ஊசி 

செருகினாள் கன்னி - ஐயோ! 

பொய்யதாய் முகம் திருப்பிப் புலம்பினேன், பாவம் கன்னி 

பதறினாள், நின்று மெல்லக் கையது பற்றிக்கொண்டு  

கவலையோடழுத்திக் கேட்டாள்- வலிக்குதா?

வலியெதும் எனக்கொன்றில்லை 

துல்லியம் என்றேன், துளைத்தது கிருமியைத்தான்,

எனக்கிலை என்றேன், நாணிச் 

சிறு குழி வதனம் பொங்கச் சிரித்தனள் 

பவ்யம், பயிற்சியெல்லாம் இருக்குதே என்றேன் 

செலுத்தினாள் அடுத்த ஊசி சிரிப்பினால்  இதயம் பார்த்து 

துல்லியம் இதுதான் என்று தொலைந்தனள் கனவினுடே...

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

உன்மத்தம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உன்மத்தம்

இச் சொல்லுக்குப் பொருள் தெரியாமலேயே வாழ்வில் மூன்றாம் கூற்றுக்குள் வந்தாகிவிட்டது. இருள் விலகுகிறதா அல்லது ஒளி தோன்றுகிறதா என்று எதையும் அறுதியாகக் கூற முடியாத நிலை. 

இக் கனதியான சொல்லுக்கு ஆக எளிய தமிழ் 'விசர்' என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்பரந்துபட்ட தமிழ்க் கடலில் அமிழ்ந்திருக்கும் சொற்களைத் தேடி அவற்றின் அர்த்தங்களை அறிவதற்கு விரைவில் யாராவது செயற்கை விவேகத்தை (AI ) துணைக்கு அழைக்கமாட்டார்களா என ஆதங்கமாகவிருக்கிறது.

மனிதரின் படைப்பாற்றலைக் கிண்டிவிடும் விடயங்களில் ஒன்று வடிவங்கள் (patterns ) என்று நான் நினைப்பதுண்டு. வடிவங்கள் மீதான விசாரணையைக் கொண்டு விஞ்ஞானம் ஆரம்பித்திருக்குமோ என நான் சந்தேகம் கொள்வதுண்டு., இது நான் இறுகப்பிடித்திருக்கும் ஒரு நம்பிக்கை. 

ஊமத்தை என்றொரு தாவரம் நம்மூரில் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் சி.பி.சி. வானொலியில் கேட்ட ஒரு நிகழ்ச்சியில், வாழ்வின் இறுதிக் கணங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இரண்டு நோயாளிகளுக்கு ஒருவகையான போதை வஸ்துவை (psychedelic) மருந்தொன்றைப் பரிசோதனைக்காகப் பாவித்தமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். காளான்கள் (magic mushrooms) மற்றும் தென்னமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ஒரு மரம் (பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை) ஆகியன மிக நீண்ட காலமாகப் பல பழங்குடியினரால் போதைக்காகப் பாவிக்கப்படும் மூலிகைகள் என அந்நிகழ்ச்சியில் கூறினார்கள். இதனால் விசர் கொண்ட நான் அம்மூலிகைகள் பற்றி மேலும் கூறுமாறு கூகிளாண்டவரிடம் மன்றாடியபோது அவர் எனது விசரை மேலும் அதிகமாக்கினார். 

காளான்களைப் போதைக்காகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது (அனுபவத்தால் அல்ல). ஆனால் அந்த தென்னமெரிக்க தாவரம்? பல அடிகள் உயரத்துக்கு வளரும் இத் தாவரத்தில் தொங்கிய வெள்ளை நிறப் பூக்கள் நம்ம ஊர் (HMV) 'லவுட் ஸ்பீக்கர்கள்' மாதிரித் தெரிந்தன. Yes! அதுவே தான்...ஊமத்தை!!. நம்மூர் ஊமத்தை அரிக்கன் சாதி, நிலத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வளரவே மறுப்பவை - அது வேறு விடயம்.

தென்னமெரிக்காவிலும் நம்மைப்போல் 'இளைஞர்கள்' பெண்களை மயக்குவதற்காக இந்த 'ஊமத்தையைப்' பாவிக்கிறார்கள் எனவும், சில திருடர்கள் மதுபான நிலையங்களில் இம் மூலிகையால் செய்யப்பட்ட மருந்துகளைப் பானங்களில் கலந்து கொடுத்து போதை ஏறியவர்களைக் கொண்டு அவர்களது வங்கி மெசின்களில் (ATM) வழித்துத் துடைத்துக்கொண்டு போய்விடுவதாகவும் அந்நிகழ்ச்சியில் கூறினார்கள். ஆஹா...அப்போதுதான் எனக்கும் ஐடியா வந்தது.

எனது தந்தையார் ஊரில் ஒரு ஆயுர்வேத வைத்தியர். யாரோ ஒருவருக்கு 'விசரை' க் குணப்படுத்தியமைக்காக அவருக்கு ஒரு புதிய 'றலி' சைக்கிள் பரிசாகக் கொடுத்திருந்தமையை - சைக்கிளுக்கு எண்ணை பூசும்போது அம்மா இரகசியமாகச் சொல்லியிருந்தார். அப்பாவின் வைத்தியத்தில் இந்த ஊமத்தை ஒரு பெரும்பங்கு வகித்தது எனக்கு நன்றாகத் தெரியும். பிடுங்கிக்கொண்டு வருபவன் என்பதனால். 

இதைபற்றி கூகிளாண்டவர் சொல்வது இன்னும் விசரைக் கூட்டியதற்குக் காரணம், தமிழ்நாட்டிலிருந்து ஊமத்தம் விதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதும் அதைச் சில கிராமங்கள் பணப்பயிராக்கியுள்ளதும் பற்றி. ஊமத்தம் விதைகளைத் தெருவில் உலர்த்துமளவுக்கு உற்பத்தி பெருந்தொகையாக அங்கு மேற்கொள்ளப்படுகிறது.

அந்த நான் சொன்ன 'ஆஹா' moment இப்போதுதான் உறைத்தது. "ஊமத்தை", உன்மத்தத்தின் மருவிய சொல்லாக இருக்க முடியுமா?  நம்ம நாயன்மார்கள் கட்வுள் மேல் கொண்ட 'விசரினால்'  பாடிய பாடல்களில் 'உன்மத்தம்' என்ற சொல் தீராத காதல் என்ற பொருளில் பாவிக்கப்பட்டிருப்பதால் அச்சொல் மருவியிருக்கச் சாத்தியமில்லை. 

நான் மேலே சொன்ன தென்னமெரிக்க போதை வஸ்துவை மூலமாகக் கொண்டு தயரிக்கப்பட்ட ஒரு psychedelic drug  தான் Psilocybin எனப்படும் மருந்து. இம் மருந்தையே சிகிச்சைக்காக அந்த இரண்டு நோயாளிகளிலும் பரிசோதித்தார்கள். 

இரண்டு வெவ்வேறு வியாதிகளினால் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய anxiety எனப்படும் தீராத மன உளைச்சலைத் தளர்த்துவதற்காகவே அவர்களில் அம்மருந்து பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைகளின் பின்னர் அந்த இருவரது வாக்கு மூலமும், கிட்டத்தட்ட ஒன்றுதான். அதாவது இரண்டுபேருமே அனுபவித்த ஒரு விடயம் ஒரு வகையான பரவசம் (bliss); ஆணவ நீக்கம் (ego  dissolution ). சகலதும் ஒன்றே என்ற உணர்வு. பரம்பொருளுடன் இரண்டறக் கலந்துவிடும் உணர்வு. 

இந் நோயாளிகளில் ஒருவர் மருத்துவர். அவரது அனுபவங்கள் மிகவும் அசாதாராணமானவை. தான் அண்ட வெளியில் பிரகாசமான ஒரு பாதையூடு பயணித்ததையும் கிரகத்துக்குக் கிரகம் தான் தாவிச் சென்றமையையும், இருளான ஒரு நரகத்துக்குள் தான் அமிழ்ந்துகொண்டு போனபோது தான் காப்பாற்றுப்பட்டமை பற்றியும் விபரித்திருந்தார். 

மொத்தத்தில் இச் சிகிச்சை அவர்கள் இருவரது anxiety என்ற மன உளைச்சலிலிருந்தும் தம்மை விடுவித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதாவது உலகின் மீதான பற்றை அவர்கள் துறந்துவிட்டிருந்தார்கள். எல்லாம் ஒன்றே என்று அவர்கள் உணரத் தலைப்பட்டிருந்தார்கள்.

***

சரி உங்களை மேலும் விசராக்க இன்னுமொரு விடயம்.

இது சமீபத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி. இது பற்றிய தகவல்கள் பெப்ரவரி 15 இல் வெளியான Neuro Image என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. 

சுருக்கமாக, அதில் கூறப்பட்டது இதுதான்.

எங்கள் மூளையில் 86 பில்லியன் நரம்புக் கலங்கள் (neurons) உள்ளன. பெரிய மூளை உள்ளவர்களுக்கு அதிக நரம்புக்கலங்கள் இருக்கலாம். எனக்கு அவ்வளவுதான். இந்த நரம்புக் கலங்கள் ஒன்றோடொன்று தகவற் பரிமாற்றங்களைச் செய்துகொண்டாலும் அவற்றின் உட் கட்டுமானம் நரம்புப் பெருந்தெருக்களால் ஆனவை. தூரங்களிலுள்ள பல பிரதேசங்களுடன் 'கிராமப்புற' நரம்பு மண்டலங்கள் தொடர்புகொள்வதில்லை. இவ் வலையமைப்பைப் பெருந்தெருக்கள் என வைத்துக்கொண்டால் அவற்றில் போகும் போக்குவரத்துத் தான் எமது மூளையின் தொழிற்பாடு என தற்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியின்போது 20 பேரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் முன்னர் LSD போன்ற போதைவஸ்துக்களைப் பாவித்த அனுபவசாலிகள். இரண்டு கட்டமாக இவர்களது மூளைகளை FMRI என்ற ஸ்கான் மூலம் ஆராய்ந்தார்கள். முதலாம் கட்டத்தில் அவர்களுக்கு உப்புத் தண்ணீரை அருந்தக் கொடுத்துவிட்டு ஸ்கான் செய்தார்கள். பின்னர் 75 மைக்கிரோ  கிராம் எல்.எஸ்.டி. யை உப்புத் தண்ணீரில் கலந்து கொடுத்து ஸ்கான் செய்தார்கள்.

முடிவுகள் ஆராயப்பட்டன.

எல்.எஸ்.டி. போதை வஸ்துவை எடுத்தபோது அவர்களது நரம்புப் பெர்ந்தெருக்களில் எவ்வித மாற்றத்தையும் அது ஏற்படுத்தவில்லை. முன்னர் கவனிக்கப்படாத 'பட்டி தொட்டிகளுடன்' எல்லாம் தகவல் தொடர்புகளை நரம்பு மண்டலங்கள் ஏற்படுத்தியிருந்தன. அதற்காக அவை பெருந்தெருக்களைப் பாவிக்காமல் சிறிய வீதிகளையும், குறுக்குப் பாதைகளையும் பாவித்திருந்தன. 

இவர்களும், மேலே சொன்ன இரண்டு நோயாளிகள் பெற்ற அனுபவத்தைப் போலப் பரவசத்தையும், 'எல்லாம் ஒன்றே' என்ற மனநிலையையும் அடைந்திருந்தார்கள். இதற்கு அந்த விஞ்ஞானிகள் கொடுத்த பெயர் 'ego dissolution'. 

*****

ஆணவம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒருவர் கவிஞரிடம் கேட்டாராம். கண்ணதாசன் அதற்குக் கூறிய பதில்:

நம்மிடம் எதுவுமில்லை என்று நினைப்பது ஞானம்

நம்மைத் தவிர எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்

ஞானம் பணிந்து பணிந்து வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெறுகிறது

ஆணவம் நிமிர்ந்து நிமிர்ந்து அடி வாங்கிக் கொள்கிறது


ஆணவத்தை அகற்றி சகலதும் ஒன்றே என்ற மனநிலைக்கு வரும்போது குறுக்கே நிற்கும் பாச்ம் விலகுவதால் பசுவால் பதியைப் பார்க்க முடிகிறது என்கிறது சைவ சித்தாந்தம். 

இந்த உன்மத்த (பரவச) நிலையை அடைவதற்கு நமது நாயன்மார்கள் போதை வஸ்து ஏதும் பாவித்திருந்தார்களா. சித்தர்கள் கஞ்சா புகைப்பது வழக்கமென்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாயன்மார்கள்?

போதை வஸ்து பாவிக்காமலேயே (அம்மாவாணை) எனக்கு இந்த யோசனை வருகிறது. 

தியானம் மூலமோ அல்லது மீண்டும் மீண்டும் இடையாறாது மேற்கொள்ளும் பயிற்சி மூலமோ (மூளை இதற்கு வளைந்து கொடுக்குமென்பது neuro plasticity மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்று) மூளையில் வழக்கமற்ற நரம்பு மண்டலத் தொடுப்புக்களை ஒருவரால் மேற்கொள்ள முடியுமா? எல்.எஸ்.டி. யின் விளைவுகளை ஒருவரால் சுயமாக simulation செய்ய முடியுமா. கடவுளை நினைந்து நினைந்து உருகுவதால் இந்த எல்.எஸ்.டி. விளைவுகள் மூளையில் ஏற்பட்டு அவர்களுக்கு 'கடவுள்' தோற்றமளித்திருக்க முடியுமா? அப்படியானால் எல்லோருக்கும் காட்சியளித்த இறைவன் எப்படி ஒரே  தோற்றத்தைக் கொண்டிருக்க முடியும்?

எல்.எஸ்.டி. பாவிப்பவர்களும், psilocybin  பாவித்தவர்களும் ஏறத்தாள ஒரே அனுபவத்தை எப்படிப் பெற்றிருக்க முடியும்? அவர்களில் பெரும்பாலானோர் பால்வழியால் பயணம் செய்யும் அனுபவங்கள் எல்லாவற்றிலும் ஒற்றுமை ஏன் இருக்க வேண்டும்?

அப்படியானால், அவர்களில் சிலர் சென்று வந்த உலகங்கள் உண்மையில் இருக்கின்றனவா? அவற்றை அறிவதற்கான ஞானக் கண்களை இப் போதைவஸ்துகள் திறந்துவிடுகின்றனவா? 

சர் போதை வஸ்துக்களை விடுங்கள். உயிர் பிரிவதற்கு முன்னான அனுபவங்களும் (near  death  experience) இவற்றைத் தானே சொல்கின்றன?

எனக்கு உன்மத்தம் பிடித்திருக்கலாமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

பி.கு. இதை எழுதும்போது வஸ்து எதுவும் பாவிக்கவில்லை