சனி, 24 ஜூன், 2023

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

வாசிப்பு: Brown Boy , a memoir by Omer Aziz

ஒரு பாகிஸ்தானிய பெற்றோருக்கு கனடாவில் பிறந்த பிள்ளையின் அனுபவம்; அழகிய, ஆவலைத் தூண்டும்; புனைவின் வேகத்தில் நகரும் நடை. ஆச்சரியமாக, இதுவே அவரது முதல் நூலும் கூட; வயது முப்பதுகளில் கூட இன்னும் நுழையவில்லை.

எண்பதுகளில் கனடாவுக்குத் தமது பிள்ளைகளைத் தள்ளிக்கொண்டு வந்தவர்களும், இங்கு வந்த பிறகு 'வண்டிகளை'த் தள்ளிக்கொண்டவர்களும் தமது பிள்ளைகளினூடு அனுபவித்த வாழ்வை மீளவும் வாழ வைக்கிறது இப் புத்தகம். 

புதிய குடிவரவாளர்கள் வழக்கமாகக் கரையொதுங்கும் கிராமமான ஸ்காரவுணில் (ஸ்காபரோவை அப்படித்தான் இளையோர் அழைப்பது வழக்கம்) வறுமையுடன் வெள்ளைப் பிசாசுகளோடு மாரடிக்கும் நமது இளையோரின் அங்கலாய்ப்புகள் முழுவதும் பெற்றோரைச் சென்றடைவதில்லை; குறைந்தது இந்நூலில் ஓமெர் அனுபவித்தவற்றையே நமது குழந்தைகளும் அனுபவித்திருப்பார்கள். ஆனால் இவையெல்லாம் எமக்கு இப்போது புதிதாக இருக்கிறதென்றால் எமது குழந்தைகள் எத்தனை விடயங்களைப் பொத்தி வைத்திருந்திருப்பார்கள்?

ஒமெர் வார்த்தைகளை வீணடிக்கவில்லை. தனது மண்ணிற மேனியும், ஒவ்வாத கலாச்சாரமும், தாழ்வெனக் கருதப்பட்ட இனமும், வறுமையும், வாழிடமும், அன்னிய கலாச்சரமும், வெறுக்கப்பட்ட மதமும் அவரது தன்னம்பிக்கையைப் பாதாளத்தில் வைத்திருந்தன; அதனால் தனக்கு படிப்பில் விருப்பமிருக்கவில்லை என்கிறார். ஆனால் பெற்றோரின் எதிர்பார்ப்பு வேறுவிதமென்பது எல்லோருக்கும் தெரியும். 

இவற்றையெல்லாம் வென்று குயீன்ஸ், பாரிஸ், கேம்பிரிட்ஜ், யேல் என்று தனது அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றி 28 ஆவது வயதில் கனடிய பிரதமருக்கு அரசியல் ஆலோசகராகிய ஒமெர் என்ற இந்த 'மண்ணிறப் பையனை' நீங்கள் இன்நூலினூடு சந்திக்க வேண்டும். இயல்பான சலனங்கள் மதநம்பிக்கைகள் / அவநம்பிக்கைகள் இவற்றையெல்லாம் மீறி உச்சியைத் தொட்டவர் வெள்ளை வெறியினால் தள்ளிவிழுத்தப்படுகிறார். 

எமது அடுத்தடுத்த பரம்பரையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவிருக்கும் என்பது எனது நம்பிக்கை; பெற்றோருக்கும் தான். வாசிக்கவேண்டிய புத்தகம்.