ஞாயிறு, 6 ஜனவரி, 2008

பின் புத்தி

‘பின்’ புத்தி 

 என் மனைவிக்கு அரவிந்தனைப் பிடிக்காது. அவன் நல்லதொரு எழுத்தாளன், பேச்சாளன், மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவன். சில, விருப்பமானால் ‘பல’ என்றும் மாற்றிக் கொள்ளலாம், இலக்கியவாதிகளைப் போலல்லாது வீட்டுக்குள்ளும் வெளியேயும் அவன் ஒருவனேதான். அவனுடைய பிரச்சினையே அங்கேதான் ஆரம்பிக்கிறது. 

இதுவரையில் சுமார் ஐநூறு கவிதைகள், எண்பது சிறுகதைகள், அரை குறையாக ஒரு நாவல் என்று எழுதியிருப்பதாகச் சொன்னான். அன்றிரவு அதை என் மனைவிக்குச் சொன்னபோது அவனுக்குக் கொஞ்சம் மது வெறியாக இருந்திருக்கலாமென்று அவள் நம்ப மறுத்து விட்டாள். 

வெள்ளி இரவுகளில் இலக்கிய அல்லது அரசியல் கூட்டங்கள் எதுவுமில்லாதபோது அவனுக்கு என் வீட்டிலேயே கூட்டம். எந்த நேரத்தில் வந்தாலும் என் வீட்டில் வேண்டிய அளவு, வேண்டிய ரகத்தில் மது இருக்கும். 

 நான் ஒரு வியாபாரி. வியாபாரிகளோடு சேர்ந்து மது அருந்தும் போது அங்கும் வியாபாரமே பேசு பொருளாகவிருக்கும். அதனால் வார இறுதி மாலை வேளைகளில் எனது வீட்டில் இலக்கிய நண்பர்களே கூடுவார்கள். படித்தவர்கள், பட்டதாரிகள், கலாநிதிகள் என்று பலர் என் வீட்டுக்கு வந்து போவது ஒரு வகையில் பெருமைதான். 

நல்ல பதவியிலிருக்கும் எழுத்தாளர்களை மனைவி முக மலர்ந்து உபசரிப்பாள். அதனால் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய பட்டம் பதவிகளை நான் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதன் பிறகுதான் எப்படியான சமையல் செய்யவேண்டுமென்று அவள் தீர்மானிப்பாள். 

அரவிந்தன் வரும்போது சிலவேளைகளில் எனக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை. இந்த வருடம் எப்படியாவது தனது சிறுகதைத் தொகுதியைப் பதிப்பித்துவிடவேண்டுமென்று அரவிந்தன் சொன்னான். சென்னையில் தனக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் மூலம் ஒரு பதிப்பகத்தையும் ஒழுங்குசெய்து விட்டான். அதற்குரிய செலவை நான் ஆரம்பத்தில் கொடுப்பதெனவும் சுமார் எண்ணூறு புத்தகங்களை தமிழ்நாடு அரசு வாங்குவதுபோக மீதியை கனடாவிலும் இதர புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெளியீடு செய்து பெற்று விடலாமென்றும் அவன் நம்பியிருந்தான். 

மனைவியின் கண்களில் பல தடவைகள் மண் தூவி ‘நான் புதிதாக ஆரம்பித்திருக்கும்’ புத்தக இறக்குமதி வியாபாரத்தின் மூலம் அரவிந்தனுக்கு ஒரு வழி பிறக்கச் செய்யலாமென்பது என் திட்டம். ஒரு இரவு சந்தோசமாக இருக்கலாமென்ற பெருங்கனவோடு கைகளைச் சொடுக்கி பொய்க் கொட்டாவியொன்றின் சத்தத்தினால் மனைவியை அழைத்தபோதுதான் என் கனவு அன்றிரவு கைகூடாதென்பது தெரிந்தது. 

அரவிந்தன் தொலைபேசியில் அழைத்ததாகவும் சென்னையிலிருந்து மேலும் ஒரு லட்சம் ரூபாய்கள் அனுப்பாவிட்டால் புத்தகம் அச்சுக்கே போகாது என்றும் என்னிடம் சொல்லும்படி அரவிந்தன் சொல்லியிருந்தானாம். 

நான் நித்திரைக்குப் போய்விட்டேன் என்று மனைவி பொய் சொன்னதன் விளைவு அரவிந்தன் என்னை வசமாக மாட்டிவிட்டதுதான். “உங்களது காசில அவர் புத்தகம் போடுகிறாரா?” என் மனைவி தான் விரும்பியபோது லட்சுமியாகவோ அல்லது துர்க்கா தேவியாகவோ தன்னைத் தானே மாற்றிவிடக் கூடியவள். அன்றிரவு ‘லட்சுமி’ கடாட்சம் எனக்கிருக்கவில்லை. ‘எடி இல்லையடியம்மா. என்னுடைய புதுக் கொம்பனியின்ர கணக்கில காசு மாற்றித் தரலாமா என்று அரவிந்தன் கேட்டிருப்பான்’ நீ பேசாமப் படு’. 

அன்றிரவு அவள் லட்சுமியாக இருந்தாளா, துர்க்காவாக இருந்தாளா எனக்குத் தெரியாது. பார்க்கவும் விருப்பமில்லை. இரண்டாயிரம் கனடிய டாலர்களில் செய்து கொண்ட புத்தகப் பதிப்பு ஒப்பந்தம் எண்ணாயிரம் டாலர்களில் முடிந்தது. பதிப்பக முகவர் ஒரு கில்லாடியா அல்லது நான் ஒரு முட்டாளா என்று விவாதிக்கக் காலமில்லை. இருநூறு புத்தகங்களை அவசரம் அவசரமாக அதிக பணம் கொடுத்து இறக்கி சுங்கக் கிட்டங்கியில் மூன்று மாசம் கிடந்து வெளீயீட்டு விழா மண்டபத்தில் நாய்க் காதுகள் போல் மட்டைகளோடு வீற்றிருந்த புத்தகங்களைக் கண்டபோது போர்த் தேங்காய்தான் ஞாபகத்தில் வந்தது. 

 புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னர் இரண்டு வாரங்களாக அரவிந்தன் வேலையில் விடுமுறை பெற்றிருந்தான். அவனது தொலைபேசி இலக்கப் பதிவுப் புத்தகம் இரண்டு வாரங்களாக விடுமுறையின்றித் தவித்தது. ஆனாலும் அரவிந்தனைவிட அது அழகாகவிருந்தது. 

தனது இலக்கிய நண்பர்கள், அரசியல் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. இது அவனது முதலாவது புத்தகம். நெடு நாளைய உழைப்பு. நிறையச் சனம் வரவேண்டுமென்று அவன் இரவு பகலாக உழைத்தான். இலவசப் பத்திரிகைகள் கட்டணத்துக்கும் காசுக்கு விற்பனையாகும் பத்திரிகைகள் இலவசமாகவும் விளம்பரம் செய்துதவியதாகச் சொன்னபோது அரவிந்தன் வழமையாக அழுவதைவிட மிகவும் உருக்கமாக அழுதான். தான் வேலைக்கு லீவு எடுத்தது மட்டுமல்ல மனைவியையும் மூன்று நாட்கள் லீவு போட வைத்து பலகாரமும் கேக்கும் செய்ய வைத்தான். 

சனிக்கிழமையாதலால் நல்ல சனம் வரும் என்பதால் முன்னூறு பைகளில் பலகாரமும் சுடச்சுட காப்பியும் மண்டப வாயிலை வரவேற்றன. சிறியதொரு கலை நிகழ்ச்சியைத்தர ஒத்துக் கொண்டிருந்த டான்ஸ் ரீச்சர் திடீரென்று காலை வாரிவிட்டார் என்று அரவிந்தன் குறைப்பட்டுக் கொண்டான். யாரோ ஒரு தனவந்தரின் மகனின் பிறந்த நாளுக்கு ‘புரோகிராம்’ செய்வதற்காக தனது ‘நிகழ்ச்சியைக்’ கான்சல் பண்ணிவிட்டாராம் அவர். 

 ஆறு மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்ச்சி பேச்சாளப் பெருமக்களின் எரிச்சலைத் தாங்க முடியாத தலைவரால் அரவிந்தனின் இருபது ‘இலக்கியக் குடும்பத்தினரோடு’ ஏழு மணிக்கு இரண்டு நிமிட மௌனத்தோடு ஆரம்பித்தது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல மூன்று நிமிடங்களும் சில முனகல்களும் கழிந்த பின்னர் ஒரு செல் தொலைபேசியின் தொல்லையால் தூக்கம் கலைந்தவர்போல் தலை குனிந்த தலைவர் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை முடித்து வைத்தார். 

 அரவிந்தனுக்கு திரும்பிய பக்கமெல்லாம் தன்னை ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்யும் ‘செந்தேள்’ நின்று கொண்டு நக்கலாகச் சிரிப்பதாகவே தெரிந்தது. 

சண்முகநாதன் என்ற ‘செந்தேள்’ எழுத ஆரம்பித்து இரண்டே வருடங்கள். ஆனால் இதுவரை அவன் மூன்று புத்தகங்களை வெளியிட்டு விட்டான். எல்லாமே கட்சிப் பிரசாரப் பதிப்புகள்தாம். அவன் கடைசியாக வெளியிட்ட ‘மாக்சிசம்-லெனினிசம்: மீணடெழும் காலம்’ என்ற புத்தகமும் இதே மண்டபத்தில்தான் வெளியிடப்பட்டது. நெரிந்து கொள்ளாது சனம் உள்ளே வெளியே போக முடியாதிருந்தது. அப்படியிருக்கும்போது தனது நூல் வெளியீட்டுக்கு ஏன் இந்தக்கதி? விரத காலங்கள், கல்யாண முகூர்த்த காலங்கள், தமிழ்த் தேசீய எழுச்சி நாட்கள் என்று எல்லாமே தவிர்த்துத்தான் இந்த நாளையே தெரிவு செய்தான். 

 அவசரம் அவசரமாகத் தலைவரிடம் சென்று அவர் காதுக்குள் ஏதோ சொல்லக் கொள்வதற்கு முன்னர் தலைவர் மைக்கிரோபோனை விரல் நுனியாற் தட்டிக் குரலையும் செருமிக் கொண்டார். 

இருந்தாலும் அரவிந்தன் தன் கடமையில் தவறவில்லை. தலைவர் தலையைச் சுழற்றிக் கொண்டார். அவர் அரவிந்தனுடன் உடன் பட்டாரா அல்லது முரண்பட்டாரா என்பது யாருக்குமே தெரியாது. இருப்பினும் எல்லோரும் இருக்கைகளிலிருந்து எழும்பித் தாய் நாட்டு, வதி நாட்டுத் தேசீய கீதங்கள் இசைப்பதற்கு மனமிசைத்தனர். 

ஒருவாறு மேலும் பத்து நிமிடங்களை நகர்த்திக் கொண்டது பற்றி அரவிந்தனுக்கு உள்ளுரப் பெருமையாகவிருந்தது. இறுதிப் பேச்சாளர் பேசும்போது மண்டபத்துக்கு உள்ளே இருந்தவர்களைவிட வெளியே நின்றவர்களே அதிகம். 

பேச்சாளரோ அவையறிந்து பேசவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். தலைவரின் துண்டையே உதாசீனம் செய்துவிட்டு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவர் எவரையெல்லாம் திட்ட வேண்டுமோ எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டு ஓரிரு கைதட்டலுடன் வந்தமர்ந்தார் பேச்சாளர். 

அரவிந்தனின் கண்பார்வையை உத்தேசமாகக் கொண்டு புத்தக வெளியீட்டை ஆரம்பித்தார் தலைவர். பலரின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட ‘பிரமுகர்களின்’ லிஸ்டை வைத்துத் தலைவர் பெயர்களை அழைக்க ஆரம்பித்ததும் அரவிந்தன் சபையையே பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது பேர் கொண்ட லிஸ்டில் ஐந்து பேர்கூடச் சபையில் சமூகம் தரவில்லை. 

அரவிந்தனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சபையிலிருந்த ஆனால் லிஸ்டில் இல்லாத சாதாரணங்களைத் திடீர் பிரமுகர்களாக்கியவுடன் பலரும் அரவிந்தனைத் திட்டிக் கொண்டே என்வலப்புகளுக்காக ஓடிக் கொண்டிருந்தார்கள். 

நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்தே முகத்தைச் சுழித்துக் கொண்டிருந்த என் மனைவியே என் விலா எலும்பில் இடித்துச் சிரித்துக் கொண்டாள். 

ஒருவாறு வெளியீட்டு விழா முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது பலகாரப் பைகள் இருந்த பெட்டி வெறுமையாகவிருந்தது. சுமார் முந்நூறு பைகள். விழாவிற்கு வந்தவர்கள் ஆளுக்கு நான்கு பைகள் வீதம் சாப்பிடடிருப்பார்கள் போலிருக்கிறது. 

அரவிந்தன் தன் கையில் தூங்கிய பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். சுமார் ஐம்பது புத்தகங்கள் விற்ற பண நோட்டுக்கள் என்வலப்புகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தன. 

அரவிந்தனின் மனைவியும் பிள்ளைகளுமாக மீதியிருந்த புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். 
தொண்டர்களை விழா ஆரம்பித்த பின்னர் மண்டபத்தில் காணவேயில்லை. 

 அன்றிரவு அரவிந்தன் என் வீட்டுக்கு வந்தான். மிகவும் வாடிப் போயிருந்தான். மொத்தம் எழுநூறு டாலர்களும் எட்டு வெறுமையான என்வலப்புகளும் கிடைத்ததாகக் கூறினான். ஒவ்வொரு சொல்லுக்கிடையேயும் ஒரு மிடறு குடித்துக் கொண்டான். 

என் மனைவி குறிப்பறிந்திருப்பாள் போலிருக்கிறது, கோழிப் பொரியலுடன் வந்தாள். அரவிந்தன் அன்று முதன் முறையாகச் சிரித்தான்.

‘என்ர மனிசி சுகமில்லாமற் கிடக்கிறாள்’ அரவிந்தன் ஆரம்பித்தான்.

 ‘என்ன நான்காவதுக்குச் சரிப்பண்ணிப் போட்டாய் போலிருக்குது’

 ‘இல்லை. இரண்டு மூன்று நாளாய்ப் புத்தக வெளியீட்டு வேலையோட சரியாகக் கஷ்டப்பட்டுப் போயிட்டாள். காய்ச்சலெண்டு படுத்திருக்கிறாள்’. 

‘அப்போ ஏன் நீ அவளைத் தனிய விட்டுப்போட்டு இங்க வந்தனி?’ 

‘புத்தக வெளியீட்டில சேர்ந்த எழுநூறு டாலர்களையும் உடனே உங்களிட்டக் குடுத்துவிட்டு வரும்படி அவள்தான் அனுப்பினாள்’. அரவிந்தன் மீண்டும் அழத்தொடங்கி விட்டான்.

 ‘அரவிந்தன், சும்மா விசர் வேலை பார்க்க வேண்டாம். காசை எடுத்துக் கொண்டு போ. எனக்கு வேணாம். நீ வசதியாய் இருக்கும்போது தா.”

 அரவிந்தன் மேலும் கொஞ்ச விஸ்கியைக் கிண்ணத்துள் வார்த்தான். கதவு திறந்தது மனைவி மீண்டும் ஒரு பாத்திரத்தில் அவித்த முட்டையை நான்காகப் பிளந்து உப்பும் மிளகுத்தூளும் தூவி அழகாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். எனக்கே ஆச்சரியமாகவிருந்தது. அரவிந்தனின் மூக்கின் நுனியில் திரவம் விடைபெறத் தயாராகிக் கொண்டிருந்தது. 

மனைவி கிளீனெக்ஸை நீட்டியபடியே எதிரிலிருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.

 ‘அரவிந்தன். சொல்கிறேனெண்டு கோபிக்கக் கூடாது. நீங்கள் இந்த எழுதிற வேலையை முதலில் விடுங்கோ. நீங்க கனடாவுக்கு வந்து இருபத்தி ஐஞ்சு வருஷம் முடிஞ்சிட்டுது. உங்களுக்குப் பிறகு வந்த ஆட்கள் பெரிய மாளிகைகளும் வாகனங்களும் வைத்திருக்கினம். நீங்க மூண்டு பிள்ளையளோட இன்னும் அரச உதவிக் கட்டிடத்தில சீவிக்கிறீங்க. மூண்டு பொம்பிளைப் பிள்ளையளும் வயசுக்கு வந்ததுகள். அதுகள் போடுறதுக்கு நல்ல உடுப்புகளில்லை. பள்ளிக்கூடத்திலை மற்றப் பிள்ளைகள் பிறாணட் நேம் உடுப்புகளோட வருகிறபோது உங்கட பிள்ளையள் ‘குட் வில்’ உடுப்புகளோட போக வேண்டியிருக்கு. நீங்க வேண்டுமென்றால் எழுத்தில சமத்துவத்தைக் கடைப்பிடியுங்கோ நிஜமான வாழ்வில அது முடியாது. உங்களின்ர தத்துவங்களை மனிசி பிள்ளையளில திணிக்காதீங்க. பிள்ளையள் வளர்ந்து அறிவு தெளியிறபோது உங்கள மாதிரி அவங்களும் தங்களுக்குச் சரியெண்டு தெரியிற தத்துவத்தைக் கடைப்பிடிப்பாங்க. இருபத்தைந்து வருஷமா என்னத்தைச் சாதிச்சிருக்கிறீங்க? நீங்க வாழ்க்கையில ஒரு தோத்துப்போன மனிசன். உங்களை நம்பியிருக்கிற நாலு சீவன்களுக்கு நல்ல வாழ்க்கையைக் குடுக்க முடியாத தோத்துப்போன மனிசன். எழுதிறது பொழுது போக்குக்கு மட்டுமே சரி. அப்பிடித்தான் அநேகமாக எல்லா எழுத்தாளரும் செய்யிறாங்க. ஆனா நீங்க எழுத்து மட்டும்தான் வாழ்க்கை எண்டு நினைக்கிறீங்க. போங்க எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு நல்ல வேலை ஒண்டை எடுத்துக் கொண்டு காசைச் சேமியுங்க. இஞ்ச உங்களுக்கு முன்னால இருக்கிறவரும் முந்தி ஒரு எழுத்தாளர்தான். அவரை இப்ப நான் வாசிக்கவே விடுகிறதில்லை. மனிசன் புத்தகத்தைக் கண்டா வேலைக்கே போகாது. எழுத்தும் ஒரு வகையான அபின் தான். உங்கட மனிசி பிள்ளைகளோட நான் அடிக்கடி கதைக்கிறனான். அதுகளின்ர கனவுகளை நீங்க முடக்கி வைத்திருக்கிறீங்க.’ 

அரவிந்தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு சத்தம் போட்டு அழுதான். என் மனைவி விடுகிறதாயில்லை. 

‘என்ர மனிசன் எண்ணாயிரம் டாலர் மட்டில செலவழிச்சு உங்கட புத்தகம் போட்டவர் எண்டு எனக்குத் தெரியும். அது ஒரு பெரிய தோல்வியாகவே முடியுமெண்டும் எனக்குத் தெரியும். புத்தகம் எழுதிப் பணக்காரரான ஒருவரும் இல்லை. ஆனா ஏழைகளானவர் நிறைய இருக்கினம். உங்கட ஆசையை வீணடிக்கக் கூடாது. ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கட்டுமே எண்டுதான் நானும் ஒண்டும் சொல்லவில்லை.’ 

அரவிந்தன் பாவம் குனிந்த தலை நிமிராது எதையுமே பேசாது இருந்தான். காசைக் கடன் பட்டு விட்டோமே இதையெல்லாம் கேட்கவேண்டும் என்ற மன நிலையில் இருந்திருப்பானோ என்று என் மனம் குறு குறுத்தது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று என் மனைவி போட்டு வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள். 

 ‘சரி போதும். எங்களுக்குச் சாப்பாடு போடு.’ இருவரையும் சமாளிக்க நான் முயன்று பார்த்தேன் திடீரென்று என் மனைவி அழ ஆரம்பித்தாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். அரவிந்தன் கொண்டு வந்த பணத்தை எடுத்து அவன் கைகளில் திணித்தாள். 

‘ஈகோ இல்லாத ஆம்பிளையளை நான் மதிக்கிறதில்லை. இப்ப உங்களின்ர ஈகோவைச் சீரழிக்கிற மாதிரி நான் பேசிப்போட்டன். உங்கட மனிசி பிள்ளையள் பெருமையோட ‘இவர் எங்கட அப்பா’ எண்டு சொல்லுறபோதுதான் உங்கட ஈகோ உங்கள மனிசனாக ஆக்கும். அதுகளின்ர சொல்லை நீங்க கேட்காமல் உலகத்துக்கு எழுதி ஒண்டையும் கிழிக்கப் போறதில்லை. இவ்வளவும் சொன்னதுக்காக நான் உங்களிட்ட மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏனெண்டா இதுவரையில என்ர குரலுக்கால வந்தது உங்கட மனிசி பிள்ளையளின்ர குரல தான்;. அவங்களுக்கு நீங்க குடுக்க மறுத்த குரல்’ 

 அரவிந்தன் முகத்தைத் தூக்கி என் மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்தான். காசை எடுத்துப் தன் சட்டைப் பையினுள் திணித்தான். 

 ‘அக்கா சாப்பாட்டைப் போடுங்கோ. இனி நான் எழுதிறதெண்டா அது நீங்க கேட்கிறபோதுதான் நடக்கும்’ 

அரவிந்தனின் கதையை நானே எழுத ஆரம்பித்துவிடுவேனோ என்ற பயத்தை நிறுத்த எனக்கு இப்போ அதிகம் விஸ்கி தேவைப்பட்டது. என் மனைவியின் ‘பின்’; புத்தியை நினைத்துப் பெருமைப்பட்டேன். அரவிந்தனுடைய இதயத்தைக் குத்திக் குத்தித் துளைத்து விட்டாளே! தை 6, 2008

கருத்துகள் இல்லை: