செவ்வாய், 31 மார்ச், 2020

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

நிலவுக் கரடி மார்ச் 31, 2020

சிவதாசன்

அதிகாலை 3:22. தூக்கம் வரவில்லை. நேற்றுப் பகல் கூடிய நேரம் தூங்கியாகிவிட்டது. கொரோனா அம்மன் உலகம் பூராவும் அட்ட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறாள். சகலரும் வீட்டுக்குள் முடக்கம்.

சென்ற வாரம் மகள் வாங்கித் தந்த நாவல் ஒன்று கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது. கன்னி கழியாதது என்றால் தவறான சொற்பதமாகிவிடும். அட்டை புரட்டப்படாமல் அப்படியே இருந்தது. தலைப்பு What Lies Between Us. நயோமி முனவீரவின் நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

நயோமி முனவீர பற்றி எங்கோ வாசித்த ஞாபகம் இருந்தாலும், அவரது படைப்புக்கள் எதுவும் என் கைகளுக்குக் கிடைக்கவில்லை. மகள் சாலிகா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்து போனது எனக்கும், மனைவிக்கும் அதிர்ஷ்டம் தான். அவளின் புண்ணியத்தில் ஊருப்பட்ட ஆங்கில நாவல்களை வாசிக்கச் சந்தர்ப்பம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது.

நயோமி முனவீர இலங்கையில் பிறந்து நைஜீரியாவில் வளர்ந்து தற்போது கலிபோர்ணியாவில் வாழ்வதாக அட்டையில் குறிப்பொன்று இருந்தது. முற்சாய்வு எதுவுமில்லாது படைப்புக்களை அணுகுவது சுவையை அதிகரிக்கிறது என்பது எனது எண்ணம்.

புத்தகத்தின் முன்னுரையை மட்டும், இரண்டு பக்கங்கள் வாசித்து விட்டு மூடி விட்டேன். நீண்ட நாட்களாக எந்தப் படைப்புகளையும் எழுதாத – நேரமின்மை – பஞ்சி – வெறுப்பு -இதர பயனற்ற சோலி என்று பல காரணங்களால் அயர்ந்து போயிருந்த என்னை இதை எழுத வைத்திருக்கிறது இந்த இரண்டு பக்க முன்னுரை.

கொறோணா வைரஸ் உலகைத் தொற்றிய நாளிலிருந்து அந்த patient zero வைப் பிடித்து ‘ நாசமாய்ப் போவானே ஏண்டா அந்த வெளவாலையோ,அல்லது அந்த எறும்புண்ணியையோ தின்றாய்’ என்று நாலு திட்டுத் திட்டவேண்டும் போல இருந்தது. அவ்வப்போ வட்ஸப் இல் சீனர் உயிரோடு விலங்குகளைக் கடித்து விழுங்குவதையும், நாய்களைத் துடிக்கத் துடிக்க கொதி நீரில் அமுக்கிக் கொல்வதையும் பார்க்கும் போது உள் மனதில் கொரோணா அம்மனுக்கு வாழ்த்துச் சொல்வதுமுண்டு.

நயோமியின் கதைக்கும் சீனருக்கும் என்ன சம்பந்தம்?. இருக்கிறதோ இல்லையோ அவரது முகவுரை எனக்குத் தந்த கதை அதுதான்.

அந்த முகவுரை என்னை உலுப்பி விட்டது. ஒரு சிறிய உபகதையைக் கொண்டது அந்த முன்னுரை. ஒரு தாயின் வலியை இவ்வளவு உணர்வோடு சித்தரித்திருக்க வேறு யாராலும் முடியாது.

முகவுரையின் ஆரம்பம் இப்படியான build-up உடன் தொடங்குகிறது.

ஒரு குழந்தை தாயின் உதிரத்திலிருந்து ஊட்டத்தைப் பெறுகிறது. அது கிராமத்தின் பஞ்ச காலமாக இருப்பின், பயிர்கள் நலிந்துபோகையில், ஆறுகள் வெந்து போகையில், தாயொருவள் கிடைத்ததை எடுத்துத் தன்னை மறுத்துத் தன் குழந்தைக்கே அனைத்தையும் கொடுத்துவிடுகிறாள். தன் குழந்தைக்கு அச் சிறிய குறைபாடுகூட இருக்கக்கூடாது என்பதற்காக அவள் பசியிருந்து, தனிமையில் வெந்து கொள்கிறாள். சகல ஜீவராசிகளுக்கும் இதுதான் சட்டம். இதுதான் இயற்கையின் வழி. வேறுவிதமாக நிகழின் அது பானைக்குள்ளிருந்து வந்த பூதம்.

இமாலயத்திலிருந்து யப்பான் ஈறகாப் பரந்திருக்கும் பிரதேசத்தில் வாழ்கிறது நிலாக் கரடி (the moon bear). அடர்ந்திருக்கும் இருண்ட அதன் வயிற்றில் நிலாவாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெள்ளைத் தோல் அதற்கு அப்பெயரை ஈட்டியிருக்கிறது. இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் கரடி இனத்தின் மூலத் தாய் இது. தன் மண்ணே போதுமென வாழ்ந்துகொண்டிருக்கும் ஜந்து. கருவாலி விதை, தேன், கறையான், செரிப் பழம், காளான் என்று உணவுகளைப் புசித்துவிட்டு மரங்களில் ஏறி ஒய்யாரமாகப் பொழுதைக் கழிப்பது அதன் தினக் கடன். அதன் ஏகாந்த உலகம் அதற்குத் திருப்தி தரும் ஒன்று.

நிலாக் கரடி தனியே அதன் தொன்மையாலும், கம்பீரத்தாலும் விரும்பப்படும் ஒன்று மட்டுமல்ல, ஒரு அரிய பொக்கிஷத்தையும் தன்னிடம் வைத்திருப்பதாலும் அது மனிதரால் விரும்பப்படுமொன்று. சீன மருத்துவத்தில், உடற் சூடு போக்குதற்கும், கண், ஈரல் நோய்களுக்குச் சிகிச்சையாகவும் இந் நிலாக் கரடியின் பித்தம் பாவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் பித்தத்தின் விலை அரைக் கிலோ தங்கத்துக்கு ஈடானது.

இக் காரணங்களுக்காக வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான நிலாக் கரடிகள் உயிரோடு பிடிக்கப்பட்டு நிமிர்ந்து நிற்கவோ, திரும்பவோ முடியாத crush cages எனப்படும் கூடுகளில் அடைக்கப்பட்டு பல வருடங்களாக வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. அவ்வப்போது கடையின் வயிற்றில் ஓட்டை போடப்பட்டு பித்தப் பையிலிருந்து பித்தம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மனிதர்கள் இந்த அரும்பத நீரைக் குடித்து தம் வியாதிகளைப் போக்குகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் இப்படியான சீன பித்தப் பண்ணையில் ஒரு தாய்க் கரடி ஒர் அபூர்வமான, அதன் இயல்புக்குப் புறம்பான காரியத்தைச் செய்தது. அயலிலிருந்து இன்னுமொரு கரடிக்கூட்டில் இருந்து அதன் குழந்தைக் கரடி அலறும் சத்தம் கேட்டது. பொறுக்க முடியாத தாய்க் கரடி தன் இரும்புக்கூட்டையும் உடைத்துக்கொண்டு தன் குழந்தையை நோக்கி ஓடி வந்தது. அச்சத்தினால் வேலையாட்கள் ஓடிவிட்டார்கள். தய்க் கரடி அவர்களை எதுவுமே செய்யவில்லை. மாறாகத் அது தன் குழந்தை இருந்த கூட்டிற்குச் சென்று அதைக் கம்பிக்கருகே இழுத்துத் தன்னோடு அணைத்து குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டது. அதைத் தொடர்ந்து தாய்க் கரடி தனது தலையைச் சுவரில் மோதித் தற்கொலை செய்துவிட்டது.

ஏனிந்தக் கதையை நான் சொல்ல வேண்டும் என்று கேட்டு நயோமி கூறுகிறார் ” ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான பாசத்தை விதந்துரைக்க இக் கதையை விட வேறு வடிவங்கள் இருக்க முடியாது”.

உங்களுக்கும் புரிந்திருக்கும்.

எல்லோரது அம்மாக்களுக்கும் இப்படியான முடிவுகள் ஏற்படக் கூடாது. அது நடைபெறின் அதற்குக் காரணம் இக் கேவலம் கெட்ட மனிதனாகத்தான் இருக்க முடியும்.

கொறோனாவுக்கு இது நன்றாகவே புரிந்திருக்கிறது. Patient Zero வைத் தாக்கிய வைரைஸ் இத் தாய்க்கரடியின் மறு பிறப்பாக இருக்க முடியுமா?

இயற்கையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இனிமேல் தான் புத்தகத்தை வாசிக்கப் போகிறேன். அச்சமாக இருக்கிறது.

அசை – மார்ச் 31, 2020