வெள்ளி, 23 அக்டோபர், 2015

கனடிய மத்திய அரசுக்கான தேர்தல்களில் தமிழர்கள் போட்டி.




















பதிவுக்காக:


அக்டோபர் 19, 2015 அன்று கனடிய மத்திய அரசுக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.
தமிழர்கள் முதலில் தம்மைச் சார்ந்தவர்களின் பெறுபேறுகளையும் பின்னர் தாம் சார்ந்து நிற்கும் கட்சி மற்றும் தாம் வாழும் தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பெறுபேறுகளையும் குறித்த கரிசனைகளோடுதான் முடிவுகளை எதிர்பார்த்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

மொத்தம் ஆறு தமிழர்கள் டொரோண்டோ பெரும்பாகத்தில் 5 தொகுதிகளில் 4 கட்சிகளில் போட்டியிட்டிருந்தார்கள். இவர்களில் ராதிகா சிற்சபையீசன் ஸ்காபரோ ரூஜ் றிவர்  தொகுதியில் 2011 இல் போட்டியிட்டு 18,000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியவர். 2015 இல் இந்தத் தொகுதி பிரிக்கப்பட்டு ஸ்காபரோ நோர்த் மற்றும் ஸ்காபரோ ரூஜ் பார்க் என இரு தொகுதிகளாக்கப்பட்டன. ராதிகா சிற்சபையீசன் ஸ்காபரோ நோர்த் தொகுதியில் என்.டி.பி. கட்சி சார்பில் போட்டியிட்டார்.  கெரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பாகவும்  அவருக்குப் போட்டியாக கே.எம். சாந்திக்குமார் என்.டி.பி. கட்சி சார்பாகவும் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்கள்.

மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் செந்தி செல்லையா என்.டி.பி. கட்சியில் போட்டியிட்டிருந்தார். ரொஷான் நல்லரத்தினம் என்பவர் ஸ்காபரோ சவுத் வெஸ்ட் தொகுதியில் கன்சர்வேர்ட்டிவ் கட்சிளும்  கார்த்திகா கோபிநாத் அவர்கள் கிரீன் கட்சி சார்பில் பிரம்டன் வெஸ்ட் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார்கள்.

இவர்களில் வெற்றியீட்டியது கெரி ஆனந்தசங்கரி மட்டுமே 29,906 (60%)வாக்குகளைப் பெற்று வெர்ரியீட்டினார். ராதிகா சிற்சபையீசன் [8647 (22%)], ரொஷான் நல்லரத்தினம் [10386 (21%)], செந்தி செல்லையா  [4595 (11%)], சாந்திகுமார் [5164 (10%)] ஆகிய நால்வரும்  மூன்றாம் இடங்களையும் கார்த்திகா கோபிநாத் 684 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.




திங்கள், 12 அக்டோபர், 2015

கவிஞர் திருமாவளவன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கவிஞர் திருமாவளவன் அக்டோபர் 05, 2015 அன்று கனடாவில் காலமானார்.
கடந்த 25 வருடங்களாக எனக்கு அவரைத் த்ரியும் எனினும் நட்பு இறுக்க்மானது 2003 அளவில்தான்.

அவர் சிறந்த கவிதைகளை எழுதியவர் ஆனால் அச்சிறப்பின்பார்பட்ட புகழை அவருக்குத் தர இலக்கிய உலகம் மறுத்துவிட்டது.

அவரை முதலில் 'கண்டு கொண்டவர்' விமர்சகர் வெங்கட் சாமினாதன் அவர்கள் தான்.  வெங்கட் சாமினாதன் அவர்கள் இயல் விருது பெறுவதற்காகக் கனடா வந்திருந்தபோது திருமாவளவனைச் சந்தித்திருந்தார். அதன் பிறகு சாமினாதனின் எழுத்துக்களில் அடிக்கடி திருமாவளவன் தலைகாட்டினார்.

திருமாவளவன் குழந்தை சுபாவம் கொண்ட ஒரு நல்ல மனிதர். பட்டப் படிப்பு எதுவும் அவரிடமில்லை. சிறந்த கவிதைகளை அவர் எழுதியிருந்தாலும் திமிர் அவரை அண்ட மறுத்துவிட்டது. 'உங்கள் அளவுக்கு எனக்குத் திறமையில்லை' என்ற எண்ணத்தோடு தனக்குத் தாழ்வு மனப்பான்மையுண்டு என்று வெளிப்படையாகக் கூறுவார். அது தன்னடக்கம் சார்ந்த இயல்பு என்று எண்ணிக்கொள்ளவே நான் விரும்புகிறேன். இருப்பினும் நாம் வாழும் இலக்கிய உலகம்  பட்டம் படிப்பு என்ற சரிகை வேஷதாரிகளிடம் அகப்பட்டு இருக்கும்போது தன்னடக்கம் பலவீனத்துக்கு இணையாகவே பார்க்கப்படுகிறது. திருமாவளவன் இந்த உலகத்திற்குள்ளேயே தான் வாழ்ந்து மடிந்தார்.

திருமாவளவன் சமீப காலமாக நோய்வாய்ப் பட்டிருந்தார். பல வருடங்களாக அவருக்கு முள்ளந்தண்டு வலி இருந்துவந்தது எனவும் வைத்தியர் அதுபற்றி அதிக அக்கறை காட்டவில்லை எனவும் மருத்துவமனையில் காட்டியபோதுதான் புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பதாக அறிந்துகொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பின் கோடை காலமொன்றில் அவரை நானும் நண்பர் வரனும் சந்தித்தோம். முற்றத்து மர நிழலில் இருந்த அவருக்கு எங்களைச் சந்தித்துப் பேசியது பெரு விருப்பாக இருந்திருக்க வேண்டும். புதியதொரு பரீட்சார்த்த சிகிச்சை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அது வெற்றியளிக்கும் எனத் தான் நம்புவதாகவும் கூறினார்.  ஆனாலும் அவரது கண்களில் 'இன்னும் சில வருடங்கள் வாழ வேண்டி  வரம் கேட்கும் ' ஏக்கம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

நிறைய எழுதவேண்டும் போலிருக்கிறது. உடலில் பலமில்லை என்றார். நுரையீரல் உயிர் வாயுவைத் தேடி வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

'எழுதுவதற்காகச் சிரமப்பட வேண்டாம். நாங்கள் ஒரு ஒலிப் பதிவுக் கருவி ஒன்றை வாங்கித் தருகிறோம். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்துவிடுங்கள்' என்று நானும் வரனும் கூறினோம். சுயநலம் சார்ந்த சோம்பேறித் தனமோ என்னவோ என்னால் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

பேசிக்கொண்டிருக்கும்போது அவரது மனைவி சுமதியும் பல வேலைகளுக்கு மத்தியில் தன்னையும் இணைத்துக்கொண்டார். தன் குடும்பம் பற்றிய ஏக்கங்களையும் பகிர்ந்து கொண்டார். பேரப் பிள்ளை ஓடி விளையாடி விழுந்து எழும்பியது. வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.  கண்கள் பனித்தன. மீண்டும் வருவாதாக உறுதியளித்துவிட்டுப் புறப்பட்டோம். அடுத்த தடவை மருத்துவ மனையில் அவரை நான் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. கோமாவில் ஆழ்ந்திருந்தார்.

அவருடைய பல நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் 'திருமாவளவன் கவித்தொகை' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் அதைக் கனடாவில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது நடைபெறுவதற்குள் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

நண்பர் பேராசிரியர் சேரன் உடனடியாகக் காலச்சுவடு கண்ணனுடன் தொடர்பு கொண்டு இரண்டு பிரதிகளைத் தபால் மூலம் பெற்று மருத்துவமனையில் அவரது மனைவி சுமதியின் கரங்களினாலேயே வெளியீட்டையும் செய்து முடித்துவிட்டார்.

அவர் கோமாவில் இருக்கும்போது அவரது மருமகள் 'கவித்தொகை'யின் பிரதி ஒன்றைத் தந்து அவரது கவிதைகள் ஒன்றிரண்டை வாசிக்கும்படி கேட்டார். அவரது காதருகில் சென்று வாசித்தேன். உடல் கவிதைகளை உணர்ந்து ஏற்றுக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தன. திறந்திருந்த கண்கள் எப்படியான காட்சியை அவருக்குத் தெரிவித்திருக்கும் என்று ஊகிக்க முடியாது. உயிரோடு இருந்திருந்தால் அவரது கவித வரிகளில் அக்காட்சி இன்னும் அழகாக வர்ணிக்கப் பட்டிருக்கலாம்.

நான் கொடுத்து வைத்தவனல்ல.

சென்று வா நண்பரே.