ஞாயிறு, 13 டிசம்பர், 2015


பாரிஸ் சூழல் மானாடு (கொப்21) : பூனைக்கு மணி கட்டுவது யார்?


பாரிஸில் இரண்டு வாரமாக நடைபெற்ற ஐ.நா. உலகச் சூழல் மானாடு முடிவுக்கு வந்திருக்கிறது. மானாடு வெற்றி என்று தீர்மானம் வேறு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் கியோட்டோ, கொப்பென்ஹேகன் நகரங்களில் தோல்வியடைந்த மானாடுகள் பாரிசில் வெற்றியளித்திருப்பதாகக் கொண்டாடுகிறார்கள்.

மானாட்டின் நோக்கம் பூகோள வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பைக் குறைத்துக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பது. அதைச் சாதிப்பதற்கு பல அப்விருத்தியடைந்த, அடைந்துவரும் நாடுகளின் ஒத்துழைப்புத் தேவை. முன்னய மானாடுகளில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பல ஒத்துழைக்கவில்லை. இந்த தடவை ஒத்துழைக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இத் திட்டத்தை அமுற்படுத்துவது எளிதல்ல என்றும் கூறப்படுகிறது. காரணம் இந்நாடுகள் எல்லாமே தமது பொருளாதார முன்னெடுப்பில் மட்டுமே அக்கறை கொண்டனவாக இருக்கின்றன. உலக அதிகாரப் போட்டியின் வெற்றியைத் தீர்மானிப்பது பொருளாதாரம் என்று தான் வாய்ப்பாடு சொல்கிறது.

விஞ்ஞானிகள் மனிதகுல மேம்பாட்டை மட்டுமே கருத்திற் கொண்டு தமது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். சூழல் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு பலத்த பேரழிவுகளைக் கொண்டுவரக் கூடாதென்ற அக்கறை அவர்களுக்கு இருக்கிறது.
சூழல் மாற்றத்திற்கு அதி முக்கிய காரணம் காபனீரொக்சைட் வாயுவின் அதிகரிப்பு எனவும் இதை உற்பத்தி செய்யும் மூலங்களாக எரிவாயுப் பாவனையும் (57% வாகனங்கள், மின்னுற்பத்தி) மற்றும் காடழிப்பு (17%) என்பனவுமே காணப்படுகின்றன எநத் தரவுகள் மூலம் அவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் பொருளாதார நலம் கருதும் அரசுகளும் அரசியல்வாதிகளும் இப்படியான விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்தது மட்டுமல்ல அவர்களின் ஆய்வுகளை நம்பவும் மறுத்து வந்தார்கள். காரணம் அவர்களில் பலர் எண்ணை வியாபாரத்திலும் காடழிப்பு வருமானங்களிலுமே  வாழ்ந்து வருபவர்கள். இப்படியானவர்களின் அழுத்தங்களினாலேயே கியோட்டோ, கொப்பென்ஹேகன் மானாடுகள் தோல்வியில் முடிந்தன. மக்களும் அவர்களை நம்பினார்கள்.

ஆனால் சமீப காலங்களில், குறிப்பாக கடந்த வருடம் (2014) வரலாற்றிலேயே அதியுச்ச வெப்பநிலையைக் கண்ட வருடமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தரவு பேணுதல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இது வரை பார்த்தால் ‘வெப்பமான வருடங்கள் என அறியப்பட்ட 15 வருடங்களில் 14, 21ம் நூற்றாண்டிலேயே காணப்பட்டிருக்கின்றன.

2014 ம் ஆண்டின் அதியுச்ச வெப்பநிலை மக்களை விஞ்ஞானிகள் பக்கம் தள்ளிவிட்டது. லாபம் சம்பாதிப்பதைவிடவும் குழந்தைகளின் எதிர்காலமே முக்கியம் என அவர்கள் கிளர்ந்தெழுந்ததன் வெளிப்பாடே பாரிஸ் கொப் 21 மானாட்டின்
வெற்றி. அது அரசியல்வாதிகளுக்கான வெற்றி, மக்களுடையதல்ல.

வளிமண்டலத்தின் இன்றய சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ். பூமி உருவாகிய காலத்திலிருந்து இது பல த்டவைகள் கூடியும் குறைந்தும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும் தற்போதய வெப்பநிலை அதிகரிப்பின் வேகம் விஞ்ஞானிகளைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது. இந்த வேகத்தில் அதிகரித்தால் பூகோளத்தின் பனி மூடிகள் உருகி கடலின் நீருயரம் அதிகரித்து பல தாழ்ந்த பிரதேசங்கள் அமிழ்ந்துவிடலாமென்றும் அதே வேளை சூரிய ஒளியின் பெரும் பகுதியைப் பிரதிபலிக்கும் பனி மூடிகள் இல்லாதபோது  பூகோளம் இன்னும் வேகமாக வெப்பமடையும் எனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பிற்கும் காபனீரொக்சைட் வாயுவின் அதிகரிப்பிற்கும் என்ன சம்பந்தம்  என வாசகர்கள் சிலர் கேட்கலாம்.

பூகோளத்தில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி (வெப்பம்)  முற்றாகப் பிரதிபலித்துவிட்டால் பூமி குளிரில் உறைந்துவிடும். எமது பூமியைச் சுற்றி இருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் காபனீர் ஒக்சைட் போன்ற வாயுக்களின் படலம்,  தெறித்து வெளியே போகும்  சூரிய வெப்பத்தின் ஒரு பகுதியை மீண்டும் பூமியை நோக்கித் தெறிக்க (இரண்டாம் தெறிப்பு) வைக்கின்றது. இதனால் தான் எங்கள் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ் ஆக இருக்க முடிகிறது.

ஆனால் வாகனங்களினதும், மின்னுற்பத்தி மற்றும் ஆலைப் புகைபோக்கிகளிலிருந்து வரும் புகைகளில் உள்ள காபனீரொக்சைட் பெருமளவில் வளிமண்டலத்தை அடையும்போது பூமியிலிருந்து தெறிக்கும் வெப்பத்தின் கணிசமான பங்கு இந்த அதிகரிக்கப்பட்ட காபனீரொக்சைட் படலத்தினால் திரும்பவும் பூமியை நோக்கியே தெறிக்க வைக்கப்படுகிறது. இதையே கிறீன் ஹவுஸ் வாயு ( green house gas)  என்கிறார்கள்.

இந்த பாரிஸ் மானாட்டின் தீர்மானத்தின்படி காபனீரொக்சைட் போன்ற வாயுக்களை அதிகம் உற்பத்தி செய்யும் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தங்கள் எரிவாயு மற்றும் நிலக்கரிப் பாவனைகளைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே முடிவு.

இப்படியான நாடுகளின் பொருளாதாரத்தின் அடிநாதமே எரிவாயு மற்றும் நிலக்கரிப் பாவனைதான். ஆசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் காடழிப்புகள் கூட மேற்கு நாடுகளின் சந்தைகளை நிரப்புவதற்காகவே. அவர்கள் பாவனையைத் தாமாக முன்வந்து குறைக்கப் போவதில்லை. அப்படியானால் எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு அளவுக் கட்டுப்பாடு (கோட்டா) நிர்ணயிக்கப்பட வேண்டும். பணக்கார நாடுகளில் மக்கள் சூழலுக்காக எவ்வகையான சுய கட்டுபாடுகளுக்கும் தயாராக இருப்பார்கள் என நம்பலாம். ஆனால் இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் ஏற்கெனவே தமது அதிருப்தியைக் காட்டியிருக்கிறார்கள்..

எந்த நாட்டின் கோட்டா எந்தளவு என்பதை யார் எப்படித் தீர்மானிப்பது? வருடாந்த கோட்டாவை எட்ட முடியாத பட்சத்தில்  அந்நாடுகள் மீதான தண்டனையை யார் எப்படி வழங்குவது?

இங்கு பிரச்சினை நாடுகளில் இல்லை. நாடுகளின் நாயகமாக இருக்கும் ஐ..நா. சபையில் தானிருக்கிறது.. இந்த பாரிஸ் மானாட்டை ஏற்பாடு செய்தது இச் சபைதான். எப்போதுமே அதிகார அரசியலின் நிழலில் ஒதுங்கி வாழும் இந்தச் சபையால் தீர்மானங்களை நிறைவேறற மட்டுமே முடியும். அதிகார நாடுகளின் தேவைகளைத் தீர்க்காத எவ்வித தீர்மானமும்  வெற்றியடையப் போவதில்லை. இத் தீர்மானம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கால்களில் போடப்படும் ஒரு பொருளாதாரத் தளையாக ஏன் பார்க்கப்படக் கூடாது என்பதற்கும் ஆதரவாளர்கள் பலருண்டு.

விடயம் நல்லது. நம்பிக்கை தரும் உலக சபை உருவாகும்வரை எதிலும் நம்பிக்கையில்லை.

மார்கழி 13, 2015.


வெள்ளி, 23 அக்டோபர், 2015

கனடிய மத்திய அரசுக்கான தேர்தல்களில் தமிழர்கள் போட்டி.




















பதிவுக்காக:


அக்டோபர் 19, 2015 அன்று கனடிய மத்திய அரசுக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.
தமிழர்கள் முதலில் தம்மைச் சார்ந்தவர்களின் பெறுபேறுகளையும் பின்னர் தாம் சார்ந்து நிற்கும் கட்சி மற்றும் தாம் வாழும் தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பெறுபேறுகளையும் குறித்த கரிசனைகளோடுதான் முடிவுகளை எதிர்பார்த்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

மொத்தம் ஆறு தமிழர்கள் டொரோண்டோ பெரும்பாகத்தில் 5 தொகுதிகளில் 4 கட்சிகளில் போட்டியிட்டிருந்தார்கள். இவர்களில் ராதிகா சிற்சபையீசன் ஸ்காபரோ ரூஜ் றிவர்  தொகுதியில் 2011 இல் போட்டியிட்டு 18,000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியவர். 2015 இல் இந்தத் தொகுதி பிரிக்கப்பட்டு ஸ்காபரோ நோர்த் மற்றும் ஸ்காபரோ ரூஜ் பார்க் என இரு தொகுதிகளாக்கப்பட்டன. ராதிகா சிற்சபையீசன் ஸ்காபரோ நோர்த் தொகுதியில் என்.டி.பி. கட்சி சார்பில் போட்டியிட்டார்.  கெரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பாகவும்  அவருக்குப் போட்டியாக கே.எம். சாந்திக்குமார் என்.டி.பி. கட்சி சார்பாகவும் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்கள்.

மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் செந்தி செல்லையா என்.டி.பி. கட்சியில் போட்டியிட்டிருந்தார். ரொஷான் நல்லரத்தினம் என்பவர் ஸ்காபரோ சவுத் வெஸ்ட் தொகுதியில் கன்சர்வேர்ட்டிவ் கட்சிளும்  கார்த்திகா கோபிநாத் அவர்கள் கிரீன் கட்சி சார்பில் பிரம்டன் வெஸ்ட் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார்கள்.

இவர்களில் வெற்றியீட்டியது கெரி ஆனந்தசங்கரி மட்டுமே 29,906 (60%)வாக்குகளைப் பெற்று வெர்ரியீட்டினார். ராதிகா சிற்சபையீசன் [8647 (22%)], ரொஷான் நல்லரத்தினம் [10386 (21%)], செந்தி செல்லையா  [4595 (11%)], சாந்திகுமார் [5164 (10%)] ஆகிய நால்வரும்  மூன்றாம் இடங்களையும் கார்த்திகா கோபிநாத் 684 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.




திங்கள், 12 அக்டோபர், 2015

கவிஞர் திருமாவளவன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கவிஞர் திருமாவளவன் அக்டோபர் 05, 2015 அன்று கனடாவில் காலமானார்.
கடந்த 25 வருடங்களாக எனக்கு அவரைத் த்ரியும் எனினும் நட்பு இறுக்க்மானது 2003 அளவில்தான்.

அவர் சிறந்த கவிதைகளை எழுதியவர் ஆனால் அச்சிறப்பின்பார்பட்ட புகழை அவருக்குத் தர இலக்கிய உலகம் மறுத்துவிட்டது.

அவரை முதலில் 'கண்டு கொண்டவர்' விமர்சகர் வெங்கட் சாமினாதன் அவர்கள் தான்.  வெங்கட் சாமினாதன் அவர்கள் இயல் விருது பெறுவதற்காகக் கனடா வந்திருந்தபோது திருமாவளவனைச் சந்தித்திருந்தார். அதன் பிறகு சாமினாதனின் எழுத்துக்களில் அடிக்கடி திருமாவளவன் தலைகாட்டினார்.

திருமாவளவன் குழந்தை சுபாவம் கொண்ட ஒரு நல்ல மனிதர். பட்டப் படிப்பு எதுவும் அவரிடமில்லை. சிறந்த கவிதைகளை அவர் எழுதியிருந்தாலும் திமிர் அவரை அண்ட மறுத்துவிட்டது. 'உங்கள் அளவுக்கு எனக்குத் திறமையில்லை' என்ற எண்ணத்தோடு தனக்குத் தாழ்வு மனப்பான்மையுண்டு என்று வெளிப்படையாகக் கூறுவார். அது தன்னடக்கம் சார்ந்த இயல்பு என்று எண்ணிக்கொள்ளவே நான் விரும்புகிறேன். இருப்பினும் நாம் வாழும் இலக்கிய உலகம்  பட்டம் படிப்பு என்ற சரிகை வேஷதாரிகளிடம் அகப்பட்டு இருக்கும்போது தன்னடக்கம் பலவீனத்துக்கு இணையாகவே பார்க்கப்படுகிறது. திருமாவளவன் இந்த உலகத்திற்குள்ளேயே தான் வாழ்ந்து மடிந்தார்.

திருமாவளவன் சமீப காலமாக நோய்வாய்ப் பட்டிருந்தார். பல வருடங்களாக அவருக்கு முள்ளந்தண்டு வலி இருந்துவந்தது எனவும் வைத்தியர் அதுபற்றி அதிக அக்கறை காட்டவில்லை எனவும் மருத்துவமனையில் காட்டியபோதுதான் புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பதாக அறிந்துகொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பின் கோடை காலமொன்றில் அவரை நானும் நண்பர் வரனும் சந்தித்தோம். முற்றத்து மர நிழலில் இருந்த அவருக்கு எங்களைச் சந்தித்துப் பேசியது பெரு விருப்பாக இருந்திருக்க வேண்டும். புதியதொரு பரீட்சார்த்த சிகிச்சை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அது வெற்றியளிக்கும் எனத் தான் நம்புவதாகவும் கூறினார்.  ஆனாலும் அவரது கண்களில் 'இன்னும் சில வருடங்கள் வாழ வேண்டி  வரம் கேட்கும் ' ஏக்கம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

நிறைய எழுதவேண்டும் போலிருக்கிறது. உடலில் பலமில்லை என்றார். நுரையீரல் உயிர் வாயுவைத் தேடி வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

'எழுதுவதற்காகச் சிரமப்பட வேண்டாம். நாங்கள் ஒரு ஒலிப் பதிவுக் கருவி ஒன்றை வாங்கித் தருகிறோம். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்துவிடுங்கள்' என்று நானும் வரனும் கூறினோம். சுயநலம் சார்ந்த சோம்பேறித் தனமோ என்னவோ என்னால் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

பேசிக்கொண்டிருக்கும்போது அவரது மனைவி சுமதியும் பல வேலைகளுக்கு மத்தியில் தன்னையும் இணைத்துக்கொண்டார். தன் குடும்பம் பற்றிய ஏக்கங்களையும் பகிர்ந்து கொண்டார். பேரப் பிள்ளை ஓடி விளையாடி விழுந்து எழும்பியது. வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.  கண்கள் பனித்தன. மீண்டும் வருவாதாக உறுதியளித்துவிட்டுப் புறப்பட்டோம். அடுத்த தடவை மருத்துவ மனையில் அவரை நான் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. கோமாவில் ஆழ்ந்திருந்தார்.

அவருடைய பல நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் 'திருமாவளவன் கவித்தொகை' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் அதைக் கனடாவில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது நடைபெறுவதற்குள் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

நண்பர் பேராசிரியர் சேரன் உடனடியாகக் காலச்சுவடு கண்ணனுடன் தொடர்பு கொண்டு இரண்டு பிரதிகளைத் தபால் மூலம் பெற்று மருத்துவமனையில் அவரது மனைவி சுமதியின் கரங்களினாலேயே வெளியீட்டையும் செய்து முடித்துவிட்டார்.

அவர் கோமாவில் இருக்கும்போது அவரது மருமகள் 'கவித்தொகை'யின் பிரதி ஒன்றைத் தந்து அவரது கவிதைகள் ஒன்றிரண்டை வாசிக்கும்படி கேட்டார். அவரது காதருகில் சென்று வாசித்தேன். உடல் கவிதைகளை உணர்ந்து ஏற்றுக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தன. திறந்திருந்த கண்கள் எப்படியான காட்சியை அவருக்குத் தெரிவித்திருக்கும் என்று ஊகிக்க முடியாது. உயிரோடு இருந்திருந்தால் அவரது கவித வரிகளில் அக்காட்சி இன்னும் அழகாக வர்ணிக்கப் பட்டிருக்கலாம்.

நான் கொடுத்து வைத்தவனல்ல.

சென்று வா நண்பரே. 

திங்கள், 12 ஜனவரி, 2015



ஆயுதம் ஏந்தாத வீரர்களும்  நிபந்தனையற்ற நேசமும்  (Unarmed Troops and Unconditional Love)


இன்று (தை 12, 2015) அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது எட்டாவதும் இறுதியானதுமான ளுவயவந ழக வாந ருnழைn பேச்சை நிகழ்த்தினார் . பெரும்பாலான நேரங்களில் இத் ஒரு வெறும் சடங்காகவே எனக்குத் தெரிவதுண்டு. இன்றய நாள் இச் சடங்கை விரும்பிப் பார்த்தேன்.

ஒரு அடிமையின் வழித்தோன்றல் அமெரிக்கப் பிரதிநிதியாய் வந்தது அந்த அடிமை குலத்துக்குப் பெருமை சேர்த்திருப்பினும் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து முழுமையாக எட்டாண்டு காலம் ஆள வைத்த அந்த மற்றய குலத்துக்கே அதிகப் பெருமை சேரவேண்டும். கென்னெடிஇ மாட்டின் லூதர் கிங் வரிசையில் இன்னுமொரு துப்பாக்கிக் குண்டுக்கு வேலை வந்துவிடக் கூடாதென்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். வந்தபோது முழங்கியது போலவே போகும்போதும் முழங்கிப் போகிறார்.

மாற்றம் வேண்டுமென்று இன்றய அரசியல்வாதிகள் போடும் கூச்சலை ஆரம்பித்து வைத்தவர் ஒபாமா.  நேர்மையானவர்கள்  அரசியலில் நிலைப்பது கடினம். ஜிம்மி கார்ட்டர்இ போப் ரே போன்ற சிலரது அகால ஆட்சி முடிவுகள் நல்ல உதாரணம்.

கூச்சல் கலாச்சாரம் ஜனநாயகத்தின் ஒரு கூறாக மாறிவிட்ட காலத்தில் நாம் வாழ்வதால் அவரது கூச்சலை செவிக்குறை கொண்டவர்களுக்கென ஒதுக்கிவிட்டுப் பார்க்கலாமெனச் சமாதானம் கொண்டு மீதியைப் பார்க்கலாம்.

ஒபாமாவின் பேச்சு ஏனைய முன்னாள் பீற்றல் பிரங்கிகளினது பேச்சுக்களை விட வித்தியாசமாகவிருந்தது. ஒபாமா சாதித்தவற்றைப் பற்றி அதிகம் பீற்றிக் கொள்ளவில்லை. அவர் பலவற்றைச் சாதித்திருக்கிறார். 18 மில்லியன் மக்கள் நலக்காப்புறுதி பெற்றிருக்கிறார்கள்.  போர் சிதைத்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி என்ற வரலாற்றுச் சிறப்பையும் தட்டிக் கொண்டார்.

இன்றய பேச்சில் அவர் முக்கியத்துவம் கொடுத்தது தன்னால் செய்ய முடியாமற் போனவற்றிற்காக. இரண்டு கட்சிகளிடையேயும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வைக் கொண்டுவந்து நாட்டுக்குத் தேவையான நல்ல பல விடயங்களைச் செய்ய முடியாமற் போனதையிட்டு அவர் கவலைப்பட்டார். ஆயுதங்களுக்குப் பலி போகும் குழந்தைகள் பற்றிக் கவலைப்பட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலம் மட்டுமல்ல உலகின் எதிர்காலமும் அவரது கரிசனைக்குள் அகப்பட்டிருந்தது. பொருளாதாரம்இ சுற்றுச் சூழல் என்று இன்னோரன்ன விடயங்களில் அமெரிக்க சிந்தனைக்கு ஒவ்வாதிருந்தது அவரது அக்கறை.

எதிர்காலம் பற்றி நம்பிக்கையோடு  இருந்தாலும் உலகுக்குத் தலைமை தாங்கும் நாடென்ற விடயத்தில் அமெரிக்கா இன்னும் மாற வேண்டுமென்பதில் அவரது விருப்பு ஒன்று - அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் வேண்டுமென்பது.

இவ்வளவு நல்லவரையும் நான் பல தடவைகள் விமர்சித்ததுண்டு. இப்போதும் தான். அமெரிக்க ஆயுத மோகத்தையும் குழந்தைகள் பலியெடுக்கப்படுவதையும் சகிக்காது கண்ணீர் விடும் ஒரு மனிதர் குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுக்கும் ஆளில்லா விமானங்களை ஏவி விடும் கட்டளைகளை வாரா வாரம் பிறப்பிக்கும் கொலைகாரனாகவும் இருக்கிறார்.

தன்  பேச்சை முடிக்கும்போது ஒபாமா மாட்டின் லூதர் கிங் அவர்களுடைய மேற்கோள் ஒன்றைக் கூறினார். அது தான் 'ருயெசஅநன வசழழிள யனெ ருnஉழனெவைழையெட டழஎந' என்பது. அமெரிக்கா ஒரு ஆயுதமேந்தாத வீரர்களைக் கொண்டதும்  நிபந்தனையற்ற நேசத்தை வெளிப்படுத்துவதுமான நாடாக இருக்க வேண்டுமென டாக்டர் கிங் விரும்பியதாக அதைச் சாரம் கொள்ளலாம்.

டாக்டர் கிங் கின் விருப்பத்தை ஒபாமா ஒரு வகையில் நிறைவேற்றியிருக்கிறார். அமெரிக்க வீரர்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு அவர்கள் கைகளில் ஆளில்லா விமானங்களின் இயக்கிகளைக் கொடுத்தமை. அமெரிக்கா மீது அதன் மக்களை நிபந்தனையற்ற நேசத்தைப் பொழிய வைத்தமை.

அமெரிக்காவில் எவர் ஜனாதிபதியானாலென்ன நிழல் ஜனாதிபதிகளே ஆட்சியை நடாத்துகிறவர்கள் என்றொரு கதை கர்ணபரம்பரையாக வருகிறது. கட்டளைகளை அவர் பிறப்பிக்காமலும் இருக்கலாம். மேனியைக் கொல்வதும் வீரத்தில் ஒன்று தானே!

சில வேளைகளில் வெள்ளையை அதிகம் பார்த்தால் தான் கறுப்பின் அருமை தெரியும். சமீப காலங்களில் ட்ரம்ப் என்றொரு பிறவி தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் அலங்கரிக்கிறது. இதைச் சுற்றி நின்று காவடி எடுக்கும் பிறவிகளின் கூச்சல்களோ காதைப் பிளக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக அது வந்துவிடுமென்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒரே ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன். தயவு செய்து அமெரிக்காவில் இன்னும் மாற்றம் வேண்டுமென்று கேட்காதீர்கள். உங்கள் விருப்பம் ட்ரம்ப் போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி விடலாம்.

மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கே மாற்றம் பயன் தரும். அது நம்ம நாட்டிலும் தான்.