ஞாயிறு, 8 மே, 2016

அம்மாவுக்கு நன்றி


மறைந்ததும் மறையாததுமான எல்லா அன்னையர்களுக்கும் நன்றிகள்!
அது ஒரு வேனில் பொழுது. நண்பர்களோடு விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது அம்மா சொன்னா " மணிய வாத்தியார் வந்திட்டுப் போறார். இப்பிடி றிசல்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டு திரியிறான். போய் ஹிண்டு கொலிஜ் அல்லது சென்றல் கொலிஜில (யாழ்) அட்மிசன் எடுக்கச் சொல்லுங்க எண்டு சொன்னவர்' என்று சொன்னா.
மணிய வாத்தியார் உறவினர் என்றாலும் என் வீட்டுக்கு எப்போதாகிலும் வருபவர். அவரது திடீர் வருகையும் அக்கறையும் எனக்கு உசுப்பேத்தவில்லை. "அவருக்கு விசர் பேசாம இருங்கோ" என்று சொன்னதும் அம்மா சொன்னா " அப்பிடித்தான் உன்ர வாழ்க்கையில மாற்றம் வரவேண்டுமென்று இருந்தா அது வந்துதான் தீரும். நீ ஏன் தெண்டிக்கக் கூடாது?" யாழ் மத்திய கல்லூரியில் தொடங்கிய அடுத்த கட்டம் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவுதான் இன்றய நான்.
அம்மாவுக்கு நன்றிகள்!

புதன், 4 மே, 2016

மஹாகவிக்கு ஒரு சுழி


வாந்தி 



அளவெட்டிப் பெருங்கவிஞன் அன்னான்
அளந்தெடுத்துச் சொல்லடுக்க வல்லான்
வள்ளியிலும் சுள்ளியிலும் வானளந்த வெள்ளியிலும்
கிள்ளி எறிவான் தமிழை என் கவிக்கு முன்னான்

****

நல்ல கவிஞனாக ஆசை
வறுமை,
போனால் வியாதி,
போனால் மரணம்
வேண்டாம்
கவியனாகவே இருந்துவிட்டுப் போகலாம்.

****

உச்சியில் குமட்டியது
ஓங்காளித்தேன்
இரண்டு சொற் திரள்கள்
நாட்பட்டவையாக இருக்கலாம்
இப்போது சுகமாக இருக்கிறது.

****

காற்றை ஊதி
சூரியனை அணைத்து
நிலவைத் துப்பி
முகிலைச் சிதைத்து
வாழ்ந்தது போதும்
எல்லோரும் வாருங்கள்
கவிதை பேசுவோம்

வைகாசி 4, 2016