திங்கள், 24 மார்ச், 2014

இரவல் வாங்கிய இசைத் தட்டு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
சென்ற சனி தமிழர் வகை துறை வள நிலையம் ரொறோன்ரோ நகரில் ஒரு கருத்தரங்க நிகழ்வொன்றில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த ஈழத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொன்கலன் பேசியிருந்தார்.

'தனது பேச்சை ஒளிப் பதிவு செய்ய வேண்டாம்' என்று அவர் கேட்டிருந்ததாக அமைப்பாளர் சொல்ல்லியிருந்தது அவர் பற்றிய மதிப்பில் பாரிய சரிவொன்றை முற்கூட்டியே என்னுள் ஏற்படுத்தியிருந்தது.

பொதுவாக வசூல் ராஜாக்களின் நிகழ்ச்சிகளில் பதிவு செய்வது தடுக்கப்படுவது வழக்கம். அது ஓரளவு நியாயமானது. ஆனால் ஒரு பேராசிரியர் அதைக் கேட்டுக் கொள்வது?

'அவர் இலங்கைக்குத் திரும்பிப் போகவேண்டும் தானே' என்றொரு காரணம் எங்கோ சுவரில் பட்டுத் தெறித்தது. பல தலைகள் மேலும் கீழ்மாகவும் பக்கவாட்டிலும் ஆடின.

அவரது நிலைப்பாடு ஏற்படுத்திய முற்சாய்வை ஒரு புறம் வைத்துவிட்டு பேச்சு பற்றி மட்டுமே பார்த்தால் - ஒரு சாதாரண அரசியல் அறிவு கொண்டவரிடமே அதைக் கேட்டிருக்கலாம். எனது மூளையை உறங்கு நிலைக்குக் கொண்டுபோயிருந்தார். மீண்டும் மீண்டும் இரவல் கொடுக்கப்பட்ட கிறுக்கல் விழுந்த இசைத்தட்டு ஒன்றைக் கேட்ட அனுபவம்.

பேச்சின் மையம் ஈழத் தமிழரின் இன்றைய அவல நிலை பற்றியே இருந்தது. அரசியற் பேராசிரியரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும். வழக்கம் போலவே 'தவறெல்லாம் தமிழருடையதே' பாணி தான்.

ஜெனிவாவிற்குப் போனது பிரயோசனமற்றது. அதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்கிறார். சரி. புலம் பெயர்ந்த தமிழர் ஈழத் தமிழருக்குப் புத்தி சொல்ல முடியாது என்கிறார். அதுவும் சரி. 80  வீத வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்கிறார். அரசியல் மூலமே தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிறார். மொத்தத்தில் தமிழரைத் தவிர அவர் வேறு எவர் மீதும் காட்டமான விமர்சனத்தை வைக்கவில்லை.

பயமா? பக்தியா?

ஒரு சில மணித்தியாலங்கள் வீண்.