செவ்வாய், 5 ஜூலை, 2011

ஆடலுடன் பாடலைக் கேட்டு....

தமிழ் நாட்டில் 'மணிக்கொடி' க் காலம் என்பது எவ்வளவு முக்கியமாகக் கருதப்படக் கூடியதோ அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் கனடாவில் - அல்லது புலம் பெயர்ந்த தமிழுலகில் - கருதப்படக் கூடியது 'தாயகக்' காலம்.

1980 களின் பிற்பகுதியில் ஜோர்ஜ் குருச்சேவ் ஐ ஆசிரியராகக் கொண்டு வாரந்தரியாகத் தொடர்ந்து ஒரு தசாப்த காலம் வெளிவந்தது இப் பத்திரிகை / சஞ்சிகை.

இச்ச சஞ்சிகையில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு...' என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதி வந்தவர் பல் கலை வித்தகர் (கொடுக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பட்டமல்ல) நண்பர் ஆனந்த பிரசாத். முறைப்படி கர்நாடக இசையையும், வாத்தியக் கருவிகளின் பயிற்சியையும் பெற்ற அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரும் கூட.

திடீரென்று அவரைப் பற்றி எழுத அப்படி ஒரு முக்கியமான நிகழ்வுகளும் நடைபெற்று விடவில்லை. எஸ்.பொ. வின் புத்தகம் ஒன்றைத் தேடும் போது தற்செயலாக ஆனந்த் பிரசாத் எழுதி 1992 ல் 'காலம்' வெளியீடாக வெளி வந்த 'ஒரு சுய தரிசனம்' என்ற கவிதை நூல் தட்டுப்பட்டது. ஆர்வத்தோடு அதைப் பிரித்த போது அதன் மூன்றாவது பக்கத்தில் அவரது சமர்ப்பண வரிகள் இப்படி இருந்தன.

"அதிர்ஷ்டங்கள் வந்து நான்
அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது
என்னைத் தடுத்தாட் கொண்ட
துரதிர்ஷ்டங்களுக்கு"

வாசித்ததும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.

பிரசாத் ஒரு அற்புதமான பிறவி. அவர் பேசினாலும் எழுதினாலும் - 'தாயக' மொழியில் சொன்னால் - பிடித்தாழ்வார் அல்லது கடித்தாழ்வார். வண்ண மலர்களின் வசியப்பட்டு வண்டுகள் சிறைப் பட்டது போல் இந்த நான்கு வரிகளும் அவரது கவிதைகளை மீண்டும் ஒரு தடவை வாசிக்கச் செய்து விட்டது.

அது நிச்சயமாக ஒரு ஆனந்தமான அனுபவம் தான்...


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கனடா நாள்

இன்று யூலை மாதம் முதலாவது நாள்.

இன் நாளை கனடாவின் தேசீய நாளாகக் கொண்டாடுகிறார்கள். யூலை 1, 1867 ம் ஆண்டு வட அமெரிக்காவிலுள்ள பிரித்தானிய காலனிகளை ஒன்றிணைத்து 'கனடா' நாட்டை உருவாக்கிய நாள் இது. 1980 வரையில் தலைநகர் ஒட்டாவாவில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த இந்நாள் இப்போது சகல மாகாணங்களிலும் அரச செலவில் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. கனடா முழுவதும் இன்று அரச விடுமுறை நாளாகும்.

1983 இல் நான் கனடா வந்த பொழுது கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியால் நகரில் வசித்தேன். பிரித்தானிய - பிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே இயல்பாகக் காணப்பட்ட பகைமை காரணமாகவும் பிரித்தானிய - வட அமெரிக்க சட்டத்தை எதிர்க்கும் தேவையை முன்னிட்டும் கியூபெக் மக்கள் கனடா தினத்தைக் கொண்டாடாது தமது தேசீய தினமாக ஜூன் 24 ம் திகதியைக் (St.Jean the Baptist Day)கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள் கியூபெக் மக்களுக்கு விடுமுறை நாளாகும்.

கியூபெக் மாகாணத்தில் கனடா தினம் விமரிசையாகக் கொண்டாடப் படுவதில்லை என்பதைக் கண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (சுதேசியர் அல்ல) ஒருவரே அங்கு ஒரு சிலரது உதவியுடன் கனடா தின ஊர்வலத்தை ஆரம்பித்தார். ஓரிரு வருடங்களில் அவர் மறக்கப்பட்டு டாம்பீகமாக் அரச செலவில் இத் தினம் கியூபெக்கில் தொடர்ந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்கலாச்சார நாடான கனடாவில் எல்லா இனங்களையும் ஒன்றிணைக்கும் தினமாக இருப்பது மட்டும் அதன் விசேஷம் அல்ல. இந்நாள் ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் இன, மத, மொழி அடையாளங்களை முன்நிறுத்திய நாளாக அமையாததே அதன் சிறப்புக்கும் பெருமைக்கும் காரணம்.

'ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே' என்ற வரிகளின் அர்த்தம் எமது சந்ததிகளுக்கு உண்மையான ஆனந்தத்தை இனிமேல்தான் அளிக்கும்.







Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது