வெள்ளி, 1 ஜூலை, 2016

ஷான் & ஜயா சந்திரசேகர் கலைக் குடும்பம்






இன்று ஒரு மகத்தான நாள். தற்செயலாக மார்க்கம் நகரிலுள்ள ATN கலையகத்துக்குப் போகக் கிடைத்தது. அதன் உரிமையாளர் ஷான் எனக்கும் என்னுடன் வந்த இரு நண்பர்களுக்கும் (குலா செல்வத்துரை, சிறிதரேன் துரைராஜா) தன் கலையகம் முழுவதையும் நேரில் அழைத்துச் சென்றுகாட்டினார். வட அமெரிக்காவிலேயே குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதிய தொழில்னுட்பங்களை உள்வாங்கிய futuristic வடிவமைப்பு. ஏறத்தாழ 140 பேர் பணி புரிகிறார்கள்.

ஷான் சந்திரசேகரும் அவரது மனைவி ஜயா சந்திரசேகரும் ஒரு சிறிய எடிட்டிங் அறையினுள் பணியாளருக்கு அருகிலிருந்து சிறு திரையொன்றைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிச் சுவருக்குள்ளால் எங்களைக் கண்டதும் எழுந்து வந்து வணக்கம் சொல்லி வரவேற்று (நான் முன்னர் ஒருபோதும் அவரிடம் பேசியிருந்ததில்லை ஆனால் என்னுடன் வந்த குலா செல்லத்துரையை அவருக்குத் தெரியும்) உள்ளே அழைத்தார். மனைவியாரும் எழுந்து நின்று கரம் கூப்பி வணக்கம் சொன்னார்.

நாங்கள் நிகழ்ச்சியொன்றின் ஒளிப்பதிவிற்காக அவசரமாகச் சென்று கொண்டிருந்தோம். அதுவும் அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் நீங்கள் அவசியம் இந்த ஒளிப்பதிவைப் பார்த்தேயாக வேண்டும். இது வேறெங்கும் கிடைக்காத பதிவு என்றார்.

சின்னதொரு எடிட்டிங் திரையொன்றில் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு ஒன்றிற்காக ஒத்திகை போட்டுக் கொண்டோ அல்லது இடைவேளையில் இளைப்பாறிக் கொண்டோ இருந்தபோது ஷான் அவரைப் பிடித்துக்கொண்டார் போலும். இப்போதய வயதைவிட அரை வயதுத் தோற்றத்துடன் சிவாஜியைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.

அப்போது, வெளி நாட்டுத் தமிழருக்கு (இந்தியருக்கு?) என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது போன்றொரு (?) கேள்வியைச் ஷான் கேட்டிருக்க வேண்டும். சிவாஜி ஆங்கிலத்தில் பதிலளிக்க முனைந்தபோது ஷான் 'நீங்கள் தமிழிலேயே பதில் சொல்லுங்கள்' அன்போடு கேட்டுக்கொள்ள 'அங்கேயும் தமிஸ் பேசுவாங்களா?' என்ரூ சிரிப்போடு சிவாஜி பேச ஆரம்பித்தார். ஒரு வித தயாரிப்பமில்லாது மழையாக வந்த அவரது கூறும் பேச்சு ஒரு வகையில் 'மனோகரா' வசனத்துக்கும் 'தேவர் மகன்' வசனத்துக்கு இடைப்படட தொனி. எந்தவித மிகைப்பாடும் இல்லாத சினிமா கலக்காத சுத்த தமிழ். அவரின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த அந்த சிங்காரத் தமிழைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் போலிருந்தது. தமிழ் மீதும் தமிழர் மீதும் தான் வாழ்ந்த மண்ணின் மீதும் அவர் காட்டிய பாசம் என்னக்குப் போதையையே ஏற்றியது. சிவாஜியின் இழப்பை இப்போதுதான் நான் மனப்பூர்வமாக உணர்ந்தேன். கண்கள் பணிக்கவாரம்பித்தன.

எங்கள் நிகழ்ச்சி பதிவு முடிந்ததும் மீண்டும் தான் பணியை இடை நிறுத்திக்கொண்டு ஷான் எங்களை அழைத்துச் சென்று தான் கலையகம் முழுவதும் காட்டினார். அவருடைய தந்தையார் முதற்கொண்டு சகோதரி (பத்மா சுப்பிரமணியம்) சகோதரர்கள், அவரது பத்து வயதில் எடுத்த திரைப்படத்துக்கான விருது என்று பல வரலாற்றுப் பதிவுகளை ஒளிப்படங்களாக வைத்திருந்தார்.

அதில் ஒரு படம் முதற் கணிப்பில் இன்னுமொரு 'படம் காட்டும்' படம் அல்லது நம்மவர் தம் அலுவலக சிம்மாசனத்துக்குப் பின்னால் மாட்டும் படம் என்றே கணித்திருந்தேன். அப்படத்தில் ஷானுக்கு வலது பக்கத்தில் முன்னாள் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் இடது பக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நின்றுகொண்டிருந்தனர். மோடியின் வலது கை ஷானின் இடது தோளைபி பற்றியிருந்தது. மூவரும் சிரிப்பில் ஆழ்திருந்தபோது கமரா இமையை மூடிவிட்டது போலும்.

அப்படத்தை மட்டும் சுட்டிக் காட்டி ஷான் சொன்னார் "இது ஒரு ironic moment. தான் இந்தியாவில் பிறந்திருந்தும் தன்னை ஒரு இந்திய பிரதமருக்கு 'இவர் ஒரு மிகச் சிறந்த கனடியர்' என்று கனடிய பிரதமர் அறிமுகப்படுத்தினார்" என்று சொன்னபோது மோடி சொன்னாராம் 'அப்போ அவரை மீண்டும் இந்தியாவின் உடைமையாக்கப் போகிறேன்' எங்ரவாறு மோடி சொன்னதாகவும் அதற்குப் பதிலளித்த ஹார்ப்பர் "தேவையான அளவு யுரேனியத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஷானை நாகங்கள் விட்டுவிட மாட்டோம்"

ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பதில் முதல் தடவையாக நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டார் ஷான்.

கரந்துறைந்து வாரி வழங்கும் பாரியாக ஷான் இருந்ததற்கான வெகுமதிதான் இந்த ஹார்ப்பரின் பரிசு.

உங்களுக்காக இலவச வானொலியைத் தருகிறேன் (sirius XM), இலவசமாக ஒளிப்பதிவு செய்து சமூகத்தை முன்னேற்றும் எந்தப் பணிகளுக்கும் இந்தக் கலையகத்தின் எந்தப் பகுதியையும் இலவசமாகத் தருகிறேன். வாருங்கள் என்கிறார்.

கடவுளின் கருணையால் நிரம்ப உழைத்து விட்டேன். இனித் திருப்பிக் கொடுக்கும் காலம் என்கிறார். அவை உதட்டிலிருந்து வந்த வார்த்தைகளென நான் நம்பவில்லை.

நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது ...வலிக்கிறது. ஒப்பிடாமலிருக்க முடியவில்லை.


ஞாயிறு, 8 மே, 2016

அம்மாவுக்கு நன்றி


மறைந்ததும் மறையாததுமான எல்லா அன்னையர்களுக்கும் நன்றிகள்!
அது ஒரு வேனில் பொழுது. நண்பர்களோடு விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது அம்மா சொன்னா " மணிய வாத்தியார் வந்திட்டுப் போறார். இப்பிடி றிசல்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டு திரியிறான். போய் ஹிண்டு கொலிஜ் அல்லது சென்றல் கொலிஜில (யாழ்) அட்மிசன் எடுக்கச் சொல்லுங்க எண்டு சொன்னவர்' என்று சொன்னா.
மணிய வாத்தியார் உறவினர் என்றாலும் என் வீட்டுக்கு எப்போதாகிலும் வருபவர். அவரது திடீர் வருகையும் அக்கறையும் எனக்கு உசுப்பேத்தவில்லை. "அவருக்கு விசர் பேசாம இருங்கோ" என்று சொன்னதும் அம்மா சொன்னா " அப்பிடித்தான் உன்ர வாழ்க்கையில மாற்றம் வரவேண்டுமென்று இருந்தா அது வந்துதான் தீரும். நீ ஏன் தெண்டிக்கக் கூடாது?" யாழ் மத்திய கல்லூரியில் தொடங்கிய அடுத்த கட்டம் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவுதான் இன்றய நான்.
அம்மாவுக்கு நன்றிகள்!

புதன், 4 மே, 2016

மஹாகவிக்கு ஒரு சுழி


வாந்தி 



அளவெட்டிப் பெருங்கவிஞன் அன்னான்
அளந்தெடுத்துச் சொல்லடுக்க வல்லான்
வள்ளியிலும் சுள்ளியிலும் வானளந்த வெள்ளியிலும்
கிள்ளி எறிவான் தமிழை என் கவிக்கு முன்னான்

****

நல்ல கவிஞனாக ஆசை
வறுமை,
போனால் வியாதி,
போனால் மரணம்
வேண்டாம்
கவியனாகவே இருந்துவிட்டுப் போகலாம்.

****

உச்சியில் குமட்டியது
ஓங்காளித்தேன்
இரண்டு சொற் திரள்கள்
நாட்பட்டவையாக இருக்கலாம்
இப்போது சுகமாக இருக்கிறது.

****

காற்றை ஊதி
சூரியனை அணைத்து
நிலவைத் துப்பி
முகிலைச் சிதைத்து
வாழ்ந்தது போதும்
எல்லோரும் வாருங்கள்
கவிதை பேசுவோம்

வைகாசி 4, 2016

செவ்வாய், 26 ஏப்ரல், 2016



துரும்பரின் அவதாரம்

அவர் வருவாரா? வருவார் என்கிறார்கள்.

உலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு.

உலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’ என்று கூறி அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இவரும் ஏன் இருக்கக் கூடாது என்ற குதர்க்கத்துடன் ‘அவரின்’ வரவை நான் எதிர்பார்க்கிறேன்.

ட்ரம்ப் என்பது அவர் பெயர். மரியாதை கருதி அவரைத் துரும்பர் என அழைப்போம்.

அமெரிக்கா அதர்மர்களின் கைகளில் அகப்பட்டுப் பரிதவிக்கிறது அதைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என வந்து குதித்தவர் தான் துரும்பர்.

அவரால் தான் இந்த நெளிந்த உலகத்தை பென்ட் எடுக்க முடியுமென என்று ஏனோ எனது சூட்சும சரீரம் சொல்கிறது.

அதனால் மெக்சிக்க குடிவரவினர் எல்லாம் காமுகர்கள் என்றோ அல்லது அமெரிக்காவிற்குள் வரும் முஸ்லிம்கள் எல்லோரும் தற்கொலைதாரிகள் என்றோ நானும் ஏற்றுக் கொண்டதாகக் கருதிவிட வேண்டாம்.

துரும்பர் ஒரு பக்கா வியாபாரி. ஒரு நோட்டுப் பற்றாளர் மிகப்பெரும் பணக்காரர். ஒரு நிறவாதி, ஆணியவாதி. மொத்தத்தில் ஒரு வலதுசாரிக்குரிய அம்சங்கள் எனச் சட்டம் போடப்பட்ட குணாதிசயஙகள் அவருக்குமுண்டு. இந்த தடவை

அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் பலருக்கும் இப்படியான பண்புகள் உண்டு. இருப்பினும் அதிகார வர்க்கம் ஏன் துரும்பரைப் புறந்தள்ளுகிறது என்பதிலிருந்து தான் எனது இந்த குதர்க்க விவாதம் ஆரம்பிக்கிறது.

‘அதிகார வர்க்கம்’ விரும்பாத ஒருவர் அமெரிக்காவில் அதிபராக வரமுடியாது என்பது எழுதாத சட்டம். 2008 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நிதியுதவி வழங்கிய முன்னிருபது நிறுவனங்களின் (வால் ஸ்றீற் நிறுனங்கள்) கொடுப்பனவு இப்படியிருக்கிறது: 

ஜனநாயகக் கட்சியின் ஒபாமாவுக்கு 13.3 மில்லியன்கள் ; குடியரசுக் கட்சியின் மக்கெயினுக்கு 9.3 மில்லியன்கள்.

அதிகார வர்க்கம் ஏன் ஒபாமை விரும்பியது என்பதற்கு தர்க்கரீதியான விளக்கத்தைத் தேடிப் போகத் தேவையில்லை. சாதாரண தர்க்க விதிகளுக்குள் இன்றய உலகம் அமைவதில்லை.

இந்த அடிமட்டத்தினால் அள்க்கப்படும்போது துரும்பர் ஏனையவர்களைவிடப் பெரியவராகத் தெரிகிறார்.
ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது துரும்பர் ஒரு raw uncut character. இந்த அதிகார வர்க்கத்தின் பணத் தூண்டிலை அவர் விழுங்க மறுப்பவர். மதங்களின் கட்டுப்பாடுகளை ஏளனம் செய்பவர். ஒரு சாமானியனின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிப்பவர். 

அதனால்தான் ஏழை, பணக்காரர், ஆண்கள், பெண்கள், மெக்சிக்கர்கள், முஸ்லிம்கள், கறுப்பர்கள், மதவாதிகள், மிதவாதிகள் எல்லோரும் அவரின் ஒளிவட்டத்தில் அதிகம் பிரகாசிக்கிறார்கள்.

இருட்டில் நிற்பவர்கள் பல்தேசிய நிறுவனர்களும் அவர்களினால் நாமமிடப்பட்ட பூசாரிகளுமே.

பாம்பின் காலைப் பாம்பறியும். அதிகார மையம் எங்கு இருக்கிறது எப்படி இய்ங்குகிறது என்பது துரும்பருக்குத் தெரியும்.

அப்வர்களின் பெரு நோக்கம் சிறு நோக்கம் என்னவென்பதும் அவருக்குத் தெரியும். தமது பணத்தை அள்ளி இறைப்பதன் மூலம் தமது நலன்களைப் பெருக்க துரும்பர் இடம் கொடுக்கமாட்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை காலமும் மேப்பர்களை அவர்களே தேர்ந்தெடுத்து வந்தனர். அவர்களது ஊடகங்கள் செருக்கிய உணவையே நுகர்வு மந்தைகள் உண்டும் வந்தன.

இது துரும்பரின் காலம். 
சமூக வலைத்தளங்கள் சாமானியனின் ஆயுதமாக்கப்பட்ட பிறகு மந்தைகளுக்கு தேர்வுகள் அதிகம்.
துரும்பரை அவை தமது மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு விட்டன.

அமெரிக்காவின் ஆரம்பக் குடியேறிகள் பலர் சுதந்திரவாதிகள் (libetarians). முந்நாள் அடிமைகளின் எசமமான்களின் பரம்பரையினர். கிராமிய வாசிகள். அமைதியான பிரத்தியேக வாழ்வை விரும்புபவர்கள். பெருங்கல்வி கற்றவர்கள் அல்ல.

அமெரிக்காவின் தெற்கு, மேற்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள். பின்னாட் குடியேறிகள் வடக்கில் வாழ்பவர்கள். மெருகூட்டப்பட்ட வலதுசாரிகள். கல்வி கற்ற, தனவந்தர்கள். அதிகார மையம்
இவர்களைச் சார்ந்தே இருந்துவருகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் மூலம் அதிகாரத்தைத் தம் வசம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். தெற்கு ஒருவகையில் இவர்களின் பின்நாள் அடிமைகள்.

கறுப்பு அடிமைகளை விடுவித்ததில் வடக்கு அமெரிக்காவிற்குப் பெரிய பங்குண்டு. 1860 இல் அதிபர் - குடியரசுக் கட்சியைச் சேர்ந்த - ஆப்பிரகாம் லிங்கன் அடிமைகளை விடுவிக்க எடுத்த நடவடிக்கை தமது சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று சில தெற்கு மாகாணங்கள் தொடக்கிய போரில் சுதந்திரவாதிகள் தோல்வியுற்றனர்.

சுதந்திரவாதிகள் பழைமையை விரும்புபவர்கள். தமது பிரத்தியேகத்தில் பிறர் உலா வருவதை அவர்கள்
விரும்புவதில்லை. தாமுண்டு தமது குடும்பமுண்டு என்று வாழ்பவர்கள். சமீப காலங்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் இயற்றப்படும் சட்டங்கள் தமது சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று போர்க்கொடி தூக்கியவர்கள். ஜனநாயக ரீதியாகத் தங்களின் ‘உரிமைகளை’ வென்றெடுக்க வாக்கு பலம் போதாது என உணர்ந்து சிறிய அளவில் சில வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிவில் யுத்தத்தைப் போலவே அந்நட்வடிக்கைகளும் மூர்க்கமாக ஆனால் இரகசியமாக அடக்கப்பட்டு விட்டன.

வேறு வழியின்றி மீண்டும் ஜனநாயக ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தீர்மானித்தார்கள். இவர்களின் பின்னணியில் பணபலம் மற்றும் மூளை பலத்தோடு செயற்படுபவர்கள் கோக் (Koch Brothers) சகோதரர்கள் என்று அறியப்படுகிறது. 

துரும்பரின் துடுக்கும் தொனியும் அபிலாட்சையும் இவர்களின் தேவையும் எங்கோ ஒரு புள்ளியில் சங்கமித்திருக்கின்றன. வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. துருமப்ரின் வடிவில் முதல் தடவையாக

இப்போதுதான் அவர்களுக்கு ஒரு தலைவர் வந்துதித்திருக்கிறார். 1860 சிவில் யுத்தத்திற்குப் பின்னால் முதல் தடவையாக ‘அமெரிக்க தேசியம்’ என்ற புதிய வியூகமொன்றை எடுத்திருக்கிறார்கள். பல்தேசியம் அமெரிக்காவைச் சீரழித்து விட்டது என்பதை முன்வைத்து அவர்கள் போராட வந்திருக்கிறார்கள். அவர்களின் குரலை துரும்பர் ஒலிக்கிறார்.

துரும்பர் எல்லா வகையிலும் ஒரு வடக்கர் தான். அதிபராக வந்துவிட வேண்டுமென்ற ஒரு அபிலாட்சையை விட அவருக்கு வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

அவர் கூச்சலிடும் எதையும் அவரால் நிறைவேற்ற முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். அமெரிக்கர்களின் அல்லாடும் உணர்வுகள் குறுவாழ்வுடையன என்பதுவும் அவருக்குத் தெரியும். 

இன்றய நிலையில் அதிகார வர்க்கம் தந்நை ஆதரிக்காது என்று தெரிந்தவுடன் அதற்கு எதிரான குடியரசுக் காரருடன் கை கோர்த்திருக்கிறார்.

அதிசயமென்னவென்றால் வழக்கமாக தெற்கத்தைய மதவாதிகள் குடியரசுக் கட்சியின் மந்தைகளாகவே வாக்களிப்பார்கள்.

துரும்பருடன் போட்டியிடுபவர்களும் அதிகார வர்க்கமும் இந்த ‘மந்தை’வாக்குகளையே நம்பியிருந்தனர். மதவாதிகள் மட்டுமல்ல் துரும்பர் திட்டும் ஏனைய மாற்றினங்களும் பெண்களும் கூட அவ்ர் பின்னாலேயே அணிதிரளுகின்றனர்.

இப்படியொரு நிறவாதியை, அடிமை விரும்பியை, பெண்களைத் தூஷிப்பவரை, பணத்திமிர் பிடித்தவர் ஒருவர் அமெரிக்க அதிபராக வருவதை நான் ஏன் விரும்புகிறேன்?

இன்றய உலகு நிலை குலைந்துவருவதற்கு, சமாதானம் அருகி வருவதற்கு முதன்மையான பங்காளி அமெரிக்கா என்று நான் நம்புபவன். அமெரிக்க அதிகார வர்க்கத்தின் இலாப மோகம் உலக

நலன்களை மீறிச் செயற்படுகிறது. அதைச் சீரழிக்கும் வல்லமை புறச் சக்திகளிடம் இல்லை, உட்சக்திகளாலேயே அது சாத்தியமாகும்.

அதிகார வர்க்கம் சதி செய்யாவிட்டால் - துரும்பர் ஆட்சியில் அது நிகழ வாய்ப்பிருக்கிறது. There are many ways to skin a carrot. This may be one.

துரும்பர் ‘அவ்ராக’ இருக்கவேண்டுமென்பதில்லை. இருந்தால் நல்லது என விரும்புகிறேன்.

ஏப்ரல் 24, 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது 

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

இது ஒரு விழாக்காலம்



சென்ற வாரம் ஒரு விழாவுக்கு அழையா விருந்தாளியாகப் போக நேரிட்டது. ஆங்காங்கு வட்ட மேசைகள் பலகாரங்களோடு மின்னிக் கொண்டிருந்தன. அதற்காகப் பலகாரங்கள் வைரத்தோடுகளோடு அமர்ந்திருந்ததாக நம்பிவிட வேண்டாம். அவை எண்ணெய்க் குளிப்பு முடிந்து வந்திருக்க வேண்டும். வெளிச்சம் அவற்றை ரசித்தபடியாலாகவும் இருக்கலாம்.

ஒரு மேசையில் ஒரு முதலாளி மட்டும் அமர்ந்திருந்தார். உயர்ந்த கம்பியொன்றில் அவரது நிறுவனத்தின் குறும் பதாகை அவரது மேசாதிபதி ஸ்தானத்தை அறிவித்துக் கொண்டிருந்தது. வழக்கமாக அவர் மீனாட்சி சகிதம் வருபவர். அன்று தனியே இருந்தார். இங்க விழாக்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் இருக்கும் போல. அந்த விழாவுக்கு அவர் 'திறி ஸ்டார்' ரேட்டிங்கை அவரது மனைவி கொடுத்திருக்கலாம். அவரைப் பார்க்கப் பரிதாபகரமாகவிருந்தது.

விழா குறித்த நேரம்  +1 மணிக்கு அண்ணளவில் தொண்டர்களைச் சபையினராகக் கொண்டு இனிதே ஆரம்பமாகியது.  ஆங்காங்கு கவனிக்கப்படாது தாமுண்டு தம் செல் போன்களுண்டு என்று சில வெள்ளைகள் பலகாரங்களோடு போராடிக்கொண்டிருந்தன. கதிரைகள் சுமப்பதற்கு எவருமின்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தன.

பக்கத்தில் இருந்த நண்பர் நடமாடும் காமராக்களை எண்ணிவிட்டு 36 என்றார். விழா களை கட்டத் தொடங்கியது. ஒரு பாட்டு. டி.ஜே. தன் பலத்தைக் காட்டினார். ஸ்பீக்கருக்கும் எம்.சீ. க்கும் நடந்த ஒலிப் பரீட்சையில் ஸ்பீக்கர் தோற்றுப் போனது. எம்.சீ. விழாவுக்கு வரு முன்பாகவே இரண்டு மூன்று மைக்குகளை விழுங்கிவிட்டு வந்திருக்க வேண்டும். சுவர்களே  அதிர்ந்தன. 

விழா எப்படி உத்தேசிக்கப்பட்டதோ அப்படியே  நடந்தது. விழா ஒழுங்கமைப்பு முகவர் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். எனக்கு அருகிலிருந்த ஒருவர் ஆதங்கத்தோடு சொன்னார். 'இந்த மாசம் மட்டும் ஐந்து விழாக்களில் ஐந்து மேசைகள் வாங்கினேன்"என்றார்.  "முற்பிறப்பில நீங்க தளபாடக்கடை வைத்திருந்து வாடிக்கையாளருக்கு பலவந்தமாக மேசை வித்திருப்பீங்க போல என்று பக்கத்திலிருந்த இன்னொருவர் சொன்னார். 'வாங்க, விற்க, அடமானம் பெற்றுத்தருகிற' தொழிலோ செய்யிறீங்க? என்று மூன்றாவது நண்பர் கேட்டதும் பல் மேசாதிபதி பாவம் எழும்பிப் போய் விட்டார்.

மேடையில் விருது வழங்கல் விரு விருப்பாக நடந்துகொண்டிருந்தது. 'கிவ் இற் அப், 'கிவ் இற் அப்' என்று  எம்.சீ. கத்திக் கொண்டிருந்தார். ஓரிரு கரங்கள் எழுப்பிய ஒலிகளையும் படப்பிடிப்பாளரின் 'கிளிக்குகள்' விழுங்கிக் கொண்டன.

விழா முடிந்து எழுந்தபோது நாமிருந்த மேசைகளை கைவிடப்படட விழா மலர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. வடிவமைப்பாளாரும் விழா அமைப்பாளரும் இறுதி நிமிடங்கள் வரை போராடி உருவாக்கப்பட்ட மலர்கள் அவை. பல முதலாளிகளின் பத்து வருடங்களுக்கு முந்திய அழகிய படங்களைத் தாங்கிய அந்த மலர்களை உதாசீனம் செய்துவிட மக்களுக்கு எப்படி மனம் வந்ததோ?

தனியே இருந்த மேசாதிபதி எழுந்து ஒரு புன்னகையோடு கையசைத்துவிட்டுப் போனார். தமிழ்ச் சமூகத்தின் அபார வளர்ச்சியின் ஒரு அணிலாக அவர் தம்மை உருவகித்துக் கொண்டிருக்கக் கூடும். அவர் கொடுத்த ஆயிரம் வெள்ளிக்காசுகள் அவருக்கு இன்னுமொரு 'வீட்டுப் பற்றாளரை' அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும். அவரது ஆயிரம் வெள்ளிகள் ஒரு விருது விற்பனையாளைரையோ, மலர் வடிவமைப்பாளரையோ, உணவுப் பரிசாரகர்களையோ, மடைப்பள்ளி உதவியாளர்களையோ அல்லது கதவுக் காவலர்களையோ வாழ வைத்திருக்கக் கூடும்.

விழா வெற்றியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லாவிடில் அமைப்பாளரின் மனைவி குதூகலமாக மக்களை வழியனுப்பியிருக்க முடியாது.

எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்தது.

மேசாதிபதிகளா விழா அமைப்பாளர்களா புத்திசாலிகள் என்று விவாதம் வைத்துக்கொண்டால் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு அது தொடர்ந்து நடக்கும்.

எல்லோரும் இந்நாட்டு விண்ணர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.



சனி, 26 மார்ச், 2016


றொப் போர்ட் - ரொறோண்டோவின் மக்கள் திலகம்

பலருக்கு இது விசனமாகவே இருக்கும். ஆனால் நான் மதிக்கும்  மனிதருள் ரொறொண்டோவின் முன்னாள் நகர பிதா றொப் போட்டும் ஒருவர். இந்த வாரம் அவரது உடல் ரொரொண்டோ மாநகரசபைக்  கட்டிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நான் அவர்மீது வைத்திருக்கும் மதிப்பிக்குக் காரணம் தன் மனதில் பட்டத்தை ஒளிவு மறைவின்றிக் கூறுவது - அது அப்பட்டமான பொய் என்று தெரிந்தும்கூட. அது ஒரு குழந்தைக்கான குணம். ஒரு குழந்தையின் குழப்படிகளைக்  கொண்ட ஒரு முழு மனிதர். அதனால் தான்  ரொறோண்டோ பெரும்பாக மக்கள் மட்டுமல்ல உலகத்தின் கோடிகளில் இருக்கும் மக்களுக்கும் அவரது இழப்பு கவலையைத் தருகிறது.

அவர் ஒரு திமிர் பிடித்தவர் இ குடிகாரர்இ போதை வஸ்து பாவிப்பவர்இ கேடிகளோடு சகவாசம் வைத்திருப்பவர் என்பனவெல்லாம் ஊடகங்களால் ஊதப்பட்டன. பலரும் அதை நம்பினார்கள். அதில் சிலவற்றில் உண்மை இருப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் மக்கள் அவருக்காகக் கண்ணீர் விடுகிறார்கள் என்றால்?

இன்றய உலகில் எந்தவொரு குடும்பத்திலுமோ அல்லது அவர்களது உறவினர்களின் குடும்பங்களிலுமோ இப்படியொரு 'குழ்ந்தை' இல்லாமல் இருக்க  வாய்ப்பில்லை. அக் குழந்தையால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது தான் அக் குழந்தையின் குற்றம் கவனத்தில் எடுக்கப்படுகிறது.
ரொறொண்டோவின் 'குழந்தையால்' நகருக்கு ஏற்பட்ட நன்மைகள் அதிகமென்று நம்புபவர்களே அதிகம்.

றொப்  போட்டின் வீழ்ச்சிக்கு அவரது எதிரிகள் காரணமல்ல. அவரைச் சூழ்ந்திருந்தஇ அவரால் பயன் பெற்றஇ அவரை உசுப்பேத்திப் பின்னர் கைவிட்டு முதுகில் குத்திய நண்பர்கள் தான் காரணம். நண்பர்களுக்காக எதையும் செய்தத் துணிந்த வகையினரில் ஒருவர் தான் போட். அவரைப் போட்டுக் கொடுத்த ப்ரூட்டஸ்கள் அவரது சகபாடிகள் தான்.

றொப்  போட்டின் குற்றம் குறைகள் திடீரென்று அறியப்பட்டவையல்ல. அவற்றை ஊட கங்களுக்கு எடுத்துச் சென்றவர்கள் பலரும் அவரை விட அதிகம் கறை படிந்தவர்கள். நாற்சந்தியில் அவரது மானம் தூக்கிலிடப்பட்ட போதும் மக்கள் அதைக் கண்டு கொள்ளவுமில்லைஇ கை கொட்டிச் சிரிக்கவுமில்லை. மாறாக அவரைத் தம் குழந்தைகளில் ஒருவராகவே தத்தெடுத்துக்  கொண்டனர்.

அவரது முகத்தில் ஒரு குழந்தையின் களையே எப்போதும் தெரியும். எழுதுகோல்களைத் துப்பாக்கியாகப் பாவிக்கும் உடகங்ககளை அவர் மதித்ததில்லை. ஆனால் அவர்களை எதிர் கொள்ளாது அவர் போவதுமில்லை. ஊடகங்களை நையாண்டி செய்யும் அளவுக்குத் தைரியமுள்ள ஒரு அரசியல்வாதி அவர்.

அவர் மீது காட்டப்பட்ட அழுக்குகள் அவரில் குறைகாணும் எல்லோரிடமும் இருந்திருக்க வேண்டும்.  அவர்களது அரசியல் கவசங்கள் (pழடவைiஉயட உழசசநஉவநௌள) அவற்றை மறைத்து விடுவதுண்டு. கவசம் போடாமல் இருந்ததுதான் றொப் போட்டின் பிரச்சினை. தன் வார்த்தைகள் எவரையும் புண்படுத்துமா என்பதை யோசியாது மனதில் பட்டதை அப்படியே சொல்லும் பழக்கம் அவருடையது. பெண்களையும்  மாற்று நிறத்தவர்களையும் தூற்றுபவர். ஆனால் அவரது இழப்பின் பின்னர் மரியாதை செலுத்துவதற்கு முண்டியடித்துக் கொள்பவர்களில் இந்த இரண்டு சாராருமே முன்னணியில் நிற்கிறார்கள்.

காரணம் யதார்த்தம். நாம் யாரும் செய்யாத விடயங்களை அவர் செய்யவில்லை. நாம் யாரும் சொல்லாத விடயங்களை அவர் சொல்லவில்லை. ஒய்வு நேரங்களில் பணம் ஏதும் அறவிடாமல் வறிய குழந்தைகளுக்கு விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். குடியானவர்களில் எந்த ஒருவர் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தார். இதுவெல்லாம் சபைக்கு வந்தது இப்போதுதான்.

இது சமூக உறவாடல் தளங்களின் காலம். செய்திகளைத் திரிபு படுத்தித் தம் சுய திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள்  ஒதுக்கப்பட்டு உண்மையான 'மக்கள் தீர்ப்புகள்' வெளிப்படும் காலம்.  றொப்  போட் ஒரு சாதாரண மனிதர் என்பதை அவர்கள் கண்டுகொண்டு விட்டார்கள். தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால் அத தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள றொப் போட்  உயிரோடு இல்லை.

போதைச் சிகிச்சை பெற்று மீண்டபோது றொப் போட் தனது 'திருந்திய' இரண்டாவது வாழ்வுக்கான ஏக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டதாகச் சொன்னார்கள். தன் மனைவி குழந்தைகளோடு அதிக நேரத்தைச் செலவிட வேண்டுமென அவர் கூறியதாகக் கேள்வி.

றொப்  போட்டின் பதவிக் காலத்தில் அவரது சகோதரர் டக் போர்ட்  தனது தம்பியை நிழல் போல் தொடர்வார். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் இருந்த பாசம் அதிசயமாகவிருந்தது. மரணத்துக்குப் பின் தாயாரின் கூற்றிலிருந்தும் ஒரு உண்மை புலப்பட்டது. வீட்டிலுள்ள குழப்படியான கடைக்குட்டியின் மீது எவ்வளவு பாசத்தைப் பொழிவோமோ அதுவே தான் போட் குடும்பத்திலும். அவர்கள் நம்முடையதைப் போல ஒரு சாதாரண குடும்பம்தான். அவர் நகரபிதாவாகியது தான்  அசாதாரணம். சாதாராண மக்கள் விட்டு விடுதலையாகி விட்டதற்கான அறிகுறியே அவர் நகரபிதாவாகியது. அதுவே அவர் அடுத்த சந்ததிக்கு விட்டுப் போகும் குறிகாட்டி.


றொப்  போட்டின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியது பல. அவர் தன மனத்தைப் பேசியவர். நடிக்கவில்லை. அவர் பணக்காரராயினும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். குறைகளுடையாதாயினும் 'அது என் குழந்தை' என முத்தம் பொழியும் ஒரு தாயின் உணர்வுடனே மக்கள் அவரை நேசித்தனர். அதைத் தெரிந்துகொண்டு மனநிறைவுடன் மரணத்தை எதிர்கொண்டதே அவரது பலம்.

So long Rob!

ஆயுதம் ஏந்தாத வீரர்களும் நிபந்தனையற்ற நேசமும் (Unarmed Troops and Unconditional Love)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

இன்று (தை 12, 2015) அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது எட்டாவதும் இறுதியானதுமான State of the Union பேச்சை நிகழ்த்தினார் . பெரும்பாலான நேரங்களில் இத் ஒரு வெறும் சடங்காகவே எனக்குத் தெரிவதுண்டு. இன்றய நாள் இச் சடங்கை விரும்பிப் பார்த்தேன்.

ஒரு அடிமையின் வழித்தோன்றல் அமெரிக்கப் பிரதிநிதியாய் வந்தது அந்த அடிமை குலத்துக்குப் பெருமை சேர்த்திருப்பினும் அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்து முழுமையாக எட்டாண்டு காலம் ஆள வைத்த அந்த மற்றய குலத்துக்கே அதிகப் பெருமை சேரவேண்டும். கென்னெடி, மாட்டின் லூதர் கிங் வரிசையில் இன்னுமொரு துப்பாக்கிக் குண்டுக்கு வேலை வந்துவிடக் கூடாதென்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். வந்தபோது முழங்கியது போலவே போகும்போதும் முழங்கிப் போகிறார்.

மாற்றம் வேண்டுமென்று இன்றய அரசியல்வாதிகள் போடும் கூச்சலை ஆரம்பித்து வைத்தவர் ஒபாமா.  நேர்மையானவர்கள்  அரசியலில் நிலைப்பது கடினம். ஜிம்மி கார்ட்டர், போப் ரே போன்ற சிலரது அகால ஆட்சி முடிவுகள் நல்ல உதாரணம்.

கூச்சல் கலாச்சாரம் ஜனநாயகத்தின் ஒரு கூறாக மாறிவிட்ட காலத்தில் நாம் வாழ்வதால் அவரது கூச்சலை செவிக்குறை கொண்டவர்களுக்கென ஒதுக்கிவிட்டுப் பார்க்கலாமெனச் சமாதானம் கொண்டு மீதியைப் பார்க்கலாம்.

ஒபாமாவின் பேச்சு ஏனைய முன்னாள் பீற்றல் பிரங்கிகளினது பேச்சுக்களை விட வித்தியாசமாகவிருந்தது. ஒபாமா சாதித்தவற்றைப் பற்றி அதிகம் பீற்றிக் கொள்ளவில்லை. அவர் பலவற்றைச் சாதித்திருக்கிறார். 18 மில்லியன் மக்கள் நலக்காப்புறுதி பெற்றிருக்கிறார்கள்.  போர் சிதைத்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி என்ற வரலாற்றுச் சிறப்பையும் தட்டிக் கொண்டார்.

இன்றய பேச்சில் அவர் முக்கியத்துவம் கொடுத்தது தன்னால் செய்ய முடியாமற் போனவற்றிற்காக. இரண்டு கட்சிகளிடையேயும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வைக் கொண்டுவந்து நாட்டுக்குத் தேவையான நல்ல பல விடயங்களைச் செய்ய முடியாமற் போனதையிட்டு அவர் கவலைப்பட்டார். ஆயுதங்களுக்குப் பலி போகும் குழந்தைகள் பற்றிக் கவலைப்பட்டார்.

அமெரிக்காவின் எதிர்காலம் மட்டுமல்ல உலகின் எதிர்காலமும் அவரது கரிசனைக்குள் அகப்பட்டிருந்தது. பொருளாதாரம், சுற்றுச் சூழல் என்று இன்னோரன்ன விடயங்களில் அமெரிக்க சிந்தனைக்கு ஒவ்வாதிருந்தது அவரது அக்கறை.

எதிர்காலம் பற்றி நம்பிக்கையோடு  இருந்தாலும் உலகுக்குத் தலைமை தாங்கும் நாடென்ற விடயத்தில் அமெரிக்கா இன்னும் மாற வேண்டுமென்பதில் அவரது விருப்பு ஒன்று - அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் வேண்டுமென்பது.

இவ்வளவு நல்லவரையும் நான் பல தடவைகள் விமர்சித்ததுண்டு. இப்போதும் தான். அமெரிக்க ஆயுத மோகத்தையும் குழந்தைகள் பலியெடுக்கப்படுவதையும் சகிக்காது கண்ணீர் விடும் ஒரு மனிதர் குழந்தைகளையும் பெண்களையும் பலியெடுக்கும் ஆளில்லா விமானங்களை ஏவி விடும் கட்டளைகளை வாரா வாரம் பிறப்பிக்கும் கொலைகாரனாகவும் இருக்கிறார்.

தன்  பேச்சை முடிக்கும்போது ஒபாமா மாட்டின் லூதர் கிங் அவர்களுடைய மேற்கோள் ஒன்றைக் கூறினார். அது தான் 'Unarmed troops and Unconditional love' என்பது. அமெரிக்கா ஒரு ஆயுதமேந்தாத வீரர்களைக் கொண்டதும்  நிபந்தனையற்ற நேசத்தை வெளிப்படுத்துவதுமான நாடாக இருக்க வேண்டுமென டாக்டர் கிங் விரும்பியதாக அதைச் சாரம் கொள்ளலாம்.

டாக்டர் கிங் கின் விருப்பத்தை ஒபாமா ஒரு வகையில் நிறைவேற்றியிருக்கிறார். அமெரிக்க வீரர்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு அவர்கள் கைகளில் ஆளில்லா விமானங்களின் இயக்கிகளைக் கொடுத்தமை. அமெரிக்கா மீது அதன் மக்களை நிபந்தனையற்ற நேசத்தைப் பொழிய வைத்தமை.

அமெரிக்காவில் எவர் ஜனாதிபதியானாலென்ன நிழல் ஜனாதிபதிகளே ஆட்சியை நடாத்துகிறவர்கள் என்றொரு கதை கர்ணபரம்பரையாக வருகிறது. கட்டளைகளை அவர் பிறப்பிக்காமலும் இருக்கலாம். மேனியைக் கொல்வதும் வீரத்தில் ஒன்று தானே!

சில வேளைகளில் வெள்ளையை அதிகம் பார்த்தால் தான் கறுப்பின் அருமை தெரியும். சமீப காலங்களில் ட்ரம்ப் என்றொரு பிறவி தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் அலங்கரிக்கிறது. இதைச் சுற்றி நின்று காவடி எடுக்கும் பிறவிகளின் கூச்சல்களோ காதைப் பிளக்கிறது. அடுத்த ஜனாதிபதியாக அது வந்துவிடுமென்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது.

இந்த இடத்தில் ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒரே ஒரு வேண்டுகோளை நான் வைக்கிறேன். தயவு செய்து அமெரிக்காவில் இன்னும் மாற்றம் வேண்டுமென்று கேட்காதீர்கள். உங்கள் விருப்பம் ட்ரம்ப் போன்றவர்களை ஆட்சியில் அமர்த்தி விடலாம்.

மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கே மாற்றம் பயன் தரும். அது நம்ம நாட்டிலும் தான்.