சென்ற வாரம் ஒரு விழாவுக்கு அழையா
விருந்தாளியாகப் போக நேரிட்டது. ஆங்காங்கு வட்ட மேசைகள் பலகாரங்களோடு மின்னிக்
கொண்டிருந்தன. அதற்காகப் பலகாரங்கள் வைரத்தோடுகளோடு அமர்ந்திருந்ததாக நம்பிவிட
வேண்டாம். அவை எண்ணெய்க் குளிப்பு முடிந்து வந்திருக்க வேண்டும். வெளிச்சம் அவற்றை
ரசித்தபடியாலாகவும் இருக்கலாம்.
ஒரு மேசையில் ஒரு முதலாளி மட்டும்
அமர்ந்திருந்தார். உயர்ந்த கம்பியொன்றில் அவரது நிறுவனத்தின் குறும் பதாகை அவரது மேசாதிபதி
ஸ்தானத்தை அறிவித்துக் கொண்டிருந்தது. வழக்கமாக அவர் மீனாட்சி சகிதம் வருபவர்.
அன்று தனியே இருந்தார். இங்க விழாக்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் இருக்கும் போல. அந்த
விழாவுக்கு அவர் 'திறி ஸ்டார்' ரேட்டிங்கை அவரது மனைவி கொடுத்திருக்கலாம். அவரைப்
பார்க்கப் பரிதாபகரமாகவிருந்தது.
விழா குறித்த நேரம் +1 மணிக்கு அண்ணளவில் தொண்டர்களைச் சபையினராகக் கொண்டு இனிதே ஆரம்பமாகியது. ஆங்காங்கு கவனிக்கப்படாது தாமுண்டு தம் செல்
போன்களுண்டு என்று சில வெள்ளைகள் பலகாரங்களோடு போராடிக்கொண்டிருந்தன. கதிரைகள்
சுமப்பதற்கு எவருமின்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தன.
பக்கத்தில் இருந்த நண்பர் நடமாடும் காமராக்களை எண்ணிவிட்டு
36 என்றார். விழா களை கட்டத் தொடங்கியது. ஒரு பாட்டு. டி.ஜே. தன் பலத்தைக்
காட்டினார். ஸ்பீக்கருக்கும் எம்.சீ. க்கும் நடந்த ஒலிப் பரீட்சையில் ஸ்பீக்கர்
தோற்றுப் போனது. எம்.சீ. விழாவுக்கு வரு முன்பாகவே இரண்டு மூன்று மைக்குகளை விழுங்கிவிட்டு வந்திருக்க வேண்டும். சுவர்களே அதிர்ந்தன.
விழா எப்படி உத்தேசிக்கப்பட்டதோ அப்படியே நடந்தது.
விழா ஒழுங்கமைப்பு முகவர் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். எனக்கு
அருகிலிருந்த ஒருவர் ஆதங்கத்தோடு சொன்னார். 'இந்த மாசம் மட்டும் ஐந்து விழாக்களில்
ஐந்து மேசைகள் வாங்கினேன்"என்றார். "முற்பிறப்பில
நீங்க தளபாடக்கடை வைத்திருந்து வாடிக்கையாளருக்கு பலவந்தமாக மேசை வித்திருப்பீங்க
போல என்று பக்கத்திலிருந்த இன்னொருவர் சொன்னார். 'வாங்க, விற்க, அடமானம்
பெற்றுத்தருகிற' தொழிலோ செய்யிறீங்க? என்று மூன்றாவது நண்பர் கேட்டதும் பல்
மேசாதிபதி பாவம் எழும்பிப் போய் விட்டார்.
மேடையில் விருது வழங்கல் விரு விருப்பாக
நடந்துகொண்டிருந்தது. 'கிவ் இற் அப், 'கிவ் இற் அப்' என்று எம்.சீ. கத்திக் கொண்டிருந்தார். ஓரிரு கரங்கள்
எழுப்பிய ஒலிகளையும் படப்பிடிப்பாளரின் 'கிளிக்குகள்' விழுங்கிக் கொண்டன.
விழா முடிந்து எழுந்தபோது நாமிருந்த மேசைகளை கைவிடப்படட விழா மலர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. வடிவமைப்பாளாரும் விழா அமைப்பாளரும்
இறுதி நிமிடங்கள் வரை போராடி உருவாக்கப்பட்ட மலர்கள் அவை. பல முதலாளிகளின் பத்து
வருடங்களுக்கு முந்திய அழகிய படங்களைத் தாங்கிய அந்த மலர்களை உதாசீனம் செய்துவிட
மக்களுக்கு எப்படி மனம் வந்ததோ?
தனியே இருந்த மேசாதிபதி எழுந்து ஒரு புன்னகையோடு
கையசைத்துவிட்டுப் போனார். தமிழ்ச் சமூகத்தின் அபார வளர்ச்சியின் ஒரு அணிலாக அவர்
தம்மை உருவகித்துக் கொண்டிருக்கக் கூடும். அவர் கொடுத்த ஆயிரம் வெள்ளிக்காசுகள்
அவருக்கு இன்னுமொரு 'வீட்டுப் பற்றாளரை' அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும். அவரது
ஆயிரம் வெள்ளிகள் ஒரு விருது விற்பனையாளைரையோ, மலர் வடிவமைப்பாளரையோ, உணவுப்
பரிசாரகர்களையோ, மடைப்பள்ளி உதவியாளர்களையோ அல்லது கதவுக் காவலர்களையோ வாழ
வைத்திருக்கக் கூடும்.
விழா வெற்றியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லாவிடில்
அமைப்பாளரின் மனைவி குதூகலமாக மக்களை வழியனுப்பியிருக்க முடியாது.
எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்தது.
மேசாதிபதிகளா விழா அமைப்பாளர்களா புத்திசாலிகள்
என்று விவாதம் வைத்துக்கொண்டால் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு அது தொடர்ந்து
நடக்கும்.
எல்லோரும் இந்நாட்டு விண்ணர்கள் என்பதில்
சந்தேகமேயில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக