துரும்பரின் அவதாரம்
அவர் வருவாரா? வருவார் என்கிறார்கள்.
உலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு.
உலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’ என்று கூறி அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இவரும் ஏன் இருக்கக் கூடாது என்ற குதர்க்கத்துடன் ‘அவரின்’ வரவை நான் எதிர்பார்க்கிறேன்.
ட்ரம்ப் என்பது அவர் பெயர். மரியாதை கருதி அவரைத் துரும்பர் என அழைப்போம்.
அமெரிக்கா அதர்மர்களின் கைகளில் அகப்பட்டுப் பரிதவிக்கிறது அதைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என வந்து குதித்தவர் தான் துரும்பர்.
அவரால் தான் இந்த நெளிந்த உலகத்தை பென்ட் எடுக்க முடியுமென என்று ஏனோ எனது சூட்சும சரீரம் சொல்கிறது.
அதனால் மெக்சிக்க குடிவரவினர் எல்லாம் காமுகர்கள் என்றோ அல்லது அமெரிக்காவிற்குள் வரும் முஸ்லிம்கள் எல்லோரும் தற்கொலைதாரிகள் என்றோ நானும் ஏற்றுக் கொண்டதாகக் கருதிவிட வேண்டாம்.
துரும்பர் ஒரு பக்கா வியாபாரி. ஒரு நோட்டுப் பற்றாளர் மிகப்பெரும் பணக்காரர். ஒரு நிறவாதி, ஆணியவாதி. மொத்தத்தில் ஒரு வலதுசாரிக்குரிய அம்சங்கள் எனச் சட்டம் போடப்பட்ட குணாதிசயஙகள் அவருக்குமுண்டு. இந்த தடவை
அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் பலருக்கும் இப்படியான பண்புகள் உண்டு. இருப்பினும் அதிகார வர்க்கம் ஏன் துரும்பரைப் புறந்தள்ளுகிறது என்பதிலிருந்து தான் எனது இந்த குதர்க்க விவாதம் ஆரம்பிக்கிறது.
‘அதிகார வர்க்கம்’ விரும்பாத ஒருவர் அமெரிக்காவில் அதிபராக வரமுடியாது என்பது எழுதாத சட்டம். 2008 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நிதியுதவி வழங்கிய முன்னிருபது நிறுவனங்களின் (வால் ஸ்றீற் நிறுனங்கள்) கொடுப்பனவு இப்படியிருக்கிறது:
ஜனநாயகக் கட்சியின் ஒபாமாவுக்கு 13.3 மில்லியன்கள் ; குடியரசுக் கட்சியின் மக்கெயினுக்கு 9.3 மில்லியன்கள்.
அதிகார வர்க்கம் ஏன் ஒபாமை விரும்பியது என்பதற்கு தர்க்கரீதியான விளக்கத்தைத் தேடிப் போகத் தேவையில்லை. சாதாரண தர்க்க விதிகளுக்குள் இன்றய உலகம் அமைவதில்லை.
இந்த அடிமட்டத்தினால் அள்க்கப்படும்போது துரும்பர் ஏனையவர்களைவிடப் பெரியவராகத் தெரிகிறார்.
ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது துரும்பர் ஒரு raw uncut character. இந்த அதிகார வர்க்கத்தின் பணத் தூண்டிலை அவர் விழுங்க மறுப்பவர். மதங்களின் கட்டுப்பாடுகளை ஏளனம் செய்பவர். ஒரு சாமானியனின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிப்பவர்.
அதனால்தான் ஏழை, பணக்காரர், ஆண்கள், பெண்கள், மெக்சிக்கர்கள், முஸ்லிம்கள், கறுப்பர்கள், மதவாதிகள், மிதவாதிகள் எல்லோரும் அவரின் ஒளிவட்டத்தில் அதிகம் பிரகாசிக்கிறார்கள்.
இருட்டில் நிற்பவர்கள் பல்தேசிய நிறுவனர்களும் அவர்களினால் நாமமிடப்பட்ட பூசாரிகளுமே.
பாம்பின் காலைப் பாம்பறியும். அதிகார மையம் எங்கு இருக்கிறது எப்படி இய்ங்குகிறது என்பது துரும்பருக்குத் தெரியும்.
அப்வர்களின் பெரு நோக்கம் சிறு நோக்கம் என்னவென்பதும் அவருக்குத் தெரியும். தமது பணத்தை அள்ளி இறைப்பதன் மூலம் தமது நலன்களைப் பெருக்க துரும்பர் இடம் கொடுக்கமாட்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை காலமும் மேப்பர்களை அவர்களே தேர்ந்தெடுத்து வந்தனர். அவர்களது ஊடகங்கள் செருக்கிய உணவையே நுகர்வு மந்தைகள் உண்டும் வந்தன.
இது துரும்பரின் காலம்.
சமூக வலைத்தளங்கள் சாமானியனின் ஆயுதமாக்கப்பட்ட பிறகு மந்தைகளுக்கு தேர்வுகள் அதிகம்.
துரும்பரை அவை தமது மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு விட்டன.
அமெரிக்காவின் ஆரம்பக் குடியேறிகள் பலர் சுதந்திரவாதிகள் (libetarians). முந்நாள் அடிமைகளின் எசமமான்களின் பரம்பரையினர். கிராமிய வாசிகள். அமைதியான பிரத்தியேக வாழ்வை விரும்புபவர்கள். பெருங்கல்வி கற்றவர்கள் அல்ல.
அமெரிக்காவின் தெற்கு, மேற்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள். பின்னாட் குடியேறிகள் வடக்கில் வாழ்பவர்கள். மெருகூட்டப்பட்ட வலதுசாரிகள். கல்வி கற்ற, தனவந்தர்கள். அதிகார மையம்
இவர்களைச் சார்ந்தே இருந்துவருகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் மூலம் அதிகாரத்தைத் தம் வசம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். தெற்கு ஒருவகையில் இவர்களின் பின்நாள் அடிமைகள்.
கறுப்பு அடிமைகளை விடுவித்ததில் வடக்கு அமெரிக்காவிற்குப் பெரிய பங்குண்டு. 1860 இல் அதிபர் - குடியரசுக் கட்சியைச் சேர்ந்த - ஆப்பிரகாம் லிங்கன் அடிமைகளை விடுவிக்க எடுத்த நடவடிக்கை தமது சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று சில தெற்கு மாகாணங்கள் தொடக்கிய போரில் சுதந்திரவாதிகள் தோல்வியுற்றனர்.
சுதந்திரவாதிகள் பழைமையை விரும்புபவர்கள். தமது பிரத்தியேகத்தில் பிறர் உலா வருவதை அவர்கள்
விரும்புவதில்லை. தாமுண்டு தமது குடும்பமுண்டு என்று வாழ்பவர்கள். சமீப காலங்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் இயற்றப்படும் சட்டங்கள் தமது சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று போர்க்கொடி தூக்கியவர்கள். ஜனநாயக ரீதியாகத் தங்களின் ‘உரிமைகளை’ வென்றெடுக்க வாக்கு பலம் போதாது என உணர்ந்து சிறிய அளவில் சில வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிவில் யுத்தத்தைப் போலவே அந்நட்வடிக்கைகளும் மூர்க்கமாக ஆனால் இரகசியமாக அடக்கப்பட்டு விட்டன.
வேறு வழியின்றி மீண்டும் ஜனநாயக ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தீர்மானித்தார்கள். இவர்களின் பின்னணியில் பணபலம் மற்றும் மூளை பலத்தோடு செயற்படுபவர்கள் கோக் (Koch Brothers) சகோதரர்கள் என்று அறியப்படுகிறது.
துரும்பரின் துடுக்கும் தொனியும் அபிலாட்சையும் இவர்களின் தேவையும் எங்கோ ஒரு புள்ளியில் சங்கமித்திருக்கின்றன. வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. துருமப்ரின் வடிவில் முதல் தடவையாக
இப்போதுதான் அவர்களுக்கு ஒரு தலைவர் வந்துதித்திருக்கிறார். 1860 சிவில் யுத்தத்திற்குப் பின்னால் முதல் தடவையாக ‘அமெரிக்க தேசியம்’ என்ற புதிய வியூகமொன்றை எடுத்திருக்கிறார்கள். பல்தேசியம் அமெரிக்காவைச் சீரழித்து விட்டது என்பதை முன்வைத்து அவர்கள் போராட வந்திருக்கிறார்கள். அவர்களின் குரலை துரும்பர் ஒலிக்கிறார்.
துரும்பர் எல்லா வகையிலும் ஒரு வடக்கர் தான். அதிபராக வந்துவிட வேண்டுமென்ற ஒரு அபிலாட்சையை விட அவருக்கு வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் கூச்சலிடும் எதையும் அவரால் நிறைவேற்ற முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். அமெரிக்கர்களின் அல்லாடும் உணர்வுகள் குறுவாழ்வுடையன என்பதுவும் அவருக்குத் தெரியும்.
இன்றய நிலையில் அதிகார வர்க்கம் தந்நை ஆதரிக்காது என்று தெரிந்தவுடன் அதற்கு எதிரான குடியரசுக் காரருடன் கை கோர்த்திருக்கிறார்.
அதிசயமென்னவென்றால் வழக்கமாக தெற்கத்தைய மதவாதிகள் குடியரசுக் கட்சியின் மந்தைகளாகவே வாக்களிப்பார்கள்.
துரும்பருடன் போட்டியிடுபவர்களும் அதிகார வர்க்கமும் இந்த ‘மந்தை’வாக்குகளையே நம்பியிருந்தனர். மதவாதிகள் மட்டுமல்ல் துரும்பர் திட்டும் ஏனைய மாற்றினங்களும் பெண்களும் கூட அவ்ர் பின்னாலேயே அணிதிரளுகின்றனர்.
இப்படியொரு நிறவாதியை, அடிமை விரும்பியை, பெண்களைத் தூஷிப்பவரை, பணத்திமிர் பிடித்தவர் ஒருவர் அமெரிக்க அதிபராக வருவதை நான் ஏன் விரும்புகிறேன்?
இன்றய உலகு நிலை குலைந்துவருவதற்கு, சமாதானம் அருகி வருவதற்கு முதன்மையான பங்காளி அமெரிக்கா என்று நான் நம்புபவன். அமெரிக்க அதிகார வர்க்கத்தின் இலாப மோகம் உலக
நலன்களை மீறிச் செயற்படுகிறது. அதைச் சீரழிக்கும் வல்லமை புறச் சக்திகளிடம் இல்லை, உட்சக்திகளாலேயே அது சாத்தியமாகும்.
அதிகார வர்க்கம் சதி செய்யாவிட்டால் - துரும்பர் ஆட்சியில் அது நிகழ வாய்ப்பிருக்கிறது. There are many ways to skin a carrot. This may be one.
துரும்பர் ‘அவ்ராக’ இருக்கவேண்டுமென்பதில்லை. இருந்தால் நல்லது என விரும்புகிறேன்.
ஏப்ரல் 24, 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக