சனி, 21 ஜூலை, 2007

Understanding Andy அல்லது ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்

Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில் எனது peers and teachers என்னை Andy என்றே அழைப்பர்.

இவ்வளவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுதியதை வாசிப்பதற்கே உங்களுக்குச் சிரமமாயிருந்திருக்கும் இல்லையா? அப்படியானால் தினமும் பாலசாலையிலும் வீட்டிலும் என்று எத்தனை தடவைகள் நான் கனடியனாகவும் தமிழனாகவும் வாழக் கஷ்டப்பட்டிருப்பேன்?

போகட்டும். அவள் எனது தாய். அவளுக்காக நான் கஷ்டப்படுவதில் பாவமேதுமில்லை. இதுவெல்லாம் என் துன்பங்களில் ஒரு அற்ப பங்கேதான்.

எனக்கு 16 வயது. கனடாவில்தான் பிறந்தேன். எனக்கு ஒரு தாயும் (சிரிக்காதீர்கள்) ஒரு அக்காவும் இரண்டு மாமன்காரரும் இருக்கிறார்கள். எனக்கு பதின்மூன்று வயதாகவிருக்கும்போதே என் தந்தை அம்மாவை விட்டு விட்டு வேலையில் சந்தித்த யாரோ பெண்ணுடன் ஓடிவிட்டானாம் என்று அம்மா சொன்னாள். அப்பா ஏன் ஓடினார் என்று காரணம் தெரியும்வரை 'ஓடினான்' என்று அழைப்பதாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.

அம்மா சுமாரான அழகுடையவள். ஆனால் அவளுக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவுதான். அப்பா ஓடிய பிறகு வீட்டில் சண்டை பிடிப்பதற்கு எவருமில்லை. பக்கத்து அப்பாட்மெண்டிலிருந்து சுவரில் தட்டுவது இப்போது இல்லை. உரத்த குரலில் பேசிய அப்பன் போனதிலிருந்து வீடு வெறிச்சோடிப் போனதை அம்மாவே ஒத்துக் கொண்டாள்.

அக்காவுக்கு 20 வயது. ஒரு காலத்தில் நன்றாகப் படித்தவள். University of Toronto வில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்பா ஓடினான். அதன் பிறகு அவள் படிப்பில் கவனம் செலுத்தாது விட்டுவிட்டாள். இப்பொழுது College க்குப் போகிறாள். முன்பு போலெல்லாம் அவளுக்குச் சிநேகிதிகள் இல்லை. மேக்கப் போடுவதில்லை. தலை சீராக வாருவதில்லை. படிப்பு எப்படிப் போகிறது என்று எப்போதாவது நான் கேட்டால்தானுண்டு. அப்போதும் ஒரு shrug ஓடு அப்பாற் போய்விடுவாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்றறிவதற்கு அம்மாவிற்கு நேரமுமில்லை அறிவும் போதாது.

அம்மா இரண்டு வேலை செய்கிறாள். காலையில் ஒரு Book Binding கம்பனியில். பின்னேரம் ஒரு தமிழ்ச் சாப்பாடுக் கடை Kitchen இல். அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டு பேசாமல் தானுண்டு தன் சோலியுண்டு என்று அவள் வாழ்ந்திருக்கலாம். பெரீய ego வைத் தலையில் வைத்துக்கொண்டு திரிகிறாள். தான் வேலை செய்து பிள்ளைகளைப் படிப்பித்தேன் என்று ஊருலகம் சொல்ல வேண்டும் என்பது அவளது ஆசை போலும்.

இரவு பதினொரு மணிக்குப்பின் அவள் கொண்டுவரும் சாப்பாடுதான் எங்களதும். ஆனால் நாங்கள் எத்தனை மணிக்குச் சாப்பிடுவதென்பது அவளது முதலாளியின் கைகளிலேதானிருக்கிறது. அவர் தனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டால்தான் அம்மா வீட்டுக்கு வரலாம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையால் அவளால் வாகனம் ஓட்ட முடியாது.

அப்பன் ஓடியதிலிருந்து எனக்கும் வாழ்க்கையில் சலிப்புத்தட்டி விட்டது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் brave face என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே வெறுமை சதா அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அப்பனைப் பற்றி அம்மா எதுவும் பேசுவதில்லையாதலாலும் அவளோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது சரியில்லை என்பதாலும் நான் அப்பனைப் பற்றிப் பேசுவதை வெகுவாகக் குறைத்து விட்டேன். ஆனாலும் அவனைப் பற்றியும் அவன் ஏன் எங்களை அநாதரவாக விட்டு ஓடினான் என்பது பற்றியும் எப்போவாவது ஒரு நாள் அறிந்தேயாக வேண்டும் என்று என் மனம் விழைகிறது.

அப்பன் குரைப்பான், சத்தமிடுவான் ஆனால் ஒருபோதும் அம்மாவை அடித்ததில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் கொண்டுவந்து போடுவான். He was a great provider, I must admit.

அம்மாவும் அவனை நேசித்துத்தானிருக்க வேண்டும். இப்போதும் இடைக்கிடையே வீட்டில் இருக்கக் கிடைக்கும் போதெல்லாம் அவள் சட்டைத் தலைப்பைக் கண்ணுக்குள் விட்டுக்கொண்டிருக்கிறாளென்றால் அது கண்ணீரைத் துடைக்கவல்லாது வேறெதற்கு? எனக்கும் அக்காவுக்கும் முன்னால் அப்பனைத் திட்டித் தீர்ப்பாள். அதில் மட்டும் அவள் நன்றாக நடிப்பாள்.

அப்பனுக்கும் அம்மாவுக்குமிடையில் சண்டை முற்றியிருந்தபோது இரண்டு தடவைகள் மாமன்மார் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு கடுமையான குளிர் இரவில் அப்பனை அடித்துத் துரத்தி வெளியேவிட்டுக் கதவைப் பூட்டினார்கள். இன்னுமொரு நாளில் அப்பன் தனது உடுப்புகளையும் பெறுமதிகளையும் எடுத்துக்கொண்டு இறுதியாக விடைபெறும்போது அம்மா அவன் பின்னால் ஓடிவிடாது 'காப்பற்றுவதற்காக' அவளைப் படுக்கையறையுள்ளே வைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.

அப்பன் இறுதியாக விடைபெற்ற இரவில் அம்மாவின் கூப்பிய கரங்களும் கெஞ்சிய கண்களும் என்னால் இன்னும் மறக்க முடியாதவை. காரணம் அவள் அப்படிக் கெஞ்சியது தனது சகோதரர்களிடம்தான். அன்று அவர்கள் கொஞ்சமேனும் இரக்கம் காட்டியிருந்தால் இன்று எனது அப்பன் எங்களோடு இருந்ததிருக்கலாம் என்று பலதடவைகள் நான் நினைத்ததுண்டு. அதையேதான் அம்மா தினம் தினம் நினைத்துக் கொள்கிறாளோ என்னவோ.

எங்களை விட்டுப்போய் சில நாட்களில் அப்பனை மால்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். எனது பாடசாலைக்கு அருகில் இருக்கும் அந்த மாலுக்கு அவன் வருவதே என்னைப் பார்க்கத்தான் என்று அவன் ஒரு தடவை சொன்னான். அப்போதெல்லாம் அவன் அன்போடு என்னைக் கட்டிப் பிடித்து சாப்பிட வரும்படி அழைப்பான். ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று அடம்பிடிப்பான். இன்றுவரை அவனிடம் எதுவுமே வாங்கியதில்லை. இப்போ சில வருடங்களாக அவனை நான் கண்டதில்லை. எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அவனை அழைக்கவேண்டுமென்று அம்மாவைக் கேட்டபோது 'உன் மாமன்மார் கொலை செய்துவிடுவார்கள்' என்று அவள் சொன்னதோடு அப்பனோடு உறவு கொண்டாடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.

எங்களை விட்டுப் பிரிந்து சில வருடங்களுக்கு அப்பன் வேறு திருமணம் புரிந்து கொள்ளவேயில்லை என்று அம்மா சொன்னாள். பின்னர் அவன் மிசிசாகாவுக்குப் போய்விட்டான். சுமார் 50 கி.மீ. தொலைவுதான். இருப்பினும் இங்கிருக்கும்போதெ அவன் எங்களை மறப்பதற்குத் தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. தூரமும் நேரமும் பாசத்தைப் பிரிக்குமென்பார்கள். I had no choice.

எனக்கும் இப்போது படிப்பில் அவ்வளவு அக்கறையில்லை. அக்காவின் மனதை இப்போது மிகவும் அதிகமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சினைகளப் பற்றி அவரிடம் எதையுமே கூறியதில்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு Foster parent வீட்டில் ஒரு வெள்ளைக்கார அப்பா அம்மாவுக்கு பதிநான்காவது பிள்ளையாக Anti-depressant குளிசைகளோடு மால்களில் திரிந்திருப்பேன். அல்லது ஒரு medium security prison இல் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன். நான் ஆனந்தனாக வளர்க்கப்பட்டதன் விளைவே இன்னும் நான் நானாக இருப்பது என்று நினைத்து மகிழ்வதுண்டு.

ஒருநாள் நானும் அக்காவும் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தபோது இருவரும் ஏகோபித்து எடுத்த முடிவு - நாங்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்வதில்லை - என்பதே. அவள் ஆசையாக நேசித்திருந்த பிருந்தனிடம் தன் முடிவைச் சொன்ன அன்று அவள் sleeping tablets எடுக்கவிருந்தாள். எப்படியோ இன்று அவள் உயிர் தப்பியிருந்தாலும் ஒரு நடைப்பிணமாகவே இருக்கின்றாள்.

எங்கள் குடும்பம் சிதைந்து போனதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லோருமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் முடிவுகளைத் தீர்மானித்தார்களென்றே எனக்குப் படுகிறது. என்னுடைய அல்லது எனது அக்காவுடைய நலன்கள் எதையும் எவரும் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் தத்தமது ego வைத் திருப்திப் படுத்தும் வகையிற்றான் நடந்துகொண்டுள்ளார்கள்.

நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று அம்மா இரண்டு வேலை செய்தாள். இருந்தும் என்ன பிரயோசனம்? அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம்?.

எல்லோருமே தாங்கள் ம்ற்றவர்களுக்கு நன்மை செய்வதாகவே நினைத்துக் காரியங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அந்த 'மற்றவர்களிடம்' என்ன பெறுபேறுகள் விளைந்தன என்பது பற்றி எதுவித அக்கறையிமில்லாது தங்கள் ego திருப்தியடைந்தால் மட்டும் போதுமானது என்றளவில் நின்றுவிடுகிறார்கள். இது தான் எமது பிரச்சினை.

என் மனதில் நெருடல்கள் ஆயிரம் இருக்கின்றன. யாருடனாவது பேசினால் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். I am sure என்னைப்போல் தான் என் அக்காவும் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். என் நண்பர்களும் என்னைப் போலவே ஆயிரம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்கள். Everyone needs a shoulder to cry, I guess.

சென்ற வாரம் எனது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் என்னை மிரட்டினார்கள். Lunch money யைத் தரும்படி மிரட்டினார்கள். என்னிடம் lunch money இல்லை, வேண்டுமானால் lunch ஐத் தருகிறேன் என்றேன். இரண்டு பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். சக மாணவர்கள் பார்த்துச் சிரித்தார்கள். ஏனென்றால் அடித்தவர்கள் ஏதோ ஒரு gang ஐச் சேர்ந்தவர்கள். நான் இச் சம்பவத்தை பிறின்சிபாலிடம் முறையிடவில்லை ஏனென்றால் அடித்தவர்களும் தமிழர்கள்தான்.

இப்போது நான் இன்னுமொரு gang member. இனி என்னை ஒருவரும் தொட முடியாது. எனக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு குழு இருக்கிறது. ஆனால் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

Ryan என்ற றட்னாகரன் எனது gang இல் இருக்கிறான். மிகவும் நல்ல பையன். ஆனால் போதை வஸ்து எடுப்பான். 'நீ எப்போது இதைப் பழகினாய்' என்று கேட்டதற்கு அவன் சொன்னான் 'எல்லாம் ஒரு பெண்ணுக்காக' என்று. அவனது காதலி ஒருநாள் அவனிடம் சொன்னாளாம் 'Thats it. We have to part our ways. You are not tough enough for me. Look at the guy who is leaning on the red Honda Civic. He is my my new guy. Bye...'

இதுதான் இன்றய உலகம். This is real. I don't want to bury my head in the sand!. Ryan இப்போது ஒரு tough guy. He goes to prison every weekend for three months. Assault with weapon, possession of narcotics with the intent of trafficking and obstruction of justice. எல்லாமே பொய் வழக்கு. போலீஸ் சோடித்த வழக்கு. றயான் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுவிட்டான். காரணம் அவனைப் பிணை எடுக்கக்கூட ஒருவரும் முன்வரவில்லை. He also comes from a single parent family. I won't blame him.

எனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டுக்கு வருவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போல சட்டத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கல்லாம். மனம் ஒத்துழைக்குதில்லை. So far I have resisted successfully. The only other option is to take my life. Is this life worth living?

I hope you understand me. Please don't feel sorry for me. There are so many kids out there crying for help. There could be a kid out there pricking needle in a back alley. There could be one waiting to jump off a highrise building. Please save them. For god sake, they have many more years to live, just the way you do. They are your children.

மன்னிக்க வேண்டும். I got carried away.

நான் இதுவரை சொன்னது ஆனந்தனைப் பற்றி மட்டுமே. அறிகுறிகளைச் சொன்னேன். ஆதங்கங்களைச் சொன்னேன். நாங்கள் நல்லவர்களாக உருவாகுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

I wouldn't have been in this state had my father not abdicated his responsibility.

இற்தியாக, அப்பாவுக்கு! 'அப்பா எனக்கும் உங்களைப்போல கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று முழுமையாக வாழ்வதற்கு ஆசைதான். அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.

Forgive me உங்களை அப்பன் என்று சொன்னதற்கு. அதுவே இல்லாது எத்தனை குழந்தைகள் இருக்கும்போது. Please lookafter my sister, at least.'

செவ்வாய், 17 ஜூலை, 2007

பொங்கு 'சிங்களம்'

சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததே அதிசயம் என்றார்கள். இப்போது அதைவிடப் பெரிய அதிசயம் இலங்கையில் நடைபெற்றிருக்கிறது.

ஆறென்றால் அது மலையில் ஆரம்பித்து கடலில் விழும். தமிழர் தேசத்திலோ போராறு கடலில் (மாவிலாறு) ஆரம்பித்து (குடும்பி) மலையில் முடிவடைந்திருக்கிறது.

பேரழிவுகளுக்கு முன் அதிசயங்கள் நிகழுமென்பார்கள். மஹிந்தவைப் புலிகள் ஏற்றி வைக்கப் புலிகளை மஹிந்த இறக்கி வைத்திருக்கிறார் குடும்பிமலையிலிருந்து.

அதிசயமேதான்!

புலிகள் இறங்கினார்களா அல்லது இறக்கப்பட்டார்களா என்பது 'குடும்பிமலை ரகசியம்'. இப்போதைக்கு அறிய முற்படுவது தேவையற்றது.

எப்படியாயினும் புலிகள் தந்திரோபயமாகத் தப்பி மரபு வழிப் போரிலிருந்து மீண்டும் கரந்தடிப் போர் யுக்தியைக் கையாளப் போகிறார்கள் எனப்படுகிறது.

உண்மை அதுவாகவிருப்பினும் சிங்கள ஆட்சிக்கும் இராணுவத்துக்கும் இது ஓர் பாரிய வெற்றி. உள்ளூர் மக்களிடத்தும் சர்வதேச அரங்கிலும் புலிகளுக்கு இது ஒரு பெரிய தோல்வி.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு இது அரசியல் வெற்றியே தவிர இராணுவ வெற்றியல்ல என்கிறார் சர்வதேசப் புகழ் பெற்ற இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்.

இருக்கலாம். ஆனால் காலம் காலமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இராணுவத்தைப் பாவித்து வருவதே அரசியல் வெற்றிக்காகத்தானே! மக்களின் அதிருப்தி, சரிந்துவரும் பொருளாதாரம், கட்சியுடைவு என்று பல வழிகளிலும் அதல பாதாளத்தை நோக்கி விழுந்துவிடத் தயாராகவிருந்த மஹிந்த்வுக்கு குடும்பிமலையையே சஞ்சீவியாகப் பெயர்த்துக் கொடுத்துக் காப்பற்றியிருக்கிறார் அனுமார் சரத் பொன்சேகா. தென்னிலங்கை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இருவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான வெகுமதியை மக்களிடமிருந்து ஏற்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களே.

மாறாகப் புலிகள் மக்களுக்குக் கொடுத்த வாகுகுறுதிகளை நிறைவேற்றவில்லை. 'ஒரு வருடமாகவே இப்படித்தான் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எதுவுமே செய்ய முடியாது' என்று இராணுவ அதிகாரி கேலியாகப் பேசுகிற அளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன.

புலிகளைத் தெரிந்தவர்கள் வழமைபோற் சிரிப்போடு உதாசீனம் செய்கிறார்கள். பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அவர்கள் தயாராகிறார்கள் என்பதிலும் இரண்டாம் அபிப்பிராயமில்லை. முன்பு பல தடவைகள் இதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதுவேதான்.

ஈழ்த் தமிழர்களுக்கு அதுவே இறுதி நம்பிக்கையும்கூட. இலங்கை அரசுகளை நம்பி ஏமாந்தார்கள். இந்தியாவை நம்பி ஏமந்தார்கள். இறுதியாக சர்வதேசங்களை நம்பி மோசமே போய்விட்டார்கள்.

இந்த நிலையில் புலிகள் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்கு எப்படி எப்போது என்பது மர்மமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மூதூர் கிழக்கு, சம்பூர், குடும்பிமலை என்று தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோய்க்கொண்டிருக்க இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அரை வயிறுகளோடு சில்லுக்கும் செல்லுக்கும் தப்பி நெடுங்காலம் வாழமுடியாது. அரசிடம் இருந்து இவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. அவர்களை மீண்டும் அவர்களது நிலங்களிற் குடியேற்றுவது தமிழர் கடமை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒரு பேருண்மையை உணர வேண்டும். ஜே.வி.பி போன்ற தென்னிலங்கை இனவாதிகளின் (இவர்களை மார்க்சீயவாதிகள் என்றால் அது மேதை மார்க்ஸ் இற்கு இழுக்கு!) ஒரே நோக்கம் இலங்கை முழுவதையும் ஒரு பெளத்த சிங்கள நாடாக்குவதே. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தளவுக்கு அவர்களது திட்டங்கள் நிறைவேறியிருக்காது. புலிகள் எந்தளவுக்கு கோமாளியான ராஜபக்ஷவைப் பாவித்து தமது தனி ஈழத்தைப் பெற முயற்சித்தார்களோ அதே போன்றுதான் ஜே.வி.பி. யினரும் ராஜபக்ஷவுடன் கூட்டணியமைப்பதன்மூலம் தமது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தார்கள். இன்றய கள நிலவரத்தின்படி ஜே.வி.பி. யினர் தமது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரிப்பு, கிழக்கின் வெற்றி எல்லாம் ஜே.வி.பி. யின் திட்டங்களே.

கிழக்கைக் கைப்பற்றியது இராணுவ வெற்றியல்ல அரசியல் வெற்றிதான் என்று ஒப்புக்குக் கூறினாலும் கிழக்கில் புலிகளின் வெற்றிடத்தையும், மக்களின் இடப்பெயர்வையும் சாதகமாக்கி சிங்களமயமாக்கல் துரிதப்படுத்தப் படுகிறது என்பதே உண்மை. கருணாவின் பிரிவிற்கு முன்னர் இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! இப்பொழுது கருணா விரும்பினாலும் கிழக்கின் சிங்கள மயமாக்கலை நிறுத்த முடியாது. அப்படி முயற்சித்தால் சிங்கள இராணுவம் கருணா அணியைத் துவம்சம் செய்துவிடும். 'வன்னிப் புலிகளை' த் துரத்துகிறோம் என்று மண்ணையே தாரை வார்த்துக் கொடுத்ததே கருணா அணியும் அதன் ஆதரவாளர்களும் சாதித்தது.

இந்த நிலையில் கருணா அணியினர் ஜனநாயக வழிக்குத் திரும்பித் தேர்தல்களிற் பங்கேற்றால் நிலைமை மாறும் என்று நினைக்கலாம். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது உணர்வுகளை அர்சு மதித்திருந்தால் மக்கள் பட்டினியால் வாடும்போது வெற்றி விழாக் கொண்டாடியிருக்க மாட்டார்கள். இராணுவ ஆட்சியோ ஜ்னநாயக ஆட்சியோ சிங்கள மயமாக்கல் அதி வேகத்தில் நடைமுறைப் படுத்தப்படும். இதைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி-கருணா அணியும் புலிகளும் MOU செய்து கொண்டு போரை உக்கிரப்படுத்துவதுதான். மிகவும் கோபப்படுகிறீர்கள் போலிருக்கிறது. மண்ணைக் காப்பாற்ற இதைவிட வேறேதும் வழியிருந்தால் சொல்லுங்கள்!

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததே தமிழரின் மொழியுரிமை, பிரதேச உரிமை வாழ்வுரிமைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக. அவற்றை இழந்து பெறும் விடுதலைக்கு அர்த்தமில்லை.

ஞாயிறு, 1 ஜூலை, 2007

வன்னியின் செல்வன் - அத்தியாயம் இரண்டு

வன்னியின் செல்வன்


இரண்டாவது அத்தியாயம்


மங்களரின் கனவு


ஏற்கனவே அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்த ரோஹண நாடடின் ஆட்சிக்கு சோதிடர்களின் கூற்றுப்படி பல துர்நிமித்தங்கள் தோன்றின. எங்கே தூமகேது தோன்றப்போகிறதோ என்று மக்கள் துயரப்பட்டுக் கொண்டார்கள். நாளுக்கு நாள் பண்டங்களின் விலை அதிகரித்தது. அரச தானியச்சாலை விரைவில் காலியாகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று களஞ்சிய அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


நாட்டின் நிலைமை மன்னர் மகிந்தருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சோதிடர்களின் வாக்கு பலித்துவிடுமோ தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மகிந்தர் நாளொரு குப்பியும் பொழுதொரு தொப்பியுமாக அரண்மனையிலேயே மறைந்து வாழ நேரிட்டது.


இந்த வேளையில் அரசரின் சகோதரரும் அந்தரங்க ஆலோசகருமான பசிலர் செய்தியொன்றைக் கொண்டோடி வந்தார். முன்னாள் அமைச்சரும் மகிந்தரின் பல அரசியற் களப் போர்களை முன்னின்று நடத்தி வெற்றிவாகைகளைச் சூடக் காரணமானவருமான மங்கள சமரவீரர் அரசருக்கு எதிராகச் சதியொன்றை மேற்கொள்ளுகிறார் என்பதே அச் செய்தி.
தன்னை எந்த உலக மகா சக்திகளாலும் அசைக்க முடியாதென்று இறுமாப்பிலிருந்துவந்த மகிந்தர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். என்ன இருந்தாலும் நாயக்கர் வம்சத்தின் அழுங்குப்பிடியிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி மகாராணி சந்திரிகையை நாட்டை விட்டே துரத்துவதற்கு உதவி செய்த மங்களரர் இப்படியாகுவார் என்று எதிர்பார்க்கவில்லைத்தான்.


‘எத்தனை பேருக்கு வெகுமதிகளை அள்ளி இறைத்தேனே! உலகத்திலேயே தேவைக்குமதிகமான அமைச்சர்களை நியமித்து அத்தனை பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்லக்கு தேர் குதிரை யானை என்று அள்ளி அள்ளிக் கொடுத்தேனே! கஜானா காலியாகிய போதெல்லாம் புத்தம் புதிதாக பணத்தை அச்சடித்து அபிஷேகம் செய்தேனே! தூரதேச யாத்திரைகள் போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கில் அமைச்சர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டு திரிந்து இறக்கைக்குள் வைத்துப் பராமரித்தேனே! இப்படியாகி விட்டதே’

இப்படியாக மகிந்தர் தலையிலடித்துப் புலம்பினார்.


இந்த நேரம் பார்த்து அமைச்சர் பர்னாந்துப்பிள்ளை உள்ளே வந்தார். அவர் மன்னர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர். தமிழ் சிங்களவர் ஓருடலும் ஈருயிருமாக வாழ வேண்டுமென்பதற்கு உதாரணமாக வாழ்பவர் அமைச்சர் பர்ணாந்துப்பிள்ளை அவர்கள். மன்னரின் சிவப்பு உத்தரீயத்தின் தலைப்பால் ஏற்கனவே சிவந்து போயிருந்த கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே அமைச்சர் சொன்னார்:


“மன்னாதி மன்னா. இந்த மங்களரின் சதி பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆடசியில் தமிழ் மக்களைத் தவிர எந்த ஒரு உயிரையும் நீங்கள் புண்படுத்தியதில்லை. மக்கள் உங்கள் பக்கமிருக்கிறார்கள். புத்த சங்கங்கள் இரண்டும் உங்கள் பக்கம். போதாதற்கு தமிழர் பக்கத்திலிருந்து பல சிற்றரசர்கள் உங்கள் கால்களையே தினம் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனத்துக்கே பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த கெமுனு மன்னரின் மறு பிறப்பே நீங்கள்தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்”


“உண்மையாகவா அமைச்சரே..?”


“ஆமாம் மன்னா! இரண்டாம் கெமுனு என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர்தான். எல்லாள அரசனின் மறுபிறப்பென்று மக்கள் அழைக்கும் கரிகாலனின் ஆட்சியிலிருந்து கிழக்கு மண்டலத்தை விடுவித்த பெருமை உங்களைத்தானே சேரும்”


“ஆமாம் அமைச்சரே… கொஞ்சம் பொறுங்கள். யாரங்கே அந்தக் குப்பிக்காரனை அழைத்துவரச் சொல்…. கலப்பதற்கு என்ன வேண்டும் அமைச்சரே."

" ஜலமே போதும் மஹாவலியிலிருந்தல்லவா வருகிறது..”


மன்னர் மகிந்தருடைய கோபத்தை எப்படி அடக்கலாமென்ற ரகசியம் அமைச்சர் பர்ணாந்துவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருவரும் களிப்போடு ஏனைய அரச கருமங்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள்.


“அமைச்சரே இந்த மங்களருக்கு நாம் என்ன குறை வைத்தோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? . உண்மையில் அவர் இல்லாவிட்டால் நாம் ஆட்சி அமைத்திருப்பதே சிரமம். சிற்றரசர் சோமவன்சர் போன்றவர்கள் கிளர்ச்சி செய்தபோது அவரோடு சமரசம் செய்து கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவர் இந்த மங்களர். இப்போது அந்த கபடர் சூரியாராய்ச்சியாரோடு சேர்ந்து எனக்கெதிராகச் சதி செய்கிறார். என் சகோதரர் கோதபாயரிடம் சொன்னால் ஒரே நாளில் இருவரையும் வெண் புரவிகளிற் கொண்டுபோய்த் துவம்சம் செய்துவிட முடியும். ஆனால்….” மஹிந்தர் மீசையை முறுக்கினார்.


“அரசே எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. மங்களரின் சதியின் பின்னால் வலுவான அந்நிய தேசங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் எல்லோருடைய நோக்கமும் கரிகாலனை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதே. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் வல்லமை இந்த கரிகாலனுக்கேயுண்டு என்று ஈரேழுலகமும் நம்புகிறது. கரிகாலனால் எங்கே தமது நாடுகளுக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமில்லாமலே பாரிய படைக்கலங்களைச் சோழர் படை தாமாகவே உருவாக்குகிறதென்ற விடயம் வெளிநாடுகளுக்குத் தெரிந்ததிலிருந்து அவர்கள் எச்சரிக்கையடைந்திருக்கிறார்கள்.”


“அதற்கும் மங்களரின் சதிக்கும் என்ன சம்பந்தம்.?”


“கரிகாலனை ஒழித்துக்கட்டும் வல்லமை உங்களுக்கு இல்லை என்று அயற்தேசங்கள் கருதுகின்றன. அத்துடன் சமீபத்தில் நீங்கள் பல வெண் புரவிகளை அரேபியாவிலிருந்து இறக்கியது அமைச்சர் கோதபாயரின் வேண்டுகோளுக்கிணங்கவே என்றும் அவை தருவிக்கப்பட்டதன் பின்னர் தலைநகரில் மட்டும் சென்ற மாதத்தில் 125 தமிழர்கள் வெண்புரவியிற் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் வெளிநாட்டு பிரதானிகள் கருதுகிறார்கள். இக்காரணங்களுக்காக உங்களை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மங்களரை ஆட்சியிலமர்த்தும் நோக்கம் அயற் தேசங்களுக்கு உண்டு என்று நமது ஒற்றர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அத்தோடு தலைநகரில் தங்கியிருந்த பல அப்பாவித் தமிழர்களைப் பலவந்தமாக இரவோடு இரவாக வெள்ளைத் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளிற் கொண்டுபோய்விட்ட சம்பவம் அயற் தேசங்களை உலுப்பியிருக்கிறது.”


“அப்படியா..? அதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம்?

மஹிந்தர் கேட்டார்.அப்போது வாயிற்காவலன் வந்து பணிவாகக் கூறினான்:


“அரசே வாயிலில் அமைச்சர் தேவானந்தர் நிற்கிறார். உங்களை அவசரம் பார்க்க வேண்டுமாம்”


“வரச்சொல். அமைச்சரே உங்களுக்கு ஒரு ஆடசேபணையும் இல்லையே. நீங்கள் இருவரும் ஒரு வழியில் தமிழர்கள் தானே. எங்கே நாயும் பூனையுமாக…”

"இல்லை. எனக்கும் தேவானந்தருக்கும் எதுவித பிரச்சினையும் கிலையாது. தாராளமாகப் பேசுங்கள்"


அமைச்சர் தேவானந்தர் பளிச்சென்ற வெண்ணாடை தரித்து நிதானமாக வந்தார்.


வணக்கம் மன்னர் பெருமானே!


“என்ன விடயம் அமைச்சரே? சிற்றரசர்கள் கருணாகரர் பிள்ளையார் ஆகியோருடைய பிணக்குகளைத் தீர்த்துவைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? இப்போதே தீர்க்காவிட்டால் பிள்ளையாரைத் தம்பக்கம் இழுத்துவிடக் கரிகாலன் முயற்சிக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”


“ஆம் மன்னரே. மண்டலக்காரர்களை இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பணித்திருக்கிறேன்”


“அது சரி… வந்த விடயம்?


“தலை நகரிலிருந்து 300 தமிழர்களை உங்கள் சகோதரர் பலவந்தமாக வெண் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளுக்கு அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்”


“அதற்கு என்ன இப்போது. பிற தேசங்கள் எங்களைக் கடிந்து கொண்டனதான். இருந்தாலும் பாரதூரமாகக் கண்டிக்கவில்லை. ‘கவலை தெரிவிக்கிறோமென்று’ சிரித்துக்கொண்டுதான் கூறினார்கள். இருந்தாலும் அதை நிறுத்தி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கோரினார்கள். நானாவது மன்னிப்பு அதுவும் தமிழரிடம் கேட்பதாவது. எனக்காக முதலமைச்சர் இரத்தினநாயக்கருக்கு தமிழரிடம் மன்னிப்புக் கோரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.


“தமிழரைப் பலவந்தமாக அனுப்பியது பிழையானது. அப்படித் தொடர்ந்தும் செய்திருந்தால் நாமே நமது அன்பிற்குரிய தாய்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர்களாக வரலாற்றில் பார்க்கப்படுவோம்.” அமைச்சர் தேவானந்தர் பணிவோடு கூறினார்.


“உண்மைதான் அமைச்சரே. எனது தம்பி கோதபாயரை உங்களுக்குத் தெரியும்தானே. கொஞசம் முற்கோபக்காரன். அவன் அவ்வளவாகக் கல்வி கற்றதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழரின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவனுக்கு கொஞசம் கோபம் அதிகம் தான்….அது சரி அமைச்சர் மங்களர் எமது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறாராமே. அமைச்சர் பர்ணாந்து சொல்கிறார்…”


“கேள்விப்பட்டேன் மன்னா. அது நடக்கவல்ல காரியமல்ல. மங்களர் தனது நண்பரும் சிற்றரரசருமான சோமவன்சரினதும் முன்னாள் முதலமைச்சரான விக்கிரமசிங்கருடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றலாமென்று கனவு காண்கின்றார். சோமவன்சருடைய படைபலமும் விக்கிரமசிங்கருடைய படைபலமும் ஒன்று சேர்ந்தாலும் எங்களது பலத்தை மீற முடியாது. அப்படியானாலும் அதற்கு முன்னராக நாம் இன்னுமொரு சதியொன்றை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய சதியை இலகுவாக முறியடிக்கலாம்.”


“எப்படி எப்படி… சொல்லுங்கள் அமைச்சரே. இதற்காகத்தானே சிங்கள அரசுகள் எப்போதும் தமிழமைச்சர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது….”


“மன்னா! ஒரு நாட்டில் ஆட்சி ஈடாட்டம் காணும்போது அது அயல் நாடுகளின் மீது படையெடுப்பைச் செய்ய வேண்டும். தேசீயத்துக்கு அச்சுறுத்தல் வரும்போது மக்கள் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வார்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு அலையலையாக வந்துகொண்டே இருக்கும். எனவே இப்போ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது மக்களுக்கு கிராமங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் பறையடித்துச் சேதியனுப்ப வேண்டியது. தேசீயத்துக்கு அச்சுறுத்தல் என்றால் மக்கள் பொங்கியெழுவார்கள். அத்தோடு கிழக்கு மண்டலத்தை விடடுவித்ததும் நாடு தழுவிய ரீதியில் வெற்றிக் களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். ”


“நல்லது அமைச்சரே. சரியான தருணத்தில் வந்து உங்கள் மதியூகத்தால் எங்கள் நாட்டைக் காப்பாற்றியமைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன். இன்னும் சில நாட்களில் கரிகாலனைத் தோற்கடித்து ஈழம் முழுவதையும் வெற்றிகொண்டவுடன் கிழக்கு மண்டலத்தைக் கருணருக்கும் வடக்கு மண்டலத்தை உங்களுக்கும் பாத்தியதையாக எழுதிக்கொடுப்பேன் என்று இப்போதே உறுதி மொழி தருகிறேன்”

மன்னர் மகிந்தர் பறையடித்துப் பிரசித்தம் செய்வோருக்குப் பின்வருமாறு ஓலையை எழுதி அனுப்பினார்.


‘மக்களே எங்கள் சிங்கள தேசத்துக்கும், புத்த சமயத்துக்கும் எங்கள் மத்தியிலிருக்கும் புல்லுருவிகளின் ஆதரவுடன் பிற தேசத்தாரினால் ஆபத்து விளையக் காத்திருக்கின்றது என்று நமது ஒற்றர் படை தகவல் கொண்டு வந்திருக்கிறது. எனவே மக்கள் விழிப்போடு இருந்து எமது தேசத்துக்கு அச்சுறுத்தல் தருபவர்களைக் காட்டிக் கொடுத்து நாட்டை வரப்போகும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்படி இத்தால் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இரண்டாம் கெமுனு உங்கள் மகிந்த மகாராஜா’


அப்போது அவசரம் அவசரமாக கோதபாயர் அரண்மனைக்குள் நுழைந்தார். சாதாரணமாகவே கடு கடுவென்றிருக்கும் அவர் முகத்தில் இன்னும் ஆயிரம் முகங்கள் முளைத்திருந்தன.


“அண்ணா.. எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஒரு பக்கம் தமிழர். மற்றப்பக்கம்….” மேலும் சொல்வதை நிறுத்திக் கொண்டு கோதபாயர் இரு அமைச்சர்களையும் மகிந்தரையும் மாறி மாறிப் பார்த்தார்.


“எனதருமைத் தம்பியே சொல். உன்னைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஓடோடி வந்து கட்டிப் பிடித்து முத்தமிட்டேனே.. ஞாபகமிருக்கிதாடா என் தம்பியே. நீ சின்னவனாயிருந்தபோது….”


“போதும் நிறுத்து. அண்ணா…தெற்குக் கடலில் பிரமாண்டமான கப்பல் ஒன்று நங்கூரமிட்டிருக்கிறதாமே. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


“தெரியாதடா தம்பி. எனக்கு எதுவுமே தெரியாது.”


“தெரியாதே.. தெரிந்தே இருக்காதே.. உங்கள் நட்பான அயற் தேசம் இந்துஸ்தானம் இது பற்றிச் சொல்லியிருக்காதே…இந்த நண்பர்களும்கூடச் சொல்லியிருக்க மாட்டார்களே..?”


“உனக்கெப்படியாடா தம்பி இதுபற்றித் தெரிந்தது”


“சீனத்து பிரதானி தகவல் அனுப்பியிருந்தார். தமிழருக்கு உதவி புரிவதற்காக வந்திருக்கலாமாம். எதற்கும் விசாரியுங்கள்…”

அப்போது அரண்மனையின் மந்திராலோசனைக் கூடத்திலிருந்து யாரோ வலியினால் முனகும் சத்தம் கேட்டது. ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

"அண்ணா சமலரே. என்ன கோலமிது? உங்களுக்கு என்ன நடந்தது? "

மன்னர் மஹிந்தரும் அமைச்சர்களும் ஓடிப்போய் அமைச்சர் சமலரைக் கைத்தாங்கலாக அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினர்.

"எனதருமைத் தம்பிகளே! தம்பி பசிலரின் ஆலோசனைப்படி நாட்டில் பரிபாலனம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவரலாம் என்று மாலை நகர் வலம் போனேனா. மக்கள் கற்களால் எறிந்தும் அடித்தும் துரத்தியும் விட்டார்கள். அவர்கள் மிகவும் கோபமாய் இருக்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்"

அப்போது அமைச்சர் தேவானந்தர் அருகே வந்து மெதுவான குரலில் ஏதோ கூறினார். மன்னர் மஹிந்தரின் முகம் மலர்ந்தது.

தொடரும்.





சனி, 30 ஜூன், 2007

வெறும் - குறும் பா

எத்தனையோ விதம் விதமாய்ப் பார்ப்பாள்


எதற்கு எது அர்த்தமென விதி விதிப்பாள்


இத்தனையும் செய்பவளென் கண்மணியாள் என்றெடுத்து


முத்தமிடப் போனால் முகத்தைச் சுளிப்பாள்.




திங்கள், 25 ஜூன், 2007

சிவாஜி - வழமையான சங்கர் .......

சிவாஜி பார்த்தேன். முதலில் பார்ப்பதற்கான எண்ணம் இருக்கவில்லை. பூங்குழலியின் அன்புக்கும் அனுசரணைக்கும் மறுப்புச் சொல்ல முடியாமற் போய்விட்டது. பார்க்கக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பூங்குழலிக்கு நன்றி. 

 தமிழரை இழிவு படுத்துவதில், திராவிட அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சங்கரைச் சொல்லலாம். அவருடைய எல்லாப் படங்களிலும் தமிழரைப் பழித்தல் மறைமுகமாக இழையோடும். ரஜனியின் தமிழெதிர்ப்புவாதமும் சங்கரின் தமிழரைப் பழித்தலும் சேர்ந்தே எனக்கு இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தகர்த்திருந்தது. ஆனாலும் பூங்குழலியின் ஆசைக்குப் பலம் அதிகம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு வெறும் திரைப்பட ரசிகனாகப் பார்த்தால் இப்படம் என்னைத் தன் பக்கம் இழுத்திருக்கிறது என்பதனால் அது சங்கருக்கு வெற்றியே. 

 'இந்தியன்', 'அந்நியன்' வரிசையில் மணிரத்னம், சங்கர் போன்றவர்கள் இந்தியாவைத் திருத்துகிறோமென்று தாமும் அதே கூவத்தில்தான் குளித்தெழும்புகிறார்கள். ஆனாலும் தாங்கள் புனித கங்கையிற் குளித்ததாகச் சொல்லி ரசிகர்களை ஏமாற்றி அதில் வெற்றியும் பெறுகிறார்கள். 

இப்படி ஆயிரம் படங்கள் வந்தாலும் ரசிகர்கள் நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாற் பொங்கல் பொங்கியும் ஆட்டுக் கடா வெட்டியும், கற்பூரம் கொழுத்தியும் கொண்டாடுவது நிறுத்தப்பட மாட்டாது. காரணம் அவைகளும் சந்தைப்படுத்தற் திட்டப்படியே நடைபெறுகின்றன. 

மொத்தத்தில் சங்கர், ரஜனி, மெய்யப்பன் போன்ற கறுப்புப்பண தாதாக்களையும் ரஜனி ரசிகர்களையுமே இப்படம் திருத்த முயல்கிறது. ஆனாலும் இந்தியாவின் பிரச்சினகளை மீண்டும் மீண்டும் காட்டிக் கொள்வது இந்தியா திருந்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலவீனமான ரசிகர்கள் இதற்குப் பலிக்கடாவாகிறார்கள் என்பதே கவலை. 

எப்போதுமே கெட்டவர்களும், சோம்பேறிகளும், பாமரர்களும், நம்பத் தகாதவர்களும், குரூர முகங்களைக் கொண்டவர்களும் தமிழர்களாகக் காட்டப்படுவது சங்கரின் முத்திரை. 'சிவாஜி' படத்திலும் இது விதி விலக்கல்ல. 

 'அவன் என்னோட படிச்ச ஐயர்ப் பையன். நம்பிக்கையாகக் கொடுக்கலாம்' என்று விவேக் ரஜனிக்குச் சொல்வதன் மூலம் சங்கர் திராவிடருக்கு உச்சி அடி போடுகிறார். 

 இப்படம் வசூலை எதிர்பார்த்துத் தயாரிக்கப்பட்டது. இளைய தலைமுறையினதும் பாமர ரசிகர்களினதும் பலவீனங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற சங்கருக்கு அது பிரச்சினையே அல்ல. பொழுது போக்கு ஒன்றே நோக்கம் என்று இப்படம் பார்க்கப் போவோரை அது ஏமாற்றவில்லை. ரஜனியும் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். 

 எல்லோருக்கும் வெற்றி தமிழினத்தைத் தவிர. இதற்குக் காரணமானவரே தமிழராகவிருக்கும்போது யாரைக் குறை சொல்வது?

செவ்வாய், 19 ஜூன், 2007

காதல் -King Arthur - கார்ல் ஜுங்

காதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற இந்தக் காலத்தில்....

இந்தக் காதலெல்லாம் காதலேயல்ல என்று சொன்னால் சங்க காலத்து அகத்திணை நூல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.

உண்மையில் 'நம்ம சினிமாவில' வார காதல்தான் 'நிஜமான' காதல் என்று ஆதர் ராஜா (King Arthur) வைக் காரணம் காட்டி நவீன உளவியல் விற்பன்னர்கள் கூறுகிறார்கள். சரி ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறதா? மேலே படியுங்கள்.

சில வருடங்களுக்கு முன் லண்டனில் நான் வாழ்ந்தபோது இச் சம்பவம் நடந்தது. எனது நண்பர் ஒருவர் சாகசக்காரர். 'குழப்படிக்காரன்' என்ற ரகத்தில் இலகுவாக அடங்குவார். Handsome ஆனவர் என்று அவரைச் சொல்ல முடியாது. நாங்கள் வழக்கமாகப் போகும் மதுச்சாலைக்கு வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு என் நண்பர் மீது பிரியம். என் நண்பரைவிட அப் பெண்ணுக்கு வயது இரண்டு மடங்கிற்கு மேல். திருமணம் முடித்து இரண்டு வளர்ந்த பையன்கள் உண்டு. கணவன் ஆஜானுபாகுவான ஆனால் நல்ல சுபாவமுள்ளவன். அவனும் அவளோடு மது அருந்த வருவதுண்டு.

விடயம் முற்றி ஒரு நாள் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு எனது நண்பன் தனிக்குடித்தனம் ஆரம்பித்து விட்டான். எனக்கு அது சரியானதாகப் படவில்லை.

'நல்ல கம்பீரமான கணவனும் இரண்டு அழகான குழந்தைகளும் இருக்கும்போது நீ ஏன் இப்படியொரு காரியத்தைச் செய்தாய்?' என்று நான் அவளிடமே கேட்டேன்.

' என் கணவன் நல்லவன் தான். ஆனால் அவன் சதா என் காலுக்குள்ளேயே கிடப்பான். இரவு இரண்டு மணிக்கு போய் சிகரட் வாங்கிக்கொண்டு வா என்றால் ஓடுவான். ஆனல் உன்னுடைய நண்பனோ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான் என்று நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்' அதுதான் வித்தியாசம் என்றாள்.

அவளது மனோநிலையைப் புரிந்துகொள்ள நாம் விஞ்ஞானியாயிருக்க வேண்டியதில்லை. அவளைப் போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவள் ஒரு துணிச்சல்காரி அவ்வளவுதான்.

எமது விருப்பு வெறுப்புகள் எல்லாம் ஒரு வகையில் ஆழ்மனத்தில் பதிவுகளாகி இருக்கின்றன. எமக்குக் கிடைப்பவை இப் பதிவுகளோடு ஒத்தவையாகிவிட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள். இல்லாதபோது கிடப்பவற்றை இரண்டாம், மூன்றாம் பட்சமாகவே ஏற்றுக்கொள்வோம்.

இலட்சிய கனவன் பற்றி அவள் கொண்டிருந்த 'பதிவு' திருப்தியற்றதாக இருந்திருக்கலாம். அப்படியானால் அவள் அப் பதிவை எங்கிருந்து பெற்றாள்?

இங்குதான் King Arthur ஐத் துணைக்கழைத்துக் கொண்டு வருகிறார் கார்ல் ஜுங். எல்லா மனிதர்களினதும் ஆழ்மனங்களில் சில மூலப்படிவங்கள் (archetypes) துயில் கொள்கின்றன என்றும் அவை எங்கும் எக்காலத்திலும் கனவுகள் மூலம் வெளிக்கொணரப்படலாம் என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார்.

ஆர்தர் மன்னனை ஒரு புராண நாயகனாகப் பார்ப்பதனால் தான் அவனை மக்கள் மோகிக்க முடிகிறது. அவனது துணிச்சலான சாகசமிக்க வாழ்வே அவனைக் காதலின் ஒரு மூலப்படிவமாக்கியிருக்கிறது.

இன்றய சினிமாவின் அடி தடி வல்லவர்களும், படை வீரர்களும் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பதின் காரணமுமிதுவே.

துணிச்சலான காரியங்களைச் செய்யும் நாயகர்களைப் பற்றி எழுகின்ற மோகமே காதலாகப் பரிணமிக்கிறது. இந்நாயகர்களைச் (இரு பால்)சுற்றி எழுப்பப்படும் பிம்பம் (image) மனங்களில் நிரந்தரமாகவே பதிக்கப்பட்டு விடுகிறது. நமது காப்பிய நாயகர்களான கண்ணனும், ராமனும் தெய்வங்களாகப் பார்க்கப்படுவதைவிட 'காதலர்' களாகப் பார்க்கப் படுவதும் பக்த சிரோன்மணிகள் பரவசப் படுவதுமே அதிகம். முப்புரமெரித்த சிவனின் மீதும் ஆறு படை வீடுகளைக் கொண்ட முருகன் மீதும் கண்ணீர் சொரிந்து பாடப்பட்ட பக்தி இலக்கியங்கள் அக் கடவுள்களை நாயகர்களாக (heroes) உருவகப்படுத்தியதின் விளைவுகளே.

மேற்கத்திய இலக்கியங்கள் காதல் (romance) என்றதும் King Arthur ஐ உதாரணமாகக் காட்டுவதற்குக் காரணம் அம் மன்னன் புரிந்த சாகசங்களினால் (adventures) மக்கள் கவரப்பட்டமையே.

புராண காலங்களிலிருந்து இப்படிப்பட்ட பிம்பங்கள் உருவாக்கப்படுவதும் (அது கற்பனைக் கதைகளாகவோ அல்லது நிஜமாகவே சாகசம் புரிந்த மானிடர்களாகவோ இருக்கலாம்) அவற்றைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடுவதும் காலப்போக்கில் அவற்றில் சில தெய்வங்களாக்கப்பட்டு வழிபடப்படுவதும் வழக்கமாக வந்துள்ளது. (இன்றய தமிழ்ச் சினிமா உருவாக்கிய சினிமாத் தெய்வங்களைப் போலவே). இவ்வுருவ வழிபாடுகளை வெறும் கல்லார் செயல்களென நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு இன்றய தமிழ் சினிமாவே நல்ல உதாரணம். மதுரையை எரிக்காது கண்ணகி வெறுமனே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போயிருப்பின் இன்று அவள் தெய்வமாக ஆக்கப்பட்டிருக்க மாட்டாள்.

அதற்காக நம்ம பகுத்தறிவுக் கொழுந்துகள் ஆர்ப்பரிக்கவும் முடியாது. பிள்ளையாரின் கற்சிலையைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவ்விடத்தில் இன்னுமொரு சிலையைத்தானே வைக்கிறார்கள். அச்சிலைக்கும் இன்னுமொரு ஆயிரம் வருடங்களில் மூன்று சாமப் பூசைகள் நடக்காதென்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவே நாயகர்கள் உருவாகப்படுவதும் அச்ச்ம்பவங்கள் புராணங்களாகும்போது அதே நாயகர்கள் தெய்வங்களாக மாற்றமெடுப்பதும் நெடுங்கால நடைமுறை. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ உளவியல் ஞானி கார்ல் ஜுங் ஏற்றுக்கொள்கிறார்.

1913ம் ஆண்டு தனது குருவான சிக்மண்ட் பிராய்ட் டுடன் கருத்து வேறுபாடு கொண்டு புறப்பட்ட கார்ல் ஜுங் உலகின் பல மூலைகளிலுமிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு அவர் தனது கருதுகோளை நிரூபிக்கிறார்.

இடுகுறி (symbol), கொள்கை (theme ?), பகைப்புலம் (setting) அல்லது குணாம்சம் (character) போன்ற மூலப் படிவங்கள் (archetypes) பல தொடர்பற்ற இடங்களிலும், காலங்களிலும், இலக்கியங்களிலும் மீண்டும் மீண்டும் தோற்றம் பெறுகின்றன. இப்படியான மூலப் படிவங்களை ஆழ்மனச் சேர்க்கை (collective unconscious) என்று கார்ல் ஜுங் கூறுகிறார். வீரத்தின் (சாகசத்தின்) அடிப்படையில் தோன்றும் காதலுக்கு மூலப் படிவங்கள் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆதர் ராஜாவை புராண காதலுக்கு உதாரணமாகக் காட்டும்போது அவரின் வாழ்வும் அவர் புரிந்த சாகசங்களுமே அவரை பன்னெடுங்காலமாக நினைவில் வைத்திருக்கின்றன. ஆதர் மன்னனின் வாழ்வு நமது காவியங்களின் கதை அமைப்பையும் அதில் வரும் பாத்திரங்களையும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது. அவற்றில் வருகின்ற பாத்திரங்கள், கதையமைப்பு எல்லாவற்றிலும் பல பொதுமைகள் காணப்படுகின்றன.

அதி மானுட சக்தி (super power) - இராமாயண ராமன்
மானிட மேம்பாடு (bettering humankind) - பகவத் கீதைக் கண்ணன்
துணிவு (courage) - மஹாபாரத வீமன்
மீள் பிறப்பு (resurrection myth) - சூரன் / சிகண்டி
அடியாள் )assistant) - அனுமான்
எதிரி (nemesis) - இராவணன்
இடையூறு (tragic flaw) - சீதை கடத்தப்படுதல்
படிப்பினை (moral) - பிறர் மனை தவிர்த்தல் (இராமயணம்)
சாதுரியம் (clever / sharp)- கிருஷ்ணன்
பணிவு (humble) - தருமன்
மர்மமான பிறப்பு (mysterious birth) - கர்ணன்

ஆதர் மன்னனின் வரலாற்றைப் படித்தவர்கள் மேற்கூறிய பொதுமைகளைக் காணமுடியும்.

எனவே இப்படியான கதைகளும் பாத்திரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எப்படி பல பொதுமைகளோடு உருவாக்கப்பட முடியும்?

கார்ல் ஜுங் 'ஆழ்மனங்களில் தோற்றமளிக்கும் பல வடிவங்கள் 'நாம் வேறெங்கோ பார்த்திருக்கிறோம்' (de-javu) என்கின்ற நினைப்பை உருவாக்குகின்றன என்றும் அவ்வடிவங்கள் பிரபஞ்ச ரீதியாக எல்லா ஆழ்மனங்களிலும் (collective) சம்பவிக்க முடியும்' எனக் கருதுகிறார். ஆழ் மனங்களினிடையே பரிபாஷிக்கப்படும் விடயங்களுக்கு மொழியில்லை பிம்பங்கள் மட்டுமே என அவர் கருதுகிறார்.

இப்படியான உருவங்கள் ஆழ்மனதில் தோன்றி மறையும்போது அவை கனவுகளாகவும் அவை வெளி மனத்தால் நிரந்தரமாக்கப்படும்போது அது மனப்பிறழ்வு நிலையெனக் கருதப்படுகிறது என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார். இன்றய சினிமா உதாரணத்தில் கூறினால் ஒருவர் ரஜனியைக் கனவில் காண்பதற்கும் தினமும் தன்னை ரஜனியாகவே மாற்றிக்கொண்டு விடுபவருக்கும் (பைத்தியம்) வித்தியாசம் உண்டு.

காதலில் மூழ்குபவர்கள் தனது நாயக / நாயகி களின் மீது மோகம் கொள்வத்ற்கு முன்னர் அவர்களது ஆழ்மனங்களில் பல பிம்பங்கள் தோன்றி விடுகின்றன. பெரும்பாலான பெண்கள் போர் வீரர்களையும், சீருடைக்காரரையும், அதிகாரத்திலுள்ளவர்களையும், சாகசம் புரிபவர்களையும், கலகக் காரர்களையும் மோகிப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்ற பிம்பங்கள் ஏற்கெனவே அவர்களது ஆழ்மனங்களில் நடமாடியமையே.

பொன்னார் மேனியன் எத்தனை அடியார்களின் கனவில் தோன்றினார்? புலித் தோலை அரைக்கசைத்திருந்தது பற்றி அடியார்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? முன் பின் யாராவது அடியார்கள் மனத்தில் அப் படிவத்தைப் போட்டு வைத்தார்களா? பலரது கனவுகளில் ஒரே பிம்பங்கள் ஏன் தோன்ற வேண்டும்?

இதையேதான் கார்ல் ஜுங் ஆழ்மனச் சேர்க்கைகளிலிருந்து வரும் மூலப்படிவங்கள் என்கிறாரா?

ஞாயிறு, 17 ஜூன், 2007

இவ்வ்ழியால் வாருங்கள்- திரை விமர்சனம்

யாப்பன விற்கு வாருங்கள்

இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர்.

இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Pura Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளைப் போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. ஹிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார்.ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கின்றனர். இதில் அசோக கங்கம வும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் 'This is my moon ' (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட ''Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Take This Road' (இவ்வழியால் வாருங்கள்- 'Me Paren Enna' ) என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்பது அவசியம். அவற்றில் சில.

• இலங்கையில் கலாச்சாரம் இல்லை, சமூகம் இல்லை, மனித உறவுகள் இல்லை. இருப்பதெல்லாம் தனி மனிதர்கள். அவர்கள் தன்னிச்சையாக இருக்கலாம், விரும்பின் நிர்வாணமாக நடந்து திரியலாம். சுதந்திரமாக செக்ஸ் படம் எடுக்கலாம

• தேசியவாதிகள், இனவாதிகளின் கருத்துப்படி “ இனப்பிரச்சினை மேறகத்தியரால் ஏற்படுத்தப்பட்டது. இவாகளுக்கு மேற்கத்திய சினிமாவும், விஞ்ஞானமும் எதிரி. ஆனால் இன்று வீதியால ஒரு பெண் நடந்து செல்ல முடியாது, பாடசாலைக்கு சிறுவர்கள் வாகனத்தில் கூட பாதுகாப்பாக செல்லமுடியாது. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு, உடையை வாங்கமுடியாதுள்ளது. வெகுசன தொடாபு சாதனங்களில் வன்முறைப்பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும் தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்.

• போரின் விளைவு- உ.ம் - குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.


• நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனில்லை. ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினையை ஆதரிக்கின்றேன். நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றேன்.

இவை அசோக கங்கம இலங்கையைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள்.

This is My Moon (இது என் நிலா)

போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார். இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி 'இது என் நிலா என்கிறான். இதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை தங்களது கைகளில் உள்ளன என்று கூறுவது போல் உள்ளது.இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப்பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா? இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது.இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

இவ்வழியால் வாருங்கள் Take This Road

இந்த 11 வார தொடரை ரூபவாகினி மற்றும் சனல் ஜ தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. இதன் மூலம் 25 விகிதம் கிராம பார்வையாளர்களையும், 41 விகிதம் நகர பார்வையாளர்கயையும் பார்வையிட்டுள்ளனர். இது மொத்தம் 4.1 மில்லியன் மக்களாவார். இதில் தமிழ், முஸலீம் பார்வையாளர்களும் அடங்குவர். இவரது முந்தைய படங்களை தடைசெய்த அரசு, இந்த தொடரை, அதுவும் தனது அரச தொலைக்காட்சி நிறுவனம் மூலம் ஒளிபரப்பச்செய்தமை ஆச்சரியத்துக்குரியதும், சிந்திக்கவேண்டிய விடயமுமே.

A9 பாதை திறந்து விட்ட பொழுது, அவ்வழியே சுபசிங்க குடும்பமும், ஒரு முஸ்லீம் குடும்பமும், பிரயாணிக்கின்றது. சுபசிங்க குடும்பம் நாகதீபத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிங்கள நூல்களும், இணையத்தளங்களும் யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் யாழ்ப்பாணம் வந்த பொழுது சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்தார்கள் என பிரச்காரம் செய்கின்றார்கள். கந்தரோடை, நிலாவரை, உருத்திரபுரம், வவனிக்குளம், சுன்னாகம், கொடியவத்தை, மல்லாகம், உடுவில், புலோலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறிய சுவடுகளை சான்றாக காட்டுகிறர்கள்.( http://easyweb.easynet.co.uk/~sydney/jaffna.htm) கி.மு 1ம் நூற்றாமாண்டு புத்தர், இலங்கைக்கு இரண்டாம் தடவை விஜயம் செய்த பொழுது நாகதீபத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. நாகதீபம், நயினாதீவில் அமைந்துள்ளது. புத்தர் சென்ற தலமாதனால் பௌத்தர்கள் இக் கோவிலுக்கு தரிசனம் செல்வது வழமை.

பயணங்களை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இது கதையை நகர்த்துவதற்கான பொதுவான ஓர் உத்தியாகும். இங்கும் யு9 வழியே சென்று யாழப்பாணத்தை அடைந்து, பின்னர் நாகதீபம் சென்று, மீணடும் வந்து யாழ்ப்பாணம் வந்து தங்குகின்றனர். படத்தின் பெரும்பாலன பகுதி யாழப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாகதீபம் செல்லும் வழியில், சுபசிங்கவின் மகள், தனது முன்னால் பல்கலைக்கழக சகாவும், இந்நாள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரியை சந்திக்கின்றார். இவரின் வேண்டுக்கோளுக்கினங்க யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீட்டில் தங்குகின்றனர். அந்த தமிழ்க் குடும்பத்தில், அவர்களது மகன் இயக்கத்தில் இருந்து விட்டு தங்கியுள்ளார். அரசு சார்பற்ற நிறுவன அதிகாரி நாவலப்பிட்டியிலிருந்து வந்து இந்த வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். சுபசிங்க குடும்பம் மீண்டும் கொழும்புவிற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது, பக்கத்து வீட்டு சிறுமி நிலக்கீழ் குண்டு வெடித்து ஓரு காலை இழந்து விடுகின்றார். இதனால் சுபசிங்கவிற்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதனால் இவர்கள் அதே வீட்டில் தங்குகின்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையிலிருந்த மனப்புகைச்சல், நம்பிக்கையின்மை பின்னர் நீங்கி விடுகின்றது.

யாழ்ப்பாணம் மீண்டும் வந்துள்ள, வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படும் அவலங்கள் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணின்றி, அகதி முகாமிலேயே தஞ்சமாக இருக்கும் இந்த மக்கள் உண்மையில் இந்த போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களது சொந்த வீட்டிலேயே நிலக்கீழ் குண்டுகள். இது வரை எந்த வித மீள் குடியேற்ற திட்டங்களும் இன்றி அவலப்படுகின்றார்கள்.


சுபசிங்கவும், முன்னால் சமசமாஜக் கட்சி உறுப்பினரும், முன்னால் ஆசிரியருமான குடும்பத்தலை வரும், அரசியல் பேசும் பொழுது எழும் விமர்சனங்களில் பண்டாரநாயக்கவையும், இடது சாரிகளையும் விமர்சித்தளவிற்கு, தமிழ் தேசியவாதிகளை, சிங்கள பேரினவாதிகளை விமர்சிக்கவில்லை. இந்த போரின் இன்றைய நிலை இரு இனங்களுக்குமிடையாலான புரிந்துணர்விற்கப்பால் பரந்து விரிந்துள்ளது. மக்களுக்கப்பால் இரு போர் இயந்திரங்களும், துணை இயந்திரங்களும் இயங்குகின்றன. இவை மக்கள் நலனில் அக்கறையின்றி சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றன. நவீன தேசியத்துக்கு, இனங்களுக்கிடையில் தொடர்ச்சியான கருத்துரையாடல்களும், புரிந்துணர்வும் அவசியம். அதனை இயக்குனர் இப்படத்தில் வலியுறுத்துகின்றார். போர் இயந்திரங்களுக்கு அப்பால் மக்கள் தனித்து இயங்குகின்றார்கள். இவர்கள் இணைவை இந்த இயந்திரங்கள் தடுக்கின்றன என்பதை பதிவாக்கியுள்ளார். போரைப்பற்றிய அறிவு சார் மதீப்பீடுகளை (Cognitive Values) இங்கு விவாதிக்கின்றார். (தர்மசேன பத்திராஜ, சொல்லாது உன்னகே என்ற படத்தில் விரிவாக சுதந்திரம் பற்றி விவாதிக்கின்றார்)
ஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர்கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. இவரது குற்ற உணர்வின் வெளிப்பாடாக இவர்கள் தங்கியுpருந்த வீட்டின் மகனை, இவர்களது வாகனஓட்டி தாக்க முற்படும் பொழுது, சுபசிங்கவின் மூத்த மகன் வாகனஓட்டியை அடிப்பது வெளிப்படுகின்றது. சுபசிங்கவுக்கும், குடும்பத்தலைவருக்குமான விவாதங்களில், குடும்பத்தலைவர் குரல், கருத்துக்கள் ஓங்கி இருப்பமை மற்றொரு உதாரணம். இப்படத்தின பெரும்பாலான பார்வையாளர்கள் சிங்களவர்கள். இவர்களையும் இந்த குற்ற உணர்வு தொற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கம். (இந்த குற்றஉணர்வின் வெளிப்பாட்டை, இவரையும் விட சிறப்பாக பிரசன்ன விதானகே, தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.) ஆனாலும் புரிந்துணர்வில் சிங்களவர் மேலோங்கி நிற்பதாக காட்டியுள்ளார். படத்தில் வரும் அரசு சார்பற்ற அதிகாரி மலையகத்தை சோந்தவர். இவர் யாழ் வாழ் மக்களில் ஒருவரக கருதப்படுவதாக காட்டுகின்றார். இது கூட சற்று அதிகம் தான். யாழ் வாழ் சமூகம் இன்னமும் தங்களுக்கிடையில் சாதி, பிரதேச வேறு பாடுகளை முற்றாக கழைந்துவிடவில்லை.
போரில் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, போர் வாழ்வின் தாக்கங்கள், இழப்புக்கள், பிரிவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. அவர்களது அக உணர்வின் அச்சங்களையும் மீறி அறிவுசார் முடிவுகளை, மொழி, மதங்களுக்கப்பால் எடுக்கவைக்கின்றது. எனக் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரும்பாலோனோர் அறிவு சார் முடிவுகளை எடுப்பதில்லை.
ஏனைய வெகுசனத் தொடர்புசாதனங்களை விட சினிமா நவீன தேசியத்துக்கான கற்பிதங்களை மக்கள் மத்தியில் வழங்கும் வல்லமை பெற்றது. அசோக கங்கமவும், நல்ல சினிமா மொழிக’கூடாக இதனை நெறிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் தேசிய, குற்ற விசாரணைக்களுக்கப்பால், வழமையான பொறாமை, குறிப்பாக எதிர் பால் உறவுகளது மீதான பொறாமை, போட்டி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கணித உயர் பட்டதாரியும், இஙகிலாந்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அசோக கங்கம தனது கட்புலத்திற்கூடாக சிங்கள மக்களை நோக்கி விசாரணைகளை முன்வைத்துள்ளார். இது நவீன தேசியத்துக்கான ஓர் விவாதத்தை உருவாக்குமா?


தமிழ்த் தேசியத்தை பொறுத்தவரை, இன்று அதனை கேள்விகளுக்கோ, அல்லது விசாரணைகளுக்கோ இட்டு செல்ல முடியாதுள்ளது. மரணம் வரவேற்கப்படவேண்டிய் ஓர் கலை யாக, வாழ்வாக, இயல்பாக மாறப்பட்டுவிட்டது. எனவே இங்கு புதிய தேசியத்துக்கான எந்த கருத்தாடல்களையும் முன்வைக்க முடியாது. நாம் சார்ந்திருக்கும் நிலை சார்ந்து இயங்குகின்றோம்.. இது ஓர் வகையில் எமது அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால்தான் கொலைகளையும் எந்த வித விசாரணையும் இன்றி ஏற்றுக்கொள்கின்றோம். எமது அறிவுசார் கற்பிதங்கள் புத்தகங்களில் மாத்திரமே. திருநீறு அணிந்து, கூர்ப்பை போதித்தவர்கள் எமது ஆசிரியர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறி சாதிக் கொலை புரிந்தவர்கள். எனவே எம்மிடம் எமது குற்றங்களுக்கான விசாரணைகளை படைப்புக்களாக எதிர்பார்க்க முடியாது.
தமிழ் தேசியம் பற்றி, இந்திய தமிழ் படைப்பாளிகளை விட, எமது படைப்பாளிகளை விட சிங்கள படைப்பாளிகளே அக்கறை காட்டியுள்ளார்கள். சர்வதேசத்துக்கு எமது நிலையை சொல்லும் வல்லமை பெற்றவை. இந்திய படைப்பாளிகளின் வியாபாரத்தன்மையே இப்படத்தை ரொரன்ரோவில் விநயோகிப்பதிலும் கையாளப்பட்டுள்ளது. ஏனோ தானோவாக, பத்தோடு, பத்தாக ரொரண்ரோ கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் இப்படத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. கலையை வியாபாரமாக, தமது வாழ்விற்காக பயன்படுத்துவர்களின் திருவிளையாடல் இது. எது எப்படியிருப்பினும், மக்கள் மத்தியில் இப்படம் சென்றடையவேண்டும.;. இப்படத்தை 2 டொலர்களுக்கு பெரும்பாலான ரொரண்ரோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் ஒரு தடைவ கூற வேண்டியுள்ளது ஆணி வேருக்கோ. புத்திரின் பெயரால் படத்துக்கோ இந் நிலை வராது.

Asoka Handagama
tele-dramas


Dunhinda Addara
Diyakata Pahana
Synthetic Sihina
Neganahira Weralen Asena

Movies
Thani Thatuwen Piyambanna
Me Mage Sandai
-ரதன்

என் உணர்வுகளைத் தொட்ட, தர்க்க மனத்தை விசாரித்த படம் இது. இருப்பினும் ஒருவேளை என்னுள் பதாங்கமாகவேனும் ஒதுங்கியிருக்கலாமென்றஞ்சிய முற்சாய்வைக் காரணம் காட்டி இப்படத்தைத் தமிழ்த் தேசீய அரசியலாற் காயப்படாத இளைஞர்களிடம் பார்க்கும்படி கொடுத்தேன். அவர்களது கருத்துக்கள்:

  • 'இப் படத்தைப் பிரதி செய்து இலவசமாக இலங்கை முழுவதும் விநியோகிக்க வேண்டும்.
  • இப் படத்தை இந்தியாவுக்கு அனுப்பி 'இப்படித்தான் படம் எடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்த வேண்டும்'

இதைவிட இப்படத்துக்கு வேறெந்த விமர்சனம் வேண்டும்.

-சிவதாசன்