செவ்வாய், 19 ஜூன், 2007

காதல் -King Arthur - கார்ல் ஜுங்

காதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற இந்தக் காலத்தில்....

இந்தக் காதலெல்லாம் காதலேயல்ல என்று சொன்னால் சங்க காலத்து அகத்திணை நூல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.

உண்மையில் 'நம்ம சினிமாவில' வார காதல்தான் 'நிஜமான' காதல் என்று ஆதர் ராஜா (King Arthur) வைக் காரணம் காட்டி நவீன உளவியல் விற்பன்னர்கள் கூறுகிறார்கள். சரி ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறதா? மேலே படியுங்கள்.

சில வருடங்களுக்கு முன் லண்டனில் நான் வாழ்ந்தபோது இச் சம்பவம் நடந்தது. எனது நண்பர் ஒருவர் சாகசக்காரர். 'குழப்படிக்காரன்' என்ற ரகத்தில் இலகுவாக அடங்குவார். Handsome ஆனவர் என்று அவரைச் சொல்ல முடியாது. நாங்கள் வழக்கமாகப் போகும் மதுச்சாலைக்கு வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு என் நண்பர் மீது பிரியம். என் நண்பரைவிட அப் பெண்ணுக்கு வயது இரண்டு மடங்கிற்கு மேல். திருமணம் முடித்து இரண்டு வளர்ந்த பையன்கள் உண்டு. கணவன் ஆஜானுபாகுவான ஆனால் நல்ல சுபாவமுள்ளவன். அவனும் அவளோடு மது அருந்த வருவதுண்டு.

விடயம் முற்றி ஒரு நாள் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு எனது நண்பன் தனிக்குடித்தனம் ஆரம்பித்து விட்டான். எனக்கு அது சரியானதாகப் படவில்லை.

'நல்ல கம்பீரமான கணவனும் இரண்டு அழகான குழந்தைகளும் இருக்கும்போது நீ ஏன் இப்படியொரு காரியத்தைச் செய்தாய்?' என்று நான் அவளிடமே கேட்டேன்.

' என் கணவன் நல்லவன் தான். ஆனால் அவன் சதா என் காலுக்குள்ளேயே கிடப்பான். இரவு இரண்டு மணிக்கு போய் சிகரட் வாங்கிக்கொண்டு வா என்றால் ஓடுவான். ஆனல் உன்னுடைய நண்பனோ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான் என்று நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்' அதுதான் வித்தியாசம் என்றாள்.

அவளது மனோநிலையைப் புரிந்துகொள்ள நாம் விஞ்ஞானியாயிருக்க வேண்டியதில்லை. அவளைப் போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவள் ஒரு துணிச்சல்காரி அவ்வளவுதான்.

எமது விருப்பு வெறுப்புகள் எல்லாம் ஒரு வகையில் ஆழ்மனத்தில் பதிவுகளாகி இருக்கின்றன. எமக்குக் கிடைப்பவை இப் பதிவுகளோடு ஒத்தவையாகிவிட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள். இல்லாதபோது கிடப்பவற்றை இரண்டாம், மூன்றாம் பட்சமாகவே ஏற்றுக்கொள்வோம்.

இலட்சிய கனவன் பற்றி அவள் கொண்டிருந்த 'பதிவு' திருப்தியற்றதாக இருந்திருக்கலாம். அப்படியானால் அவள் அப் பதிவை எங்கிருந்து பெற்றாள்?

இங்குதான் King Arthur ஐத் துணைக்கழைத்துக் கொண்டு வருகிறார் கார்ல் ஜுங். எல்லா மனிதர்களினதும் ஆழ்மனங்களில் சில மூலப்படிவங்கள் (archetypes) துயில் கொள்கின்றன என்றும் அவை எங்கும் எக்காலத்திலும் கனவுகள் மூலம் வெளிக்கொணரப்படலாம் என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார்.

ஆர்தர் மன்னனை ஒரு புராண நாயகனாகப் பார்ப்பதனால் தான் அவனை மக்கள் மோகிக்க முடிகிறது. அவனது துணிச்சலான சாகசமிக்க வாழ்வே அவனைக் காதலின் ஒரு மூலப்படிவமாக்கியிருக்கிறது.

இன்றய சினிமாவின் அடி தடி வல்லவர்களும், படை வீரர்களும் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பதின் காரணமுமிதுவே.

துணிச்சலான காரியங்களைச் செய்யும் நாயகர்களைப் பற்றி எழுகின்ற மோகமே காதலாகப் பரிணமிக்கிறது. இந்நாயகர்களைச் (இரு பால்)சுற்றி எழுப்பப்படும் பிம்பம் (image) மனங்களில் நிரந்தரமாகவே பதிக்கப்பட்டு விடுகிறது. நமது காப்பிய நாயகர்களான கண்ணனும், ராமனும் தெய்வங்களாகப் பார்க்கப்படுவதைவிட 'காதலர்' களாகப் பார்க்கப் படுவதும் பக்த சிரோன்மணிகள் பரவசப் படுவதுமே அதிகம். முப்புரமெரித்த சிவனின் மீதும் ஆறு படை வீடுகளைக் கொண்ட முருகன் மீதும் கண்ணீர் சொரிந்து பாடப்பட்ட பக்தி இலக்கியங்கள் அக் கடவுள்களை நாயகர்களாக (heroes) உருவகப்படுத்தியதின் விளைவுகளே.

மேற்கத்திய இலக்கியங்கள் காதல் (romance) என்றதும் King Arthur ஐ உதாரணமாகக் காட்டுவதற்குக் காரணம் அம் மன்னன் புரிந்த சாகசங்களினால் (adventures) மக்கள் கவரப்பட்டமையே.

புராண காலங்களிலிருந்து இப்படிப்பட்ட பிம்பங்கள் உருவாக்கப்படுவதும் (அது கற்பனைக் கதைகளாகவோ அல்லது நிஜமாகவே சாகசம் புரிந்த மானிடர்களாகவோ இருக்கலாம்) அவற்றைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடுவதும் காலப்போக்கில் அவற்றில் சில தெய்வங்களாக்கப்பட்டு வழிபடப்படுவதும் வழக்கமாக வந்துள்ளது. (இன்றய தமிழ்ச் சினிமா உருவாக்கிய சினிமாத் தெய்வங்களைப் போலவே). இவ்வுருவ வழிபாடுகளை வெறும் கல்லார் செயல்களென நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு இன்றய தமிழ் சினிமாவே நல்ல உதாரணம். மதுரையை எரிக்காது கண்ணகி வெறுமனே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போயிருப்பின் இன்று அவள் தெய்வமாக ஆக்கப்பட்டிருக்க மாட்டாள்.

அதற்காக நம்ம பகுத்தறிவுக் கொழுந்துகள் ஆர்ப்பரிக்கவும் முடியாது. பிள்ளையாரின் கற்சிலையைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவ்விடத்தில் இன்னுமொரு சிலையைத்தானே வைக்கிறார்கள். அச்சிலைக்கும் இன்னுமொரு ஆயிரம் வருடங்களில் மூன்று சாமப் பூசைகள் நடக்காதென்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவே நாயகர்கள் உருவாகப்படுவதும் அச்ச்ம்பவங்கள் புராணங்களாகும்போது அதே நாயகர்கள் தெய்வங்களாக மாற்றமெடுப்பதும் நெடுங்கால நடைமுறை. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ உளவியல் ஞானி கார்ல் ஜுங் ஏற்றுக்கொள்கிறார்.

1913ம் ஆண்டு தனது குருவான சிக்மண்ட் பிராய்ட் டுடன் கருத்து வேறுபாடு கொண்டு புறப்பட்ட கார்ல் ஜுங் உலகின் பல மூலைகளிலுமிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு அவர் தனது கருதுகோளை நிரூபிக்கிறார்.

இடுகுறி (symbol), கொள்கை (theme ?), பகைப்புலம் (setting) அல்லது குணாம்சம் (character) போன்ற மூலப் படிவங்கள் (archetypes) பல தொடர்பற்ற இடங்களிலும், காலங்களிலும், இலக்கியங்களிலும் மீண்டும் மீண்டும் தோற்றம் பெறுகின்றன. இப்படியான மூலப் படிவங்களை ஆழ்மனச் சேர்க்கை (collective unconscious) என்று கார்ல் ஜுங் கூறுகிறார். வீரத்தின் (சாகசத்தின்) அடிப்படையில் தோன்றும் காதலுக்கு மூலப் படிவங்கள் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆதர் ராஜாவை புராண காதலுக்கு உதாரணமாகக் காட்டும்போது அவரின் வாழ்வும் அவர் புரிந்த சாகசங்களுமே அவரை பன்னெடுங்காலமாக நினைவில் வைத்திருக்கின்றன. ஆதர் மன்னனின் வாழ்வு நமது காவியங்களின் கதை அமைப்பையும் அதில் வரும் பாத்திரங்களையும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது. அவற்றில் வருகின்ற பாத்திரங்கள், கதையமைப்பு எல்லாவற்றிலும் பல பொதுமைகள் காணப்படுகின்றன.

அதி மானுட சக்தி (super power) - இராமாயண ராமன்
மானிட மேம்பாடு (bettering humankind) - பகவத் கீதைக் கண்ணன்
துணிவு (courage) - மஹாபாரத வீமன்
மீள் பிறப்பு (resurrection myth) - சூரன் / சிகண்டி
அடியாள் )assistant) - அனுமான்
எதிரி (nemesis) - இராவணன்
இடையூறு (tragic flaw) - சீதை கடத்தப்படுதல்
படிப்பினை (moral) - பிறர் மனை தவிர்த்தல் (இராமயணம்)
சாதுரியம் (clever / sharp)- கிருஷ்ணன்
பணிவு (humble) - தருமன்
மர்மமான பிறப்பு (mysterious birth) - கர்ணன்

ஆதர் மன்னனின் வரலாற்றைப் படித்தவர்கள் மேற்கூறிய பொதுமைகளைக் காணமுடியும்.

எனவே இப்படியான கதைகளும் பாத்திரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எப்படி பல பொதுமைகளோடு உருவாக்கப்பட முடியும்?

கார்ல் ஜுங் 'ஆழ்மனங்களில் தோற்றமளிக்கும் பல வடிவங்கள் 'நாம் வேறெங்கோ பார்த்திருக்கிறோம்' (de-javu) என்கின்ற நினைப்பை உருவாக்குகின்றன என்றும் அவ்வடிவங்கள் பிரபஞ்ச ரீதியாக எல்லா ஆழ்மனங்களிலும் (collective) சம்பவிக்க முடியும்' எனக் கருதுகிறார். ஆழ் மனங்களினிடையே பரிபாஷிக்கப்படும் விடயங்களுக்கு மொழியில்லை பிம்பங்கள் மட்டுமே என அவர் கருதுகிறார்.

இப்படியான உருவங்கள் ஆழ்மனதில் தோன்றி மறையும்போது அவை கனவுகளாகவும் அவை வெளி மனத்தால் நிரந்தரமாக்கப்படும்போது அது மனப்பிறழ்வு நிலையெனக் கருதப்படுகிறது என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார். இன்றய சினிமா உதாரணத்தில் கூறினால் ஒருவர் ரஜனியைக் கனவில் காண்பதற்கும் தினமும் தன்னை ரஜனியாகவே மாற்றிக்கொண்டு விடுபவருக்கும் (பைத்தியம்) வித்தியாசம் உண்டு.

காதலில் மூழ்குபவர்கள் தனது நாயக / நாயகி களின் மீது மோகம் கொள்வத்ற்கு முன்னர் அவர்களது ஆழ்மனங்களில் பல பிம்பங்கள் தோன்றி விடுகின்றன. பெரும்பாலான பெண்கள் போர் வீரர்களையும், சீருடைக்காரரையும், அதிகாரத்திலுள்ளவர்களையும், சாகசம் புரிபவர்களையும், கலகக் காரர்களையும் மோகிப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்ற பிம்பங்கள் ஏற்கெனவே அவர்களது ஆழ்மனங்களில் நடமாடியமையே.

பொன்னார் மேனியன் எத்தனை அடியார்களின் கனவில் தோன்றினார்? புலித் தோலை அரைக்கசைத்திருந்தது பற்றி அடியார்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? முன் பின் யாராவது அடியார்கள் மனத்தில் அப் படிவத்தைப் போட்டு வைத்தார்களா? பலரது கனவுகளில் ஒரே பிம்பங்கள் ஏன் தோன்ற வேண்டும்?

இதையேதான் கார்ல் ஜுங் ஆழ்மனச் சேர்க்கைகளிலிருந்து வரும் மூலப்படிவங்கள் என்கிறாரா?

கருத்துகள் இல்லை: