திங்கள், 25 ஜூன், 2007

சிவாஜி - வழமையான சங்கர் .......

சிவாஜி பார்த்தேன். முதலில் பார்ப்பதற்கான எண்ணம் இருக்கவில்லை. பூங்குழலியின் அன்புக்கும் அனுசரணைக்கும் மறுப்புச் சொல்ல முடியாமற் போய்விட்டது. பார்க்கக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பூங்குழலிக்கு நன்றி. 

 தமிழரை இழிவு படுத்துவதில், திராவிட அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சங்கரைச் சொல்லலாம். அவருடைய எல்லாப் படங்களிலும் தமிழரைப் பழித்தல் மறைமுகமாக இழையோடும். ரஜனியின் தமிழெதிர்ப்புவாதமும் சங்கரின் தமிழரைப் பழித்தலும் சேர்ந்தே எனக்கு இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தகர்த்திருந்தது. ஆனாலும் பூங்குழலியின் ஆசைக்குப் பலம் அதிகம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு வெறும் திரைப்பட ரசிகனாகப் பார்த்தால் இப்படம் என்னைத் தன் பக்கம் இழுத்திருக்கிறது என்பதனால் அது சங்கருக்கு வெற்றியே. 

 'இந்தியன்', 'அந்நியன்' வரிசையில் மணிரத்னம், சங்கர் போன்றவர்கள் இந்தியாவைத் திருத்துகிறோமென்று தாமும் அதே கூவத்தில்தான் குளித்தெழும்புகிறார்கள். ஆனாலும் தாங்கள் புனித கங்கையிற் குளித்ததாகச் சொல்லி ரசிகர்களை ஏமாற்றி அதில் வெற்றியும் பெறுகிறார்கள். 

இப்படி ஆயிரம் படங்கள் வந்தாலும் ரசிகர்கள் நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாற் பொங்கல் பொங்கியும் ஆட்டுக் கடா வெட்டியும், கற்பூரம் கொழுத்தியும் கொண்டாடுவது நிறுத்தப்பட மாட்டாது. காரணம் அவைகளும் சந்தைப்படுத்தற் திட்டப்படியே நடைபெறுகின்றன. 

மொத்தத்தில் சங்கர், ரஜனி, மெய்யப்பன் போன்ற கறுப்புப்பண தாதாக்களையும் ரஜனி ரசிகர்களையுமே இப்படம் திருத்த முயல்கிறது. ஆனாலும் இந்தியாவின் பிரச்சினகளை மீண்டும் மீண்டும் காட்டிக் கொள்வது இந்தியா திருந்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலவீனமான ரசிகர்கள் இதற்குப் பலிக்கடாவாகிறார்கள் என்பதே கவலை. 

எப்போதுமே கெட்டவர்களும், சோம்பேறிகளும், பாமரர்களும், நம்பத் தகாதவர்களும், குரூர முகங்களைக் கொண்டவர்களும் தமிழர்களாகக் காட்டப்படுவது சங்கரின் முத்திரை. 'சிவாஜி' படத்திலும் இது விதி விலக்கல்ல. 

 'அவன் என்னோட படிச்ச ஐயர்ப் பையன். நம்பிக்கையாகக் கொடுக்கலாம்' என்று விவேக் ரஜனிக்குச் சொல்வதன் மூலம் சங்கர் திராவிடருக்கு உச்சி அடி போடுகிறார். 

 இப்படம் வசூலை எதிர்பார்த்துத் தயாரிக்கப்பட்டது. இளைய தலைமுறையினதும் பாமர ரசிகர்களினதும் பலவீனங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற சங்கருக்கு அது பிரச்சினையே அல்ல. பொழுது போக்கு ஒன்றே நோக்கம் என்று இப்படம் பார்க்கப் போவோரை அது ஏமாற்றவில்லை. ரஜனியும் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். 

 எல்லோருக்கும் வெற்றி தமிழினத்தைத் தவிர. இதற்குக் காரணமானவரே தமிழராகவிருக்கும்போது யாரைக் குறை சொல்வது?

கருத்துகள் இல்லை: