செவ்வாய், 17 ஜூலை, 2007

பொங்கு 'சிங்களம்'

சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததே அதிசயம் என்றார்கள். இப்போது அதைவிடப் பெரிய அதிசயம் இலங்கையில் நடைபெற்றிருக்கிறது.

ஆறென்றால் அது மலையில் ஆரம்பித்து கடலில் விழும். தமிழர் தேசத்திலோ போராறு கடலில் (மாவிலாறு) ஆரம்பித்து (குடும்பி) மலையில் முடிவடைந்திருக்கிறது.

பேரழிவுகளுக்கு முன் அதிசயங்கள் நிகழுமென்பார்கள். மஹிந்தவைப் புலிகள் ஏற்றி வைக்கப் புலிகளை மஹிந்த இறக்கி வைத்திருக்கிறார் குடும்பிமலையிலிருந்து.

அதிசயமேதான்!

புலிகள் இறங்கினார்களா அல்லது இறக்கப்பட்டார்களா என்பது 'குடும்பிமலை ரகசியம்'. இப்போதைக்கு அறிய முற்படுவது தேவையற்றது.

எப்படியாயினும் புலிகள் தந்திரோபயமாகத் தப்பி மரபு வழிப் போரிலிருந்து மீண்டும் கரந்தடிப் போர் யுக்தியைக் கையாளப் போகிறார்கள் எனப்படுகிறது.

உண்மை அதுவாகவிருப்பினும் சிங்கள ஆட்சிக்கும் இராணுவத்துக்கும் இது ஓர் பாரிய வெற்றி. உள்ளூர் மக்களிடத்தும் சர்வதேச அரங்கிலும் புலிகளுக்கு இது ஒரு பெரிய தோல்வி.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு இது அரசியல் வெற்றியே தவிர இராணுவ வெற்றியல்ல என்கிறார் சர்வதேசப் புகழ் பெற்ற இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்.

இருக்கலாம். ஆனால் காலம் காலமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இராணுவத்தைப் பாவித்து வருவதே அரசியல் வெற்றிக்காகத்தானே! மக்களின் அதிருப்தி, சரிந்துவரும் பொருளாதாரம், கட்சியுடைவு என்று பல வழிகளிலும் அதல பாதாளத்தை நோக்கி விழுந்துவிடத் தயாராகவிருந்த மஹிந்த்வுக்கு குடும்பிமலையையே சஞ்சீவியாகப் பெயர்த்துக் கொடுத்துக் காப்பற்றியிருக்கிறார் அனுமார் சரத் பொன்சேகா. தென்னிலங்கை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இருவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான வெகுமதியை மக்களிடமிருந்து ஏற்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களே.

மாறாகப் புலிகள் மக்களுக்குக் கொடுத்த வாகுகுறுதிகளை நிறைவேற்றவில்லை. 'ஒரு வருடமாகவே இப்படித்தான் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எதுவுமே செய்ய முடியாது' என்று இராணுவ அதிகாரி கேலியாகப் பேசுகிற அளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன.

புலிகளைத் தெரிந்தவர்கள் வழமைபோற் சிரிப்போடு உதாசீனம் செய்கிறார்கள். பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அவர்கள் தயாராகிறார்கள் என்பதிலும் இரண்டாம் அபிப்பிராயமில்லை. முன்பு பல தடவைகள் இதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதுவேதான்.

ஈழ்த் தமிழர்களுக்கு அதுவே இறுதி நம்பிக்கையும்கூட. இலங்கை அரசுகளை நம்பி ஏமாந்தார்கள். இந்தியாவை நம்பி ஏமந்தார்கள். இறுதியாக சர்வதேசங்களை நம்பி மோசமே போய்விட்டார்கள்.

இந்த நிலையில் புலிகள் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்கு எப்படி எப்போது என்பது மர்மமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மூதூர் கிழக்கு, சம்பூர், குடும்பிமலை என்று தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோய்க்கொண்டிருக்க இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அரை வயிறுகளோடு சில்லுக்கும் செல்லுக்கும் தப்பி நெடுங்காலம் வாழமுடியாது. அரசிடம் இருந்து இவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. அவர்களை மீண்டும் அவர்களது நிலங்களிற் குடியேற்றுவது தமிழர் கடமை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒரு பேருண்மையை உணர வேண்டும். ஜே.வி.பி போன்ற தென்னிலங்கை இனவாதிகளின் (இவர்களை மார்க்சீயவாதிகள் என்றால் அது மேதை மார்க்ஸ் இற்கு இழுக்கு!) ஒரே நோக்கம் இலங்கை முழுவதையும் ஒரு பெளத்த சிங்கள நாடாக்குவதே. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தளவுக்கு அவர்களது திட்டங்கள் நிறைவேறியிருக்காது. புலிகள் எந்தளவுக்கு கோமாளியான ராஜபக்ஷவைப் பாவித்து தமது தனி ஈழத்தைப் பெற முயற்சித்தார்களோ அதே போன்றுதான் ஜே.வி.பி. யினரும் ராஜபக்ஷவுடன் கூட்டணியமைப்பதன்மூலம் தமது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தார்கள். இன்றய கள நிலவரத்தின்படி ஜே.வி.பி. யினர் தமது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரிப்பு, கிழக்கின் வெற்றி எல்லாம் ஜே.வி.பி. யின் திட்டங்களே.

கிழக்கைக் கைப்பற்றியது இராணுவ வெற்றியல்ல அரசியல் வெற்றிதான் என்று ஒப்புக்குக் கூறினாலும் கிழக்கில் புலிகளின் வெற்றிடத்தையும், மக்களின் இடப்பெயர்வையும் சாதகமாக்கி சிங்களமயமாக்கல் துரிதப்படுத்தப் படுகிறது என்பதே உண்மை. கருணாவின் பிரிவிற்கு முன்னர் இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! இப்பொழுது கருணா விரும்பினாலும் கிழக்கின் சிங்கள மயமாக்கலை நிறுத்த முடியாது. அப்படி முயற்சித்தால் சிங்கள இராணுவம் கருணா அணியைத் துவம்சம் செய்துவிடும். 'வன்னிப் புலிகளை' த் துரத்துகிறோம் என்று மண்ணையே தாரை வார்த்துக் கொடுத்ததே கருணா அணியும் அதன் ஆதரவாளர்களும் சாதித்தது.

இந்த நிலையில் கருணா அணியினர் ஜனநாயக வழிக்குத் திரும்பித் தேர்தல்களிற் பங்கேற்றால் நிலைமை மாறும் என்று நினைக்கலாம். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது உணர்வுகளை அர்சு மதித்திருந்தால் மக்கள் பட்டினியால் வாடும்போது வெற்றி விழாக் கொண்டாடியிருக்க மாட்டார்கள். இராணுவ ஆட்சியோ ஜ்னநாயக ஆட்சியோ சிங்கள மயமாக்கல் அதி வேகத்தில் நடைமுறைப் படுத்தப்படும். இதைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி-கருணா அணியும் புலிகளும் MOU செய்து கொண்டு போரை உக்கிரப்படுத்துவதுதான். மிகவும் கோபப்படுகிறீர்கள் போலிருக்கிறது. மண்ணைக் காப்பாற்ற இதைவிட வேறேதும் வழியிருந்தால் சொல்லுங்கள்!

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததே தமிழரின் மொழியுரிமை, பிரதேச உரிமை வாழ்வுரிமைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக. அவற்றை இழந்து பெறும் விடுதலைக்கு அர்த்தமில்லை.

கருத்துகள் இல்லை: