திங்கள், 20 பிப்ரவரி, 2017



இரண்டாவது ஈழம்

முகப்பு
எல்லா காரியங்களும் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.

அது ஒரு எதிர்பாராத பயணம். ஒரு வாரத்தில் தீர்மானிக்கப்பட்டது. லண்டனிலிருந்து அவசரம் அவசரமாகப் புறப்படட பயணம். ஒரு வாரத்துக்கு முதல்தான் ஒரு மதுபான நிலையமொன்றில் நண்பர்கள் சந்தித்துக் கொண்டபோது அத் தீர்மானம் நிறைவேறியது..

ஆகஸ்ட்  31, 1983 கனடாவின் கியூபெக் மாகாணத்தின்  மிராபெல்  விமானத்தளத்தில் தரையிறங்கியதிலிருந்து தொடங்கியது எனது  இரண்டாம் காற்பயணம். நான், மனைவி, இரண்டு சிறிய தோள்ப் பைகள் கொஞ்சம் செலவுக்குப் பணம். விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது எனது  நெற்றியில் போடப்பட்ட நாமம் 'அகதி'. அது நானாகத் தேடிக் கொண்ட நாமம்.

 விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரி கேட்டார்.
"போகும் இடத்தின் விலாசம் இருக்கிறதா?"
என்ன பொய்யைச் சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "you never listen to me" என்று மனைவி பொரிந்து விழுந்தாள். அவளுக்குத் தமிழ் தெரியாது. கனடாவிற்குப் போகப் போகிறோம் என்று சொன்னது தருணம் தொடங்கிய சண்டை அது.

அந்த அதிகாரி  முதலே பலருக்கு நாமம் போட்டுப் பழகியிருக்க வேண்டும். மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு  சொன்னார்."ஒரு டக்சியைப் பிடித்துக் கொண்டு மொன்றியாலில் இந்த விலாசத்துக்குப்  போ. அங்கு உனக்கு உதவி செய்வார்கள்.  வெல்கம் டு  கனடா". ஒரு நக்கலான அரைச் சிரிப்புடான் சொன்னார்.

டாக்சி அந்த விலாசத்தில் இறக்கி விட்டது. பிரஞ்சு மொழி தெரியாது. பெயர்ப்பலகையில் இருந்து எதுவும் பிடிபடவில்லை. உள்ளே போனதும் ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும் என்று ஒரு அறைக்குள் அனுப்பினார்கள். ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வரவேற்று தகவல்களைக் கேட்டு பத்திரத்தை நிரப்ப ஆரம்பித்தார். அவருக்கும் ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் எனது உறவினர். நான் போகாமலேயே தெய்வம் குறுக்கால் வந்தது போலிருந்தது. அவரே தொடர்ந்தும் ஆங்கிலத்தில் பேசி  என் மனைவிக்கு முன் கதையைச் சொன்னார். நான் இறுமாப்போடு  மனைவியைப் பார்த்தேன். ரூமுக்கு வா அங்க பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் அவளது பார்வை இருந்தது.

"எங்கே தங்கப் போகிறீர்கள்"
"இனித்தான் ஓட்டல் ஏதும் பார்க்க வேணும்"
"உங்களுக்குப் பிரச்சினை இல்லாட்டி என்ர ரூமிலேயே தங்கலாம். பிறகு இடத்தை எடுத்துக் கொண்டு போகலாம்" என்றார். தெய்வம் குறுக்கால் போகவில்லை. எனது தோளிலேயே உட்கார்ந்து விட்டது.

தான் பணி புரியம் இடம் அகதிகளுக்கு உதவி செய்யும் இடம் எனவும் அதை  எல்லோரும் 'மேடம்' அலுவலகம் எனவும் அழைப்பார்கள் எனவும் அவர் சொன்னார். யாத்திரீகர்கள்  தங்கி இளைப்பாறிப் போகும் மடம் போலத்தான் இதுவும் என நினைத்துக் கொண்டேன். அவர் பெயர் சிவசாமி திருச்செல்வம்.

மாலை ஐந்து மணியிருக்கும். கோடை மலைக் காற்று தென்றலாக இதம் தந்தது. திருச்செல்வத்தோடு  நாங்கள் அவரது  இருப்பிடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். பாதசாரி நடைபாதையில் தெருவைக் கடந்து கொண்டிருந்தபோது இடையே "சித்தப்பா" என்றொரு ஒரு உரத்த குரல் கேட்டது. அவர் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். பாதையோரம் வரை வந்து "என்ன இந்தப் பக்கம்" என்றார். அவர் பெயர் தேவதாசன். அவரும் எனது உறவினர். அவரும் தன் வீட்டில் தான் தங்க வேண்டும் என்று அடம் பிடித்தார்.

திருச்செல்வம் இருந்த அப்பாட்மென்ட் மூன்று அறைகளைக் கொண்டு வசதியாக இருந்தது. ஐந்து ஆறு தமிழ் இளைஞர்கள் இருந்தார்கள். ஒரு அறையைக் காலி செய்து எங்களுக்குத் தந்து சிரமதானம் செய்து கொண்டார்கள். அவர்களில்  பெரும்பாலானோர் ஜேர்மணியிலிருந்து அகதிகளாக வந்திருந்தவர்கள்.

படி 1
நாங்கள் இருந்தது மொன்றியல் நகரின் மையப் பகுதி. பெரும்பாலாருக்கு வேலை இல்லை. 'மேடம்' கொடுக்கும் சிறிய உதவிப் பணம் மட்டுமே சகல தேவைகளையும் சமாளிக்க வேண்டும். நான் இருந்த  வீட்டில்  எட்டுப்  பேர். அந்தக் கட்டிடத்தில் இதர அப்பாட்மென்ட்களில் இன்னும் சில நாமம் போட்ட தமிழர்கள் இருந்தார்கள்.  ஆனால் படுக்கைக்கு மட்டும் தான் அந்த அறைகள். சமையல் சாப்பாடு தண்ணி வென்னி  எல்லாம் திருச்செல்வத்தின்  அறையில்தான்.

அப்போது மொன்றியல் நகரில் திக்குத் திக்காக ஒரு இருநூறு தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள் என நினைக்கிறேன். தமிழர்கள் வியாபாரங்கள் எதுவும் தொடங்கியிருக்கவில்லை. எண்பத்தியிரண்டில் வந்த சில மூத்த தமிழர்கள் சிலர் அகதிகளுக்கு உதவி செய்து வந்தார்கள். அகதி வழக்கு எழுதிக்  கொடுப்பது, சடடத்தரணி, குடிவரவு, மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வது எனப் பலர் உதவியாகவும் உழைப்பாகவும் செய்து வந்தார்கள். கோவில் என்று இல்லை.  ஆனாலும் எந்த சூழலையும் தங்கள் சூழலாக்கி இசைவடையும் ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கோவில்தான். மலைக்  கோவில் என அழைக்கப்படும் கத்தோலிக்க தேவாலயம் தான் பலரது முருகன் கோவில். குன்றில் தானே முருகன் இருப்பான்.

ஒரு சிலர் கூடி ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். 'கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியம்' என்றதற்குப் பெயர். இதில் முன்னின்று உழைத்தவர்களில் திரு பொன்னுச்சாமி, திரு முல்லைத்திலகன்,  திரு கவிதா ராஜன், மறைத்த திரு நந்தகுமார் ஆகியோர் முக்கியமானவர்கள். சங்கமென்று வைத்தால் தமிழை வளர்க்காமல் நம்மவர்கள் விடமாடடார்கள் தானே. 'தமிழ் எழில்' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகை ஒன்று திரு முல்லைத் திலகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

இந்த நாமம் போட்ட  தமிழர்களை விட சில ஆதித் தமிழ்க் குடிகளும் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளிலும் டொரோண்டோ, ஓடடாவா, வினிபெக், ஹாலிபாக்ஸ் போன்ற இடங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் கல்வி, தொழில் நிமித்தம் எழுபதுகளில் குடிவந்தவர்கள். இருப்பினும் எண்பத்தியிரண்டுக்குப் பின்னர் வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் மட்டுமல்ல முதன் முதலில் கனடாவில் ஒரு தமிழ்ச் சமூகமாக வாழத் தொடங்கியவர்கள்.

ஈழத்து அரசியல் பிரச்சினைகள், எண்பத்தி மூன்று இனக்கலவரம் என்பன கனடிய தொலைக்காட்சிகளில் எம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம். மூத்த குடிகள் பலர் புதிய தமிழர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர். மொன்றியாலில் பொறியியலாளர்களாகப் பணி புரிந்த திரு.பாலேந்திரன், சுப்பிரமணியம் ஐயர், ஓடடாவாவில் கலாநிதி இலகுப்பிள்ளை, திரு.சிவசுந்தரம், டொரோண்டோவில் திரு.சிறிஸ் கந்தராஜா, திரு.தேவதாசன், திரு.புனிதவேல் என்று பலர் புதிய தமிழர்களுக்கு பல வகைகளிலும் உதவிகளை புரிந்தனர்.

அப்போது டொரோண்டோ வந்திறங்கும் அகதிகளுக்கு உதவிப்பணம் வழங்கப்படுவதில்லை. அதனால் பெரும்பாலான 'திக்கற்ற' அகதிகள் மொன்றியலை நோக்கியே வந்துகொண்டிருந்தார்கள். உறவுகள், நண்பர்களின் ஆதரவு பெற்றவர்கள் டொரோண்டோவில் தங்கினார்கள். இங்கு வேலைகளைப் பெறுவதும் இலகுவாக இருந்தது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கல்வி கற்பிப்பதும் முக்கிய நோக்கமாகவிருந்தது.

ஆனாலும் மொன்றியல் ஒரு சிறு நகரம் என்பதும் இலகுவில் சங்கமிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருந்ததும் மகிழ்ச்சியான சமூக வாழிடமாக எமது மக்களால் தெரிவு பெற்றது. துயரமான தாயக நினைவுகளைத் தாங்கி வந்திருந்த நம்மவர்களுக்கு இந்த சமூக உருவாக்கம் அவசியமான ஒளடதமாக இருந்தது. டொரோண்டோவில் வாழ்ந்த தமிழர்கள் வருவாயில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மொன்றியல் தமிழர்களின் மகிழ்வுத் தரத்தை  அவர்களால் சற்றுத்  தாமதமாகவே  எட்டக்கூடியதாக இருந்தது.

ஆரம்பத்தில் பொதுநலவாய நாடுகளின் குடிகள் கனடா வருவதற்கு விசா தேவையாக இருந்திருக்கவில்லை. பின்னர் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஈழத்தமிழருக்கு விசா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பிந்திய அகதிகள் பயண முகவர்கள் மூலமோ அல்லது அடையாள மாற்றங்களை மேற்கொண்டோ தான் வர முடிந்தது.

இந்தக் காலத்தில் பல மூத்த குடிகள் பல நிலை அரசுகளுடனும் உறவுகளைப் பேணி ஈழத் தமிழர்களின் வருகையை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டார்கள். பல அகதிகள் நிரந்தர வதிவிடம் பெற்று தமது உறவுகளை ஈழத்திலிருந்து குறுகிய காலங்களில் வருவிக்கக் கூடியதாகவிருந்தது.

எண்பத்தி மூன்று / நான்கு காலத்தில் ஈழத் தமிழர் ஒன்றியம் அட்வாட்டர் என்னுமிடத்திலுள்ள ஒரு தேவாலயத்தின் கீழறைக்குள் தஞ்சம் புகுந்தது. வண பிதா பிரான்சிஸ் சேவியர் அவர்கள் இந்த தேவாலயத்தில் இலவசமாக இந்த அறையைப் பெற்றுக்  கொடுத்தார். தொண்டர்களின் உதவியுடன் 'ஒன்றியம்' ஒரு நூலகத்தையும் தொலைபேசிச் செய்தித் சேவையையும் செய்து வந்தது. விமான நிலையத்தில் வந்திறங்கும் போக்கற்ற அகதிகளை அதிகாரிகள் ஒன்றியத்துக்கு அனுப்பிவிடுவதுமுண்டு.

இதன் பின்னர்  உதவி மனப்பான்மை கொண்ட 'மூத்த' தமிழர்களும் ஒன்றியத்துடன் இணைந்து பல சேவைகளைச் செய்தார்கள். பல அரசியல் வாதிகளுடனும் ஊடகங்களுடனும் தொடர்புகள் உருவாகின. ஈழத்தமிழரின் உத்தியோக பூர்வமான பிரதிநிதியாக ஒன்றியத்தை பெரும் சமூகம்  அங்கீகரித்தது.

இதே கால கட்டத்தில் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சிலர் 'தமிழர் ஒளி' என்றொரு அமைப்பையும் தோற்றுவித்து அதன் மூலம் பல சமூக, கலை கலாச்சாரப்பணிகளைச் செய்து வந்தார்கள்.

அக்காலத்தில் கியூபெக் மாகாணத்தில்  இருந்த தமிழ் அகதிகள் இலவச அரச  மருத்துவ உதவிகள் பெறுவதற்கான அட்டைகளைப் பெற்றுக் கொடுத்தத்தில் மூத்த தமிழர்களுக்கும் ஈழத்  தமிழர் ஒன்றியத்திற்கும் பெரிய பங்குண்டு.

அத்தோடு, மிராபெல் விமானநிலையத்தில் வந்திறங்கும் தமிழ்  அகதிகள் தடுப்பு நிலையங்களில் இருக்காது வெளியே வரவேண்டுமானால்  நிரந்தர வதிவுடமையுள்ளவர்கள் பிணை நிற்கவேண்டிய தேவையும் இருந்தது. இதற்காக நிரந்தர பதிவுடமையுடைய தமிழர்களைத் தேடி தொலைபேசிக்  கோவைகளைபி புரட்ட  வேண்டி இருந்தது. கலாநிதி இலகுப்பிள்ளை போன்றவர்கள் இந்த விடயத்தில் பெரிதும் உதவினார்கள்.

வசதி படைத்த தமிழ் நாட்டுத் தமிழர் பலர்  மொன்றியல் தீவிற்கு வெளியே புரோஸார்ட், வெஸ்ட் ஐலண்ட் போன்ற பகுதிகளில் வாழ்த்து வந்தனர். தமிழர் கலாச்சாரத்தைப் பேணுவதில் அதிக விருப்புள்ள பலரை திரு பாலேந்திரன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார். பிரட் அண்ட் விட்னி என்ற பொறியியல் நிறுவனத்தில் அவரோடு பணி  புரிந்த இராஜசேகரன் என்ற தமிழ்நாட்டு இளைஞர் இவர்களில் முக்கியமானவர். ஒன்றியத்தினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் பொங்கல் விழாவில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இராஜசேகரன் இசைக்கலையிலும் வல்லவர். அவரது இசைக்குழுவில்  இருந்த ஒரு கியூபெக் காரர் இந்த விழாவொன்றில் முற்றிலும் தமிழில் பாடி அசத்தியமை அப்போது ஆச்சரியமாக இருந்தது.

திருச்செல்வம் இருந்த அப்பாட்மெண்டில் பாஸ்கரன் என்றொரு இளைஞரும் வசித்து வந்தார். அவர்  வீடியோ கசட்டுகளில் தமிழ்ப் படங்களைப்  பிரதிபண்ணி வாடகைக்கு கொடுத்துவந்தார். அதனால் அவரை வீடியோ பாஸ்கரன் என்று தான் பலரும் அழைப்பர். கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இல்லை மறை காயாக வாழ்ந்த தமிழர் பலரை ஒன்றிணைய வைத்ததில் ஒன்றியத்துக்கு இணையான பங்கு இவருக்குமுண்டு. புதிய படமொன்று  ரிலீஸாகிவிடடால் அவருடைய  வாசலில் லைன் நிற்கும். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

இதன் பிறகு ஈழத்தமிழர்கள் பலர் சுய தொழில் முயற்சியில் இறங்கினார்கள். முதலில்லாமல் உடனே தொடங்கக்கூடிய ஒரே தொழில் சீட்டுப்  பிடித்தல் தானே.  அதில் இறங்கி தொப்பி வாங்கியவர்களும் உண்டு தொப்பி போட்டவர்களும் உண்டு. ஆனாலும் பலரின் உறவுகளைக் கனடாவிற்கு அழைப்பதற்கு இச் சீட்டு முதலாளிகள் பெருமுதவிகளைச் செய்ததை மறுக்க முடியாது.

ஆளிறக்குதல் (பயண முகவர்) அடுத்த பெரும் தொழிலாகப் பரிணமித்தது. இதுவும் சீட்டுத் தொழிலும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படடன. நிறைய இளைய தலைமுறையினரை இராணுவத்தினரிடமிருந்தும் இயக்கங்களிடமிருந்தும் காப்பாற்றிய தொழில்கள் இவை.

1986 கனடாவில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. 155 ஈழத்தமிழ் அகதிகள் வந்த கப்பலொன்று நியூபவுண்டலாந்துக் கரையில் ஒதுங்கிய செய்தி ஊடகங்களை ஒரு கலக்குக் கலக்கியது. அப்போதைய கனடிய பிரதமர் மாண்பு மிகு பிரையன் மல்ரோணி தமிழருக்கு கவசமாகிக்  காப்பாற்றியமை ஒரு அற்புதம் தான். இந்த  தமிழர்களின் வரவை எதிர்கொண்டு வரவேற்று உதவிகள் புரிந்ததில் கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியத்துக்கும் டொரோண்டோ தமிழ் ஈழச் சங்கத்துக்கும் பெரும் பங்குண்டு.

மலைக் கோவிலை குமரக் குன்றமாக வழிபட்ட இந்துக்கள் ஒருவாறாக ஒரு 'வேயர்ஹவுஸ்' கோவிலையும் உருவாக்கி விட்டார்கள். வருடமொரு முறை வல்மோரின் காவடி யாத்திரையும் ஆரம்பமானது.

இக்காலத்தில் அநேகமாக ஒவ்வொரு இயக்கமும் தத் தம் பரிவாரங்களை புலத்திலும் இயக்கி வந்தன. பலருக்கு இதுவே சுய தொழிலாகவும் அமைந்தது. அரசியல் மயப்படுத்துதலும் ஆயுத மயப்படுத்துதலும் இவை தப்பினால் பயப்படுத்துதலும் வாழ்வோடு இணைந்து பயணித்தன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் டொரோண்டோவிற்குப் படையெடுத்தனர். வேலை, பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி, வெல்பெயர் எனப்படும் உதவிப்பணம் எல்லாமே 'வின் வின்' சிற்றுவேஷன். பழையவர் கழிய புதிய அகதிகளுக்கு கியூபெக் நாமமிட்டுக்கொண்டிருந்தது.

படி 2

எண்பத்தி ஏழாம்  ஆண்டு காலப்பகுதியில் டொரோண்டோவில் அப்பாட்மென்ட் வாடகைக்கு எடுப்பது மிகவும் சிரமம். சுப்பெறின்டென்களுக்கு  ஆயிரம், இரண்டாயிரம் லஞ்சம் வைக்காமல் இடம் கிடைக்காது. அப்படியிருந்தும் வகை துறை அறிந்த நமது தமிழர்கள் டொரொண்டோவை இரண்டாவது ஈழமாக மாற்ற ஆரம்பித்தனர். ஈழத்தின் அத்தனை அம்சங்களும் பிரதி செய்யப்பட்டன.

வெட்டி ஒட்டி முதலாவது பத்திரிகை வெளிவந்தது. செந்தாமரை என்றதற்குப் பெயர். பின்னர் கணனி வடிவமைப்பில் பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பரிணமித்தன. வியாபாரங்கள் பெருகின. விளம்பரங்கள் பெருகின. வானொலிகள் பெருகின. வசதிகள் பெருகின. சொந்தமான வீடுகள் பெருகின. விற்பனை முகவர்கள் பெருகினர். மேடைகள் பெருகின. பேச்சாளர் பெருகினர். சங்கங்கள் பெருகின, சங்கங்கள் பிளந்தன. சண்டைகள் வளர்ந்ததன. ஊர்கள் பெருத்தன. ஈழத்தின் பிரதியும்  உருவாகியது.

வன்முறைகள், தற்கொலைகள், மோசடிகள் என்பவற்றின் மத்தியில் சாதனைகளையம்  படைத்துக்கொண்ட பிரஜைகளுடன் இந்த இரண்டாவது ஈழம் தன்  வலுவோடு முன்னேறிக் கொண்டது. தான் உருவாக்கிய அழுக்குகளையே  பசளையாக்கி பிரமிக்கும் வளர்ச்சியைக் கண்டது.

காணாமற் சென்ற அரசியல் தேடி வந்தது. பிரமுகர்கள் ஓடி வந்தனர். வெள்ளை உதடுகள் தமிழைப் பிசைந்தன. வாக்குச் சாவடிகளில் முதன் முதலாக தமிழர்கள் தமிழருக்கு வாக்களித்தனர். 2006 நவம்பர் மாதம் மார்க்கம் நகரசபை அங்கத்தவராகத் தெரியப்பட்ட திரு லோகன் கணபதி அவர்களும் கல்விச் சபைக்குத் தெரிவான நீதன் சான் அவர்களும்   போட்ட சுழியோடு தமிழரின் அரசியல் வரவு ஆரம்பித்தது. 2011 இல் கனடிய மத்திய பாராளுமன்றத்துக்கு ராதிகா சிற்சபைஈசனைத் தெரிவு செய்ததன் மூலம் எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்மீது போட்ட நாமம் நிரந்தரமாக அகற்றப்பட்டது. அடுத்து கெரி ஆனந்தசங்கரி அவர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது. அடுத்த வருடம் ஒண்டாறியோ மானில அரசின் ஆசனங்களில் ஒரிரு தமிழர் அமரக்கூடிய அறிகுறியம்  தெரிகின்றது..

இது தரப்பட்ட விடுதலை அல்ல பெறப்பட்ட விடுதலை. இந்த இரண்டாவது ஈழத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழரும் மிதித்துச் செல்வது நம் முந்தியவர் சிந்திய வியர்வையையும், வலிகளையும், அவமானங்களையுமும் என்பதை  மட்டும் பதிவு செய்வதே இச் சிறு முயற்சி. கனடிய மண்ணில் தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் நிறையப் பேர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். எல்லோர் பெயர்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை. அதற்காக எனது வருத்தங்கள்.

லண்டனில் ஒருநாள் எதிர்பாராத பொழுதில் எதிர்பாராமால் எடுத்த தீர்மானம் இந்த இரண்டாவது ஈழத்தின் வாழும் சாட்சியாக என்னை ஆக்கியமை நான் செய்த பாக்கியம்.

காரணமில்லலால் எதுவுமே நடைபெறுவதில்லை.

Nov 2016
(இக் கட்டுரை 'தமிழர் தகவல்' 26 வைது ஆண்டுமலருக்காக எழுதப்பட்டு பிரசுரமும் ஆனது. ஓரிரு சிறுமாற்றங்களுடன் இங்கு இணைகிறது ) 

















புதன், 18 ஜனவரி, 2017

நரம்பின் மறை

விபுலானந்த சுவாமிகளின் தமிழ்த்தொண்டு
இலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering), ஆங்கிலம், எண்ணியல் (mathematics) , இயற்பியல் (physics) , சோதிடம் (astrology), வானவியல் (astronomy), இசையியல் (music),  தாவரவியல் (botany), சங்க இலக்கியம் (sangam literature), கூத்தியல் (theatre ), வடமொழி (sanskrit)  என்று பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் தன் தமிழ் சார்ந்த, தமிழிசை சார்ந்த ஆய்வுக்கான சுய புரிதலை மேம்படுத்துவதற்காகவே கையாண்டிருந்தார்.

சுவாமிகள்  எழுதிய 'யாழ்  நூல்' (நரம்பு வாத்தியங்கள் பற்றிய ஆய்வு) மற்றும் 'மதங்க சூளாமணி' (சேக்ஸ்பியரின் அரங்க நாடகங்கள் , வடமொழி நாடகங்கள், சிலப்பதிகார நாடகங்கள் பற்றிய ஒப்பீடு) ஆகியன மதுரைத் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பெற்றவை. இவற்றில் 'யாழ் நூல்' சுவாமிகளின் புகழை உலகெங்கும் பரப்பியது.

சுவாமிகள் பங்குனி 29, 1892 இல் கிழக்கிலங்கையிலுள்ள மடடக்களப்பில் பிறந்தார். லண்டன் பல்கலைக் கழகப் பரீட்சையான பி.எஸ்.சி. இல் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் முழுவதும் தமிழைச் சுற்றியே தான் இருந்தது. இறை பக்தியுள்ள அவரை ஒரு இந்து மதக் கண்ணாடியூடு பார்ப்பவர்களும் உளர். இராமகிருஷ்ண மடம், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்பன அவரது தமிழாய்வுக்கான பயணத்தின் சில தங்கு மடங்களெனவே நான் பார்க்கிறேன். யாழ் நூலாக்கத்தின்போது அவர் தன் எண்ணக்கிடக்கையை இவ்வாறு வெளியிடுகிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். 'வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்' இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, 'பொய்யில் காட்சிப் புலைமையினோ' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் 
கொண்டு உளமகிழ்வுருவேன்"

சிலப்பதிகாரம் தமிழ் உரை ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தோடு நோக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இளங்கோவடிகளின் புலமையை இலகுவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றோர் சிலரே இருந்தனர். அதிலும் அரங்கேறு காதையைப் புரிந்து கொள்வதென்பது பல புலவர்க்கும் பண்டிதர்க்கும் மிகவும் சிரமமாகவே இருந்தது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுபவர்கள் அரங்கேறு காதையைத் தவிர்ப்பதே வழக்கமாகவிருந்தது.  சுவாமிகள் அதை ஒரு சவாலாக எடுத்து அரங்கேறு காதைக்கு உரை எழுத முற்பட்டார்.

அரங்கேறு காதையில் மாதவியின் நடன அரங்கேற்றம் பற்றிய குறிப்பில் 25 அடிகள் யாழிசையின் ஆசிரியரொருவர்  எத்தகைய குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவரது கடைமைகள் என்னவென்பன என்றும் விபரிக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாகத் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த தமிழிசை உருவாக்கத்தில் உள்ள நுட்பங்களும் நுணுக்கங்களும் சுவாமிகளின் ஆய்வுணர்வுகளைத் தூண்டின. மாதவியால் பாவிக்கப்பட்ட யாழ், அதன் உருவாக்கம், அதிலிருந்து உருவாகும் இசையின் தன்மைகள் என்று அனைத்தையும் அறிய முற்பட்டபோதுதான் அதன் ஆழம் அவருக்குப் புரிந்தது. தனியே தமிழிசை பற்றிய அறிவு மட்டும் போதாது எண்ணியல், இயற்பியல், தாவரவியல் என்று இன்னோரன்ன துறைகளில் நிபுணத்துவம் தேவை என்பதை உணர்ந்து அவற்றைக் கற்றறிந்தார்.

தமிழிசையின் உருவாக்கம், அதன் பண்புகள், சுர வரிசை அமைப்பியல் பற்றிய விளக்கமோ விபரிப்போ இக்கட்டுரையின் நோக்கமல்ல. சுவாமிகளின் பல்வேறு முயற்சிகளும் தமிழ் சார்ந்த வகையில் எவ்வாறு முனைப்போடு நகர்த்தப்படடன தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன என்பதைச் சுற்றியே இக் கட்டுரை வடடமிடுகிறது.

ஐந்திணை மாந்தர்,  அவர்களின் பழக்கத்திலிருந்த இசைப் பாரம்பரியம், இசைக்கருவிகலின் பயன்பாடு பற்றி சங்க இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது. இன்றய வாசகனுக்கு இவ்விலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. உரையாசிரியர்களாலேயே தவிர்க்கப்படட அரங்கேற்று காதையில் வரும் இசை இலக்கணம் மட்டுமல்ல கருவிகளின் கட்டுமானம், அவற்றுக்கான உதிரிகளை எவ்வகையான தாவரங்களிலிருந்து பெற வேண்டும், நரம்புகளின் எண்ணிக்கை, நரம்புகளின் அளவு, துளைகளின் இடைவெளி என்று சகல இசைக் கூறுகளையும் ஆய்கூடத்தில் பிரதி பண்ணி (re-engineered) கணிதச் சமன்படுத்தலுக்கு உள்ளாக்கியே தன நிறுவல்களைச் செய்கிறார். அவருக்கிருந்த ஆழமான தமிழறிவே இதைச் சாத்தியமாக்குகிறது.

" ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். 'வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்' இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, 'பொய்யில் காட்சிப் புலைமையினோ' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் 
கொண்டு உளமகிழ்வுருவேன்" என சுவாமிகள் தன் நிலை விளக்கம் செய்கிறார்.

சங்கப் பாடல்களில் கூறப்படுகின்ற பல சொற்கள் இன்று நடைமுறையில் இல்லாதவை. அவற்றை இலகுவாக்கி பாடல்களின் பின்புலம் (திணை ), அத்திணைகளில் காணப்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள், அவை எழுப்பும் இசை எல்லாவற்றையும் கதை சொல்லும் பாணியில் முன்வைக்கிறார். உதாரணத்திற்கு யாழ் நூலில் வரும் யாழுறுப்பியல் அதிகாரத்தில் வில் யாழ் என்ற தலைப்பின் கீழ் இப்படி விவரிக்கின்றார் :

"பழந்தமிழ்நாட்டுப் பஹ்ருளியாற்றங்கரைக்குச் செல்வோமாக. மிக மிகப் பழைய காலம். முல்லை நிலம். மரங்களடர்ந்த சோலையின் பாங்கர் ஒரு பசும்புற்றரை. புற்றரையிலே பசுக்களும் கன்றுகளும் மேய்கின்றன. கார்காலம்; செடி கொடிகளில் பூக்கள் நிரம்பியிருக்கின்றன. இடையானொருவன் வருகிறான். காலிலே செருப்பு அணிந்திருக்கிறான். உறுதியான உடல்; மயிரடர்ந்த தோட்கட்டு; பால் மனம் நாறுகின்ற தலை மயிர். அறையின் கட்டிய ஆடையின் ஒரு தலைப்பினைத் தோளில் போட்டிருக்கிறான். பலநிறமாகிய கோட்டுப்பூக்களையும் கொடிப்பூக்களையும் கலம்பகமாகத் தொடுத்த மாலையொன்று தோளிற்கிடக்கிறது. இடுப்பிலே ஒரு மூங்கிற்குழல் சொருகப்பட்டிருக்கிறது.
ஒரு கையிலே கோல்; மற்றொரு கையிலே வில்வடிவமான ஒரு பொருள். ஒரு வில்லல்ல; பல விற்கள் சேர்த்துக் கடடப்பட்டிருக்கக் காண்கிறோம். 

நண்பகற்காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையிலே பாலிட்டுக் காய்ச்சிய கூழ் கொண்டு வருகிறாள். இடையன் கூழினையுண்டு நீரருந்துகிறான். பின்பு கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம மூங்கிற்குழல் இடையனால் இசைக்கருவியாக்கப்பட்டது. தீக்கடை கோலினாலே, புகையெழக் கைமுயன்று தீயைக் கடைந்து கொண்டு, அக் கடைக்கோலிலுள்ள தீயினாலே மூங்கிலிலே  துளையிடடான். குழலிலே பாலைப்பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழுகிறாள்."

சங்கஇலக்கியம் இன்றய வாசகனுக்கு அந்நியமாக இருப்பதற்கு ஒரு காரணம் அவனது மொழிப்புலமை பற்றாக்குறையே. சுவாமிகளின் எளிய, இலகுவான, காடசிப்படிமத்தைப் பின்புலமாகக் கொண்ட குறு வசனங்களாற் கட்டியமைக்கப்படட விவரணை சங்க இலக்கியங்கள் மீது இளைய தலைமுறையினருக்குப் போதையேற்றும் வகையில் அமைந்துள்ளது.

தமிழிசையின் இன்றய வடிவத்தை பண்டைய தமிழிசையோடு மட்டுமல்ல மேற்கத்தைய இசை வடிவங்கள், வட இந்திய இசை வடிவங்களோடு ஒப்பிட்டு தமிழிசையே இவையெல்லாவற்றிற்கும் முன்னோடி என முடிபு செய்கிறார். அத்தோடு இன்றய வயலின் இசைக் கருவியின் மூலம் மேற்கு நாடுகளல்ல, கூர்ம வீணை தானென்றும் இசைக்கருவிகளின் பாவனை சால்தியா, மெசோபொட்டேமியா போன்ற இடங்களுக்கு தமிழ்நாட்டின் வாணிபப்பரம்பலோடு சென்றடைந்திருக்க வேண்டும் எனவும் சுவாமிகள் கருதுகிறார்.

யாழ் நூல் சாதாரண வாசகனுக்கு தமிழின் பெருமையை உணர்த்தும் பொருட்டு எழுதப்படவில்லை, மாறாக அது தமிழிசை பற்றி ஆய்வு செய்பவனுக்காக எழுதப்பட்டது எனவே கருத வேண்டும். ஆனால் இத்துணை விடயங்களையும் சுவாமிகள் சங்க இலக்கியங்களை அகழ்ந்து தோண்டியே கண்டறிந்திருக்கிறார் என்ற வகையில் அதை  அவர் தமிழுக்குச் செய்த மிகப்பெரும் பங்களிப்பாகவே நான் பார்க்கிறேன். அதே வேளை தமிழிசை பற்றிய முதலாவது ஆய்வு தஞ்சை ஆபிரகாம் பண்டிதரால் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

சுவாமிகள் சுமார் பதினான்கு ஆண்டுகள் அயராது உழைத்து யாழ் நூலை  1947 இல் வெளியிட்டார். சுவாமிகளின் திறமையை நன்கறிந்த டாக்டர் உ.வே.சாமிநாதையர் பல வழிகளிலும் இந்நூல் வெளிவரக் காரணமாகவிருந்தார். மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையிலும் இந்நூலை வெளியிட்டபின்னர் சில நாட்களில் சுவாமிகள்  இயற்கையெய்தினார்.

யாழ் நூலின் இரண்டாவது பதிப்பை கரந்தை தமிழ்ச் சங்கம் 1974 இல் வெளியிட்டது. மூன்றாவது பதிப்பை 2003 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து 'மறுமொழி ஊடக  வலையத்தின்' மூலம் வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பை கனடா விபுலானந்தர் கழகம் ஏற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய விடயம்.

யாழ் நூலின் பெருமையை உலகம் கண்டு வியக்கும் போதுதான் சுவாமிகளின் பெருமையைத் தமிழுலகம் அறியவும் போற்றவும் செய்யும்.

(இக்  கட்டுரை கனடிய தமிழர் பேரவையின் 2017 பொங்கல் விழா மலரான 'The Voice' இல் பிரசுரமானது)
















வியாழன், 5 ஜனவரி, 2017


முக்கோண சூத்திரம்


காரியங்கள் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் மிகவும் உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. வரலாற்றுத் தடயங்கள் இதற்கு  நிறைய ஆதாரங்களைத் தந்துள்ளன.

அந்த நம்பிக்கையில் கடந்து போன ஆண்டும்,  வந்திருக்கும் புத்தாண்டும் திடடம், ஒழுங்கு தவறாமல் நடந்தது, நடக்கும் என்பது என் யூகிப்பு.

உலக அரசியல், பொருளாதாரம், சூழல் இந்த இணைக்கப்படட மூன்று புள்ளிகளிடையேயும் தான் எமது வாழ்க்கை. இந்த முக்கோணத்தில் ஒரு மூலை  பெரிதாக வேண்டுமானால் மீதி இரண்டும் சிறிதாகுவது வழமை. மொத்தம் 180 பாகைகள் தான்  என்கிறது கணித சூத்திரம்.

இந்தப் புள்ளிகளை நகர்த்துவதில் காரணிகளாக இருந்த  உலக மகா புள்ளிகள் சிலர் - ஸ்டாலின், ஹிட்லர், சேர்ச்சில், ட்ருமன், பூட்டின் வரிசையில் இடம்பெறப்போகும் துரும்பர் வரையிலான எனது அவதானிப்பு இது.

உலக வரலாற்றின் உந்து புள்ளிகளாக மேலும் பலர் இருந்தாலும் மேற்சொன்னவர்கள் ஒரு வகையில் திசை திருப்பிகளாக இருந்தனர் என்பது எனது அவதானம்.

லெனினின் ரஷ்யப் படைகள் பலத்த இழப்பைத் தொடர்ந்தும் ஹிட்லரை முறியடித்ததற்கு ஸ்டாலின்  தான் காரணம். நேசப் படைகள் நோர்மண்டியில் தாமதமாகவே இறங்கின. யாள்டா ஒப்பந்தத்தின் படி  போரின் முடிவில் ரஸ்யா, பிரித்தானியா போன்ற  நாடுகள் ஐரோப்பாவில் பல நாடுகளைத் தம் வசமாக்கின.

சேர்ச்சிலுக்கு, ஹிட்லரை ஒழிப்பதை விட ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கில் தனது சாம்ராஜ்யத்தையும் வருவாயையும் தக்க வைப்பதில் தான் குறி இருந்தது. தனது வர்த்தகக் கப்பல் பாதைகள் யப்பானியரால் முடக்கப்படாது என்பதற்காகவே யப்பான் மீது தாக்குதலை மேற்கொள்ளும்படி ருஸ்வெல்டைத் தூண்டினார் என்கிறார்கள்.

மிக மோசமான குண்டு வீச்சுக்களை யப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்தி கொடூரமான மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியிருந்தாலும் யப்பானியரின் சாமுராய் படைகள் மற்றும் கமிகாசி தற்கொலைப் படைகளோடு மக்களும் சரணடைவிற்கு மறுப்புத் தெரிவித்து வீர மரணத்தைத்  தழுவக் காத்திருந்தார்கள். நிபந்தனையற்ற சரணடைவு சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவின் பல நூற்றாண்டு பரம்பரை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்கவே சரணடைவு உடன்பாடாகியது.

யப்பானின் சரணடைவை நிபந்தனையோடு ஏற்றுக்கொள்வதற்கு ரூஸ்வெல்ட் இணங்கியிருந்த போது துரதிர்ஷ்ட வசமாக அவர் மரணிக்கவே ட்ரூமன் அதிபராகிறார். வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பப் புள்ளி.

ட்ரூமன் காலத்தில் தான் அணுக்குண்டு பரீட்சிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்ததை விடவும் பன்மடங்கு அழிவு சக்தி இருக்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் அதில் பணியாற்றிய பெரும்பான்மை விஞ்ஞானிகள் இது உலக அழிவுக்கு  வழிவகுக்கப் போகிறது என்றும் இது திடடத்தைக் கைவிடும் படியும் கூறி கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை தலைமை விஞ்ஞானி ஓப்பன்ஹைமர் மூலம் ட்ரூமனுக்கு அனுப்பினார்கள். ஓப்பன்ஹைமர் அதை ட்ருமனிடம் கொடுக்காமல் குண்டுகளைத் தயாரிக்க உத்தரவிடடார். இது இன்னுமொரு திசை திருப்பி.

ட்ருமன்  ஒரு 'ஆண்' தன்மை குறைந்தவரென அவரது தந்தையாராலே இகழப்பட்டவர். ஒரு உலக வல்லரசுக்கு அதிபராகத்  தெரியப்பட்டது அவரது சுய மேலாண்மைக்கு வழி வகுத்தது. யாள்ரா ஒப்பந்தத்தின் பிரகாரம் ரஸ்யா யப்பானைத் தாக்குவதற்குத் தயாராகவிருந்தபோது அதற்கு முன்னதாகவே ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளைப்  போடக்  கட்டளையிடுகிறார். ஜெர்மனியை வென்று 'உலகைக் காப்பாற்றிய ஸ்டாலின் மீது அளவிலாக் காதல் கொண்டிருந்த' அமெரிக்க மக்களின் முன் தனது வீரப்பிரதாபத்தைக் காட்ட ட்ருமன் எடுத்த நடவடிக்கை இது என்று சில வரலாற்றாளர் கருதுகின்றனர்.

இந்த ஸ்டாலின், ட்ருமன், சேர்ச்சில் என்ற மூன்று புள்ளிகளின் காரியங்களும்  என்ன காரணங்களுக்காக நடைபெற்றன என்பதைவிட அதன் விளைவுகள் என்ன என்பதுவே இங்கு முக்கியம். ஜெர்மனி, யப்பான், இத்தாலி போன்ற நாடுகள் போரில் வெற்றிபெற்றிருந்தால் இன்றய உலகம் வித்தியாசமாகவிருந்திருக்கும்.

இந்தக் கோணத்தில்தான் துரும்பரின் வரவையும் நான் பார்க்கிறேன். இது ஒரு திருத்த நிகழ்வு (correction process).

ஒபாமாவைப் பொறுத்தவரையில் ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக வந்தார் என்பதும் துரும்பர் வரவுக்கு வழிகோலியவர் என்பதும் மட்டுமே அவரது சாதனைகள். அவர் ஒரு அடிமையின் பரம்பரை என்றிருந்தாலும் கூட ஓரளவுக்குப் பெருமை சேர்த்திருக்கும்.

சிரியா, பாலஸ்தீனம், இஸ்லாமிய பயங்கரவாதம், சீனாவின் எழுச்சி என்று எதிலும் அவரால் வெற்றிகாண  முடியவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சிறிது முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இறுதியில் ஒரு மனமுடைந்த தோற்றுப்போன அதிபராகவே அவர் விடைபெறுகிறார்.

இதற்கு ஒபாமாவின் இயலாமை காரணமல்ல. அதிபராகிய பின்னர்தான் அவர் அடிமையானார். விலங்குகள் போடப்படடன. சொல்வதை மட்டுமே செய்தார்.

உலக அரங்கில் அவரது 'நிறம்' துவேஷிக்கப்பட்டது. புட்டின் அவரைக் கணக்கிலே எடுக்கவில்லை. சவூதி அரேபியாவில் அவமானப்படடார். இஸ்ரேலினால் அவமதிக்கப்படடார். பிலிப்பைன்ஸ் அதிபர் கூட அவரை இகழுமளவிற்கு அவரது நிலைமை இருக்கிறது. புட்டின் - துரும்பர் உறவு கூட இந்த துவேஷ அச்சில் தான் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கருமை நிறத்தவரால் உலக ஒழுங்கை நிர்வகிக்க முடியாது என்ற உண்மையே ஒபாமா விட்டுச் செல்லும் பாடம்.

உலகமெங்கும் துவேஷிகளின் மீழெழுச்சி அதிவேகத்துடன் முன்னெடுக்கப் படுகிறது. துரும்பரின் வரவு அதன் ஒரு அடையாளம். பிரித்தானியாவின் வெளியேற்றம் ஒரு சலனம். புட்டினின் தினவு அந்த இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிக்கான முழக்கம்.

இதுவெல்லாம் உலகம் இழந்த சமநிலையைச் சீர் செய்ய எடுக்கும் தன்னியக்க திருத்த முயற்சிகள். இவை பல தடவைகள் நிறைவேறியிருக்கின்றன. எகிப்திய, ரோம , ஒஸ்ட்றோ - ஹங்கேரிய, மொங்கோலிய, சோழ, பிரித்தானிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் எழுந்ததற்கும், அழிக்கப்பட்டதற்கும்   காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆபிரகாமின் குழந்தைகளின் அட்டகாசம் கை மீறிப் போவது கண்டுகொள்ளப்படவில்லை என்று  எண்ணத்  தேவையில்லை.  துவேஷிகளின் மீழெழுச்சிக்கு இதுவும் ஒரு  காரணமாக இருக்கலாம். யார் கண்டது?. இந்த துவேஷிகளின் காலம் முடிவுறும்போது ஒரு முதுகெலும்புள்ள வெள்ளையில்லாத ஒரு நாடு உலகை ஆளலாம். அதுவும் நிச்சயமானதொரு துவேஷத்தில் எழுப்பப்பட்ட சாம்ராஜ்யமாகவும்  இருக்கலாம்.

எல்லா வினைகளும் சமமானதும் எதிரானதுமான விளைவுகளைத் (Every action has equal and opposite reaction) தோற்றுவிக்கும் என்ற விதி எப்போதுமே அமுலில் இருக்கிறது. விளைவுகளை அவதானித்து வினைகளைப்  புரிவதே சிறந்த நடைமுறை.  நீண்ட வரலாற்றில்  முன் வினைகளும் விளைவுகளும் விழிப்புலத்திலிருந்து தப்பியது என்பதற்காக அவை எங்கேயும் போய்விட்டதாக அர்த்தமில்லை.

காரணமில்லாமல் அவர் 'அவதரிக்கவில்லை'. முக்கோண சூத்திரம் பொய்க்காது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜனவரி 2017 ஈ குருவியில் பிரசுரமானது. அதில் ஸ்டாலினுக்குப் பதிலாக லெனின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மன்னிக்கவும். 














வியாழன், 8 டிசம்பர், 2016

வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்

துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது. 
அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன  ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன. 

இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள். 

மக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சிக்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் "We came, we saw and we killed him" என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று  என்று.

அளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது  என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை. 

துரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும்  தான் இருக்கிறார்.  புழுங்குகிறார்கள்  சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. 

பெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை. 

துரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு  வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர்  வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம். 

அவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள்,  பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர். 

துரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக்  காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை.  அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும். 

சமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம்  நடக்கிறது.

Relax and enjoy!


2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்...

ஒன்ராறியோ மாகாண பொதுத் தேர்தல் 2018 இல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளைப்போல் feel பண்ணுபவர்களும் உடலெல்லாம் பதாகைகளோடு வலம் வர ஆரம்பித்து விடடார்கள். கடை வாசல்களில் காவற்காரைப் போல் தவமாய் தவம் கிடந்து ஆதரவு கேட்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான்  இருக்கிறது. 

இந்த தடவை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு காரணம்  கொள்கைகள் இல்லை. தற்போதைய ஆளும் கட்சி மீதான, அதன் தலைவர் மீதான வெறுப்பு எனச் சொல்கிறார்கள். இதைச்  சமூக ஊடகங்கள் சொல்கின்றன என்பதனால் நம்பலாம். 

ஒன்ராறியோ மாகாணத்தைக் குட்டிச் சுவராக்கியதில் மைக் ஹாரிஸுக்கு பெரும் பங்குண்டு. அதைச் சமநிலைப் படுத்தவே நான்கு தடவைகள் லிபரலுக்கு மக்கள் வாக்களித்தார்கள். பிரதமர் கதலீன் வின் ஆட்சிக்கு வந்தபோது முன்னாள் பிரதமர் டால்ரன் மக்கின்ரி தன பொதியை இவர் மீது சுமத்தி விட்டார். அதை இறக்கி வாய்க்கு முன்னரே தன பங்குக்கு அவசரம் அவசரமாகச் சில பொதிகளை ஏற்றி விடடார். மின்சாரக் கட்டனம் அதில் முக்கியமானதொன்று. அவசியமற்ற விடயங்களில் அவர் விரயம் செய்த பணத்தையும் காலத்தையும் வளத்தையும் முக்கிய விடயங்களில் செலவிட்டிருந்தால் வறிய குடும்பங்கள் இருட்டில் வாடா மாட்டா. 

எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுண் கொஞ்சம் smart ஆன மனிதர். லிபரல் படகு மூழ்கப் போகிறது என்பதைத் தூரத்திலிருந்தே அவதானித்து விடடார். அவர் பிரச்சாரம் என்று எதுவும் செய்யாமலேயே தேர்தலில் வெல்வதற்கு சாத்தியமிருக்கிறது. லிபரல் வெறுப்பு வாக்குகளே போதும். 

ஜனன கிரகங்கள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தாலும் சஞ்சார கிரகங்களின் கோசார பலன்கள் எப்படி அமையுமென்பதைக் கணித்துத்தான் பலன் சொல்ல முடியும்.

பத்தில் வியாழன் பதியை விட்டுக் கிளப்பும் என்றொரு சோதிடப் பழமொழியுமுண்டு. 

பார்க்கலாம். 

காஸ்ட்றோவின் கால மரணம் 

பிடல் காஸ்ட்றோவின் மரணம் முகனூலில் எழுப்பிவரும் விவாதங்கள் கியூபாவின் சுருட்டை விடப் போதை தருவதாக இருக்கின்றன. அவற்றை வாசிக்க ஒரு நாளே போதாது.

ஈழத்தமிழரின் விடயத்தில் கியூபா நடந்துகொண்ட விதம் பிடலின் மீது வெறுப்பை உருவாக்குவது நியாயம் என்று சிலரும் அவர் கடைசிவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற உண்மையான பொதுவுடைமை வாதி எனச் சிலரும் பொருத்திக் கொள்கிறார்கள். காஸ்ட்றோ வின் சிங்கள சாய்வு  பொதுநலவாய நாடுகளென்ற நட்பின் காரணமா தமிழர்கள் மீதான வெறுப்பு காரணமா புலிகளின் அமெரிக்க சாய்வு காரணமா அல்லது அதிகளவு கனடியத்  தமிழர்கள்  மிளகாய்த் தூளும் ஒடியல் மாவும் கொண்டுவருமளவிற்கு அங்கிருந்து போயிலைச் சுருள்களை வாங்கித் செல்வதில்லை என்ற கோபத்தின் காரணமா  தெரியாது.

இந்த காஸ்ட்ராவின் கசப்ப்பில் உண்மையிருக்கிறதா என்பதை அறிய வேண்டுமென்பதற்காய் நானே நேரில் சென்று பார்த்தேன். சென்றது குடும்பத்துடன் தான் என்பதனையும் இங்கு அழுத்தத்தோடு பதிய வைத்துக் கொண்டு - பார்த்ததும், கேட்டதும் நிச்சயமாக காஸ்ட்றோவின் மீது - தமிழர் விரோதத்தையும்  மீறி - ஒரு மதிப்பை ஏற்படுத்தியது உண்மை.

அவர் இறுதி வரைக்கும் கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்து முடிந்ததற்கு அவர் அமெரிக்காவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அமெரிக்காவின் உற்ற நண்பரான  முன்னாள் ஆடசியாளரின் கீழ் மக்கள் பட துன்பத்தைவிட காஸ்ட்றோவின் ஆட்சியில் மக்கள் படும் துன்பம் பெரிதல்ல. 600 க்கும் மேலான அமெரிக்க கொலை முயற்சிகளில் இருந்து அவரைக் காப்பாற்றி அவரை இதுவரை வாழ வைத்தது அவரது ஊழலற்ற ஆட்சி. ஆபிரிக்கக் கண்டத்தின் விடுதலைக்கு மட்டுமல்ல ஹெயிட்டியின் இயற்கை அழிவுகளின் போதெல்லாம் எதுவும் அலட்டிக் கொள்ளாது பெருந்தொகையில் மருத்துவ தொண்டர்களை அனுப்பியதாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் காஸ்ட்றோ. மாதத்திற்கு 67 டாலர்கள் சம்பளம் எடுத்துக்கொண்டு சந்தோசமாகப் பணிபுரியும் வைத்தியர்களைக் கொண்ட ஒரு நாடு - அதுவும் அமெரிக்காவின் கோடியில் இருக்கிறதென்றால் - அது காஸ்ட்றோ வினால் தான் சாத்தியமாக்க முடிந்தது.

அவர் வரித்த சித்தாந்தம் தோல்வி கண்ட போதும் அவர் தோல்வியடையவில்லை என்ற மகிழ்வோடு அவர் மறைந்திருக்கிறார்.

மகிழ்வான வாழ்வை நாமே தான் உருவாக்க வேண்டும் என்பதைகே காட்டிச் சென்ற ஒரு நல்ல மனிதர்.


இக் கட்டுரை டிசம்பர் 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது.







திங்கள், 22 ஆகஸ்ட், 2016



பெரும் படம் பார்த்தல்

துரும்பரைப்  பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே  ஆகவேண்டும் .

துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை.

வெள்ளை ஆண்  வர்க்கம்  ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது.

ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் வெள்ளைத் தீவிரவாதியாக மாறியது சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அது ஒரு விபத்தல்ல. வெள்ளைத் தீவிரவாதம் நீண்டகாலமாக வெந்துகொண்டிருந்த ஒரு எரிமலை. புகையும் தருணத்தில் துரும்பர் அதைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகள். சரியான சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பவனே வெற்றி பெறுபவன். துரும்பர் வியாபாரத்தில் பெற்ற வெற்றியை அரசியலிலும் பெற முனைகிறார்.

இப்படியான துரும்பரின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் வெல்ல வேண்டும் என்பதற்கான நான் வைத்த காரணங்கள் தெளிவானதாகவில்லை. எனவேதான் இந்த அரும்பட (ஆம் எழுத்துப் பிழையல்ல ) விளக்கம்.

துரும்பரின் ஆரம்பகால பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரு பெண் ஆதரவாளரிடம்  ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேடடார். "துரும்பர் பெண்களை இழிவு படுத்திப் பேசியது உனக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா?" அதற்கு அப் பெண் சொன்ன மறுமொழி "No, I am looking at the big picture'. அந்த 'பெரும் படம் பார்த்த'லே எனது துரும்பர் ஆதரவுக்கான காரணமும்.

அப்பெண் சொன்ன அந்தப் பெரும் படம் - 'துரும்பரின் வரவு அமெரிக்காவிற்கு பெரு நன்மையைப் பெற்றுக்  கொடுக்குமானால் பெண்மையை இழிவுபடுத்துவதைக்கூட நான் சகித்துக் கொள்வேன்'என்பதுவே.

நீண்டகாலமாகத் தகித்துக் கொண்டிருக்கும் 'ஒடுக்கப்பட்ட' வெள்ளையினத்தின் பிரதிநிதி அந்தப்பெண். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழும் அடிமை விடுதலைக்குப் பின்னான எசமான் மனநிலைகளிலிருந்து விடுபட முடியாமல் தகிக்கும், தம் பொற்கால மீட்ப்பிற்காக  அலையும் செங்கழுத்து வெள்ளையரின் மோசஸ் தான் நமது துரும்பர். இவர்களின் தேடலைச் சரியாக அறிந்து சந்தர்ப்பத்தை அறிந்து அரசியல் செய்ய வந்தவர் தான் துரும்பர்.

அதற்கும் என்னுடைய பெரும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இன்றய உலக மகா பிரச்சினைகளுக்கெல்லாம் தாயான பிரச்சினை மத்திய கிழக்குப் பிரச்சினைதான். இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமே மேற்கு ஐரோப்பா தான். வியாபார காரணங்களுக்காகவும் அரசியற் காரணங்களுக்காகவும் குழப்பப்பட்ட குழவிக்கூடுதான் இன்றய மத்திய கிழக்கு. ஆப்கானிஸ்தானின் ரஷ்ய ஆதரவு -இடதுசாரி நஜிபுல்லா அரசைக் கவிழ்க்கவென உருவாக்கப்படட முஜாஹிதீனின் இன்றய வடிவம் தான் ஐசிஸ்.  இந்த ஐசிஸ் உருவாக்கத்தில் ஒபாமாவிற்குப் பங்கிருக்கிறது என்று துரும்பர் பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறார். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகளைப்  பஸ்பமாக்கிவிடுகிறேன் என்கிறார். மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு என்ன வேலை என்கிறார். பல உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்க சுய உற்பத்தியையும், வேலைவாய்ப்புகளையம் பாதிக்கின்றன என்கிறார். மொத்தத்தில் இன்று இருப்பதாக நாம் கருதும் இடதுசாரி நாடுகள் வரித்துக் கொள்ளும்  கொள்கைகள் பலவற்றைத் துரும்பரும் கொண்டிருக்கிறார்.

துரும்பர் சொல்லும் மெக்சிக்க எல்லைச் சுவரைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக பல வறிய மெக்சிக்கர்கள் களவாக அமெரிக்காவில் புகுந்து மிக குறைந்த சம்பளத்தில் நாட்க்கூலிகளாக வேலைபார்த்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். அமெரிக்க எல்லை மாநிலங்களில் பல முதலாளிகள் இப்படியானவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வந்தனர். மெக்சிக்கர்களின் கள்ளக்  குடிவரவைத் தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட  போது அதை எதிர்த்தவர்கள் இந்த முதலாளிகள். இந்த முதலாளிகள் துரும்பரையும் எதிர்க்கிறார்கள்.

சரி. துரும்பர் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வரூவதைக் கட்டுப்படுத்துவேன் என்கிறார். மதில் கட்டுவேன் என்கிறார். அதையெல்லாம் நம்பி - இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்க நற்பெயர் கெட்டுவிடும் என்கிறார்கள். அப்போ துரும்பர் சொல்லும் ஏனையவற்றையும் நம்பியேயாக வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறும். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் நம்பியேயாகவேண்டும்.

அல்ஜீரியாவில்,எகிப்தில், லிபியாவில், சிரியாவில், இராக்கில்  இடப்பட்ட மூலதனங்களின் அறுவடையே  இன்றய உலகின் பயங்கரவாதம். சாதாரண மக்களின் உயிர்கள்தான் உலக வணிகர்களின் நாணயங்கள். இந்த வணிகர்களின் கூடாரத்தில்தான் இரண்டு கட்சிகளும் உறங்குகின்றன. இருவருக்கும் தீனி போடுவது வால்ஸ்ட்ரீட் பெருவணிகர்கள். அமெரிக்க வரலாற்றில் இவர்களின் கடடளையை  மீறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் துரும்பராகவே இருக்கும் (பேர்ணி சாண்டர்ஸ் இறுதியில் சறுக்கிவிட்டார் என்கிறார்கள்).

சரி, துரும்பர் ஜனாதிபதியாக வந்தால் என்ன நடக்கும்? மதில் கட்டப்படலாம், முஸ்லிம்கலின் குடிவரவு தடுக்கப்படலாம். ஐசிஸ் தொல்லை ஒழியலாம். மத்திய கிழக்கு சுதந்திரமடையலாம்.

இவற்றை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நான் நம்பவில்லை.

ஆனால் எது நடக்கலாம் என நான் நம்புவது இதுதான்.

அமெரிக்க உற்பத்தி பெருக வேண்டுமானால் மலிவு விலை இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் பெறுபேறு: பொருட்களின் விலை அதிகரிப்பு அதனால் பண வீக்கம், அதனால் வட்டி வீத அதிகரிப்பு அதனால் பொருளாதார பாதிப்பு - இது  ஒரு பக்கம்.

துரும்பரின் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது தகித்துக் கொண்டிருக்கும் நாஜிகளினதும் பாசிஸ்ட்டுகளினதும் மீளெழுச்சி ஊக்கம் பெறும். இதனால் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா சிக்கலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்- இது இன்னொரு பக்கம்.

இந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்கு வித்திடப்படலாம். அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவு ஆரம்பிக்கும். அதற்கான சுழியை  துரும்பரே போடுவார்.

மாறாக, நீங்கள் விரும்பியபடி கிளிண்டன் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் வலுப்பெறும்.

தொட்டிலும் ஆடும் பிள்ளையும் கதறும்.

This is my big picture.

இக்கட்டுரை செப்டம்பர் 20116 ஈ குருவி  பத்திரிகைக்காக எழுதப்பட்டது.

பிற்சேர்க்கை:
விமர்சகர்களுக்கு ஊரெல்லாம் எதிரிகள். எனது எழுத்து ஒரூ சமூக அவதானிப்பு எனவே நான் கருதுகிறேன். விமர்சகர்கள் சமூக அளவுகோல்களை வைத்துக்கொண்டு நடப்புகள் மீது கருத்துக் சொல்பவர்கள். என்னிடம் எந்த அளவுகோல்களும் இல்லை. அளவுகோல்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. புலன்களின் மதிப்பீடுகள் எல்லாமே subjective வகைக்குள் அடங்குவன.


ஞாயிறு, 24 ஜூலை, 2016

இவரும் அவர்தானா?



எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு
எதுவுமில்லை.

அரசியலில்  இது இன்னும் மோசம். உண்மையில் அரசியல்வாதிகள்  மட்டும்தான் உலகத்திலேயே ஒற்றுமையானவர்கள். தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இன வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம் தமக்குத் தாமே சம்பள உயர்வு கொடுத்துத் தள்ளுவது).

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடது சாரி வலது சாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும்
கொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவி மக்களை நம்ப வைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் - "யார் நீ , எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போ பின்னர் பார்க்கலாம்"- என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்ம சமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல  என்பது கொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம்.

தென் நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்ம நாட்டில் 'இது 2016' என்று நாமம் போட்டுக்கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டு
எனது செவிப்பறையைத் தாக்கியிருக்கிறது.

ஹார்ப்பரசரோடு ஒப்பிடுகையில் இவரது வெளிநாட்டுக்கு கொள்கையில் பல மாற்றங்கள் நிகழும்,
உலகில் போர்கள் தணிந்து மக்கள் தம்மைத் தாமே தூக்கி நிறுத்திக் கொள்ள, ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஒரு இடைவெளி கிடைக்கும் என்று நம்ப வைக்கப் பட்டவர்கள் 'என்ன இவரும் அவர் தானா?' என்று மூக்கில் விரலையே வைக்கிறார்கள்.

சிவப்பு சட்டைகளைப் போட்டுக்கொண்டு மனித உரிமைகள் பற்றிப்  பேசுபவர்களது நிஜ வாழ்க்கை  நீலச்  சட்டை போட்டுக் கொண்டு இனவாதம் பேசுபவர்களது வாழ்க்கையை விட மோசமானது என்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறது என்றால் - நானும் உங்களினம்.

நம்ம நாட்டு இளவரசர் உலகத்துக்கு இப்படி எல்லாம் இம்சையரசராக மாறுவாரென்று நான்
நினைத்திருக்கவில்லை.

ஈராக்கிலிருந்து மூன்று நான்கு போர் விமானங்களை மீளப்பெற்றுவிட்டு 200 காலாட் படைகளை அனுப்பி
வைத்தது ஒரு அமைதி விரும்பி செய்யும் கடமையல்ல.

ரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டொ குவிக்கும் படைகளில் ட்ரூடோவின் படைகள் முன்னணி வகிக்குமாம். சவூதி கொலையரசர்களுக்கு கோடி கோடியாக ஆயுதங்களை வழங்கியமை அப்பட்டமான
நபும்சகத்தனம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஊரிலிருந்து வந்தவர் ஒருவர் சொன்ன கதை இது.

ஒருவருக்கு ஒரு இயக்கத்தில்  சேர விருப்பம். உள்ளூர் ஆள்பிடி காரரை அணுகி யபோது  'நீ  ஒரு  நோஞ்சான் உன்னை ஒரு இயக்கமும் சேர்க்காது ' என்று சந்தியில் வைத்து அவமானப் படுத்தி விடடார் அந்த ஆள்பிடி காரர். மனம் குழம்பிப் போன வீரவான் 'கொஞ்சம் பொறு நான் யாரெண்டு காட்டிறன்' என்று வீட்டுக்குப் போய்  கோடரி ஒன்றைக் கொண்டு வந்து சந்தியில் நின்ற ஒரு முதியவரைக் கொத்திக்
கொலை செய்து விட்டு 'இப்போ நான் வீரனில்லையா'? என்று கேடடாராம்.

இது ஒரு செவி வழிக்கதையாகவே  எனக்குத் தெரிந்திருந்தது. அன்றய சூழழில் இப்டியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருந்தது என்பது மட்டும் உண்மை.

ட்ரூடோவின்  நகர்வுகளை பார்க்க இந்த நோஞ்சானின் கதை தான் நினைவுக்கு  வந்தது. 'நானும் ரவுடி
தாண்டா' என்று வடிவேலு போலீஸ்காரரிடம் தன்னைக் கைது செய்யும்படி கெஞ்சுவதைப் போல இருக்கிறது ட்ரூடோவின் நடவடிக்கைகள்.

எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி உலக சமாதானத்தைக் கொண்டு வருவதும் ஒரு வகை வீரம் தான்.

1964 இல் பல எதிர்ப்புகள் மத்தியிலும் அமெரிக்க குடியுரிமைச் சட்ட த்தில் (Civil Rights Act) கையெழுத்திட்டு நிறப்பிரிகைச் சடடத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன்  போன்றவர்களைத் தான் நான் வீரர் என்று சொல்லுவேன்.

ஒவ்வொரு வாரமும் ஆளில்லா விமானத்தை ஏவுவதன் மூலம் பெண்களையும் குழந்தைகளையும்
கொன்றுவிட்டு உலக சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெற்றுக்  கொண்ட பராக் ஒபாமா ஒரு வீரர் அல்ல.

ஹார்ப்பரை வெறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது நடிக்காமையின் விளைவு. ட்ரூடோவைப்  பலர் விரும்புவதற்குக் காரணம் அவர் சிறந்த நடிகனாக இருப்பதனால் எனவும் பார்க்கலாம்.

உள்நாட்டில் நிலைமை சீராக இருக்க வேண்டுமானால் வெளியுறவுக் கொள்கை நன்றாக இருக்க வேண்டும்.

இதை புரிந்துகொள்ள ஒருவர் ஐன்ஸ்டினாக இருக்க வேண்டுமென்பதில்லை.

உலகின் இன்றய நிகழ்வுகள் பேரழிவுக்கான கட்டியத்தைக் கூறுபனவாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் துரும்பரின் வருகை வெள்ளை அதிகாரத்தின் மீளெழுச்சியின் அறிவிப்பு. நீண்ட
காலமாகக் கைவிடப்படட சாமான்ய வெள்ளையரின் சுனாமியைத் திசை திரும்பியவர் தான் துரும்பர். அதில்அடிபடப்  போவது வெள்ளையரல்லாதோர் தான்.

கிளின்ரன் ஒபாமா போன்றோரைப்  பாவித்து தமது இலாபங்களை பெருக்கிய பெரு வணிக நிறுவனங்களின் உலக மயமாக்கலினால்  சோபை இழந்துபோன அமெரிக்காவை மீட்டெடுக்கப் போவதாக உருக்கொண்டிருக்கும் துரும்பரை  இந்தத் தடவை யாராலும் நிறுத்த முடியாது. என்றுதான்
படுகிறது.

உலகெங்கும் வெள்ளை வெறி 'உரு' க்கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் உடைவு இந்தப் பெரு
விளையாட்டின் ஒரு அங்கம் தான்.

''பின் லாடனுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது அமெரிக்கா தான்' என்று பேராசிரியர் நோம் சோம்ஸ்கி ஒரு தடவை சொல்லாயிருந்தார்.

இப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் வெள்ளை வெறியினருக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கிறது. துரும்பருக்கு வெற்றிக்கு அதுவேதான் காரணமாகவிருக்கப் போகிறது.

புஷ் ஆட்சியை விட கிளின்ரன் ஆட்சியின் போது தான் அதிக உலக நாடுகளில் குண்டுகள் போடப்படடன. அதிக எண்ணிக்கையில் கறுப்பர்களைச் சிறையில் தள்ளியது கிளின்ரன் அரசு தான். அடுத்த கிளின்ரன் ஆட்சிக்கு வந்தாலும் 'ஆளப்' போவது பில் கிளின்ரன் தான் என்கிறார்கள். அவர் வணிக முதலைகளின் சேவகர்.

துரும்பருக்கும் கிளின்ரனுக்கும் போட்டி வரும் போது 'நானும் நோஞ்சானில்லை' என நிரூபிப்பவர்களால் தான் அதிக வெள்ளை வாக்குகளை எடுக்க முடியும். அதற்காகவே எங்கோ ஒரு அப்பாவி  நாடோ தலைவரோ, மக்களோ அழிக்கப்படலாம்.

துரும்பர் நிறைய சவுண்ட் கொடுக்கிறார். அவர் கைகளில் கோடரி இல்லை.

எனக்குப் பயம் சிரிப்பவர்கள்  மீதுதான்.

இக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் ஆடி மாத 'ஈ குருவி' பத்திரிகையில் பிரசுரமானது. இங்கு சில திருத்தங்களுடன் மறு பிரசுரமாகிறது.

வெள்ளி, 1 ஜூலை, 2016

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
செவ்வாற்றுக் கடமை

சென்ற வாரம் செவ்வாற்றில் இரண்டு திருவிழாக்கள் கொடியேறின.

நான் சொல்வது இசுக்காப்ரோவின் ரூஜ் றிவர் பகுதியை. (பிரஞ்சு மொழியில் ரூஜ்=சிவப்பு).

செவ்வாறு தமிழ்க் கனடியர்களின் தலைநகரம் என்பதில் சந்தேகமில்லை. கனடாவின் மூன்று நிலை அரசியல் கட்சிகளும் , வாதிகளும்  இதைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றன என்று தான் -உங்களைப் போல - நானும் நம்ப விரும்புகிறேன்.

அதிகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட தமிழர்கள் வாழும் இடம் செவ்வாறு என்பதால் நடந்த திருவிழாக்கள் பற்றிய விவரணம் தேவையில்லை. எல்லாமே எப்போதோ -திட்டமிட்டப்டி - முடிந்த காரியம்.

இது தமிழர்களின் வாழிடம். தமிழரே வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் என்பது உண்மையாகிய பின் கட்சிக்கா அல்லது வேட்பாளருக்கா வாக்களிப்பது  என்ற விவாதம் - தர்க்க ரீதியாக இருப்பினும் - எடுபடாது.

இந்த அனுமானத்தில் மூன்று பிரதான கட்சிகளும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாமென்றும் போட்டி வரின் ஜனநாயக முறையில் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது, தலைவர்களாலும் அறிவிக்கப்பட்டது. இங்கு தலைவர்கள் என்பது கட்டாயமாகக் கட்சித் தலைவர்களைக் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முந்நாட்களில் இந்த ஜனநாயக நடைமுறை பல தடவைகள் கட்சித் தலைமைகளால் எகத்தாளமாக மீறப்பட்ட வரலாறு உண்டு. உழைப்பாளிகளின் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியும் இந்த ஜனநாயக மீறலைச் செய்தது.

இந்தத் தடவை முற்போக்கு பழமைவாதக் கட்சி ஜனநாயக மீறலைச் செய்துவிட்டது என அக்கட்சி வேட்பாளராக முனைந்து ஏமாற்றமடைந்த தமிழர் தியோ அன்ரனியும் இதர பல தமிழர்களும் குமுறுகிறார்கள். அவர்களின் குமுறல் நியாயமானதா என்பது பற்றி முகநூல் மற்றும் ஊடகத் தெருக்களில் பக்கவாட்டுத் திருவிழாக்கள்  பல நடைபெறுகின்றன.

முற்போக்கு பழமைவாதக் கட்சியிந் தலைவர் பற்றிக் பிறவுண் மீது எனக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதி பழமைவாத புற எல்லையிலிருந்த துருப்பிடித்த கட்சிக்கு ஓரளவு முற்போக்கு முகம் கொடுத்தவர் பிறவுண். அவருடைய தந்தையார் ஒரு புதிய ஜனநாயகக் கட்சிக்காரர் என்பதால் அவர் மீது கொஞ்சமாவது  முற்போக்குத் தூசி படிந்திருக்கும். அதையும் விட ஒரு துடி துடிப்பான செயல் வீரர். மெருகு படுத்தப்பட்ட மேற்தட்டு பழமைவாதம் அவரிடம் இல்லை. பலத்த எதிர்பார்ப்புகளையும் முறியடித்து அவரைத் தலைவராக்கியதில் தமிழருக்குப் பெரும் பங்குண்டு என்பதை உணர்ந்தவர், அடிக்கடி பிரதான மேடைகளிலும் சொல்லிக காட்டுபவர்.

இந்த தடவை அவரது கட்சி வேட்பாளர் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுவார் என  அவர் அறிவித்தவர் என்ற விடயம் முறையீட்டாளர்களால் மீண்டும் மீண்டும் முழங்கப் படுகிறது.

செவ்வாற்று வேட்பாளர் தெரிவில் அவர் தடுக்கி விட்டார் என்பவர்களும் தடுக்கி விழுத்தப்பட்டார் என்பவர்களும், கட்சித் தலைவர் கட்சிக்கு எது தேவையோ அதைச் செய்திருக்கிறார் என்பவர்களுமாகத் தமிழர் பிரிந்தே போய்விட்டார்கள்.

அவரது தெரிவு - கட்சியி தெரிவு - றேமண்ட் சோ. றேமண்ட் சோ தமிழருக்குப் புதியவர் அல்ன்லர். ஆனால் தமிழரல்லர். ஆயிரத்துக்குமதிகமான வாக்குகளைத் தயார் செய்துகொண்டு போட்டிக்காக ஜனநாயகக் களத்தில் இறங்கி நின்ற தமிழரைப் புறம் தள்ளி  விட்டு றேமண்ட் சோ களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நடைமுறை தவறு எந்று குரலெழுப்புபவர்கள் பலர். அது தமிழர் ஒதுக்கப்பட்டார் என்பதற்காகவா அல்லது ஜனநாயகம் ஒதுக்கப்பட்டது என்பதற்காகவா எந்பது குறித்த விவாதம் இரண்டாம் பட்சம்.

வேட்பாளர் தெரிவில் கட்சித் தலைமைகள் தலையிடக்கூடாது என்பதுவே எனது வாதம்.

இந்தத் தடவை லிபரல்களின் கோட்டையான ரூஜ் றிவரை நீலமாக மாற்றிவிட வேண்டுமென்பதுதான் கட்சியினதும் தலைவரினதும் நோக்கம் என்றும் அந்த வெற்றியைத் தேடித் தர வல்லவர் றேமண்ட் சோ மட்டுமே என்றும் கட்சித் தமிழர்கள் அடம் பிடிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் றேமண்ட் சோ வெற்றி பெறின் மானில அரசில் ஒரு தமிழரை அமர்த்தும் வாய்ப்பை வலுக்கட்டாயமாகப் பறித்த குற்றம் கட்சிக்கும், தலைமைக்கும், கட்சித் தமிழருக்கும் சாரும்.

பழமைவாதக் கட்சி தமிழரிடம் வேரூன்றுவதற்கு நிறைய வருடங்கள் பிடித்தது. பல தமிழர்களின் உழைப்பின் பெறுபேறு அது.

தியோ அன்ரனி விடயத்தில் கட்சி இழைத்தது தவறு என நம்பும் தமிழர்கள் - தியோ அன்ரனியை வெறுப்பவர்கள் கூட - அதிகம். கட்சியும், அதன் நம்பிக்கை நாயகனான பற்றிக் பிறவுணும் தமிழருக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

இந்தத் தடவை றேமண்ட் சோ வென்றாலும் சரி தோற்றாலும் சரி தமிழர்களின் வெஞ்சினத்திலிருந்து கட்சி விடுபட பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

இது ஒரு இடைத் தேர்தல் மட்டுமே. இதில் கட்சி ஒரு தமிழரை நிறுத்தி அவர் தோற்றிருந்தாலும் கட்சிக்கும் தலைவருக்கும் அது வெற்றியே தான்.

தமிழருக்கு சந்தர்ப்பம் கொடுத்த நன்றிக்காக அடுத்த மானிலப் பொதுத் தேர்தலில் தமிழர்கள்  பழமைவாதக் கட்சிக்கு - இதர தொகுதிகளிலும் வாக்களிக்க முன்வருவார்கள்.

இந்த தடவை றேமண்ட் சோ வைச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பதால் தொகுதிக்கோ அல்லது பழமைவாதக் கட்சிக்கோ எந்தவித பலனுமில்லை.

றேமண்ட் சோவின் தெரிவில் கட்சி எடுத்த முடிவு சரியானது என வாதிடும் கட்சித் தொண்டர்களும் முன்னாள் வேட்பாளர்களும் (தமிழர்களை மட்டுமே சொல்கிறேன்) தேவை கருதிய ஒத்தோடல் வகையறாக்களே.

அடுத்த தேர்தலில் இந்தத் தொகுதியிலோ அல்லது வேறெந்தவொரு தொகுதியிலோ வேட்பாளர் தெரிவின்றி ஒரு தமிழரல்லாதார் களமிறக்கப்படும் போது அதில் போட்டியிடும் தமிழரில் ஒருவராக இத் தொண்டர்களில் ஒருவர் இருக்க நேரிடலாம். யார் கண்டது.

இந்த வேட்பாளர் தெரிவுகளின் பின்னணியில் இருக்கும் பரிந்துரைகள், கை முறுக்கல்கள், முதுகு சொறிதல்கள் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் புதியனவையோ அல்லது தமிழரிடம் மட்டுமே உள்ள குணாதிசயங்களோ அல்ல.

செவ்வாற்றுக்கு ஒரு வரலாறுண்டு. தமிழர்களின் வாக்குப் பலத்தை உலகெங்கும் பறை சாற்றிய பலமும் அதற்குண்டு.

வாய்ப்பைக் கொடுக்காது வாக்கைப் பெற நினைப்பதை (நந்றி: வாசு சங்கரப்பிள்ளை) அது மன்னிக்காது.

செவ்வாறு தமிழர் குடிசையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நொந்துபோயிருக்கும் ஈழ வடுக்களுக்கு அதுதான் மாளிகை.

சிவதாசன் ஜூன் 2016




*********
கூட்டுக் கட்டுரை

என்னைக் கேட்டால் - பழமைவாதக் கட்சி தவறிழைத்திருக்கிறது. இதனா ல் அவர்கள் தமிழரின்  பெருங் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் விளைவுகள் இந்த இடைத் தேர்தலையும் தாண்டி பல தமிழர் வாழும் பகுதிகளிலும் பாதிப்புகளை உருவாக்க வாய்ப்புண்டு.

றேமண்ட் சோ இந்தத் தேர்தலில் தெரிவானால் ஒரு தமிழர் மானில அங்கத்தவாரக வரும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டு விடும் எந்ற ஒருவித கசப்பான உணர்வு மக்கள் மத்தியில் வேரூன்றிவிடும்.

றேமண்ட் சோ வேட்பாளாராக வேண்டுமென்ற எண்ணத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் அது கட்சியின்  தந்திரம். தியோ அன்ரனி வேட்பாளராகக் கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தமிழரின்  மந்திரம்.

இது அரசியல்
நமக்கேன் வம்பு?