திங்கள், 20 பிப்ரவரி, 2017



இரண்டாவது ஈழம்

முகப்பு
எல்லா காரியங்களும் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.

அது ஒரு எதிர்பாராத பயணம். ஒரு வாரத்தில் தீர்மானிக்கப்பட்டது. லண்டனிலிருந்து அவசரம் அவசரமாகப் புறப்படட பயணம். ஒரு வாரத்துக்கு முதல்தான் ஒரு மதுபான நிலையமொன்றில் நண்பர்கள் சந்தித்துக் கொண்டபோது அத் தீர்மானம் நிறைவேறியது..

ஆகஸ்ட்  31, 1983 கனடாவின் கியூபெக் மாகாணத்தின்  மிராபெல்  விமானத்தளத்தில் தரையிறங்கியதிலிருந்து தொடங்கியது எனது  இரண்டாம் காற்பயணம். நான், மனைவி, இரண்டு சிறிய தோள்ப் பைகள் கொஞ்சம் செலவுக்குப் பணம். விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது எனது  நெற்றியில் போடப்பட்ட நாமம் 'அகதி'. அது நானாகத் தேடிக் கொண்ட நாமம்.

 விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரி கேட்டார்.
"போகும் இடத்தின் விலாசம் இருக்கிறதா?"
என்ன பொய்யைச் சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "you never listen to me" என்று மனைவி பொரிந்து விழுந்தாள். அவளுக்குத் தமிழ் தெரியாது. கனடாவிற்குப் போகப் போகிறோம் என்று சொன்னது தருணம் தொடங்கிய சண்டை அது.

அந்த அதிகாரி  முதலே பலருக்கு நாமம் போட்டுப் பழகியிருக்க வேண்டும். மனைவியைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு  சொன்னார்."ஒரு டக்சியைப் பிடித்துக் கொண்டு மொன்றியாலில் இந்த விலாசத்துக்குப்  போ. அங்கு உனக்கு உதவி செய்வார்கள்.  வெல்கம் டு  கனடா". ஒரு நக்கலான அரைச் சிரிப்புடான் சொன்னார்.

டாக்சி அந்த விலாசத்தில் இறக்கி விட்டது. பிரஞ்சு மொழி தெரியாது. பெயர்ப்பலகையில் இருந்து எதுவும் பிடிபடவில்லை. உள்ளே போனதும் ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும் என்று ஒரு அறைக்குள் அனுப்பினார்கள். ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வரவேற்று தகவல்களைக் கேட்டு பத்திரத்தை நிரப்ப ஆரம்பித்தார். அவருக்கும் ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் எனது உறவினர். நான் போகாமலேயே தெய்வம் குறுக்கால் வந்தது போலிருந்தது. அவரே தொடர்ந்தும் ஆங்கிலத்தில் பேசி  என் மனைவிக்கு முன் கதையைச் சொன்னார். நான் இறுமாப்போடு  மனைவியைப் பார்த்தேன். ரூமுக்கு வா அங்க பார்த்துக் கொள்ளலாம் என்பது போல் அவளது பார்வை இருந்தது.

"எங்கே தங்கப் போகிறீர்கள்"
"இனித்தான் ஓட்டல் ஏதும் பார்க்க வேணும்"
"உங்களுக்குப் பிரச்சினை இல்லாட்டி என்ர ரூமிலேயே தங்கலாம். பிறகு இடத்தை எடுத்துக் கொண்டு போகலாம்" என்றார். தெய்வம் குறுக்கால் போகவில்லை. எனது தோளிலேயே உட்கார்ந்து விட்டது.

தான் பணி புரியம் இடம் அகதிகளுக்கு உதவி செய்யும் இடம் எனவும் அதை  எல்லோரும் 'மேடம்' அலுவலகம் எனவும் அழைப்பார்கள் எனவும் அவர் சொன்னார். யாத்திரீகர்கள்  தங்கி இளைப்பாறிப் போகும் மடம் போலத்தான் இதுவும் என நினைத்துக் கொண்டேன். அவர் பெயர் சிவசாமி திருச்செல்வம்.

மாலை ஐந்து மணியிருக்கும். கோடை மலைக் காற்று தென்றலாக இதம் தந்தது. திருச்செல்வத்தோடு  நாங்கள் அவரது  இருப்பிடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். பாதசாரி நடைபாதையில் தெருவைக் கடந்து கொண்டிருந்தபோது இடையே "சித்தப்பா" என்றொரு ஒரு உரத்த குரல் கேட்டது. அவர் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். பாதையோரம் வரை வந்து "என்ன இந்தப் பக்கம்" என்றார். அவர் பெயர் தேவதாசன். அவரும் எனது உறவினர். அவரும் தன் வீட்டில் தான் தங்க வேண்டும் என்று அடம் பிடித்தார்.

திருச்செல்வம் இருந்த அப்பாட்மென்ட் மூன்று அறைகளைக் கொண்டு வசதியாக இருந்தது. ஐந்து ஆறு தமிழ் இளைஞர்கள் இருந்தார்கள். ஒரு அறையைக் காலி செய்து எங்களுக்குத் தந்து சிரமதானம் செய்து கொண்டார்கள். அவர்களில்  பெரும்பாலானோர் ஜேர்மணியிலிருந்து அகதிகளாக வந்திருந்தவர்கள்.

படி 1
நாங்கள் இருந்தது மொன்றியல் நகரின் மையப் பகுதி. பெரும்பாலாருக்கு வேலை இல்லை. 'மேடம்' கொடுக்கும் சிறிய உதவிப் பணம் மட்டுமே சகல தேவைகளையும் சமாளிக்க வேண்டும். நான் இருந்த  வீட்டில்  எட்டுப்  பேர். அந்தக் கட்டிடத்தில் இதர அப்பாட்மென்ட்களில் இன்னும் சில நாமம் போட்ட தமிழர்கள் இருந்தார்கள்.  ஆனால் படுக்கைக்கு மட்டும் தான் அந்த அறைகள். சமையல் சாப்பாடு தண்ணி வென்னி  எல்லாம் திருச்செல்வத்தின்  அறையில்தான்.

அப்போது மொன்றியல் நகரில் திக்குத் திக்காக ஒரு இருநூறு தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள் என நினைக்கிறேன். தமிழர்கள் வியாபாரங்கள் எதுவும் தொடங்கியிருக்கவில்லை. எண்பத்தியிரண்டில் வந்த சில மூத்த தமிழர்கள் சிலர் அகதிகளுக்கு உதவி செய்து வந்தார்கள். அகதி வழக்கு எழுதிக்  கொடுப்பது, சடடத்தரணி, குடிவரவு, மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்வது எனப் பலர் உதவியாகவும் உழைப்பாகவும் செய்து வந்தார்கள். கோவில் என்று இல்லை.  ஆனாலும் எந்த சூழலையும் தங்கள் சூழலாக்கி இசைவடையும் ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கோவில்தான். மலைக்  கோவில் என அழைக்கப்படும் கத்தோலிக்க தேவாலயம் தான் பலரது முருகன் கோவில். குன்றில் தானே முருகன் இருப்பான்.

ஒரு சிலர் கூடி ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். 'கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியம்' என்றதற்குப் பெயர். இதில் முன்னின்று உழைத்தவர்களில் திரு பொன்னுச்சாமி, திரு முல்லைத்திலகன்,  திரு கவிதா ராஜன், மறைத்த திரு நந்தகுமார் ஆகியோர் முக்கியமானவர்கள். சங்கமென்று வைத்தால் தமிழை வளர்க்காமல் நம்மவர்கள் விடமாடடார்கள் தானே. 'தமிழ் எழில்' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகை ஒன்று திரு முல்லைத் திலகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

இந்த நாமம் போட்ட  தமிழர்களை விட சில ஆதித் தமிழ்க் குடிகளும் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளிலும் டொரோண்டோ, ஓடடாவா, வினிபெக், ஹாலிபாக்ஸ் போன்ற இடங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் கல்வி, தொழில் நிமித்தம் எழுபதுகளில் குடிவந்தவர்கள். இருப்பினும் எண்பத்தியிரண்டுக்குப் பின்னர் வந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் மட்டுமல்ல முதன் முதலில் கனடாவில் ஒரு தமிழ்ச் சமூகமாக வாழத் தொடங்கியவர்கள்.

ஈழத்து அரசியல் பிரச்சினைகள், எண்பத்தி மூன்று இனக்கலவரம் என்பன கனடிய தொலைக்காட்சிகளில் எம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம். மூத்த குடிகள் பலர் புதிய தமிழர்களுக்கு உதவி புரிய முன்வந்தனர். மொன்றியாலில் பொறியியலாளர்களாகப் பணி புரிந்த திரு.பாலேந்திரன், சுப்பிரமணியம் ஐயர், ஓடடாவாவில் கலாநிதி இலகுப்பிள்ளை, திரு.சிவசுந்தரம், டொரோண்டோவில் திரு.சிறிஸ் கந்தராஜா, திரு.தேவதாசன், திரு.புனிதவேல் என்று பலர் புதிய தமிழர்களுக்கு பல வகைகளிலும் உதவிகளை புரிந்தனர்.

அப்போது டொரோண்டோ வந்திறங்கும் அகதிகளுக்கு உதவிப்பணம் வழங்கப்படுவதில்லை. அதனால் பெரும்பாலான 'திக்கற்ற' அகதிகள் மொன்றியலை நோக்கியே வந்துகொண்டிருந்தார்கள். உறவுகள், நண்பர்களின் ஆதரவு பெற்றவர்கள் டொரோண்டோவில் தங்கினார்கள். இங்கு வேலைகளைப் பெறுவதும் இலகுவாக இருந்தது. குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கல்வி கற்பிப்பதும் முக்கிய நோக்கமாகவிருந்தது.

ஆனாலும் மொன்றியல் ஒரு சிறு நகரம் என்பதும் இலகுவில் சங்கமிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருந்ததும் மகிழ்ச்சியான சமூக வாழிடமாக எமது மக்களால் தெரிவு பெற்றது. துயரமான தாயக நினைவுகளைத் தாங்கி வந்திருந்த நம்மவர்களுக்கு இந்த சமூக உருவாக்கம் அவசியமான ஒளடதமாக இருந்தது. டொரோண்டோவில் வாழ்ந்த தமிழர்கள் வருவாயில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மொன்றியல் தமிழர்களின் மகிழ்வுத் தரத்தை  அவர்களால் சற்றுத்  தாமதமாகவே  எட்டக்கூடியதாக இருந்தது.

ஆரம்பத்தில் பொதுநலவாய நாடுகளின் குடிகள் கனடா வருவதற்கு விசா தேவையாக இருந்திருக்கவில்லை. பின்னர் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஈழத்தமிழருக்கு விசா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பிந்திய அகதிகள் பயண முகவர்கள் மூலமோ அல்லது அடையாள மாற்றங்களை மேற்கொண்டோ தான் வர முடிந்தது.

இந்தக் காலத்தில் பல மூத்த குடிகள் பல நிலை அரசுகளுடனும் உறவுகளைப் பேணி ஈழத் தமிழர்களின் வருகையை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டார்கள். பல அகதிகள் நிரந்தர வதிவிடம் பெற்று தமது உறவுகளை ஈழத்திலிருந்து குறுகிய காலங்களில் வருவிக்கக் கூடியதாகவிருந்தது.

எண்பத்தி மூன்று / நான்கு காலத்தில் ஈழத் தமிழர் ஒன்றியம் அட்வாட்டர் என்னுமிடத்திலுள்ள ஒரு தேவாலயத்தின் கீழறைக்குள் தஞ்சம் புகுந்தது. வண பிதா பிரான்சிஸ் சேவியர் அவர்கள் இந்த தேவாலயத்தில் இலவசமாக இந்த அறையைப் பெற்றுக்  கொடுத்தார். தொண்டர்களின் உதவியுடன் 'ஒன்றியம்' ஒரு நூலகத்தையும் தொலைபேசிச் செய்தித் சேவையையும் செய்து வந்தது. விமான நிலையத்தில் வந்திறங்கும் போக்கற்ற அகதிகளை அதிகாரிகள் ஒன்றியத்துக்கு அனுப்பிவிடுவதுமுண்டு.

இதன் பின்னர்  உதவி மனப்பான்மை கொண்ட 'மூத்த' தமிழர்களும் ஒன்றியத்துடன் இணைந்து பல சேவைகளைச் செய்தார்கள். பல அரசியல் வாதிகளுடனும் ஊடகங்களுடனும் தொடர்புகள் உருவாகின. ஈழத்தமிழரின் உத்தியோக பூர்வமான பிரதிநிதியாக ஒன்றியத்தை பெரும் சமூகம்  அங்கீகரித்தது.

இதே கால கட்டத்தில் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் சிலர் 'தமிழர் ஒளி' என்றொரு அமைப்பையும் தோற்றுவித்து அதன் மூலம் பல சமூக, கலை கலாச்சாரப்பணிகளைச் செய்து வந்தார்கள்.

அக்காலத்தில் கியூபெக் மாகாணத்தில்  இருந்த தமிழ் அகதிகள் இலவச அரச  மருத்துவ உதவிகள் பெறுவதற்கான அட்டைகளைப் பெற்றுக் கொடுத்தத்தில் மூத்த தமிழர்களுக்கும் ஈழத்  தமிழர் ஒன்றியத்திற்கும் பெரிய பங்குண்டு.

அத்தோடு, மிராபெல் விமானநிலையத்தில் வந்திறங்கும் தமிழ்  அகதிகள் தடுப்பு நிலையங்களில் இருக்காது வெளியே வரவேண்டுமானால்  நிரந்தர வதிவுடமையுள்ளவர்கள் பிணை நிற்கவேண்டிய தேவையும் இருந்தது. இதற்காக நிரந்தர பதிவுடமையுடைய தமிழர்களைத் தேடி தொலைபேசிக்  கோவைகளைபி புரட்ட  வேண்டி இருந்தது. கலாநிதி இலகுப்பிள்ளை போன்றவர்கள் இந்த விடயத்தில் பெரிதும் உதவினார்கள்.

வசதி படைத்த தமிழ் நாட்டுத் தமிழர் பலர்  மொன்றியல் தீவிற்கு வெளியே புரோஸார்ட், வெஸ்ட் ஐலண்ட் போன்ற பகுதிகளில் வாழ்த்து வந்தனர். தமிழர் கலாச்சாரத்தைப் பேணுவதில் அதிக விருப்புள்ள பலரை திரு பாலேந்திரன் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார். பிரட் அண்ட் விட்னி என்ற பொறியியல் நிறுவனத்தில் அவரோடு பணி  புரிந்த இராஜசேகரன் என்ற தமிழ்நாட்டு இளைஞர் இவர்களில் முக்கியமானவர். ஒன்றியத்தினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் பொங்கல் விழாவில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இராஜசேகரன் இசைக்கலையிலும் வல்லவர். அவரது இசைக்குழுவில்  இருந்த ஒரு கியூபெக் காரர் இந்த விழாவொன்றில் முற்றிலும் தமிழில் பாடி அசத்தியமை அப்போது ஆச்சரியமாக இருந்தது.

திருச்செல்வம் இருந்த அப்பாட்மெண்டில் பாஸ்கரன் என்றொரு இளைஞரும் வசித்து வந்தார். அவர்  வீடியோ கசட்டுகளில் தமிழ்ப் படங்களைப்  பிரதிபண்ணி வாடகைக்கு கொடுத்துவந்தார். அதனால் அவரை வீடியோ பாஸ்கரன் என்று தான் பலரும் அழைப்பர். கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இல்லை மறை காயாக வாழ்ந்த தமிழர் பலரை ஒன்றிணைய வைத்ததில் ஒன்றியத்துக்கு இணையான பங்கு இவருக்குமுண்டு. புதிய படமொன்று  ரிலீஸாகிவிடடால் அவருடைய  வாசலில் லைன் நிற்கும். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

இதன் பிறகு ஈழத்தமிழர்கள் பலர் சுய தொழில் முயற்சியில் இறங்கினார்கள். முதலில்லாமல் உடனே தொடங்கக்கூடிய ஒரே தொழில் சீட்டுப்  பிடித்தல் தானே.  அதில் இறங்கி தொப்பி வாங்கியவர்களும் உண்டு தொப்பி போட்டவர்களும் உண்டு. ஆனாலும் பலரின் உறவுகளைக் கனடாவிற்கு அழைப்பதற்கு இச் சீட்டு முதலாளிகள் பெருமுதவிகளைச் செய்ததை மறுக்க முடியாது.

ஆளிறக்குதல் (பயண முகவர்) அடுத்த பெரும் தொழிலாகப் பரிணமித்தது. இதுவும் சீட்டுத் தொழிலும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படடன. நிறைய இளைய தலைமுறையினரை இராணுவத்தினரிடமிருந்தும் இயக்கங்களிடமிருந்தும் காப்பாற்றிய தொழில்கள் இவை.

1986 கனடாவில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. 155 ஈழத்தமிழ் அகதிகள் வந்த கப்பலொன்று நியூபவுண்டலாந்துக் கரையில் ஒதுங்கிய செய்தி ஊடகங்களை ஒரு கலக்குக் கலக்கியது. அப்போதைய கனடிய பிரதமர் மாண்பு மிகு பிரையன் மல்ரோணி தமிழருக்கு கவசமாகிக்  காப்பாற்றியமை ஒரு அற்புதம் தான். இந்த  தமிழர்களின் வரவை எதிர்கொண்டு வரவேற்று உதவிகள் புரிந்ததில் கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியத்துக்கும் டொரோண்டோ தமிழ் ஈழச் சங்கத்துக்கும் பெரும் பங்குண்டு.

மலைக் கோவிலை குமரக் குன்றமாக வழிபட்ட இந்துக்கள் ஒருவாறாக ஒரு 'வேயர்ஹவுஸ்' கோவிலையும் உருவாக்கி விட்டார்கள். வருடமொரு முறை வல்மோரின் காவடி யாத்திரையும் ஆரம்பமானது.

இக்காலத்தில் அநேகமாக ஒவ்வொரு இயக்கமும் தத் தம் பரிவாரங்களை புலத்திலும் இயக்கி வந்தன. பலருக்கு இதுவே சுய தொழிலாகவும் அமைந்தது. அரசியல் மயப்படுத்துதலும் ஆயுத மயப்படுத்துதலும் இவை தப்பினால் பயப்படுத்துதலும் வாழ்வோடு இணைந்து பயணித்தன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் டொரோண்டோவிற்குப் படையெடுத்தனர். வேலை, பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி, வெல்பெயர் எனப்படும் உதவிப்பணம் எல்லாமே 'வின் வின்' சிற்றுவேஷன். பழையவர் கழிய புதிய அகதிகளுக்கு கியூபெக் நாமமிட்டுக்கொண்டிருந்தது.

படி 2

எண்பத்தி ஏழாம்  ஆண்டு காலப்பகுதியில் டொரோண்டோவில் அப்பாட்மென்ட் வாடகைக்கு எடுப்பது மிகவும் சிரமம். சுப்பெறின்டென்களுக்கு  ஆயிரம், இரண்டாயிரம் லஞ்சம் வைக்காமல் இடம் கிடைக்காது. அப்படியிருந்தும் வகை துறை அறிந்த நமது தமிழர்கள் டொரொண்டோவை இரண்டாவது ஈழமாக மாற்ற ஆரம்பித்தனர். ஈழத்தின் அத்தனை அம்சங்களும் பிரதி செய்யப்பட்டன.

வெட்டி ஒட்டி முதலாவது பத்திரிகை வெளிவந்தது. செந்தாமரை என்றதற்குப் பெயர். பின்னர் கணனி வடிவமைப்பில் பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பரிணமித்தன. வியாபாரங்கள் பெருகின. விளம்பரங்கள் பெருகின. வானொலிகள் பெருகின. வசதிகள் பெருகின. சொந்தமான வீடுகள் பெருகின. விற்பனை முகவர்கள் பெருகினர். மேடைகள் பெருகின. பேச்சாளர் பெருகினர். சங்கங்கள் பெருகின, சங்கங்கள் பிளந்தன. சண்டைகள் வளர்ந்ததன. ஊர்கள் பெருத்தன. ஈழத்தின் பிரதியும்  உருவாகியது.

வன்முறைகள், தற்கொலைகள், மோசடிகள் என்பவற்றின் மத்தியில் சாதனைகளையம்  படைத்துக்கொண்ட பிரஜைகளுடன் இந்த இரண்டாவது ஈழம் தன்  வலுவோடு முன்னேறிக் கொண்டது. தான் உருவாக்கிய அழுக்குகளையே  பசளையாக்கி பிரமிக்கும் வளர்ச்சியைக் கண்டது.

காணாமற் சென்ற அரசியல் தேடி வந்தது. பிரமுகர்கள் ஓடி வந்தனர். வெள்ளை உதடுகள் தமிழைப் பிசைந்தன. வாக்குச் சாவடிகளில் முதன் முதலாக தமிழர்கள் தமிழருக்கு வாக்களித்தனர். 2006 நவம்பர் மாதம் மார்க்கம் நகரசபை அங்கத்தவராகத் தெரியப்பட்ட திரு லோகன் கணபதி அவர்களும் கல்விச் சபைக்குத் தெரிவான நீதன் சான் அவர்களும்   போட்ட சுழியோடு தமிழரின் அரசியல் வரவு ஆரம்பித்தது. 2011 இல் கனடிய மத்திய பாராளுமன்றத்துக்கு ராதிகா சிற்சபைஈசனைத் தெரிவு செய்ததன் மூலம் எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்மீது போட்ட நாமம் நிரந்தரமாக அகற்றப்பட்டது. அடுத்து கெரி ஆனந்தசங்கரி அவர்களைப் பாராளுமன்றம் அனுப்பியது. அடுத்த வருடம் ஒண்டாறியோ மானில அரசின் ஆசனங்களில் ஒரிரு தமிழர் அமரக்கூடிய அறிகுறியம்  தெரிகின்றது..

இது தரப்பட்ட விடுதலை அல்ல பெறப்பட்ட விடுதலை. இந்த இரண்டாவது ஈழத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழரும் மிதித்துச் செல்வது நம் முந்தியவர் சிந்திய வியர்வையையும், வலிகளையும், அவமானங்களையுமும் என்பதை  மட்டும் பதிவு செய்வதே இச் சிறு முயற்சி. கனடிய மண்ணில் தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் நிறையப் பேர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். எல்லோர் பெயர்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை. அதற்காக எனது வருத்தங்கள்.

லண்டனில் ஒருநாள் எதிர்பாராத பொழுதில் எதிர்பாராமால் எடுத்த தீர்மானம் இந்த இரண்டாவது ஈழத்தின் வாழும் சாட்சியாக என்னை ஆக்கியமை நான் செய்த பாக்கியம்.

காரணமில்லலால் எதுவுமே நடைபெறுவதில்லை.

Nov 2016
(இக் கட்டுரை 'தமிழர் தகவல்' 26 வைது ஆண்டுமலருக்காக எழுதப்பட்டு பிரசுரமும் ஆனது. ஓரிரு சிறுமாற்றங்களுடன் இங்கு இணைகிறது ) 

















கருத்துகள் இல்லை: