சனி, 31 மார்ச், 2018

இளசுவின் மாறாட்டம்



இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை விட மீதிப் பேருக்கு பயங்கர கடுப்பு.

இளசைப்பற்றி பல வருடங்களாகவே எனக்குள் அபிப்பிராய மோதல்கள் நிகழ்ந்து வருவது உண்மை. எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் பங்குபற்றிய தமிழ்நாட்டு நிகழ்வொன்றில் (அப்போது இவரை வெளிநாட்டுக்கு கொண்டுவருமளவுக்கு தமிழ் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருக்கவில்லை) யாரோ மண்டபத்தின் பின்வரிசைகளிலிருந்து கூச்சல் போட்டதைச் சகிக்க முடியாமல் 'யாரடா அங்க சிலோன் காரங்களா  குழப்பம் செய்யிறாங்க? அவங்களைப்  பிடிச்சு வெளியே தள்ளுங்கடா' என்று கர்ச்சித்ததாகக்  கேள்விப்  பட்டேன். அச் செய்தி பொய்யாகவும் இருக்கலாம். இருப்பினும் மனம் அருவருத்தது.

தொடர்ந்து வந்த காலங்களில் அவரது இசையின் ஆக்கிரமிப்பால் நினைவில் உலர்ந்து போய்க்கொண்டிருந்த அவர் பற்றிய குறைபாடுகள் புறந்தள்ளப்படடன. சமீப காலங்களில் அவரது கர்ச்சிப்புகளையும் வித்துவச் செருக்கு என்ற அம்சத்துக்குள் அடக்கிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தேன். ஆனால் சென்ற தடவை அவரைக் கனடாவுக்குக் கொண்டு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் உண்மையில் என்னை இந்த 'கடுப்புக்' கோஷ்டியிடம் தள்ளி விட்டது.

இளசு 'சிலோன்' காரங்களை மதிப்பதில்லை. இளசு மட்டுமல்ல பல தமிழ் நாட்டு சினிமாக் காரன்கள் சிலோன் காரங்களை மதிப்பதில்லை. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அது பற்றி இன்னொரு தடவை பார்ப்போம்.

இளசுவை சென்ற தடவை கனடாவுக்குக்  கொண்டு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் கனடாவுக்கு உரியதல்ல. ஒன்று அவருக்கு நாகரிகம் பண்பாடு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது 'இவங்கள் சிலோன் காரங்கள் தானே, இவங்கெல்லாம் யாரு எனக்கு?' என்ற மமதையின் காரணமாகவிருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவர் பல இலங்கைத் தமிழரைக் கோபப் படுத்தியிருக்கிறார்.

இந்த தடவை கொண்டுவரப்படும் போது எப்படி நடந்து கொள்வாரோ தெரியாது. ஆனால் பல இலங்கைத் தமிழர்கள் அவரைப் பார்க்கத் துடிப்பார்கள் என்று அவரோ கொண்டு வருபவர்கள்  எதிர்பார்க்க மாடடார்கள் என்று நினைக்கிறேன். (இப்போதே டிக்கட்டுகள் அரை விலைக்குக் கூவப்படுவதாகக்  கேள்வி).

பாவம் இந்த இறக்குமதி வியாபாரிகள். இளசுவைக் கொண்டுவந்து, சென்ற வாரம் ஊடக பவனி செய்தார்கள். சில 'சிமார்ட் போன்' ஊடகக்காரர் சத்தமின்றிக் காட்சிப்படுத்தியதில் சிலரின் வாயசைப்புகள் நம்பிக்கையை அளிக்கவில்லை. இறுக்கமாக இருந்த இளசுவின் முகம் இளகத் தொடங்கியபோது  பல 'சிலோன் காரங்கள்' அவருக்குப் பாத பூசை செய்து கொண்டிருந்தார்கள். பணமும் பாத பூசையும் கிடைத்துவிடடால் அவருக்குப் போதும் தானே. 'முடடாள்கள்' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவர் அடுத்த மெட்டை  அவர் முணு முணுத்திருக்கலாம்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த  கதை போல இளசு செய்த இன்னுமொரு விடயம் இறக்குமதிக்  காரருக்கு வயித்தில்  புளியைக் கரைத்திருக்கலாம். ஈஸ்டரும் அதுவுமாக இயேசு நாதர் உயிர்த்தெழவில்லை என்பதை விஞ்ஞான பூர்வமாக  'யூ டியூப்' மூலம் தான் நிறுவி விட்டதாகப் பேசியிருக்கிறார் இளசு. தான் வழிபடும் ரமண மகரிஷி மட்டுமே  உண்மையில்  உயிர்த்தெழுந்தவர் என்பதை  'யூ டியூப்' எதுவுமில்லாமலேயே நிறுவி விடுகிறார். அவரது இசையை விரும்பும் பக்தர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கலாம் என்பதையோ அவர்களது மனங்களைப்  புண்படுத்தக் கூடாது என்பதையோ, அல்லது தனது இறக்குமதி வியாபாரிகள் நட்டமடையக் கூடாது என்றோ இளசு யோசிக்கவில்லை.

இளசுவின் இந்துத்துவம் பற்றி எனக்கு விருப்பு வெறுப்பு எதுவுமில்லை. அவரது இசையில் இன்னும் எனக்கு வெறுப்பு எதுவும் ஏற்படவுமில்லை. அவரது மேதாவித்தனம் மீதும் எனக்கு அக்கறையுமில்லை. அவரைக் கடுப்பேத்துவதற்காக மட்டும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

தயவு செய்து humbleness என்றால் என்னவென்று சில  'யூ டியூப்' வீடியோக்களைப்  பாருங்கள்.

வெளிநாடுகளில் வதியும் பாத பூசைதாரிகளுக்கு: நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நமது பொது எதிரி மகிந்த ராஜபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.








ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018



எனது இனிய நண்பர், நாகலிங்கம் இராமலிங்கம் (அப்பன் அண்ணை) நேற்று மாரடைப்பினால் காலமானார். சுமார் 30 வருடங்கள் எமது நட்பு. குழந்தையின் சுபாவம். எது பற்றியும் கவலை இல்லாதவர். சீட்டு, சதுரங்கம் ஆடுவதில் மகா பிரியர். பல வார இறுதி மாலைகளில் விடியும் வரை சீட்டு விளையாடிவிட்டு 40 கி.மீ . வீடேகும் ஒரு இளைஞராகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார்.

அடுத்த வருடம் எண்பது வயதை எட்டியிருப்பார். தினமும் யோகாசனம் செய்பவர். குறிப்பிடும் வகையில் எந்தவொரு வயதுக்குரிய வியாதிகளும் அவரது உடலை அண்டியிருக்கவில்லை.

குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் மிக நெருக்கமாகவே இருப்பார். சமூக ஈடுபாடுகள், தாய் நாட்டின் மீதான அக்கறை என்று தனது வாழ்நாள் முழுவதையும் பிரயோசனமாகவே கழித்தவர்.

அவரில்லாத வார விடுமுறைகள் இனிமேல் சபிக்கப்பட்டவையே.

அப்பன் அண்ணை, பிரியா விடை உங்களுக்கு!

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

து(தூ)க்கம் தவிர்த்த கவிதைகள்


சிறு வன மோகனம்


என் பின் தோட்டச் சிறு வனம்
முகிழ்த்துக் கிடக்கிறது
புதர்களேயாயினும் அழகான மலர்கள்
என்னூர் நெசவாலைப் பெண்களைப் போல
விதம் விதமான அழகு

மட் கிடாரங்களில் மனைவி
பொத்திப் பொத்தி வளர்த்த
பெருஞ் சாதிப் பூக்கள்
சீருடை அணிந்த கல்லூரிப் பெண்களைப் போல
அதீத கவனத்தின் கொழுப்பு

வன அழிப்பிற்கு நாள் குறித்தாயிற்று
இயந்திரக் கத்தியின் நா தீட்டப்பட்டது

கிடாரப் பூக்கள் சிரித்தன
தலைக்கேறிய தடிப்பு

வண்டுகளும் தேனீக்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
நுகரவும் முகரவுமென
புதரிடைதான் வலம் வந்தன

பாவம் பெருஞ்சாதிப் பூக்கள்

நுகரப்படாமல்
கசங்காமல் சிதயாமல்
தீண்டாமையால் வெந்தன

வன ரசிப்பில்
மனைவிக்கு இச்சை இல்லை
வன அழிப்பில் எனக்கு இச்சை இல்லை

ஒரே ஒரு பொய்
இயந்திரக் கத்தி பழுதாய் விட்டது

வனம் இனுமொரு வாரம் வாழட்டும்!


விரகம்

மாலைச் சூரியனுக்கு 
என் சாளரம் மீது ஒரு கண்
'ஓர்மோனை'க் குறிவைத்து ஓமம் வள்ர்க்கிறது
கொதி நிலையில்...
அதுவா? நானா?


கண்ணாடி

தேவை கண்ணுக்கேயாயினும்
மூக்கு தாங்கிப் பிடிக்கிறது
காது கவ்விக் கொடுக்கிறது
வாய் கழுவித் துடைக்கிறது

கண்ணாடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.






செவ்வாய், 4 ஜூலை, 2017




கனடா 150 கொண்டாட்டம்

இந்த ஜூலை முதலாம் திகதி கனடா முழுவதும் 150 ஆவது பிறந்த தினம் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பல தமிழர் அமைப்புகள் ஒட்டாவாவில் மூன்று நாட்கள் முகாமிட்டுக் கொண்டாடுகின்றன. பல நண்பர்கள் சென்றிருந்தார்கள். பகல், இரவுக் கொண்டாட்டங்களை - சீண்டும் வகையில் - ஒளியில் வரைந்து அனுப்பியிருந்தார்கள்.

கனடாவிற்கு அகதிகளாக வந்த பலரையும் வரவேற்று, உபசரித்து உருவாக்கி வைத்த இந்த கனடிய தாயை யாரால் தான் கொண்டாடாமல் இருக்க  முடியும்?

உண்மையில் கனடாவின் வயது 150 என்றோ அதைக் கொண்டாடும் தகமை தற்போது கொண்டாடுபவர்களுக்கோ உரியது அல்ல. அதை நான் சொல்லவில்லை அன்னாட்டிற்கு உரியவர்கள் சொல்கிறார்கள். கொல்லப்பட்ட அவர்களின் மூதாதையர்களின் உடல்கள் மீது கட்டி எழுப்பப்பட்ட இந்த மண்ணில் பாடப்படும் 'ஓ கனடா' அந்த உரியவர்களின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டு மற்றவர்களால் எழுப்பப்படும் ஆனந்த ஓசை. அவர்களின் அழுகையின் மீது எழுகின்ற எதையும் ரசிக்க எனக்கு விருப்பம் இல்லை.

தலை நகரில் இந் நாட்டுக்குரியவர்களும் முகாமிட்டு  கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல தமது உரிமையை நிலை நிறுத்தும் வகையிலும் பரப்புரைகளையும்  செய்துகொண்டிருந்தார்கள். தம் இனத்தின் படுகொலைக்கான பரிகாரங்களைத் தேடி பல தலைமுறையினரும் அங்கு நீதி கேட்டுக் குழுமியிருந்தார்கள், வழமை போலவே. அவர்களின் முகங்களில் நிழலாடிய சோகத்தை இதற்கு முன் இன்னுமொரு மக்களில் பார்த்திருக்கிறேன்.

அது முள்ளிவாய்க்காலில்.

தோற்றுப்போன மக்களின் முகங்கள் அவை.

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு திடலமைத்து தமிழர்கள் மீதான வெற்றியைக் கொண்டாடும் போது எப்படி மனநிலை இருக்குமோ அப்படித்தான் எனக்கிருந்தது.

கொண்டாடுபவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். மறுக்கவில்லை.




வெள்ளி, 5 மே, 2017


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கனடாவின் அவமானம்
 
2011 ஜூன் மாதம் சிண்டி கிளாடியூ என்னும் 36 வயதுடைய பெண் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான எட்மன்ரனில் உள்ள ஓட்டல் அறையொன்றில் குளியற்தொட்டியொன்றில் இறந்திருந்தாள். அதிகப்படியான இர்த்த ஓட்டமே மரணத்திற்குக் காரணம் என மரண அதிகாரியின் தீர்ப்பு அமைந்திருந்தது. 
 
சிண்டியின் மரணம் ஒரு கொலை எனக் கூறி அக் கொலையைச் செய்தவரென ஒன்ராறியோவைச் சேர்;ந்த ட்ரக் சாரதியான ப்ராட் பார்ட்டன் கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்பட்டது. இந்த மார்ச் மாதம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பார்ட்டன் குற்றவாளியல்லவென அறிவிக்கப்பட்டது.
 
இச் சம்பவம் பற்றிய செய்திகள் பல வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்த போதும் அவை இரக்க நரம்புகளை மெதுவாக வருடிச் சென்றதோடு அவைவழக்கம் போல் அன்நியப் பெருவெளிக்குள் அடக்கம் கொண்டுவிட்டன.
 
இன்று (மார்ச் 31) இச் செய்தி  சி.பி,சி. வானொலியில் அனா மரியா ட்றெமொன்ரி யினால் அலசப்பட்டபோது தான் செய்தியின் முன் புலம் பின் புலங்கள் எல்லாம் சேர்ந்து எனதுமூர்க்க நரம்புகளைப் புடைத்தெழச் செய்தன.
 
சிண்டி ஒரு கனடிய சுதேசியப் பெண். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பாலியல் தொழிலாளி. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் செய்தவர் ஒரு வெள்ளை இனத்தவர். 
 
தீர்ப்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச்  சாதகமாக அமைந்ததா அல்லது இறந்துபோன சிண்டிக்கு நீதி கிடைக்கவில்லையா என்ற வாதப் பிரதி வாதஙகள் ஒருபுறமிருக்கட்டும். என் நரம்புகளைப் புடைத்தெழச் செய்த விடயம் வழக்காடப்பட்ட நீதிமந்றத்தில் நடைபெற்ற சம்பவம்தான்.
 
கனடிய சுதேசிகள் மீது பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு இப்போதைக்கு நின்றுவிடப் போவதில்லை என்பதற்கு சிண்டியின் மரணம் புதிதாகநாட்டப்பட்ட இன்நுமொரு மைல் கல் என்பதற்கு இந்த நீதிமன்றம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறது.
 
சிண்டியின் மரணம் மிகுதியான இரத்த ஓட்டத்தினால் நடைபெற்றிருக்கிறது என்பதைச் சொல்ல சாட்சியங்களின் அவசியம் இருந்திருக்காது. சிண்டியின் பிறப்புறுப்பிணுள்மெல்லிழையம் (tissue) வெடித்ததன் காரணமாக இரத்த ஓட்டம் ஏற்பட்டது என்பதையும் மருத்துவ அதிகாரிகள் 'ஐயம் திரிபுற' நிரூபித்துமிருக்கலாம். இழைய வெடிப்புக்குக்காரணம் முரட்டுக் கலவி (rough sex) என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆனாலும் அதற்குக் காரணமானவர் குற்றமேதும் இழைக்கவில்லை என நீதிமந்றம்தீர்ப்பளித்தால் குற்றம் சிண்டியின் மீதுதானே! 
 
சரி அதை விடுங்கள். உலகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலாவது கொலை செய்யப்பட்டவர் இவர்தான் என நிரூபிப்பதற்கு கொலைசெய்யப்பட்டவரின் தலையைக் கொய்து  நீதிமந்றத்துக்குக் கொண்டு வந்து ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக வைப்பார்களா? 
 
கனடா எப்படிப்பட்ட நாடு. நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடு. இங்குள்ள ஒரு நீதிமந்றத்தில் ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக அன்நாட்டின் உரிமைக்காரப்பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்து கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள். முரட்டுக் கலவியால் இழையம் கிழிந்து மரணமானாள் எனக் காட்டுவதற்கு இத்தனை நடவடிக்கை!  தூரதேசமொன்றில் சுய இன்பத்திற்காகக் கொலைக்களம் சென்று கொலையுண்டு வருகின்ற இராணுவத்தினனுக்கு கொடி போர்த்தி ஊர்வலம் செய்யும் இந்த நாட்டில் ஒரு சுதேசிப்பெண் 'குற்றவாளி' என்பதை நிரூபிக்க கனடாவின் நீதித்துறை பெரும்பாடு பட்டிருக்கிறது! (இந்த இடத்தில் செருகக்கூடிய ஒரு கொசிறு: சில நாட்களின் முன் முகநூலில் ஒருஇலங்கைப் பெண் குமுறியிருந்தார். கனடா ஒரு சுவர்க்க பூமி. பிறந்த நாட்டில் நான் ஒரு மாமிசத் துண்டாகவே நடத்தப்படுவதுண்டு என்று. இக்கரை madam க்கு அக்கரை சிவப்புத்தான்)
 
இந்த வழக்கில் ஜூரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரென்று நிநைக்கிறீர்கள்? 8 பேர் வெள்ளை இனத்தவர். ஒருவர் கறுப்பிநத்தவர். மற்றவர் மஞ்சள் இனத்தவர். சுதேசியர்எவருமில்லை. 
 
இதுபற்றி வழக்குத் தொடுநரிடம் அனா மரியா வினவியபோது அவர் சொன்ன பதில் சுதேசியர்களை ஜூரர்களாக நியமித்தால் அவர்கள் முற்சாய்வோடு (bias) தீர்ப்பளித்துவிடலாம் என்பதற்காகவே அப்படி நியமிக்கவில்லை என்பதாக இருந்தது. 
 
சுதேசிகளின் சமூகத்தில் சிந்டியிந் கொலை ஆச்சரியத்தைத் தருமெந்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 1980 முதல் 2013 ஆண்டு வரையில் 1017 பெண்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 164 பெண்கள் காணாமற் போயிருக்கிறார்கள். மனிற்றோபா மானிலத்தில் இக் காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் 49% சுதேசிப் பெண்கள். 
 
உலகெங்கும் சுதேசிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் விடயங்களில் நமது சுவர்க்க பூமியான கனடாவும் அதியுயர் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐ.நா. விந் பெண்களுக்குஇழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான அமமைப்பு 38 சிபார்சுகளுடந் கூடிய தனது அறிக்கை மூலம்  மிகவும் காட்டமாக கனடாவைச் சாடியிருக்கிறது. இருந்தும் நமதுசுவர்க்க பூமி இது பற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
 
கனடாவின் கொலை செய்யப்படும் மற்றும் காணாமற் போகும் சுதேசியப் பண்கள் பற்றிய பிரச்சினைகளை ஆரய்வதற்காக ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்கும்படி பலசுதேசிய மற்றும் பொதுசன அமைப்புக்கள் அரசிடம் மன்றாடி வருகின்றன. இருந்தும் நமது ஹார்ப்பர(ர)சருக்கு இது ஒரு பிரதம விடயமே இல்லை. இது பற்றிய அவரதுசமீபத்திய இரு கருத்துக்கள்: 
" காணாமற் போகும் அல்லது கொலை செய்யப்படும் சுதேசியப் பெண்களின் பிரச்சினை ஒரு சமூகவியல் சார்ந்த பிரச்சிநையே அல்ல. மாறாக அது ஒரு குற்றவியல்சம்பந்தமான பிரச்சினை. அதை அதன் வழியில் தான் அணுக வேண்டும்" (இன்நுமொரு சுதேசியப் பெண் ரீனா பொண்டெயின் கொலை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குஅளித்த பதில்)
 
"உண்மையைச் சொல்லப் போனால் இந்த விடயங்கள் எங்கள் றேடாரில் அதிக உயரத்தில் இல்லை" (சி.பி.சி யிம் மூத்த அறிவிப்பாளர் பீட்டர் மான்ஸ்பிறிட்ஜ் இன் கேவிக்குப்பதிலளித்த போது)
 
உண்மைதான். ஹார்ப்பரின் ரேடார் பிராந்தியத்தில் அதி உயரத்தில் பறப்பது போர் விமானங்கள் மட்டுமே. 
 
சிண்டிக்கும் அவளது பாதையில் வலிந்தநுப்பப்பட்ட சகோதரிகளுக்கும் நான் சொல்லக் கூடியது அடுத்த பிறப்பிலாவது சிகண்டிகளாகப் பிறவுங்கள். 
 

திங்கள், 20 பிப்ரவரி, 2017

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

ஓ  பா(வ)மா?.

ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றிப் பலருக்குக்  கவலை.  அவர் ஒரு கண்ணியவான், நீதிமான், ஏழைபங்காளன், சமாதானம் விரும்பி என்று பலரும் பூ மழை பொழிகிறார்கள். அவர் இருக்கும்வரை வெள்ளை மாளிகை பளிங்கு மாளிகையாகவே சுவர்களுக்கு வெளியில் நின்றவர்களுக்குத் தெரிந்தது. துரும்பரின் வரவில் ஒபாமாவின் ஒளிவட்டம் பெரிதாகியதில் வியப்பில்லை.

துரும்பர் வெண்கலக் கடைக்குள் புகுந்த யானை என்பதிலும் மாற்றுக்  கருத்தில்லை. போன நாளிலிருந்து ஒரே 'சவுண்டு' விட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அவர்  இப்படித்தான் நடந்துகொள்வார் என்பதும் எதிர்பார்த்ததுதான். எதிர்பாராதது இவ்வளவு விரைவில் நடக்குமென்பது மட்டுமே.

'The Making of Trump' என்றொரு டேவிட் கேய்  ஜோண்ஸ்டன்  எழுதிய புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். துரும்பரின் குணாதிசயங்களைப் பற்றி அவர் ஆதாரங்களுடன் நிறைய எழுதியிருந்தார். அதில் முக்கியமான சில 1) எதிரிகளைப்  பழி வாங்குவதில் இன்பம் பெறுபவது  2) எடுத்த காரியத்தை குறுக்கு வழிகளில் போயாவது முடித்து வைப்பது 3) பொய் சொல்வது 4) உறவினரென்றாலும் ஈவு இரக்கம் காட்டாதிருப்பது ஆகியன. துரும்பரின் தந்தையும், தாத்தாவும் இவரைப் போலவே தார்மீகமற்ற வியாபாரிகள். கடும் உழைப்பாளிகள். துரும்பரின் வெற்றியின் பின்னால் ஊழல் நிறைத்த அரச ஊழியர்களும், அரசியல்வாதிகளும் (கிளின்டன் உட்பட), மாபியாக் கோஷ்டிகளும், போதை வஸ்து கடத்துபவர்களும், சூதாட்டக் காரர்களும் தானிருந்திருக்கின்றனர் என்கிறார் ஜோண்ஸ்டன்.

துரும்பர் ஒரு கோடீஸ்வரர். ஆனால் இதர கோடீஸ்வரர்கள் இவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்குகிறார்கள். அதிகார வர்க்கம் இவரை மதிப்பதில்லை. இந்த இரண்டு சாராரும் துரும்பருக்கு எதிரிகள். துரும்பரது நடவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள். பெரும்பாலான ஊடகங்கள் இபார்கள் கைகளில் தான் இருக்கிறது. துரும்பரின் முதலாவது பழிவாங்கல் இவர்கள் மீதுதான் ஆரம்பிக்கிறது.. உழைப்பவர்களின் தோழனாக அவர் போடுவது  வேடம் தான். அரியாசனத்தில் அமர்வதுவே அவரது இலக்கு. அவர் வைத்த இலக்கை அவர் எவ்விதமாகவும் அடையாவே முற்பட்டார். வழிகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அவரை எதிர்ப்பவர்கள் அவரைவிட மோசமானவர்கள் என்பது வாக்காளருக்குத் தெரிந்திருந்தது.

உலகில் அகதிகளை உருவாக்கியவர்களே அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான். வணிக லாபமே அவர்களது இலக்கு. அவர்களால் உருவாக்கப்படட அகதிகள் அவர்களது நாடுகளை நோக்கி ஓடுவதில் தப்பில்லை.

2015 ஐ.நா. அறிக்கையின்படி 63.5 மில்லியன் அகதிகள் தத்தம் நாடுகளிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். சமீப மனித வரலாற்றிலேயே இந்தளவு கொடுமை நடந்ததில்லை. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். அமெரிக்கப் படையெடுப்புகளினாலும், குண்டுவீச்சுக்களினாலும் அவர்களால் உருவாக்கப்படட பயங்கரவாதிகளாலும் துரத்தப்படடவர்களே இந்த அகதிகள். துரும்பரின் முஸ்லீம் தடைக்கு எதிராக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜனாநாயக, குடியரசுக் கட்சிக்காரர்களினாலேயே இம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப் படடார்கள்.

புஷ் ஆரம்பித்து வைத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரை இறுதிவரை உக்கிரமாக முன்னெடுத்தவர் ஒபாமா. இப்போர்கள் உருவாக்கிய அகதிகளையே துரும்பர் தடை செய்கிறார். மனிதாபமானமில்லாதவாரென்று அறியப்படட துரும்பரிடம் இதை எதிர்பார்க்கலாம். ஆனால் மனித உரிமைகளின் காவலன் என்று மகுடம் சூட்டிக்கொண்டு, சமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்றுக்கொண்ட ஒபாமாவிடம் இதை எதிர்பார்க்கலாமா? ஆனால் அவரது அறுவடைதான் இந்த உலக அவலம். ஈராக்கில் புஷ் துரத்திய முஸ்லிம்களுக்கு லிபியாவில் பயிற்சி தந்து சிரியாவில் போரிட வைத்த ஒபாமா மீதான பழிவாங்கல் தான் இந்த முஸ்லீம் தடை. துரும்பரின் பார்வையில் ஒபாமா எப்போதும் ஒரு முஸ்லீம் தான்.

அது மட்டுமல்ல. ஒபாமா நிர்வாகத்தில் நாடு கடத்தப்படட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.5 மில்லியன். இவருக்கு முன்னான அத்தனை ஜனாதிபதிகளினதும் மொத்த நிர்வாக காலத்தில் நடைபெற்றதைவிட இது அதிகம். . மூன்று வயதுக்கு குழந்தைக்குக்கூட ஒரு வக்கீல் பிரதிநிதியாக இருக்க முடியாது என்பது  சட்டம்,  அந்த குழந்தைகள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்தக் கொடுமை நீதிமான் ஒபாமா நிர்வாகத்தில்தான் நடந்தது.

துரும்பரின் அரசியல் ஒபாமா அரசியலின் நீட்சிதான். அவருடைய மந்திரிசபையில் அமர்த்தப்பட்டிருக்கும் பெரு வணிகர்கள், இராணுவ ஜெனெரல்கள், தீவிர வலதுசாரி கடும் போக்காளர்கள் எல்லோரும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர்களின் பெருமாதரவுடன் தான் நியமனம் பெறறார்கள். எனவே துரும்பர் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளும் இவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு ஆமோதிக்கப்படடவையேதான். எனவே ஒபாமாவோ ஹிலாரி கிளின்ரனோ அல்லது புஷ் சோ இந்நியமனங்களுக்கு எதிராக ஒப்பாரி வைக்க முடியாது.

நிறவெறி நிறை வெறியாக இருக்கின்ற அமெரிக்காவில் ஒபாமாவின் நகர்வுக்கான வெளி மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அந்த வெளிக்குள்ளும் அவர் கைகள் கட்டுப்பட்ட்தா அல்லது தானாகவே கைகளைக் கட்டிக் கொண்டாரா என்பதுதான் கேள்வி.

ஒபாமா ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் முன்னெடுத்த 'நீதி யுத்த' த்தின் போது புஷ் சை விட பத்து மடங்கு அதிகமான குண்டு வீச்சுக்களை நிகழ்த்தினார். 2008-2016 காலப்பகுதியில் மட்டும் 272 ஆளில்லா விமானத்தாக்குதலின் மூலம் 600 க்குமதிகமான பொதுமக்களைக் கொன்றொழித்தார்.  ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்ட்ங்களோ, தெருப்போராட்டங்களோ உலகெங்கும் முன்னெடுக்கப்படவில்லை.  ஆனால் துரும்பர் வெள்ளை மாளிகைக்குள் காலெடுத்து வைக்கு முன்னரே, குண்டுகளை முஸ்லீம் மக்களின் மீது பொழிவதற்கு முன்னரே பல்லாயிரக் கணக்கானவர்கள் தெருக்களில் இறங்கி விடடார்கள்.

பெரும்பான்மையான வாக்காளர்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தவுடன் காலாவதியாகிவிடுகின்றனர். தவணை முடியும்வரை அரசையும் அரசியல்வாதிகளையும் உரிய முறையில் செயற்பட வைப்பது செயல்வாதிகள் (activists) தான். அவர்களது ஆடுகளம் தெருக்கள்  தான். ஆனால் துரதிர்ஷ்டா வசமாக இந்த நவீன தாராளவாத முலாமைப் பூசிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சி போன்றவர்கள் ஆட்சியமைக்கும் போது செயல்வாதிகள் மௌனமாகிவிடுகிறார்கள். சமாந்த பவர், சூசன் ரைஸ் போன்ற மனித உரிமை செயல்வாதிகள் தாம் சார்ந்திருக்கும் அரசின் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். துரும்பரின் வரவுக்கெதிரான பெண்களின் போராட்டம் ஒபாமாவின் அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாதாது துர்ப்பாக்கியம்.

முகநூலில் ஒரு கார்ட்டுனில் பெண்கள் போராடடம் பற்றி ஹிலாரி சொல்வதுபோல் ஒரு வாசகம் இருந்தது. " இந்த "----------" எல்லாம் தேர்தல் அன்று எங்கே போயிருந்தார்கள்" என்று. கற்பனையானாலும் சிந்திக்க வேண்டியது.

துரும்பர் அதிபரானால் அவர் தனது நாட்டின் மீதே கவனம் செலுத்துவார். அது இதர உலக நாடுகள் சுயமாகச் சுவாசிக்க இடம் கொடுக்கும் என்று இதே பத்திரிகையில் முன்னொரு பத்தியில் எழுதியிருந்தேன். இப்போது துரும்பர் அதையேதான் செய்கிறார். சிரியாவில் பூட்டினோடு முண்டவில்லை. ஈரான் மீது குண்டு போடவில்லை. யுக்கிரேயினில் ரஷ்ய ஆதரவுப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தவில்லை. உலகம் அவர் கவனத்திலில்லை.  அவரது கவனம் முழுவதும் அவர் நாட்டிலேயே. அமெரிக்காவை முதன்மையாக்குவதில் அவர் கவனம் செலுத்துகிறார். அதில் தவறென்ன இருக்கிறது?

உலகத்தில் எந்தவொரு நாட்டுக்கும் தர்மத்தைப் போதிக்கும் அருகதையில்லை. எல்லோர் கைகளிலும் இரத்தம் தோய்ந்திருக்கிறது. ஒரு நாடு இன்னொன்றுக்கு வகுப்பு எடுக்க முடியாது. அரசியல் ஊஞ்சல் இரண்டு பக்கமும் போகத்தான் வேண்டும். இப்போது வலதுசாரிகளின் பக்கம். அவ்வளவுதான். அதன் கால நியமத்தை அதற்கு ஆதரவளிக்கும் மக்கள் திண்மம் தான் தீர்மானிக்கும். அது நான்கு வருடங்களோ துட்டு வருடங்களோ  ஆகலாம்.

அமெரிக்காவின் அதிபராக ஒரு அசுரர் அவதரித்திருக்கிறார் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவரது  வரவை இலகுவாக்கியவர்கள் ஒபாமா, ஹிலாரி போன்றவர்கள் தான்.

துரும்பர் ஆட்சிக்கு வந்ததும் கூறிய ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
"நான் எனது நாட்டை முன்னேற்றவும் பாதுகாக்கவும் பாடுபடுவேன். நீங்களும் உங்கள் நாடுகளை முன்னேற்றுங்கள், பாதுகாருங்கள்"

ஒரு பாதிக்கப்படட அமெரிக்க உழைப்பாளியை அவறது இவ்வாசகங்கள் மகிழ்ச்சிப்படுத்துமேயானால் அவரது அவதாரம் தேவையானதே.

இந்து மதத்தில் கூறப்படுவதுபோல் முறைப்படி தவம் செய்த அசுரனுக்கு வரத்தை அருளவேண்டியது கடவுளின் கடமை. முக்காலமுமும் உணர்ந்த கடவுள்  அசுரன் தன் வரத்தை துர்ப்பிரயோகம் செய்யக்கூடுமென்பதையும் அரன் அறிந்தே இருந்திருப்பார். ஆனாலும் தவத்துக்கான வரத்தை அவர் கொடுப்பதுதான் நீதி.  துர்ப்பிரயோகம் செய்யின் அசுரன் அழிக்கப்படுவான் என்பதும் அசுரனுக்குத் தெரியும்.

அமெரிக்க மக்கள் அசுரனுக்கு வரத்தை அளித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் போய் பாற்கடலைக் கடைந்து நஞ்சை எடுத்துப் பருக்க முடியாது . பொறுப்பதே நீதி.



மாசி 2017 ஈ குருவியில் பிரசுரமானது