வியாழன், 3 ஆகஸ்ட், 2017

து(தூ)க்கம் தவிர்த்த கவிதைகள்


சிறு வன மோகனம்


என் பின் தோட்டச் சிறு வனம்
முகிழ்த்துக் கிடக்கிறது
புதர்களேயாயினும் அழகான மலர்கள்
என்னூர் நெசவாலைப் பெண்களைப் போல
விதம் விதமான அழகு

மட் கிடாரங்களில் மனைவி
பொத்திப் பொத்தி வளர்த்த
பெருஞ் சாதிப் பூக்கள்
சீருடை அணிந்த கல்லூரிப் பெண்களைப் போல
அதீத கவனத்தின் கொழுப்பு

வன அழிப்பிற்கு நாள் குறித்தாயிற்று
இயந்திரக் கத்தியின் நா தீட்டப்பட்டது

கிடாரப் பூக்கள் சிரித்தன
தலைக்கேறிய தடிப்பு

வண்டுகளும் தேனீக்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
நுகரவும் முகரவுமென
புதரிடைதான் வலம் வந்தன

பாவம் பெருஞ்சாதிப் பூக்கள்

நுகரப்படாமல்
கசங்காமல் சிதயாமல்
தீண்டாமையால் வெந்தன

வன ரசிப்பில்
மனைவிக்கு இச்சை இல்லை
வன அழிப்பில் எனக்கு இச்சை இல்லை

ஒரே ஒரு பொய்
இயந்திரக் கத்தி பழுதாய் விட்டது

வனம் இனுமொரு வாரம் வாழட்டும்!


விரகம்

மாலைச் சூரியனுக்கு 
என் சாளரம் மீது ஒரு கண்
'ஓர்மோனை'க் குறிவைத்து ஓமம் வள்ர்க்கிறது
கொதி நிலையில்...
அதுவா? நானா?


கண்ணாடி

தேவை கண்ணுக்கேயாயினும்
மூக்கு தாங்கிப் பிடிக்கிறது
காது கவ்விக் கொடுக்கிறது
வாய் கழுவித் துடைக்கிறது

கண்ணாடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.






கருத்துகள் இல்லை: