கனடா 150 கொண்டாட்டம்
இந்த ஜூலை முதலாம் திகதி கனடா முழுவதும் 150 ஆவது பிறந்த தினம் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பல தமிழர் அமைப்புகள் ஒட்டாவாவில் மூன்று நாட்கள் முகாமிட்டுக் கொண்டாடுகின்றன. பல நண்பர்கள் சென்றிருந்தார்கள். பகல், இரவுக் கொண்டாட்டங்களை - சீண்டும் வகையில் - ஒளியில் வரைந்து அனுப்பியிருந்தார்கள்.
கனடாவிற்கு அகதிகளாக வந்த பலரையும் வரவேற்று, உபசரித்து உருவாக்கி வைத்த இந்த கனடிய தாயை யாரால் தான் கொண்டாடாமல் இருக்க முடியும்?
உண்மையில் கனடாவின் வயது 150 என்றோ அதைக் கொண்டாடும் தகமை தற்போது கொண்டாடுபவர்களுக்கோ உரியது அல்ல. அதை நான் சொல்லவில்லை அன்னாட்டிற்கு உரியவர்கள் சொல்கிறார்கள். கொல்லப்பட்ட அவர்களின் மூதாதையர்களின் உடல்கள் மீது கட்டி எழுப்பப்பட்ட இந்த மண்ணில் பாடப்படும் 'ஓ கனடா' அந்த உரியவர்களின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டு மற்றவர்களால் எழுப்பப்படும் ஆனந்த ஓசை. அவர்களின் அழுகையின் மீது எழுகின்ற எதையும் ரசிக்க எனக்கு விருப்பம் இல்லை.
தலை நகரில் இந் நாட்டுக்குரியவர்களும் முகாமிட்டு கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல தமது உரிமையை நிலை நிறுத்தும் வகையிலும் பரப்புரைகளையும் செய்துகொண்டிருந்தார்கள். தம் இனத்தின் படுகொலைக்கான பரிகாரங்களைத் தேடி பல தலைமுறையினரும் அங்கு நீதி கேட்டுக் குழுமியிருந்தார்கள், வழமை போலவே. அவர்களின் முகங்களில் நிழலாடிய சோகத்தை இதற்கு முன் இன்னுமொரு மக்களில் பார்த்திருக்கிறேன்.
அது முள்ளிவாய்க்காலில்.
தோற்றுப்போன மக்களின் முகங்கள் அவை.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு திடலமைத்து தமிழர்கள் மீதான வெற்றியைக் கொண்டாடும் போது எப்படி மனநிலை இருக்குமோ அப்படித்தான் எனக்கிருந்தது.
கொண்டாடுபவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். மறுக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக