செவ்வாய், 9 அக்டோபர், 2007

Miss Me - But Let Me Go

When I come to the end of the road
And the sun has set for Me.
I want no rites in a gloom filled room
Why cry for a soul set free?

Miss Me a little - but not too long
And not with your head bowed low
Remember the love that we once shared.
Miss Me - but let me go.

For this is a journey that we all must take
And each must go alone.
It's all a part of the Master's Plan
A step on the road to home.

When you are lonely and sick at heart,
Go to the friends we know
And bury your sorrows in doing good deeds.
Miss Me - but let me go.

-Thanks to the unknown author of this beautiful poem

வெள்ளி, 5 அக்டோபர், 2007

சேதத்தின் குரல்

தெற்கிலிருந்தொரு சேதத்தின் குரல் ஒலிக்கவாரம்பித்திருக்கிறது- ரணிலின் தொண்டையிலிருந்து! ‘ஒற்றையாட்சியை’ மஹிந்தவின் கைகளிலிருந்து பிடுங்கியெடுத்து ஊரெல்லாம் கொண்டோடப் போகிறார்.; ‘கண்டி யாத்திரை’ போய் பண்டா- செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியக் காரணமாகவிருந்த ஜே.ஆரின் மருமகனிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே.
தமிழர்களின் வாழ்வையும் வளத்தையும் சேதப்படுத்தியே அரசியல் நடத்திவரும் இப்படியான குரல்கள் தென்னிலங்கையில் பல தடவைகள் ஒலித்திருக்கின்றன. தமிழர்கள் இதற்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதையேதான் விரும்புகிறார்கள். அதுதான் ஜனநாயக மரபு , அதுவேதான் மக்கள் விருப்பு. போர் என்றால் போர், சமாதானமென்றாலும் போர் என்னும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
பதில்? தமிழ் மக்களும் விரைவில் தென்னிலங்கையின் சேதத்துக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்கள். அழிவு நிச்சயம். அம் மக்களின் ஜனநாயக விருப்பை மீறுவது அழகல்ல.
84 வீதமான தென்னிலங்கை மக்கள் புலிகளைத் தோற்கடித்தபின்னர்தான் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். 70 வீதமான மக்கள் ‘புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினால் அவர்களோடு பேசலாம்’ என்று கூறியிருக்கிறார்கள். மக்கள் முட்டாள்களா? அல்லது கருத்துக் கணிப்புக் கேள்விகளைத் தயாரித்தவர்கள் முட்டாள்களா? என்ற விவாதத்தில் இறங்கி நாமும் முட்டாள்களாகத் காட்டிக் கொள்ள வேண்டாம். இதுவரை உருப்படியான தீர்வுப் பொதியொன்றை முன்வைக்கத் தகுதியற்ற அரசியல்வாதிகளும் அவர்களை உருவேற்றும் மக்களும் ஒரே ரகத்தினரே. பஞ்சம் பட்டினியை நாடு எதிர்கொள்ளப் போகிறது, விலைவாசி, வரி உயர்வு என்று பல அச்சுறுத்தல்கள். இதற்கெல்லாம் காரணம் போர்தான் என்றெல்லாம் உணர்ந்து கொள்ளாது ‘புலிகளைத் தோற்கடிப்பதே’ மிக முக்கிய விடயமெனக் கருதும்போது போரினால் வரும் இரத்தக் களரிகளையும் ஏற்க அவர்கள் தயாராகவேயிருக்க வேண்டும்.
ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகள் எதையுமே செய்வார்கள். ரணிலும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் நி;றுத்த உடன்படிக்கை செய்துகொண்டதிலிருந்து சமஷ்டி ஆட்சியை ஏற்றுக்கொண்டு தமிழர்களிடம் சோரம் போய்விட்டதற்காக சிங்கள தேசத்தின் எதிரியாக்கப்பட்ட ரணில் இப்பொழுது (குப்பை)அரசியலில் இறங்கியிருக்கிறார். ஜே.வி.பி. என்ற வைரஸ் சுதந்திரக் கடசியோடு சேர்ந்து இனவொழிப்பைத் தீவிரமாக்கியது. இப்போது அமிழப்போகும் கப்பலைக் கைவிட்டுவிட்டு இன.னொன்றுக்குத் தாவியிருக்கிறது அது. தனித்து ஆட்சியமைக்க முடியாது ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் இக்கட்சி இருக்கும் வரை நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் விமோசனம் இல்லை.
புலிகளை முற்றாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று கோதபாய ராஜபக்ஷ பேசியிருக்கிறார். அது நாடு முழுவதுக்குமான பிரகடனம். அப்போது அருகிலிருந்த ‘சர்வ வல்லமை பொருந்திய’ கனம் ஜனாதிபதி அவர்கள் மறுப்புத் தெரிவிக்காமையால் அவரும் அப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே கருத வேண்டும். அதே வேளை போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்குக் காரணமான ஐ.தே.கட்சியும் தாம் ஆட்சிக்கு வந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்வோமென்று அறிவித்திருக்கிறது. இதன் பின்னர் தமிழர் தரப்பு மட்டும் ஏன் இவ்வொப்பந்தத்தைக் கட்டிக்கொண்டழ வேண்:டும்?
கோதபாயவின் போர்ப்பிரகடனம் புலிகளுக்கு ஒரு வகையில் கிடைத்த அதிர்ஷ்டமென்றே கருத வேண்டும். சர்வதேசங்களின் வேண்டுகோளுக்கிணங்க புலிகள் பேசப் போனார்கள். ஒப்பந்தத்திற் கையெழுத்திட்டார்கள். அப்பொழுது அவர்களிடம் பலமிருந்தது. ஆனால் அதற்கு சர்வதேசங்களும் தென்னிலங்கை மக்களும் கொடுத்த வெகுமதி ஏமாற்றமே. தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து இறங்கி சமஷடி ஆட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருந்த புலிகளை வஞ்சித்ததில் தென்னிலங்கை மக்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. புலிகளை ஜனநாயகத்துக்குக் கொண்டுவர போர்தான் வழியென்று அவர்கள் நினைத்து அதன் விளைவாக தமிழினப்படுகொலைதான் எஞ்சுமானால் தமிழர்களின் துன்பங்களை அவர்கள் சுமக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருத வேண்டும்.
இதனால் தமிழர்களும் போரின்பநாதர்களாக மாறவேண்டுமானால் …ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முடிவொன்றிற்காக மக்கள் தம்மைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். நாடு இரத்தக்களரி ஒன்றிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமாதானத்திற்காகக் குரல்கொடுக்க வேண்டிய மக்களிடமிருந்து உயிர்ச் சேதத்திற்கான குரல்களே உயர்ந்தெழுகின்றன.
உலகில் பல நெடுநாட் போராட்டங்கள் நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டன. வட அயர்லாந்துப் போராட்டம், பாஸ்க் போராட்டம், பிலிப்பைன்ஸ் மின்டனோ தீவுப் போராட்டம், இந்தோனேசிய ஆச்சே மாகாணப் போராட்டம், நேபாள மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் என்று பல மீசையையும் மண்ணையும் பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாது இரகசியமாக அலுவல்களை முடித்துக்கொண்டுவிட்டன. தரகர்கள் யார்? அவர்களுக்கு என்ன ஊதியம் கிடைத்தது? கையூட்டு (?) வாங்கியது யார்? கொடுத்தது யார்? யார் யார் எந்தெந்த ஓட்டல்களில் சந்தித்தார்கள்? என்ற எந்த விடயங்களிலும் மக்கள் அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். நீண்டநாளையக் களைப்பைப் கழைவதே அவர்களின் முதல் தேவை. ஆனால் நமது நாட்டிலோ அரைநூற்றாண்டுப் போராட்டம் இன்னும் பள்ளி கொள்ள மறுக்கிறது. அவமானம்!
இதுவரை காலமும் சிங்களத் தலைவர்களாலேயே ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. இனி வரப்போவது தமிழரிடமிருந்து வரட்டும்! போர் நிறுத்த ஒப்பந்தத்தை…
எழுமின்! கிழிமின்!!

திங்கள், 3 செப்டம்பர், 2007

தாய்லாந்து

சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தேன். இது இரண்டாவது தடவை எனினும் பல புதிய தரிசனங்கள் கிடைத்தன. 

 சில வேளைகளில் சில மக்களின் குணவியல்புகளைப் பொதுமைப்படுத்தும்போது குறும்பார்வைத் தன்மைகள் முகம் காட்டலாம். அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கமாட்டேன். மாற்றியல்புகளோடு அம் மக்கள் மீண்டும் தோற்றமளிக்கும் வரை. 

 தாய்லாந்தில் தென்னிந்திய, குறிப்பாகத் தமிழரின், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடுகள் கலந்துறவாடுகின்றன. அது புத்த சமயத்தின் பாதிப்பாக இருக்கலாம் என்றால் அதே பழக்க வழக்கங்கள் ஏன் இலங்கையிற் காணப்படவில்லை? 

 பாங்கொக், சியங் மாய் போன்ற இடங்களில் மக்கள் பெரும்பாலும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். இரு கை கூப்பி, தலை வணங்கி வரவேற்கிறார்கள். இயற்கையாகவே அழகானவர்கள். அவர்களது தேசிய உடைகள் அழகானவை. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை பட்டுச் சேலையைச் சுற்றிக் கட்டி, முழுக் கை நீளச்சட்டையோடு குறுந் தாவணி போட்டுக் கொள்கிறார்கள். வேற்றின மக்களைத் துவேஷத்தோடு பார்த்ததாக நான் அறியவில்லை. 

 தெற்கில் ஹுவான் ஹி என்ற கடற் கரை சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப் பட்டிருக்கிறது. தாய்லாந்து மன்னரின் கோடை வாடி இங்குதானிருக்கிறது. 

தெற்கில் அரைக்கரைவாசி நமது திராவிடக் கலப்புடன் மக்களைக் கண்டேன். பாவம் தாய்லாந்துக்காரர். அவர்களது அழகெல்லாம் இங்கு இழக்கப்பட்டிருக்கிறது. 

காலை 10 மணி போல் ஒருவர் வெறியோடு தள்ளாடிக்கொண்டு வந்தார். அவர் நமது திராவிடக் கலப்பினர். கலாச்சாரத்தையும் விடாது வைத்திருக்கிறார். 

கை கூப்பித் தலை வணங்குதல் இங்கு காணப்படவில்லை. அழகான பெண்களையும் காண்பது அரிதாகவே இருந்தது. 

 தாய்லாந்து மேற்கு நாடுகள் போல் வறியவர்களுக்கு சமூக மானியம் கொடுக்கும் நாடல்ல. எல்லோரும் உழைத்துத்தான் வாழ வேண்டும். 

தெருவோரச் சாவடிகள் பட்டி தொட்டியெங்கும் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள், வயதானவர்கள் பண்டங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவை உணவுப் பண்டங்களாகவோ அல்லது கை வினைப் பொருட்களாகவோ தானிருக்கும். 

 தாய்லாந்து காலனித்துவப் பிடியில் அகப்படாத நாடு. இப்பொழுதும் பெயரளவில் மன்னராட்சி. அரச குடும்பத்தை மக்கள் தெய்வத்திற்கிணையாக மதிக்கிறார்கள். அரசர், அரசி, இளவரசிகளது பெரிய படங்கள் தெருச் சந்திகளெங்கும் வைக்கப்பட்டிருக்கின்றன. எங்களூர்களில் போல சினிமா நடிகர்களினதோ அல்லது அரசியல்வாதிகளினதோ படங்கள் எங்கும் காணப்படவில்லை. 

தாய்லாந்து மக்கள் சுய உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டுமென்ற விருப்பில் மஹாராணியார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும்படி மக்களை ஊக்குவிக்கிறார். அதற்காக கைவினைப் பயிற்சிக்கூடங்களைக் கிராமங்கள்தோறும் அமைப்பித்து நிர்வகிக்கிறார். 

சூழற் பாதுகாப்பில் அரசர் அதிக அக்கறை காட்டுகிறார். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி இயற்கையான பசளை மற்றும் விவசாயப் பொருட்களைத் தயாரிக்க உதவுகிறார். 

 தாய்லாந்து பெரும்பாலும் சுற்றுலாத் துறையில் தன் வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறது. அதற்காக பழம்பெரும் ஆலயங்களையும் அரச மாளிகைகளையும் முன்நாள் அரண்மனைகளையும் பரிபாலித்து வருகிறது. இருப்பினும் ஆடை மற்றும் பாவனைப் பொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது. 

 நகரங்களில் வாகன நெரிசல் அதிகம். மோப்பெட்டுகள் முதல் மினி பஸ்கள்வரை தனியார் வாகனங்களும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பொதுப் போகுவரத்து சாதனங்களும் சேவையில் உண்டு. டாக்சிகள் ஏராளம். கட்டணம் அதிகமில்லை. சென்ற வருடம் புதிய விமானத்தளமொன்றைப் பாவனையில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அழகான பிரமாண்டமான தளம். முகப்பில் (தளத்தினுள்ளே) அசுரரும் தேவரும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியைச் சிற்பமாகச் செய்து வைத்ததிருக்கிறார்கள். சுமார் எழுபது அடிகள் இருக்கும். பொறாமைப்ப்டும்படியான - அழகான நாடு, அழகான மக்கள்.

புரிந்துணர்வைப் புரிந்துகொள்ளல்

புரிந்துணர்வைப் புரிந்து கொள்ளல்

சென்ற ‘வீடு’ இதழில் வெளியான கட்டுரை கொஞ்சம் பரபரப்பாகவிருந்ததென்று கேள்வி.

இதயங்களாற் சிந்திப்பதற்கும் மூளையாற் சிந்திப்பதற்குமிடையில் வித்தியாசமுண்டு என்பதை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அக் கட்டுரை ஆச்சரியத்தைத் தந்திருக்க முடியாது. அரசியல், மதம், காதல் இவற்றிலெல்லாம் மூளையை ஓய்வெடுத்துக் கொள்ளப் பழக்கப்பட்டிருப்பது துர்ப்பாக்கியமேதான்.

“If we embark on (these) romantic ideas to revive a mythical past of greatness and culture, we would be damned” என்று முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள் சமீபத்தில் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றிற் கூறியிருந்தார். இதயங்களினாற் சிந்திப்பவர்களுக்கு இடம் கொடுக்காது தனது நாட்டை அவர் உருவாக்கியமையே இன்று அங்கு மதம், மொழி ஆகியவற்றுக்கு அரசாசனம் வழங்கப்படாது ஆட்சி நிர்வாகம் ஒழுங்காகக நடைபெறுவதற்குக் காரணம்.

பிரச்சினைகளுக்கு போர் அல்லது வன்முறை மட்டுமே தீர்வாகும் என்பதில்லை. சிறிய பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பல மில்லியன் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே வேளை அணுவாயுதப் போராக வெடிக்கவிருந்த பல பிணக்குகள் சில மனிதர்களின் சமயோசித உடன்படிக்கைகளினாற் தீர்க்கப்பட்டிருக்கின்றன. முதலாவதற்கு உதாரணம் சேர்பிய விடுதலைப் போராட்டம் பின்னர் ஆஸ்திரிய-ஹங்கேரிய போராக வெடித்து உலகப் போராக வெடித்தமை. இரண்டாவதற்கு உதாரணம் சோவியத் குடியரசின் வீழச்சி.

1917 அக்டோபர் புரட்சிக்குத் தேவையான ஆரம்ப பின்புலப் பண உதவியை அளித்தது மேற்கத்தய உலகப் பெரும் தனவந்தர்கள். அப்போது லியோன் ட்றொட்ஸ்கி நியூயோர்க்கிலிருந்து வெளிவந்த ‘த நியூ வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் நிருபராகப் பணிபுரிந்தார். அமெரிக்க காங்கிரஸ் ஆவணங்களின்படி போல்சவிச் புரட்சிக்கு பண உதவி செய்த தனவந்தர்களில் றொத்ஷைல்ட், ஜேக்கப் ஷிவ், ஜோர்ஜ் வால்க்கர் போன்றவர்கள் அடங்குவர். இந்த வாக்கர் என்பவர் தற்போதய அமெரிக்க ஜனாதிபதி புஷ் இனது பாட்டனாராவார். அக்டோபர் புரட்சியின் பெறுபேறாக இழக்கப்பட்ட உயிர்களும் உடமைகளும் பல மில்லியன்கள். ‘மனித சமத்துவம்’ வேண்டி நடத்தப்பட்ட இப் புரட்சிக்கு கொடுக்கப்பட்ட விலை மனித உயிர்களே.

இதே போன்று இப் புரட்சியின் பெறு பேறாகிய சோவியத் குடியரசைக் ‘கத்தியின்றி இரத்தமன்றி’ முடித்து வைத்த பொறுப்பும் அமெரிக்காவையே சாரும். இதற்கு அவர்கள் பாவித்த முதன்மையான கருவி மதம். அப்போதய கத்தோலிக்க தந்தை பாப்பரசர் ஜோன் போல் மற்றும் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி றேகன் இருவரும் இதற்குப் பொறுப்புடையவர்கள். சோவியத் குடியரசின் உடைவால் அமெரிக்க வணிக நிறுவனங்களும் கத்தோலிக்க திருச்சபையும் லாபமடைந்தன. அதே வேளை பாரிய உயிர் உடமை இழப்புகள் ஏதுமின்றி இப் புரட்சி நடைபெற்றதால் மானிடம் நன்மை பெற்றது. அதற்குரிய பெருமையும் இவ்விருவரையுமே சாரும்.

எமது ஈழப் போராட்ட வரலாற்றில் மேற்கூறிய இரு முறைகளும் நடைமுறைப் படுத்தப்பட்டன. இதயங்களினாற் சிந்திக்கின்ற மக்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்துவதற்காகப் பல ஆயிரம் உயிர்கள் காவுகொடுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிலங்கை இனக்கலவரங்கள், இந்தியாவின் தூண்டுதலாற் செய்யப்பட்டது என்று கருதப்படும் அனுராதபுரப் படுகொலைகள என்று பல மக்களின் உணர்வுகளைக் கிளறி விடவும், அதன்பால் உருவேற்றப்பட்ட உணர்வுகளுக்குத் தீனி போடவும் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு இவை செயலாற்றப்பட்டவை.

மாறாக, 1987 இல் நடைபெற்ற இந்திய இராணுவத்தினரோடு விடுதலைப் புலிகள் செய்த போரின்போது புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவுடன் ‘புரிந்துணர்வு’ உடன்படிக்கை செய்வது அவசியமாகவிருந்தது. இதே போன்ற உடன்படிக்கைகள் சிங்கள – தமிழ் அரசியலில் நடைபெறாத ஒன்றல்ல. சோழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் சேரர்களுடனும் பாண்டியர்களுடனும் உடன்படிக்கை செய்து கொண்ட சம்பவங்களும் வரலாற்றிலுண்டு. அதே போன்று கருணாவின் கிளர்ச்சியைப் புலிகள் முறியடிக்க எடுத்த முயற்சியில் பாரிய உயிரிழப்பு ஏற்படாது வெற்றியை எட்டுவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பல தந்திரங்களைக் கையாண்டார். தனித்தனி முகாம்களிலிருந்த போராளிகளைத் தனிமைப்படுத்தி அவர்களோடு பேச்சுக் கொடுத்து உளவியல் ரீதியாக அவர்களை மாற்றி எதிர்ப்புகளையும் இழப்புக்களையும் தவிர்த்து வெற்றியை ஈட்டினார். முழு அளவிலான போராக அது நடைபெற்றிருப்பின் பல ஆயிரக் கணக்கான போராளிகளின் உயிர்கள் இழக்கப்பட்டிருக்கும்.

பிணக்குகள் போர் முனையில் மட்டும்தான் தீர்க்கப்பட வேண்டியதல்ல என்பதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்களைக் காட்டலாம். அதே வேளை பல கொலைவெறி அபிலாட்சைகளைப் போர் மூலம் மட்டுமே நிறுத்தலாம் என்பதற்கும் உலகவரலாற்றில் பல தடயங்களுண்டு. பாபர் முதல் அவுரங்கஷீப் வரையிலான முகலாய சக்கரவர்த்திகளின் மத விஸ்தரிப்புப் போர்களைத் தடுப்பதில் இந்தியாவின் மராத்திய அரசர்களின் பங்கு முக்கியமானது. பிரித்தானியருக்கு எதிராகக் கிளர்ந்த சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதக் கிளர்ச்சி, தென் ஆபிரிக்க விடுதலைக்காக ஆயுதமேந்திய ஆபிரிக்க தேசீய காங்கிரஸின் ஆயுதக் கிளர்ச்சி, சிம்பாப்வே விடுதலையைப் பெற்றுத் தந்த முகாபே, நுக்கோமா போன்றவர்களின் ஆயுதப் போராட்டம் இவையெல்லாம் உலக வரலாற்றில் தேவை கருதி ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்கள்.

இப்பின்னணியில் தற்போதய ஈழப்போராட்டத்தை அணுகிப் பார்த்ததால் எனக்குக் கிடைத்த ஒரு பார்வைக் கோணமே சென்ற இதழ்க் கட்டுரையான ‘பொங்கு சிங்களம்’.

போராட்டத்தில் கால நேரத் தேவைகளுக்கேற்ப உத்திகளும், வடிவங்களும், வியூகங்களும், தந்திரோபாயங்களும் மாறும் என்பதை எல்லோரும்ஏற்றுக் கொள்வார்கள். அதை மாற்றும் தகமையும், வல்லமையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் இரு பகுதியினருக்குமே உண்டு. இதயங்களினாற் சிந்திக்கும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு உணர்வுகள் மட்டுமே வழிகாட்டும். இப்படியான மக்களின் உணர்வுகளை மதித்து அதற்காகவே போரை வழிநடத்தும் தேவை எல்லா சிங்கள அரசுகளுக்குமே இருந்துவந்திருக்கிறது. ஜனநாயக மரபிலான தேர்தல்களை நம்பி ஆட்சிநடத்தும் சிங்களக் கட்சிகளுக்கு அது தேவையானது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் போரில் தமிழர் தரப்பு வெல்லவேண்டும் என்ற உணர்வு வழிப்பட்ட வெளிப்பாடுகள் இருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் வெளியேறியது பற்றிய பார்வையில் தமிழ் மக்களுக்கு இரண்டு கோணங்களுண்டு. கிழக்கு மாகாணத்துக்கு வெளியேயிருந்து பார்ப்பவர்களுக்கு புலிகள் வெளியேறியது தந்திரோபாயமாகப் பார்க்கப்படலாம். ஆனால் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு தாங்கள் தமிழர் தரப்பினால் ‘கைவிடப்பட்ட’ மக்கள் என்ற எண்ணம் உருவாகும்போது தங்கள் காவலர்கள் தோற்றுப்போய் விட்டார்கள் என்ற நினைப்பு வருவதையும் தவறென்று கூறிவிட முடியாது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண மக்கள் (பாதிக்கப்பட்ட) இப்போதைக்குத் தங்களது உடனடியான அவலங்களுக்கான தீர்வொன்றையும் பின்னர் நீண்டகாலத்தை மையப்படுத்திய தீர்வொன்றையும் யார் பெற்றுத்தர வல்லவர்கள் என்பதைப்பொறுத்தே தமது ஆதரவை வெளிப்படுத்துவார்கள். சகல தமிழ் பேசும் மக்களும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். கருணா குழுவினரின் பிரிவு ஈழவிடுதலைப் பேராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு நமக்கு நாமே சொல்லிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. அதே வேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வொன்றை மட்டுமே ஏற்பதற்குத் தயாராகவுள்ளார் என்பதையும், வடக்கை மட்டும் தனது பரிபாலன பிரதேசமாக ஏற்றுக் கொண்டிருப்பின் இப்போது போர் நடைபெற்றுக்கொண்டிருக்காது என்பதையும் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வார்கள். வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழத்தின் தீர்வொன்றே தமிழ் மக்களின் அபிலாஷை என்பதை முன்வைத்தே அவர் அக்கோரிக்கையைத் தனது குறிக்கோளாக முன்வைக்கிறார். இவ்வேளை கிழக்கு மாகாணத்தில் புலிகளின் பிரசன்னம் இல்லாதுபோய் கருணா குழவினரின் ஆதிக்கம் பரவலாக்கப்பட்டு அதன் மூலம் அம் மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறுமானால் அரசியல் ரீதியாகப் புலிகள் தோல்வியுற்றவர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

அதற்கு அடுத்த கட்டமாக கிழக்கு மாகாண மக்கள் தங்கள் நீண்டகால பிரதேச தனித்துவத்தைப் பற்றி யோசிக்கும் கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசின் வலிந்த குடியேற்றங்கள் காரணமாக தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் இழக்கப்பட்ட நிலையில் அதைத் தடுத்து நிறுத்த கருணா குழுவினர் எதுவுமே செய்யாதிருக்கும் பட்சத்தில் புலிகளை நிராகரித்ததற்காக அவர்கள் வருத்தமடையவே செய்வார்கள். இதுவரை கால இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழரிடமிருந்து அபகரிக்கப்பட்ட பிரதேசங்கள் மீட்டெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லாதபோது தற்போது இழக்கப்படும் பிரதேசங்களுக்கும் அதே கதிதான் என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே தற்போதிருக்கும் சூழ்நிலையில் பிரதேசங்களைப் பாதுகாப்பது தமழருக்கு மிக அவசியமானதொன்று. கிழக்கு மாகாணத்தில் அதைச் செய்யும் வல்லமை இப்போது விடுதலைப் புலிகளுக்கு உண்டா என்பது கேள்விக்குறி. கருணா குழுவினரால் அதைச் செய்யும் வல்லமை உண்டா என்றால் அதுவும் ஒரு மிகப் பெரியதொரு கேள்விக்குறி.

இந்நிலையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பு எப்படியிருக்கும். புலிகள் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களை மீட்டெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருக்கிறது. ஆனால் கிழக்கு மாகாண மக்களது உடனடியான மனநிலை அப்படியில்லை என்பதே எனது கருத்து. இதற்கான ஒரு தீர்வாக அம் மாகாண மக்களது பெரு விருப்பாக இருக்கக்கூடிய ஒன்று மீண்டும் தமிழர் தரப்பு ஒற்றுமையாக நின்று ஒரு நிரந்தரமான தீர்வைத் தமக்குப் பெற்றுத்தரவேண்டும் என்பதே. உணர்வுகளின் மேலீட்டால் நாம் இப்போது சொல்லிக்கொள்ள முடிவது – அது சாத்தியமாகாது என்பதே. ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டிய தேவை இப்போது மிகவும் அவசியமாகவிருக்கிறது என்பதையே நான் சென்ற இதழில் கோடிட்டுக் காட்டினேன்.

கருணாவுடன் எம். ஓ. யு. என்பது மேலோட்டமான பூடகமான ஒரு சொற்பதமென்பதை இதயங்களினாற் சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அதை நான் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் அப்பதத்தின் பின்னணியில் தொக்கி நிற்கும் விவாதத்திற்கான தேவையை தர்க்கரீதியாகச் சிந்திப்பவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். புரிந்துணர்வு என்பது இதய சுத்தியான ஒரு விடயமானாலும் தற்போது அது ஒரு தந்திரோபாய அரசியல் பதமாகவே பாவிக்கப்படுகிறது. எதிரியுடன் பேச்சுவார்ததைக்கான தளத்தைப் பண்படுத்துவதில் இச் செயல் முக்கியமானது. இன்னுமொரு தளத்தில் தற்காலிக இடைவேளை பெற்றுக்கொள்வதிலும் இது நிரம்ப உதவி செய்கிறது. எதிரியை ஊடறுத்துப் பலவீனமாக்குவதிலும் இது பயன்படுகிறது. புலிகள் இந்தப் புரிந்துணர்வைத் தமக்குச் சாதகமாகப் பலதடவைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப் பின்னணியில், சென்ற இதழில் நான் சொன்ன எம்.ஓ.யு. வைப் புலிகள் சாதகமாக்கினால் கிழக்கை அரசியல் ரீதியாக வென்றெடுக்க அது ஒரு வழி. அதன் பிறகு இராணுவ வெற்றியை அவர்கள் நிச்சயித்துக் கொள்வார்கள். வரியிடை வாசிப்பில் பரிச்சயமானவர்களுக்கு என் கருத்தின் பின்னணி புரிந்திருக்கும். புரியாதவர்கள் தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சம்பலை அரைத்துக்கொண்டுதானிருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டினைப் புரிந்து கொண்டவர்களுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்திருக்கும். தேவையேற்படின் அவர்கள் யாரோடும் பேசுவார்கள். யாரோடும் போர் புரிவார்கள். அது அவர்களது போரியல் தந்திரம். அச் செயற்பாடுகளின் வெற்றி தோல்விகளுக்கும் அவர்களே பொறுப்பாளிகள். உணர்வு மேலீட்டால் அதைச் செய்வதில்லை என்பதில் எனக்கு மிகவும் உடன்பாடு இருக்கிறது. இல்லாவிடில் ஈழப்போர்களின் எண்ணிக்கை இப்போது இருபதைத் தாண்டியிருக்கும்.

பேச்சுவார்த்தைகள் எதிரிகளைப் பலமிழக்கச் செய்வதற்கும் பயன்படலாமென்பதை மனதிற்கொண்டு பார்ப்பின் புரிந்துணர்வைப் புரிந்து கொள்வதில் சிரமமேயிருக்க முடியாது. இதற்கு மேல் அரைப்பவர்களுக்கு அம்மிதான் மிஞ்சும்.

சனி, 21 ஜூலை, 2007

Understanding Andy அல்லது ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்

Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில் எனது peers and teachers என்னை Andy என்றே அழைப்பர்.

இவ்வளவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுதியதை வாசிப்பதற்கே உங்களுக்குச் சிரமமாயிருந்திருக்கும் இல்லையா? அப்படியானால் தினமும் பாலசாலையிலும் வீட்டிலும் என்று எத்தனை தடவைகள் நான் கனடியனாகவும் தமிழனாகவும் வாழக் கஷ்டப்பட்டிருப்பேன்?

போகட்டும். அவள் எனது தாய். அவளுக்காக நான் கஷ்டப்படுவதில் பாவமேதுமில்லை. இதுவெல்லாம் என் துன்பங்களில் ஒரு அற்ப பங்கேதான்.

எனக்கு 16 வயது. கனடாவில்தான் பிறந்தேன். எனக்கு ஒரு தாயும் (சிரிக்காதீர்கள்) ஒரு அக்காவும் இரண்டு மாமன்காரரும் இருக்கிறார்கள். எனக்கு பதின்மூன்று வயதாகவிருக்கும்போதே என் தந்தை அம்மாவை விட்டு விட்டு வேலையில் சந்தித்த யாரோ பெண்ணுடன் ஓடிவிட்டானாம் என்று அம்மா சொன்னாள். அப்பா ஏன் ஓடினார் என்று காரணம் தெரியும்வரை 'ஓடினான்' என்று அழைப்பதாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.

அம்மா சுமாரான அழகுடையவள். ஆனால் அவளுக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவுதான். அப்பா ஓடிய பிறகு வீட்டில் சண்டை பிடிப்பதற்கு எவருமில்லை. பக்கத்து அப்பாட்மெண்டிலிருந்து சுவரில் தட்டுவது இப்போது இல்லை. உரத்த குரலில் பேசிய அப்பன் போனதிலிருந்து வீடு வெறிச்சோடிப் போனதை அம்மாவே ஒத்துக் கொண்டாள்.

அக்காவுக்கு 20 வயது. ஒரு காலத்தில் நன்றாகப் படித்தவள். University of Toronto வில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்பா ஓடினான். அதன் பிறகு அவள் படிப்பில் கவனம் செலுத்தாது விட்டுவிட்டாள். இப்பொழுது College க்குப் போகிறாள். முன்பு போலெல்லாம் அவளுக்குச் சிநேகிதிகள் இல்லை. மேக்கப் போடுவதில்லை. தலை சீராக வாருவதில்லை. படிப்பு எப்படிப் போகிறது என்று எப்போதாவது நான் கேட்டால்தானுண்டு. அப்போதும் ஒரு shrug ஓடு அப்பாற் போய்விடுவாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்றறிவதற்கு அம்மாவிற்கு நேரமுமில்லை அறிவும் போதாது.

அம்மா இரண்டு வேலை செய்கிறாள். காலையில் ஒரு Book Binding கம்பனியில். பின்னேரம் ஒரு தமிழ்ச் சாப்பாடுக் கடை Kitchen இல். அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டு பேசாமல் தானுண்டு தன் சோலியுண்டு என்று அவள் வாழ்ந்திருக்கலாம். பெரீய ego வைத் தலையில் வைத்துக்கொண்டு திரிகிறாள். தான் வேலை செய்து பிள்ளைகளைப் படிப்பித்தேன் என்று ஊருலகம் சொல்ல வேண்டும் என்பது அவளது ஆசை போலும்.

இரவு பதினொரு மணிக்குப்பின் அவள் கொண்டுவரும் சாப்பாடுதான் எங்களதும். ஆனால் நாங்கள் எத்தனை மணிக்குச் சாப்பிடுவதென்பது அவளது முதலாளியின் கைகளிலேதானிருக்கிறது. அவர் தனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டால்தான் அம்மா வீட்டுக்கு வரலாம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையால் அவளால் வாகனம் ஓட்ட முடியாது.

அப்பன் ஓடியதிலிருந்து எனக்கும் வாழ்க்கையில் சலிப்புத்தட்டி விட்டது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் brave face என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே வெறுமை சதா அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அப்பனைப் பற்றி அம்மா எதுவும் பேசுவதில்லையாதலாலும் அவளோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது சரியில்லை என்பதாலும் நான் அப்பனைப் பற்றிப் பேசுவதை வெகுவாகக் குறைத்து விட்டேன். ஆனாலும் அவனைப் பற்றியும் அவன் ஏன் எங்களை அநாதரவாக விட்டு ஓடினான் என்பது பற்றியும் எப்போவாவது ஒரு நாள் அறிந்தேயாக வேண்டும் என்று என் மனம் விழைகிறது.

அப்பன் குரைப்பான், சத்தமிடுவான் ஆனால் ஒருபோதும் அம்மாவை அடித்ததில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் கொண்டுவந்து போடுவான். He was a great provider, I must admit.

அம்மாவும் அவனை நேசித்துத்தானிருக்க வேண்டும். இப்போதும் இடைக்கிடையே வீட்டில் இருக்கக் கிடைக்கும் போதெல்லாம் அவள் சட்டைத் தலைப்பைக் கண்ணுக்குள் விட்டுக்கொண்டிருக்கிறாளென்றால் அது கண்ணீரைத் துடைக்கவல்லாது வேறெதற்கு? எனக்கும் அக்காவுக்கும் முன்னால் அப்பனைத் திட்டித் தீர்ப்பாள். அதில் மட்டும் அவள் நன்றாக நடிப்பாள்.

அப்பனுக்கும் அம்மாவுக்குமிடையில் சண்டை முற்றியிருந்தபோது இரண்டு தடவைகள் மாமன்மார் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு கடுமையான குளிர் இரவில் அப்பனை அடித்துத் துரத்தி வெளியேவிட்டுக் கதவைப் பூட்டினார்கள். இன்னுமொரு நாளில் அப்பன் தனது உடுப்புகளையும் பெறுமதிகளையும் எடுத்துக்கொண்டு இறுதியாக விடைபெறும்போது அம்மா அவன் பின்னால் ஓடிவிடாது 'காப்பற்றுவதற்காக' அவளைப் படுக்கையறையுள்ளே வைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.

அப்பன் இறுதியாக விடைபெற்ற இரவில் அம்மாவின் கூப்பிய கரங்களும் கெஞ்சிய கண்களும் என்னால் இன்னும் மறக்க முடியாதவை. காரணம் அவள் அப்படிக் கெஞ்சியது தனது சகோதரர்களிடம்தான். அன்று அவர்கள் கொஞ்சமேனும் இரக்கம் காட்டியிருந்தால் இன்று எனது அப்பன் எங்களோடு இருந்ததிருக்கலாம் என்று பலதடவைகள் நான் நினைத்ததுண்டு. அதையேதான் அம்மா தினம் தினம் நினைத்துக் கொள்கிறாளோ என்னவோ.

எங்களை விட்டுப்போய் சில நாட்களில் அப்பனை மால்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். எனது பாடசாலைக்கு அருகில் இருக்கும் அந்த மாலுக்கு அவன் வருவதே என்னைப் பார்க்கத்தான் என்று அவன் ஒரு தடவை சொன்னான். அப்போதெல்லாம் அவன் அன்போடு என்னைக் கட்டிப் பிடித்து சாப்பிட வரும்படி அழைப்பான். ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று அடம்பிடிப்பான். இன்றுவரை அவனிடம் எதுவுமே வாங்கியதில்லை. இப்போ சில வருடங்களாக அவனை நான் கண்டதில்லை. எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அவனை அழைக்கவேண்டுமென்று அம்மாவைக் கேட்டபோது 'உன் மாமன்மார் கொலை செய்துவிடுவார்கள்' என்று அவள் சொன்னதோடு அப்பனோடு உறவு கொண்டாடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.

எங்களை விட்டுப் பிரிந்து சில வருடங்களுக்கு அப்பன் வேறு திருமணம் புரிந்து கொள்ளவேயில்லை என்று அம்மா சொன்னாள். பின்னர் அவன் மிசிசாகாவுக்குப் போய்விட்டான். சுமார் 50 கி.மீ. தொலைவுதான். இருப்பினும் இங்கிருக்கும்போதெ அவன் எங்களை மறப்பதற்குத் தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. தூரமும் நேரமும் பாசத்தைப் பிரிக்குமென்பார்கள். I had no choice.

எனக்கும் இப்போது படிப்பில் அவ்வளவு அக்கறையில்லை. அக்காவின் மனதை இப்போது மிகவும் அதிகமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சினைகளப் பற்றி அவரிடம் எதையுமே கூறியதில்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு Foster parent வீட்டில் ஒரு வெள்ளைக்கார அப்பா அம்மாவுக்கு பதிநான்காவது பிள்ளையாக Anti-depressant குளிசைகளோடு மால்களில் திரிந்திருப்பேன். அல்லது ஒரு medium security prison இல் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன். நான் ஆனந்தனாக வளர்க்கப்பட்டதன் விளைவே இன்னும் நான் நானாக இருப்பது என்று நினைத்து மகிழ்வதுண்டு.

ஒருநாள் நானும் அக்காவும் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தபோது இருவரும் ஏகோபித்து எடுத்த முடிவு - நாங்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்வதில்லை - என்பதே. அவள் ஆசையாக நேசித்திருந்த பிருந்தனிடம் தன் முடிவைச் சொன்ன அன்று அவள் sleeping tablets எடுக்கவிருந்தாள். எப்படியோ இன்று அவள் உயிர் தப்பியிருந்தாலும் ஒரு நடைப்பிணமாகவே இருக்கின்றாள்.

எங்கள் குடும்பம் சிதைந்து போனதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லோருமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் முடிவுகளைத் தீர்மானித்தார்களென்றே எனக்குப் படுகிறது. என்னுடைய அல்லது எனது அக்காவுடைய நலன்கள் எதையும் எவரும் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் தத்தமது ego வைத் திருப்திப் படுத்தும் வகையிற்றான் நடந்துகொண்டுள்ளார்கள்.

நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று அம்மா இரண்டு வேலை செய்தாள். இருந்தும் என்ன பிரயோசனம்? அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம்?.

எல்லோருமே தாங்கள் ம்ற்றவர்களுக்கு நன்மை செய்வதாகவே நினைத்துக் காரியங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அந்த 'மற்றவர்களிடம்' என்ன பெறுபேறுகள் விளைந்தன என்பது பற்றி எதுவித அக்கறையிமில்லாது தங்கள் ego திருப்தியடைந்தால் மட்டும் போதுமானது என்றளவில் நின்றுவிடுகிறார்கள். இது தான் எமது பிரச்சினை.

என் மனதில் நெருடல்கள் ஆயிரம் இருக்கின்றன. யாருடனாவது பேசினால் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். I am sure என்னைப்போல் தான் என் அக்காவும் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். என் நண்பர்களும் என்னைப் போலவே ஆயிரம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்கள். Everyone needs a shoulder to cry, I guess.

சென்ற வாரம் எனது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் என்னை மிரட்டினார்கள். Lunch money யைத் தரும்படி மிரட்டினார்கள். என்னிடம் lunch money இல்லை, வேண்டுமானால் lunch ஐத் தருகிறேன் என்றேன். இரண்டு பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். சக மாணவர்கள் பார்த்துச் சிரித்தார்கள். ஏனென்றால் அடித்தவர்கள் ஏதோ ஒரு gang ஐச் சேர்ந்தவர்கள். நான் இச் சம்பவத்தை பிறின்சிபாலிடம் முறையிடவில்லை ஏனென்றால் அடித்தவர்களும் தமிழர்கள்தான்.

இப்போது நான் இன்னுமொரு gang member. இனி என்னை ஒருவரும் தொட முடியாது. எனக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு குழு இருக்கிறது. ஆனால் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

Ryan என்ற றட்னாகரன் எனது gang இல் இருக்கிறான். மிகவும் நல்ல பையன். ஆனால் போதை வஸ்து எடுப்பான். 'நீ எப்போது இதைப் பழகினாய்' என்று கேட்டதற்கு அவன் சொன்னான் 'எல்லாம் ஒரு பெண்ணுக்காக' என்று. அவனது காதலி ஒருநாள் அவனிடம் சொன்னாளாம் 'Thats it. We have to part our ways. You are not tough enough for me. Look at the guy who is leaning on the red Honda Civic. He is my my new guy. Bye...'

இதுதான் இன்றய உலகம். This is real. I don't want to bury my head in the sand!. Ryan இப்போது ஒரு tough guy. He goes to prison every weekend for three months. Assault with weapon, possession of narcotics with the intent of trafficking and obstruction of justice. எல்லாமே பொய் வழக்கு. போலீஸ் சோடித்த வழக்கு. றயான் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுவிட்டான். காரணம் அவனைப் பிணை எடுக்கக்கூட ஒருவரும் முன்வரவில்லை. He also comes from a single parent family. I won't blame him.

எனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டுக்கு வருவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போல சட்டத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கல்லாம். மனம் ஒத்துழைக்குதில்லை. So far I have resisted successfully. The only other option is to take my life. Is this life worth living?

I hope you understand me. Please don't feel sorry for me. There are so many kids out there crying for help. There could be a kid out there pricking needle in a back alley. There could be one waiting to jump off a highrise building. Please save them. For god sake, they have many more years to live, just the way you do. They are your children.

மன்னிக்க வேண்டும். I got carried away.

நான் இதுவரை சொன்னது ஆனந்தனைப் பற்றி மட்டுமே. அறிகுறிகளைச் சொன்னேன். ஆதங்கங்களைச் சொன்னேன். நாங்கள் நல்லவர்களாக உருவாகுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

I wouldn't have been in this state had my father not abdicated his responsibility.

இற்தியாக, அப்பாவுக்கு! 'அப்பா எனக்கும் உங்களைப்போல கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று முழுமையாக வாழ்வதற்கு ஆசைதான். அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.

Forgive me உங்களை அப்பன் என்று சொன்னதற்கு. அதுவே இல்லாது எத்தனை குழந்தைகள் இருக்கும்போது. Please lookafter my sister, at least.'

செவ்வாய், 17 ஜூலை, 2007

பொங்கு 'சிங்களம்'

சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததே அதிசயம் என்றார்கள். இப்போது அதைவிடப் பெரிய அதிசயம் இலங்கையில் நடைபெற்றிருக்கிறது.

ஆறென்றால் அது மலையில் ஆரம்பித்து கடலில் விழும். தமிழர் தேசத்திலோ போராறு கடலில் (மாவிலாறு) ஆரம்பித்து (குடும்பி) மலையில் முடிவடைந்திருக்கிறது.

பேரழிவுகளுக்கு முன் அதிசயங்கள் நிகழுமென்பார்கள். மஹிந்தவைப் புலிகள் ஏற்றி வைக்கப் புலிகளை மஹிந்த இறக்கி வைத்திருக்கிறார் குடும்பிமலையிலிருந்து.

அதிசயமேதான்!

புலிகள் இறங்கினார்களா அல்லது இறக்கப்பட்டார்களா என்பது 'குடும்பிமலை ரகசியம்'. இப்போதைக்கு அறிய முற்படுவது தேவையற்றது.

எப்படியாயினும் புலிகள் தந்திரோபயமாகத் தப்பி மரபு வழிப் போரிலிருந்து மீண்டும் கரந்தடிப் போர் யுக்தியைக் கையாளப் போகிறார்கள் எனப்படுகிறது.

உண்மை அதுவாகவிருப்பினும் சிங்கள ஆட்சிக்கும் இராணுவத்துக்கும் இது ஓர் பாரிய வெற்றி. உள்ளூர் மக்களிடத்தும் சர்வதேச அரங்கிலும் புலிகளுக்கு இது ஒரு பெரிய தோல்வி.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு இது அரசியல் வெற்றியே தவிர இராணுவ வெற்றியல்ல என்கிறார் சர்வதேசப் புகழ் பெற்ற இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்.

இருக்கலாம். ஆனால் காலம் காலமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இராணுவத்தைப் பாவித்து வருவதே அரசியல் வெற்றிக்காகத்தானே! மக்களின் அதிருப்தி, சரிந்துவரும் பொருளாதாரம், கட்சியுடைவு என்று பல வழிகளிலும் அதல பாதாளத்தை நோக்கி விழுந்துவிடத் தயாராகவிருந்த மஹிந்த்வுக்கு குடும்பிமலையையே சஞ்சீவியாகப் பெயர்த்துக் கொடுத்துக் காப்பற்றியிருக்கிறார் அனுமார் சரத் பொன்சேகா. தென்னிலங்கை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இருவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான வெகுமதியை மக்களிடமிருந்து ஏற்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களே.

மாறாகப் புலிகள் மக்களுக்குக் கொடுத்த வாகுகுறுதிகளை நிறைவேற்றவில்லை. 'ஒரு வருடமாகவே இப்படித்தான் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எதுவுமே செய்ய முடியாது' என்று இராணுவ அதிகாரி கேலியாகப் பேசுகிற அளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன.

புலிகளைத் தெரிந்தவர்கள் வழமைபோற் சிரிப்போடு உதாசீனம் செய்கிறார்கள். பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அவர்கள் தயாராகிறார்கள் என்பதிலும் இரண்டாம் அபிப்பிராயமில்லை. முன்பு பல தடவைகள் இதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதுவேதான்.

ஈழ்த் தமிழர்களுக்கு அதுவே இறுதி நம்பிக்கையும்கூட. இலங்கை அரசுகளை நம்பி ஏமாந்தார்கள். இந்தியாவை நம்பி ஏமந்தார்கள். இறுதியாக சர்வதேசங்களை நம்பி மோசமே போய்விட்டார்கள்.

இந்த நிலையில் புலிகள் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்கு எப்படி எப்போது என்பது மர்மமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மூதூர் கிழக்கு, சம்பூர், குடும்பிமலை என்று தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோய்க்கொண்டிருக்க இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அரை வயிறுகளோடு சில்லுக்கும் செல்லுக்கும் தப்பி நெடுங்காலம் வாழமுடியாது. அரசிடம் இருந்து இவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. அவர்களை மீண்டும் அவர்களது நிலங்களிற் குடியேற்றுவது தமிழர் கடமை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒரு பேருண்மையை உணர வேண்டும். ஜே.வி.பி போன்ற தென்னிலங்கை இனவாதிகளின் (இவர்களை மார்க்சீயவாதிகள் என்றால் அது மேதை மார்க்ஸ் இற்கு இழுக்கு!) ஒரே நோக்கம் இலங்கை முழுவதையும் ஒரு பெளத்த சிங்கள நாடாக்குவதே. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தளவுக்கு அவர்களது திட்டங்கள் நிறைவேறியிருக்காது. புலிகள் எந்தளவுக்கு கோமாளியான ராஜபக்ஷவைப் பாவித்து தமது தனி ஈழத்தைப் பெற முயற்சித்தார்களோ அதே போன்றுதான் ஜே.வி.பி. யினரும் ராஜபக்ஷவுடன் கூட்டணியமைப்பதன்மூலம் தமது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தார்கள். இன்றய கள நிலவரத்தின்படி ஜே.வி.பி. யினர் தமது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரிப்பு, கிழக்கின் வெற்றி எல்லாம் ஜே.வி.பி. யின் திட்டங்களே.

கிழக்கைக் கைப்பற்றியது இராணுவ வெற்றியல்ல அரசியல் வெற்றிதான் என்று ஒப்புக்குக் கூறினாலும் கிழக்கில் புலிகளின் வெற்றிடத்தையும், மக்களின் இடப்பெயர்வையும் சாதகமாக்கி சிங்களமயமாக்கல் துரிதப்படுத்தப் படுகிறது என்பதே உண்மை. கருணாவின் பிரிவிற்கு முன்னர் இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! இப்பொழுது கருணா விரும்பினாலும் கிழக்கின் சிங்கள மயமாக்கலை நிறுத்த முடியாது. அப்படி முயற்சித்தால் சிங்கள இராணுவம் கருணா அணியைத் துவம்சம் செய்துவிடும். 'வன்னிப் புலிகளை' த் துரத்துகிறோம் என்று மண்ணையே தாரை வார்த்துக் கொடுத்ததே கருணா அணியும் அதன் ஆதரவாளர்களும் சாதித்தது.

இந்த நிலையில் கருணா அணியினர் ஜனநாயக வழிக்குத் திரும்பித் தேர்தல்களிற் பங்கேற்றால் நிலைமை மாறும் என்று நினைக்கலாம். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது உணர்வுகளை அர்சு மதித்திருந்தால் மக்கள் பட்டினியால் வாடும்போது வெற்றி விழாக் கொண்டாடியிருக்க மாட்டார்கள். இராணுவ ஆட்சியோ ஜ்னநாயக ஆட்சியோ சிங்கள மயமாக்கல் அதி வேகத்தில் நடைமுறைப் படுத்தப்படும். இதைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி-கருணா அணியும் புலிகளும் MOU செய்து கொண்டு போரை உக்கிரப்படுத்துவதுதான். மிகவும் கோபப்படுகிறீர்கள் போலிருக்கிறது. மண்ணைக் காப்பாற்ற இதைவிட வேறேதும் வழியிருந்தால் சொல்லுங்கள்!

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததே தமிழரின் மொழியுரிமை, பிரதேச உரிமை வாழ்வுரிமைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக. அவற்றை இழந்து பெறும் விடுதலைக்கு அர்த்தமில்லை.

ஞாயிறு, 1 ஜூலை, 2007

வன்னியின் செல்வன் - அத்தியாயம் இரண்டு

வன்னியின் செல்வன்


இரண்டாவது அத்தியாயம்


மங்களரின் கனவு


ஏற்கனவே அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்த ரோஹண நாடடின் ஆட்சிக்கு சோதிடர்களின் கூற்றுப்படி பல துர்நிமித்தங்கள் தோன்றின. எங்கே தூமகேது தோன்றப்போகிறதோ என்று மக்கள் துயரப்பட்டுக் கொண்டார்கள். நாளுக்கு நாள் பண்டங்களின் விலை அதிகரித்தது. அரச தானியச்சாலை விரைவில் காலியாகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று களஞ்சிய அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


நாட்டின் நிலைமை மன்னர் மகிந்தருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சோதிடர்களின் வாக்கு பலித்துவிடுமோ தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மகிந்தர் நாளொரு குப்பியும் பொழுதொரு தொப்பியுமாக அரண்மனையிலேயே மறைந்து வாழ நேரிட்டது.


இந்த வேளையில் அரசரின் சகோதரரும் அந்தரங்க ஆலோசகருமான பசிலர் செய்தியொன்றைக் கொண்டோடி வந்தார். முன்னாள் அமைச்சரும் மகிந்தரின் பல அரசியற் களப் போர்களை முன்னின்று நடத்தி வெற்றிவாகைகளைச் சூடக் காரணமானவருமான மங்கள சமரவீரர் அரசருக்கு எதிராகச் சதியொன்றை மேற்கொள்ளுகிறார் என்பதே அச் செய்தி.
தன்னை எந்த உலக மகா சக்திகளாலும் அசைக்க முடியாதென்று இறுமாப்பிலிருந்துவந்த மகிந்தர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். என்ன இருந்தாலும் நாயக்கர் வம்சத்தின் அழுங்குப்பிடியிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி மகாராணி சந்திரிகையை நாட்டை விட்டே துரத்துவதற்கு உதவி செய்த மங்களரர் இப்படியாகுவார் என்று எதிர்பார்க்கவில்லைத்தான்.


‘எத்தனை பேருக்கு வெகுமதிகளை அள்ளி இறைத்தேனே! உலகத்திலேயே தேவைக்குமதிகமான அமைச்சர்களை நியமித்து அத்தனை பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்லக்கு தேர் குதிரை யானை என்று அள்ளி அள்ளிக் கொடுத்தேனே! கஜானா காலியாகிய போதெல்லாம் புத்தம் புதிதாக பணத்தை அச்சடித்து அபிஷேகம் செய்தேனே! தூரதேச யாத்திரைகள் போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கில் அமைச்சர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டு திரிந்து இறக்கைக்குள் வைத்துப் பராமரித்தேனே! இப்படியாகி விட்டதே’

இப்படியாக மகிந்தர் தலையிலடித்துப் புலம்பினார்.


இந்த நேரம் பார்த்து அமைச்சர் பர்னாந்துப்பிள்ளை உள்ளே வந்தார். அவர் மன்னர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர். தமிழ் சிங்களவர் ஓருடலும் ஈருயிருமாக வாழ வேண்டுமென்பதற்கு உதாரணமாக வாழ்பவர் அமைச்சர் பர்ணாந்துப்பிள்ளை அவர்கள். மன்னரின் சிவப்பு உத்தரீயத்தின் தலைப்பால் ஏற்கனவே சிவந்து போயிருந்த கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே அமைச்சர் சொன்னார்:


“மன்னாதி மன்னா. இந்த மங்களரின் சதி பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆடசியில் தமிழ் மக்களைத் தவிர எந்த ஒரு உயிரையும் நீங்கள் புண்படுத்தியதில்லை. மக்கள் உங்கள் பக்கமிருக்கிறார்கள். புத்த சங்கங்கள் இரண்டும் உங்கள் பக்கம். போதாதற்கு தமிழர் பக்கத்திலிருந்து பல சிற்றரசர்கள் உங்கள் கால்களையே தினம் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனத்துக்கே பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த கெமுனு மன்னரின் மறு பிறப்பே நீங்கள்தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்”


“உண்மையாகவா அமைச்சரே..?”


“ஆமாம் மன்னா! இரண்டாம் கெமுனு என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர்தான். எல்லாள அரசனின் மறுபிறப்பென்று மக்கள் அழைக்கும் கரிகாலனின் ஆட்சியிலிருந்து கிழக்கு மண்டலத்தை விடுவித்த பெருமை உங்களைத்தானே சேரும்”


“ஆமாம் அமைச்சரே… கொஞ்சம் பொறுங்கள். யாரங்கே அந்தக் குப்பிக்காரனை அழைத்துவரச் சொல்…. கலப்பதற்கு என்ன வேண்டும் அமைச்சரே."

" ஜலமே போதும் மஹாவலியிலிருந்தல்லவா வருகிறது..”


மன்னர் மகிந்தருடைய கோபத்தை எப்படி அடக்கலாமென்ற ரகசியம் அமைச்சர் பர்ணாந்துவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருவரும் களிப்போடு ஏனைய அரச கருமங்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள்.


“அமைச்சரே இந்த மங்களருக்கு நாம் என்ன குறை வைத்தோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? . உண்மையில் அவர் இல்லாவிட்டால் நாம் ஆட்சி அமைத்திருப்பதே சிரமம். சிற்றரசர் சோமவன்சர் போன்றவர்கள் கிளர்ச்சி செய்தபோது அவரோடு சமரசம் செய்து கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவர் இந்த மங்களர். இப்போது அந்த கபடர் சூரியாராய்ச்சியாரோடு சேர்ந்து எனக்கெதிராகச் சதி செய்கிறார். என் சகோதரர் கோதபாயரிடம் சொன்னால் ஒரே நாளில் இருவரையும் வெண் புரவிகளிற் கொண்டுபோய்த் துவம்சம் செய்துவிட முடியும். ஆனால்….” மஹிந்தர் மீசையை முறுக்கினார்.


“அரசே எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. மங்களரின் சதியின் பின்னால் வலுவான அந்நிய தேசங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் எல்லோருடைய நோக்கமும் கரிகாலனை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதே. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் வல்லமை இந்த கரிகாலனுக்கேயுண்டு என்று ஈரேழுலகமும் நம்புகிறது. கரிகாலனால் எங்கே தமது நாடுகளுக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமில்லாமலே பாரிய படைக்கலங்களைச் சோழர் படை தாமாகவே உருவாக்குகிறதென்ற விடயம் வெளிநாடுகளுக்குத் தெரிந்ததிலிருந்து அவர்கள் எச்சரிக்கையடைந்திருக்கிறார்கள்.”


“அதற்கும் மங்களரின் சதிக்கும் என்ன சம்பந்தம்.?”


“கரிகாலனை ஒழித்துக்கட்டும் வல்லமை உங்களுக்கு இல்லை என்று அயற்தேசங்கள் கருதுகின்றன. அத்துடன் சமீபத்தில் நீங்கள் பல வெண் புரவிகளை அரேபியாவிலிருந்து இறக்கியது அமைச்சர் கோதபாயரின் வேண்டுகோளுக்கிணங்கவே என்றும் அவை தருவிக்கப்பட்டதன் பின்னர் தலைநகரில் மட்டும் சென்ற மாதத்தில் 125 தமிழர்கள் வெண்புரவியிற் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் வெளிநாட்டு பிரதானிகள் கருதுகிறார்கள். இக்காரணங்களுக்காக உங்களை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மங்களரை ஆட்சியிலமர்த்தும் நோக்கம் அயற் தேசங்களுக்கு உண்டு என்று நமது ஒற்றர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அத்தோடு தலைநகரில் தங்கியிருந்த பல அப்பாவித் தமிழர்களைப் பலவந்தமாக இரவோடு இரவாக வெள்ளைத் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளிற் கொண்டுபோய்விட்ட சம்பவம் அயற் தேசங்களை உலுப்பியிருக்கிறது.”


“அப்படியா..? அதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம்?

மஹிந்தர் கேட்டார்.அப்போது வாயிற்காவலன் வந்து பணிவாகக் கூறினான்:


“அரசே வாயிலில் அமைச்சர் தேவானந்தர் நிற்கிறார். உங்களை அவசரம் பார்க்க வேண்டுமாம்”


“வரச்சொல். அமைச்சரே உங்களுக்கு ஒரு ஆடசேபணையும் இல்லையே. நீங்கள் இருவரும் ஒரு வழியில் தமிழர்கள் தானே. எங்கே நாயும் பூனையுமாக…”

"இல்லை. எனக்கும் தேவானந்தருக்கும் எதுவித பிரச்சினையும் கிலையாது. தாராளமாகப் பேசுங்கள்"


அமைச்சர் தேவானந்தர் பளிச்சென்ற வெண்ணாடை தரித்து நிதானமாக வந்தார்.


வணக்கம் மன்னர் பெருமானே!


“என்ன விடயம் அமைச்சரே? சிற்றரசர்கள் கருணாகரர் பிள்ளையார் ஆகியோருடைய பிணக்குகளைத் தீர்த்துவைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? இப்போதே தீர்க்காவிட்டால் பிள்ளையாரைத் தம்பக்கம் இழுத்துவிடக் கரிகாலன் முயற்சிக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”


“ஆம் மன்னரே. மண்டலக்காரர்களை இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பணித்திருக்கிறேன்”


“அது சரி… வந்த விடயம்?


“தலை நகரிலிருந்து 300 தமிழர்களை உங்கள் சகோதரர் பலவந்தமாக வெண் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளுக்கு அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்”


“அதற்கு என்ன இப்போது. பிற தேசங்கள் எங்களைக் கடிந்து கொண்டனதான். இருந்தாலும் பாரதூரமாகக் கண்டிக்கவில்லை. ‘கவலை தெரிவிக்கிறோமென்று’ சிரித்துக்கொண்டுதான் கூறினார்கள். இருந்தாலும் அதை நிறுத்தி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கோரினார்கள். நானாவது மன்னிப்பு அதுவும் தமிழரிடம் கேட்பதாவது. எனக்காக முதலமைச்சர் இரத்தினநாயக்கருக்கு தமிழரிடம் மன்னிப்புக் கோரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.


“தமிழரைப் பலவந்தமாக அனுப்பியது பிழையானது. அப்படித் தொடர்ந்தும் செய்திருந்தால் நாமே நமது அன்பிற்குரிய தாய்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர்களாக வரலாற்றில் பார்க்கப்படுவோம்.” அமைச்சர் தேவானந்தர் பணிவோடு கூறினார்.


“உண்மைதான் அமைச்சரே. எனது தம்பி கோதபாயரை உங்களுக்குத் தெரியும்தானே. கொஞசம் முற்கோபக்காரன். அவன் அவ்வளவாகக் கல்வி கற்றதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழரின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவனுக்கு கொஞசம் கோபம் அதிகம் தான்….அது சரி அமைச்சர் மங்களர் எமது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறாராமே. அமைச்சர் பர்ணாந்து சொல்கிறார்…”


“கேள்விப்பட்டேன் மன்னா. அது நடக்கவல்ல காரியமல்ல. மங்களர் தனது நண்பரும் சிற்றரரசருமான சோமவன்சரினதும் முன்னாள் முதலமைச்சரான விக்கிரமசிங்கருடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றலாமென்று கனவு காண்கின்றார். சோமவன்சருடைய படைபலமும் விக்கிரமசிங்கருடைய படைபலமும் ஒன்று சேர்ந்தாலும் எங்களது பலத்தை மீற முடியாது. அப்படியானாலும் அதற்கு முன்னராக நாம் இன்னுமொரு சதியொன்றை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய சதியை இலகுவாக முறியடிக்கலாம்.”


“எப்படி எப்படி… சொல்லுங்கள் அமைச்சரே. இதற்காகத்தானே சிங்கள அரசுகள் எப்போதும் தமிழமைச்சர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது….”


“மன்னா! ஒரு நாட்டில் ஆட்சி ஈடாட்டம் காணும்போது அது அயல் நாடுகளின் மீது படையெடுப்பைச் செய்ய வேண்டும். தேசீயத்துக்கு அச்சுறுத்தல் வரும்போது மக்கள் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வார்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு அலையலையாக வந்துகொண்டே இருக்கும். எனவே இப்போ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது மக்களுக்கு கிராமங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் பறையடித்துச் சேதியனுப்ப வேண்டியது. தேசீயத்துக்கு அச்சுறுத்தல் என்றால் மக்கள் பொங்கியெழுவார்கள். அத்தோடு கிழக்கு மண்டலத்தை விடடுவித்ததும் நாடு தழுவிய ரீதியில் வெற்றிக் களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். ”


“நல்லது அமைச்சரே. சரியான தருணத்தில் வந்து உங்கள் மதியூகத்தால் எங்கள் நாட்டைக் காப்பாற்றியமைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன். இன்னும் சில நாட்களில் கரிகாலனைத் தோற்கடித்து ஈழம் முழுவதையும் வெற்றிகொண்டவுடன் கிழக்கு மண்டலத்தைக் கருணருக்கும் வடக்கு மண்டலத்தை உங்களுக்கும் பாத்தியதையாக எழுதிக்கொடுப்பேன் என்று இப்போதே உறுதி மொழி தருகிறேன்”

மன்னர் மகிந்தர் பறையடித்துப் பிரசித்தம் செய்வோருக்குப் பின்வருமாறு ஓலையை எழுதி அனுப்பினார்.


‘மக்களே எங்கள் சிங்கள தேசத்துக்கும், புத்த சமயத்துக்கும் எங்கள் மத்தியிலிருக்கும் புல்லுருவிகளின் ஆதரவுடன் பிற தேசத்தாரினால் ஆபத்து விளையக் காத்திருக்கின்றது என்று நமது ஒற்றர் படை தகவல் கொண்டு வந்திருக்கிறது. எனவே மக்கள் விழிப்போடு இருந்து எமது தேசத்துக்கு அச்சுறுத்தல் தருபவர்களைக் காட்டிக் கொடுத்து நாட்டை வரப்போகும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்படி இத்தால் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இரண்டாம் கெமுனு உங்கள் மகிந்த மகாராஜா’


அப்போது அவசரம் அவசரமாக கோதபாயர் அரண்மனைக்குள் நுழைந்தார். சாதாரணமாகவே கடு கடுவென்றிருக்கும் அவர் முகத்தில் இன்னும் ஆயிரம் முகங்கள் முளைத்திருந்தன.


“அண்ணா.. எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஒரு பக்கம் தமிழர். மற்றப்பக்கம்….” மேலும் சொல்வதை நிறுத்திக் கொண்டு கோதபாயர் இரு அமைச்சர்களையும் மகிந்தரையும் மாறி மாறிப் பார்த்தார்.


“எனதருமைத் தம்பியே சொல். உன்னைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஓடோடி வந்து கட்டிப் பிடித்து முத்தமிட்டேனே.. ஞாபகமிருக்கிதாடா என் தம்பியே. நீ சின்னவனாயிருந்தபோது….”


“போதும் நிறுத்து. அண்ணா…தெற்குக் கடலில் பிரமாண்டமான கப்பல் ஒன்று நங்கூரமிட்டிருக்கிறதாமே. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


“தெரியாதடா தம்பி. எனக்கு எதுவுமே தெரியாது.”


“தெரியாதே.. தெரிந்தே இருக்காதே.. உங்கள் நட்பான அயற் தேசம் இந்துஸ்தானம் இது பற்றிச் சொல்லியிருக்காதே…இந்த நண்பர்களும்கூடச் சொல்லியிருக்க மாட்டார்களே..?”


“உனக்கெப்படியாடா தம்பி இதுபற்றித் தெரிந்தது”


“சீனத்து பிரதானி தகவல் அனுப்பியிருந்தார். தமிழருக்கு உதவி புரிவதற்காக வந்திருக்கலாமாம். எதற்கும் விசாரியுங்கள்…”

அப்போது அரண்மனையின் மந்திராலோசனைக் கூடத்திலிருந்து யாரோ வலியினால் முனகும் சத்தம் கேட்டது. ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

"அண்ணா சமலரே. என்ன கோலமிது? உங்களுக்கு என்ன நடந்தது? "

மன்னர் மஹிந்தரும் அமைச்சர்களும் ஓடிப்போய் அமைச்சர் சமலரைக் கைத்தாங்கலாக அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினர்.

"எனதருமைத் தம்பிகளே! தம்பி பசிலரின் ஆலோசனைப்படி நாட்டில் பரிபாலனம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவரலாம் என்று மாலை நகர் வலம் போனேனா. மக்கள் கற்களால் எறிந்தும் அடித்தும் துரத்தியும் விட்டார்கள். அவர்கள் மிகவும் கோபமாய் இருக்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்"

அப்போது அமைச்சர் தேவானந்தர் அருகே வந்து மெதுவான குரலில் ஏதோ கூறினார். மன்னர் மஹிந்தரின் முகம் மலர்ந்தது.

தொடரும்.