திங்கள், 3 செப்டம்பர், 2007

தாய்லாந்து

சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தேன். இது இரண்டாவது தடவை எனினும் பல புதிய தரிசனங்கள் கிடைத்தன. 

 சில வேளைகளில் சில மக்களின் குணவியல்புகளைப் பொதுமைப்படுத்தும்போது குறும்பார்வைத் தன்மைகள் முகம் காட்டலாம். அதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கமாட்டேன். மாற்றியல்புகளோடு அம் மக்கள் மீண்டும் தோற்றமளிக்கும் வரை. 

 தாய்லாந்தில் தென்னிந்திய, குறிப்பாகத் தமிழரின், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடுகள் கலந்துறவாடுகின்றன. அது புத்த சமயத்தின் பாதிப்பாக இருக்கலாம் என்றால் அதே பழக்க வழக்கங்கள் ஏன் இலங்கையிற் காணப்படவில்லை? 

 பாங்கொக், சியங் மாய் போன்ற இடங்களில் மக்கள் பெரும்பாலும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். இரு கை கூப்பி, தலை வணங்கி வரவேற்கிறார்கள். இயற்கையாகவே அழகானவர்கள். அவர்களது தேசிய உடைகள் அழகானவை. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை பட்டுச் சேலையைச் சுற்றிக் கட்டி, முழுக் கை நீளச்சட்டையோடு குறுந் தாவணி போட்டுக் கொள்கிறார்கள். வேற்றின மக்களைத் துவேஷத்தோடு பார்த்ததாக நான் அறியவில்லை. 

 தெற்கில் ஹுவான் ஹி என்ற கடற் கரை சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப் பட்டிருக்கிறது. தாய்லாந்து மன்னரின் கோடை வாடி இங்குதானிருக்கிறது. 

தெற்கில் அரைக்கரைவாசி நமது திராவிடக் கலப்புடன் மக்களைக் கண்டேன். பாவம் தாய்லாந்துக்காரர். அவர்களது அழகெல்லாம் இங்கு இழக்கப்பட்டிருக்கிறது. 

காலை 10 மணி போல் ஒருவர் வெறியோடு தள்ளாடிக்கொண்டு வந்தார். அவர் நமது திராவிடக் கலப்பினர். கலாச்சாரத்தையும் விடாது வைத்திருக்கிறார். 

கை கூப்பித் தலை வணங்குதல் இங்கு காணப்படவில்லை. அழகான பெண்களையும் காண்பது அரிதாகவே இருந்தது. 

 தாய்லாந்து மேற்கு நாடுகள் போல் வறியவர்களுக்கு சமூக மானியம் கொடுக்கும் நாடல்ல. எல்லோரும் உழைத்துத்தான் வாழ வேண்டும். 

தெருவோரச் சாவடிகள் பட்டி தொட்டியெங்கும் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்கள், வயதானவர்கள் பண்டங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவை உணவுப் பண்டங்களாகவோ அல்லது கை வினைப் பொருட்களாகவோ தானிருக்கும். 

 தாய்லாந்து காலனித்துவப் பிடியில் அகப்படாத நாடு. இப்பொழுதும் பெயரளவில் மன்னராட்சி. அரச குடும்பத்தை மக்கள் தெய்வத்திற்கிணையாக மதிக்கிறார்கள். அரசர், அரசி, இளவரசிகளது பெரிய படங்கள் தெருச் சந்திகளெங்கும் வைக்கப்பட்டிருக்கின்றன. எங்களூர்களில் போல சினிமா நடிகர்களினதோ அல்லது அரசியல்வாதிகளினதோ படங்கள் எங்கும் காணப்படவில்லை. 

தாய்லாந்து மக்கள் சுய உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டுமென்ற விருப்பில் மஹாராணியார் கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும்படி மக்களை ஊக்குவிக்கிறார். அதற்காக கைவினைப் பயிற்சிக்கூடங்களைக் கிராமங்கள்தோறும் அமைப்பித்து நிர்வகிக்கிறார். 

சூழற் பாதுகாப்பில் அரசர் அதிக அக்கறை காட்டுகிறார். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி இயற்கையான பசளை மற்றும் விவசாயப் பொருட்களைத் தயாரிக்க உதவுகிறார். 

 தாய்லாந்து பெரும்பாலும் சுற்றுலாத் துறையில் தன் வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறது. அதற்காக பழம்பெரும் ஆலயங்களையும் அரச மாளிகைகளையும் முன்நாள் அரண்மனைகளையும் பரிபாலித்து வருகிறது. இருப்பினும் ஆடை மற்றும் பாவனைப் பொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்துகிறது. 

 நகரங்களில் வாகன நெரிசல் அதிகம். மோப்பெட்டுகள் முதல் மினி பஸ்கள்வரை தனியார் வாகனங்களும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பொதுப் போகுவரத்து சாதனங்களும் சேவையில் உண்டு. டாக்சிகள் ஏராளம். கட்டணம் அதிகமில்லை. சென்ற வருடம் புதிய விமானத்தளமொன்றைப் பாவனையில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அழகான பிரமாண்டமான தளம். முகப்பில் (தளத்தினுள்ளே) அசுரரும் தேவரும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியைச் சிற்பமாகச் செய்து வைத்ததிருக்கிறார்கள். சுமார் எழுபது அடிகள் இருக்கும். பொறாமைப்ப்டும்படியான - அழகான நாடு, அழகான மக்கள்.

கருத்துகள் இல்லை: