சனி, 25 ஜூன், 2011

திருமனம்

எனது பதினைந்து வருடத் திருமணம் இன்று முடிவுக்கு வருகிறது. கவலை தான். என் நண்பர்களுக்கு அளப்பரிய அதிர்ச்சி. என் நண்பர்களின் மனைவிமார்கள் பலரும் என் குடும்பத்தையே உதாரணம் காட்டித் தங்களைத் திட்டுவதாக நண்பர்கள் என்னிடம் முறையிடுவதுண்டு. 

எனக்கு இரண்டு குழந்தைகள். தீரனுக்கு பதின் மூன்று. அவ்வைக்கு பதினொன்று. ஒரு நாள் முழுவதும் அவர்களோடு இருந்து எமது மணமுறிவைப் பற்றிப் பேசி விட்டேன். அவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. சுஹாசினி - நாளை என் முன்னாள் மனைவி - நல்லவள். பிள்ளைகளை மிகவும் நேசிக்கிறாள். அதனால் அவர்கள் இருவரும் தாயோடு செல்வதே நல்லது என இருவரும் ஏற்றுக் கொண்டோம். 

குடும்ப வீட்டையும் மனைவிக்கே எழுதிக் கொடுத்து விட்டேன். வங்கிச் சேமிப்பையும் மூவருக்கும் பாகப் பிரிவினை செய்து கொடுத்தாகி விட்டது. 

இன்று சுஹாஷினி வேலைக்குப் போகவில்லை. குழந்தைகள் பாடசாலையால் அப்போதுதான் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் இறுதியாக அவர்களை முத்தமிட்டுவிட்டுப் புறப்படுகிறேன். மனைவி உணர்ச்சி எதுவுமற்று வாசலில் அப்படியே நிற்கிறாள். குழந்தைகள் எனது கையைப் பிடித்து இழுக்கிறார்கள். தங்களை விட்டு விட்டுப் போகவேண்டாமேன்று கதறுகிறார்கள். கண்ணீர் பார்வையை மறைத்தது ஒரு வகையில் நல்லதாய்ப் போய்விட்டது. 


தனிக் குடித்தனம் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. நண்பர்கள்  சில வேளைகளில் தமது வீடுகளுக்கு விருந்துக்கு அழைப்பார்கள். மறுத்துவிடுவேன். குடும்பமாகச் சென்று விருந்துண்ட வீடுகளில் தனியாக எப்படி...? நண்பர்களின் மனைவிகளின் பரிதாபமான பார்வைகளைச் சமாளிப்பதே பெரிய பாடு. 

 வார விடுமுறைகளில் குழந்தைகளை என்னிடம் விட்டு விட்டு சுஹாசினி போய்விடுவாள். எனக்கும் அவர்களோடு பொழுது போக்குவதில் பெரிய மகிழ்ச்சி. அவர்கள் பிறந்த பின்னர் இப்போதுதான் அவர்களோடு நெருக்கமாக இருக்கிறேன். வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குச் சில வேளைகளில் தனிமையும் தேவைப்படுகிறது. 

 ஒரு நாள் அவ்வை மிகவும் கவலையாக இருந்தாள். என்னோடு அதிகம் பேசவில்லை. நான் சமைத்த உணவு பிடிக்கவில்லையா என்று இருவரையும் கேட்டேன். தீரன் அவ்வையை ஒரு மாதிரிப் பார்த்தான். அவள் கதறி அழ ஆரம்பித்தாள். அவளைத் தேற்றுவதறகாக அவளது தலையைத் தடவினேன். என் கைகளை உதறித் தள்ளிவிட்டு என் அறைக்குள் ஓடிப்போய் ஒரு சேலையைக் கொண்டு வந்தாள். பார்வை கேள்விகளைச் சொன்னது. 
 "ஓம், நான் இன்னுமொரு அம்மாவைக் கல்யாணம் கட்டிப் போட்டன்" 

இருவரும் என் நிலக்கீழறை வீட்டிலிருந்து வெளியே ஓடினார்கள். என்னோடு இனிமேல் பேச மாட்டார்கள் என்று தெரிந்தது. தாயாரைக் கூப்பிட்டு அவர்களை அனுப்பி வைத்தேன். 

சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் சுஹாசினி வேலைத்தலத்துக்கு தொலைபேசி எடுத்தாள். பிள்ளைகள் இருவரும் தன்னை வேறு கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள் என்றாள். 'செய்து கொள்வது தானே' என்றேன். 
'அவரும் கலியாணம் செய்ய வேண்டுமெண்டு விடாப் பிடியா நிக்கிறார்'

 'பிள்ளைகளுக்குத் தெரியுமோ?' 

 'இல்லை. இந்தச் சாட்டோடை சொல்லிப் போடலாம்' 


சுஹாசினி தனது கல்யாணத்தைச் சுருக்கமாகச் செய்ததாகச் சொன்னாள். அவ்வையும் தீரனும் 'அவரோடு' சந்தோஷமாய் இருப்பதாகவும் சொன்னாள். தன்னைப் புரிந்து கொண்டதற்காய் நன்றியும் சொன்னாள். பிள்ளைகள் என்மீது இன்னும் கோபமாகவே இருப்பதாகச் சொன்னாள்.

 'அப்படியே இருக்கட்டும். உன்மீது அன்பாயிருக்கிரார்கள்தானே. அது போதும்'

 'உங்கள் கல்யாணம் எப்ப வைக்கப் போறீங்கள்?'

 'இனித்தான் பொம்பிளை பாக்க வேணும' 'அப்ப அவ்வை சொன்னது?'

 'அது உன்னைக் காப்பாத்திறதுக்கு. நீ என்னை விட்டுப் போனது என்று தெரிந்தால் உன்னைப் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் மன்னித்திருக்க மாட்டார்கள். பிள்ளைகளுக்கு தகப்பனைவிடத் தாயே அவசியம். சேலை வெறும் பத்து டொலர் தான். திருமண வாழ்த்துக்கள்!'

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கருத்துகள் இல்லை: