சனி, 25 ஜூன், 2011

எஸ்.பொ.

நான் மதிக்கும் ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.பொ.

'நனவிடை தோய்தல்' நாவலே நான் வாசித்த அவரது முதல் நூல். அசல் யாழ்ப்பாணச் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டு. நாற்பதுகளின் யாழ்ப்பாணத்தைப் படம் பிடித்துத் தந்தது போன்ற அனுபவம். அவரது நூல்களைத் தேடி வாசிக்க இந்நூலே காரணமானது. 'தீ', 'சடங்கு' போன்ற நூல்களைப் பின்னாளில் வாசித்தேன்.

எஸ்.பொ. வைப் பலருக்குப் பிடிக்காது. குறிப்பாக இடதுசாரிகளுக்கு. அவரும் ஒரு காலத்தில் மார்க்சீயராக இருந்தவர். ஆனாலும் தான் சார்ந்திருந்த 'முற்போக்குக்' கூட்டின் திருகுதாளங்களை விமர்சித்தபடியால் அவர் தூக்கி வீசப்பட்டார் என்றொரு கருத்து நிலவுகிறது. எஸ்.பொ.பற்றிய பல குறைபாடுகளும் பல திசைகளில் இருந்தும் வருவதால் I will give the benefit of the doubt to the progressives என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

எஸ்.பொ. இந்த வருடம் (2011 June) இலக்கியத் தோட்டம் வழங்கும் '2011 ம் ஆண்டிற்கான 'இயல் விருதை' ப் பெற கனடாவிற்கு வருகை தந்துள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

2000 ஆம் ஆண்டு கனடா வந்திருந்தபோது அவருடைய பேச்சைக் கேட்டேன். அதற்குப் பிறகு இப்போது - இயல் விருது நாளன்று பேசிய 'ஏற்புரை' யையும் மறுநாள் 'காலம்' செல்வம் நடத்திய கூட்டத்திலும் அவர் பேச்சைக் கேட்க முடிந்தது.

அவரை ஏன் பலர் மதிக்கிறார்கள் என்பதற்கு மட்டுமல்ல பலர் ஏன் வெறுக்கிறார்கள் என்பதற்குமான விடை எனக்கு இப்போது கிடைத்து விட்டது.

தான் சரியென்று நம்பியதை அப்படியே கரடு முரடாகச் சொல்லிவிடுகிறார். தான் ஒரு 'காட்டான்' என்பதையும் பகிரங்கமாகச் சொல்லுகிறார். 'என்னிடமிருந்து காது குளிரக் கேட்கலாமென்று எதிர் பார்த்து வந்துவிட வேண்டாம்' என்பது போன்ற தோரணையில் இருந்தது அவர் பேச்சு. ஒரு arrogance அல்லது egoistic ஆகவே அவரது பேச்சை நான் அவதானித்தேன்.

தனது பேரப் பிள்ளைகள் -அவுஸ்திரேலியாவில்- வீட்டில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று தான் வற்புறுத்துவதாகச் சொன்னார். 'ஒரு குழந்தையின் விருப்புக்கு எதிராக மொழியைத் திணிப்பது ஒரு வெறியாகப் பார்க்கப்படாதா' என்று நான் கேட்டேன். 'நீ குதர்க்கம் பேசுகிறாய்' என்பது போல ஒரு மறுமொழியோடு கைகள் தட்டிக் கூட்டம் முடிக்கப் பட்டது.அப்படிப் பேசா விட்டால் அவர் எஸ்.பொ. இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவதை நண்பர் மூர்த்தி நினைவு கூர்ந்து நிலைமையைச் சமாளித்தார்.

சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழிகள் தமிழிலிருந்து பல சொற்களைக் கடன் வாங்கியிருக்கின்றன. பல சிங்கள அரசியல்வாதிகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே என்று கூறி அம் மொழிகளைக் கொஞ்சம் இளக்காரமாகவே பேசினார். அது பொறுப்பற்ற பேச்சாகாதா என்று மீராபாரதி கேள்வி எழுப்பினார். மறுமொழி சடையப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

நிறையப் பேசினார்.சபையில் நிறையப் பேர் அவருடைய கருத்துக்களோடு உடன்படாதவர்கள் இருந்தார்கள். அவரது வயதையும் அவர் தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பையும் மதித்து அவர்கள் எதிர்வாதம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

நல்லதொரு படைப்பாளி - விமர்சகர்களையும் கூடவே படைத்திருக்கிறார். நன்றாகத் தமிழறிந்திருக்கிறார். விஞ்ஞானம் அறிவை விசாலித்திருக்கிறது.இன்னுமொரு தமிழ் உணர்வாளர்.

இருந்தாலும் I still believe he was morally wrong.

இடதுசாரிகள் சித்தாந்த ரீதியில் மட்டுமே அவரை விலத்தி வைத்திருப்பார்கள் என்று நம்புவதற்கான தடயங்களை அவர் எனக்குத் தரவில்லை.


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கருத்துகள் இல்லை: