சமீபத்தில் ஒருவரோடு பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் ஒரு கணனி நிபுணர். பணி பற்றி ஆரம்பித்த பேச்சு ஆன்மீகம், தத்துவம், அரசியல் என்று எங்கெங்கெல்லாமோ போய்க்கொண்டிருந்தபோது நான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூல் பற்றிக் குறிப்பிட நேர்ந்தது.
அந்த அரை மணி நேர உரையாடலில் புரிந்த ஒன்று - நாம் இருவரும் பல விடயங்களில் ஒருமையைக் கொண்டவர்கள் என்பதே. அவரை இதுவரையில் ஒரு கணனி நிபுணராக மட்டுமே கண்டிருந்த எனக்கு ஆச்சரியத்தின் மீது ஆச்சரியம். அன்று முழுநாளும் நான் செய்த கடமைகளில் மிகவும் திருப்தியைத் தந்ததது அந்த அரைமணி நேர உரையாடல் தான்.
'Everything happens for a reason' என்று சொல்லிக்கொண்டு விடைபெற ஆரம்பித்தபோது தனது மேசைப் பெட்டகத்திலிருந்து எடுத்து ஒரு ஆங்கில நூலை எடுத்துக் காட்டினார். அவரது கண்களும், முகமும் எல்லைவரை விரிவடைந்தன. 'நீங்கள் சொன்ன அந்த மேற்கோளே இப் புத்தகத்தின் சாராம்சம். பத்து நிமிடங்களுக்கு முன்னர்தான் இப் புத்தகத்தை ஒரு நண்பர் தந்துவிட்டுப் போனார். வாசித்து முடிந்ததும் உங்களுக்குத் தருகிறேன். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் ” என்றார்.
இந் நண்பரைச் சந்தித்தது ஒரு ஆனந்தமான அனுபவம். இதைப்போல் பல மனிதர்களைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். தமிழுணவுக்குச் சுவை சேர்த்ததுபோல ஒவ்வொன்றும் ஒவ்வொரு மறக்க முடியாத அனுபவங்கள். இவை எல்லாவற்றிற்கும் பொதுவான சினைகளிற் பெரியதாகத் தொக்கி நிற்கும் கேள்வி: இக் காரியங்களுக்கான காரணங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவையா? முன் திட்டமெதுவுமில்லாது வாழ்வின் மிக முக்கியமான சம்பவங்களில் பங்கு கொள்ளும் மனிதர்களாக நாம் ஏன் இருக்க வேண்டும்?
என் வாழ்வில் நான் சந்தித்த மனிதர்கள் முதல் நடைபெற்ற சம்பவங்கள் ஈறாக ஒரு புரியாத இணைப்பு இழை ஓடுகிறது. என் உள்ளுணர்வின் வழிகாட்டலும் உந்துதலுமே இந்த அனுபவக் கோர்வை. வாழ் காலத்தின் மூன்றாம் சாமத்தில் இருக்கும் நான் உறுதியாக நம்புவதொன்று - இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கூறும் சார்பியக்கம் கொண்டது; அதில் நானும் ஒருவன்; என் வாழ்வில் நடைபெற்ற, இனிமேல் நடக்கப் போகின்ற அத்தனை நிகழ்வுகளும் முற்கூட்டியே திட்டமிடப் பட்டவை என்பதே. யோகர் சுவாமி சொன்னதுபோல் ‘எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்’
இன்றய உலகில் பல மாற்றங்கள் எதிர்பாராதவையாகவும் அதிர்ச்சி தருவனவாகவும் நடைபெற்று வருகின்றன. அரசியல், சூழல் என்று பல தளங்களிலும் பெரும் புயல்கள், சூறாவளிகள், பேரலைகள் ஒழுங்குகளை மாற்றியமைக்கின்றன. அவற்றை அழிவுகள் என்று மாற்றுப் பெயரால் சிலர் அழைப்பதுண்டு. ஆனால் இம்மாற்றங்கள் நியதியின் பிரகாரமே நடைபெறுகின்றன என்று நான் கருதுகிறேன்.
இந்து சமயத்தில் கூறப்படும் சில புராணக் கதைகள் சிலவற்றில் - தேவரை அடக்கும் வல்லமை வேண்டி அசுரர் தவம் செய்வரர். பெற்ற வரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அசுரர்கள் பல தீங்குகளைச் செய்வர் என்று தெரிந்திருந்தும் - முறைப்படி தவம் செய்த காரணத்தால் கடவுள் அசுரருக்கு அவ்வரங்களைக் கொடுத்து விடுவார் - “தகாத முறையில் வரத்தைப் பாவித்தால் அழிவு நிச்சயம்” என்ற ஒரு எச்சரிக்கையுடன்.
இப்படியான கதைகள் - அவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ - மனித வாழ்வை மேம்படுத்தக்கூடிய கனதியைக் கொண்டிருந்தாலும் அவை வெறும் கதைகளாக மட்டுமே கற்பிக்கப்பட்டு கதைகளாகவே உதாசீனம் செய்யப்பட்டுவிட்டன. அதில் துர்ப்பாக்கியமான விடயம் என்னவென்றால் அக்கதைகள் உருவகப்படுத்தும் நிஜமான நிகழ்வுகள் இன்று வரையில் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதுதான்.
அசுரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் அவர்கள் நிச்சயமாகக் கறுப்பு மேனியும் சுருட்டை முடியும் உதிரம் வடியும் பற்களைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்பதில்லை. பலர்வரமும் பெற்றிருக்கிறார்கள். சிலருக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. சிலருக்கு நிறைவேற்றப்படுகிறது. சிலருக்கு இனி மேல்தான்.
பாவம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எல்லா மதங்களும் தான் சொல்கின்றன. ஆனாலும் அது தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது. நற்போதனை செய்பவர்கள்கூட அதே பாவங்களைத் தொடர;ந்து செய்து கொண்டுதான் வருகிறார;கள். ஒரு காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சந்தர்ப்பம் வரும்போது தம்மினும் நலியவர்களை மேலும் மோசமாகத் தண்டிக்கிறார்கள். நடப்புலகில் இவற்றிற்கான உதாரணங்கள் நிறையவே இருக்கின்றன.
காரண காரியங்களுக்கிடையே தகுந்த முடிச்சைப் போட முடியாததால் - வழக்கம் போல தெரியாத காரணங்கள் எல்லாவற்றையும் கடவுளின் தலையில் கட்டிவிடுகிறோம். ஆக்கமும் அழிப்பும் தேவை கருதியே நடைபெறுகின்றன. ஒரு விருட்சம் எப்படியாக வளரப் போகிறது என்பதற்கான முழுத் திட்டமிடுதலும் நடைமுறைகளும் அவ் விருட்சத்தின் விதையுள் புதைக்கப்பட்டிருக்கிறது என்பதே எனது வாதம். ஆவதென்றாலும் அழிவதென்றாலும் இதுவே ஏனைய உயிர்களினதும் நியதி.
500 ஆண்டுகளாக ஆண்ட உரோம சாம்ராஜ்யம் இன்று எச்சங்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தமக்குக் கிடைத்த ‘வரத்தை’ துஷ்பிரயோகம் செய்ததுதான். உலகில் பல சாம்ராஜ்யங்களின் சரிவு இவ்வழிப்பட்டதே.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது யப்பான் மீது அணுக்குண்டைப் போட வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை. யப்பான் ஏற்கனவே சரணடைவதற்கான தனது திட்டத்தை அமெரிக்காவிற்கு அறிவித்திருந்தது. அப்படியிருந்தும் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அணுக்குண்டைப் போடுவதற்கான ஆணையைப் பிறப்பித்தார். ஏற்கனவே குண்டுகளைப் பொழிந்து வந்த அமெரிக்க விமானப்படையாற் பாதிக்கப்படாத, மக்கள் செறிவு அதிகமுள்ள இடங்களைத் தெரிவு செய்தே குண்டு போடப்பட வேண்டும் என உத்தரவு வேறு வழங்கப்பட்டது. இந்த யுத்தத்தில் யப்பானியர் தோற்கடிக்கப்படாது போனால் உலகம் யப்பானியரின் கொடுங்கோலாட்சியில் நசுக்கப்பட்டிருக்கும் என்பதே ட்ரூமனின் வாதம்.
ட்ரூமனின் அனுமானம் சரியோ பிழையோ சீனர்களிடமும் கொரியர்களிடமும் இப்போதும் இருக்கின்ற யப்பானிய வெறுப்புக்கு காரணம் ஏதோ இருக்க வேண்டும்.
யப்பானியர் கொடுங்கோலர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களைத் தண்டிக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு யார் தந்தது?
சரி, பாதிக்கப்பட்ட யப்பானியர் மீண்டெழுந்தார்கள். அமெரிக்காவின் மீது பகைமை காட்டாது அதன் உலக வல்லாதிக்கத்துக்கும் அதன் கரங்களில் பல கோடி மக்கள் மரணமாவதற்கும் அதே யப்பான் துணை போகிறதே!
எந்த அணுக்கதிரியக்கத்தில் தமது மக்கள் கருகி இறந்தார்களோ அக் கதிரியக்க ஆபத்துக்களைக் கொண்டிருந்த அணு உலைகளை வைத்தே அவர்கள் உலக மகா சக்தியாக வளர்ந்திருக்கிறார்கள். அதன் கதிரியக்கத்தாற் பாதிக்கப்பட்டு வரும் யப்பானியர்களின் அவலங்கள் தொடர்கதைகளாக இருக்கின்றன. அணுக்கதிரியக்கப் பாதிப்புக்களை அனுபவித்த மக்கள் தான் பின்னர் பாரிய அணு உலைகளைத் தமது நாட்டில் அமைத்து சக்தித் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மட்டுமல்ல யப்பானிய நகரங்கள் முழுவதுமே இரவு முழுவதும் ஒளிப்பிழம்பாகத் திகழுமளவுக்கு மின்சக்தியை வழங்கிக் கொண்டிருந்தன யப்பானின் அணு உலைகள்.
யப்பானியர் பெற்றிருந்த வரம் ஒரு மார்ச் மாத ஆழிப் பேரலையோடு முடிவுக்கு வந்தது. 25000 மக்கள் இறந்தோ காணாமற்போயோ உள்ளனர். அம்மக்களின் இழப்பில் யாரும் ஆனந்தம் கொள்ள முடியாது. ஆனாலும் இவ்வழிவின் மூலம் யப்பான் கற்றுக் கொண்ட பாடம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
பேரலை அழிவிற்கு முன்னர் யப்பானது சக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் பணிக்காக பல புதிய அணு உலைகளை நிர்மாணிக்க அரசு தீர;மானித்திருந்தது. இப்போது அத் திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு சூரிய ஒளி மூலம் சக்தி உருவாக்கும் திட்டத்தையும் தேவையற்ற ஆடம்பர தேவைகளுக்காக சக்தியை விரயமாக்காது சேமிக்கும் பழக்கத்தையும் மக்களிடையே ஊக்குவிக்கும் திட்டத்தை அரசு தீட்டியுள்ளது.
யப்பான் பாடம் கற்றுக் கொண்டு விட்டது.
சென்ற மாதம் 7000 மைல்களுக்கு அப்பால் இருந்து இயக்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தால் ஆப்கானிஸ்தானில் தொழுகை முடித்துப் புறப்பட்ட - குழந்தைகளுட்பட்ட - குடும்பத்தினர்- 23 பேர் -படுகொலை செய்யப்பட்டனர். உலகெங்கும் மனிதர்களால் முடுக்கி விட்ட கருவிகளே மனிதர்களைக் கொல்கின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொண்டு விட்டன. கருவிப் பயிற்சிகளுக்காக ஏழை நாடுகள் அவர்களது களங்களாகின்றன. “எமது மக்களில் யார் கை வைத்தாலும் அவர்களை அவர்களது நாடுகளில் வைத்தே கொல்வோம்” என்று காடையர் மொழியில் சூளுரைக்கிறார்கள் விருத்தியடைந்த நாடுகளின் அரசியல்வாதிகள். எல்லோருக்கும் ஆணவம் தலைக்கேறிப்போயிருக்கிறது.
வரம் கொடுத்தவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டார். மிக நீண்ட காலங்களாக வரங்களைப் பெற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இப்போது அவரது தவணை.
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மத்திய பிரதேசங்களில் சுழல் காற்று வீச்சுக்கு பல நகரங்கள் பலியாகியிருக்கின்றன. உயிர்ச் சேதங்கள் எண்ணிக்கை இன்னும் முற்றுப் பெறவில்லை. கனடா, அவுஸ்திரேலியா என்று பல நாடுகளிலும் வரலாறு காணாத வள்ளப் பெருக்கு. காட்டுத் தீ நகரங்களுள் வந்து எரித்து சாம்பலாகி விட்டுப் போகிறது. எந்த விஞ்ஞானத்தாலும் அழிவுகளை நிறுத்த முடியவில்லை.
மேற்குலகம் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஹரோல்ட் காம்பிங் என்றொரு மத போதகர் இருக்கிறார். முன்னாள் பொறியியலாளரான இவர் தற்போது ‘குடும்ப வானொலி’ என்றொரு ஒலிபரப்பு சேவையை நடாத்துகிறார். இந்த வருடம் மே மாதம் 21ம் திகதி உலகம் அழியப் போகிறது என்றும் உலகிலுள்ள 200 மில்லியன் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டும் கடவுளால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் பல மில்லியன் டாலர்கள் செலவில் 5000 வீதியோரப் பதாகைகளை நிறுவியிருந்தார்.
அவர் அடித்துச் சொன்னது போல மே மாதம் 21ம் திகதி உலகம் அழிந்துவிடவில்லை.
காம்பிங் இதற்கு முன்னரும் ஒரு தடவை - 1994 இல் - உலக அழிவுக்காய் நாட்குறித்து தந்தவர். அது நடைபெறாதபோது ‘கணிப்பில் பிழை நடந்திருக்கலாம்’ என்று அப்போது தப்பித்துக் கொண்டார். மே 21ல் உலகம் அழியவில்லை என்று அறிந்ததும் “ நான் சூக்கும சரீரத்தின் (spiritual) அழிவைத்தான் சொன்னேனே தவிர ஸ்தூல சரீரத்தின் (physical) அழிவை அல்ல” என்று மீண்டும் தப்பித்துக் கொள்ளப் பார;க்கிறார். அது மட்டுமல்ல இந்தத் தடவையும் "கணிப்பில் தவறு நடந்திருக்கலாம், அழிய விரும்புபவர்கள் அக்டோபரர் 21 மட்டும் பொறுத்திருங்கள்” என்று சாவதானமாகக் கூறுகிறார்.
உலக அழிவு அண்மிக்கிறதென பல கர்ண பரம்பரைக் கதைகள், பல கண்டங்களிலிருந்தும், பல கலாச்சாரங்களிலிருந்தும் முட்டாள்கள் புத்திமான்கள் என்ற பாகுபாடில்லாது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இயற்கையும் நாள் தேதி குறிக்காது தண்டனையை மட்டும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
நவீன அரசியல் சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் நிக்கோலோ மக்கியாவெல்லி (1469-1527) ‘இளவரசன்’ என்ற தனது நூலில் குறிப்பிட்ட முக்கிய கோட்பாடு ஒன்றே இன்றய உலகில் அதிகமாகப் பின்பற்றப்படும் வாய்பாடாக இருக்கிறது. “முடிவே பாதைகளைத் தீர்மானிக்கிறது” (The end justifies the means) என்ற அந்த மக்கியாவெல்லி கோட்பாட்டில் பிரதான பாதசாரியாக எப்போதுமே இருந்து வருகிறது அமெரிக்கா. முடிவு - உலக வல்லாதிக்கம். பாதைகள்- ஜனநாயகம் முதல் அணுவாயுதம் வரை.
இதற்கு எதிரான சித்தாந்தத்தையே காந்தி மகான் கடைப்பிடித்தார். மற்றயோருக்கு ஊறு விழைவிக்காத அஹிம்சைப் போராட்டம் என்ற பாதையை மட்டும் அவர் தீர;மானித்தார். பாதையில் அவர் காட்டிய உறுதியை முடிவில் அவர்காட்டவில்லை. முடிவு அவரது விருப்புக்கு எதிராக அமைந்தாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டார்.
அதனால்தான் காந்தி வரலாற்றில் போற்றப்படுபவராகவும். ட்ரூமன் களங்கப்பட்டவராகவும் இருக்கிறார்கள்.
உலகில் மக்கியாவல்லிகள் மலிந்து போய்க் கிடக்கிறார்கள். காந்திகள் அருகிப் போய் விட்டார்கள். அதனால்தான் இந்த வரம்பெற்ற அசுரர்களை அழிக்க இயற்கை புறப்பட்டிருக்கிறது.
7000 மைல்களுக்கு அப்பாலிருந்து விசாரணைகளேதுமின்றி, நாள் தேதி குறிக்காது அப்பாவி மக்களைக் கொல்வது நியாயப்படுத்தப்படுமானால் கால, தூர நியமங்களைத் தாண்டிய இயற்கைக் கடவுளின் தண்டனைகளை ஏன் நியாயப்படுத்த முடியாது?
உலக வல்லாதிக்கம் யார் கையில் என்பதற்கான போட்டியில் இயற்கையின் முடிவு தீர்மானித்த பாதைகள்தான் இன்று நாம் காணும் அனர்த்தங்கள்.
ஹரோல்ட் காம்பிங் சொன்னது போல - உலகின் சூக்கும சரீரம் அழிவதற்கான ஆதாரங்கள் யப்பானில் தெரியவாரம்பித்துள்ளன. அமெரிக்கர்கள் தமது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றுவதோடு காம்பிங் சொன்ன ‘தீர்ப்பு நாள்’ நிதர்சனமாகலாம்.
எல்லா நிகழ்வுகளும் தேவை கருதியே நடைபெறுகின்றன. இக்கடடுரையின் இறுதி வசனம்வரை நீங்கள் வாசிப்பதற்கும் அந்த நண்பரின் சந்திப்பே காரணம்.
வியாழன், 16 ஜூன், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் ப...
-
இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை ...
-
திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ' கட்டாயம் பார்க்கவும்' குறிப்போடு வந்த இப் பதிவைத் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக