பாஸ்கரன் கனவு
சிறுகதை
அசை சிவதாசன்
Disclaimers:
- இக் கதையில் வரும் மாந்தர்கள் எவரும் (வேண்டுமென்றே) புண்படுத்தப்படவில்லை
- எழுதுவது வாசிப்பது குடும்ப உறவுகளைப் பாதிக்கும்
ஒருநாள் சாவகாசமாக நடந்த வார இறுதிச் சந்திப்பின்போது இலக்கிய நண்பர் பத்தர் அவனது மண்டையைக் கழுவிவிட்டார். "தோழர் பாஸ்கரன்! உங்களைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறன். நானும் பாரிசில் கொஞ்சநாள் குப்பை கொட்டினனான். நீங்க கனக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறீங்க. ஏன் அவற்றைத் தொகுத்து புத்தகமாக விடக்கூடாது? உங்களட்டைத் திறமை இருக்கு."
அன்றிலிருந்து வாரத்தில் மூன்று முறையாவது இருவரும் பியர்களோடு சந்தித்துக் கொள்வார்கள். தோழர் பாஸ்கரனும் தேடித் தேடி ஒருவாறு கட்டுரைகளைச் சேர்ந்த்து பத்தரின் உதவியோடு புத்தகமாக்கிவிட்டார். சென்னையில் பிரசுரமாகி அடுத்த கோடையில் ரொறோண்டோவில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன.
பத்தரின் அரிய முயற்சியால் தோழர் பாஸ்கரனது நூலை வெளியிட வன்னி மாறன் சம்மதித்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர் ஆரம்பித்து ஒரு இதழுடன் நின்றுபோன 'வன்னி' பத்திரிகையையின் ஆதரவில் நூலை வெளியிடுவதாக அறிக்கையும் வெளியிடப்பட்டது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு சனிக்கிழமைக்கு ஸ்காபரீ சிவிக் செண்டரை புக் பண்ணினான் தோழர் பாஸ்கரன். ஒரு பெண்கள் அமைப்பு குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு நாளை டீல் போட்டு எடுத்துக் கொடுத்திருந்தார் பத்தர். இருநூறு புத்தகங்கள் விமானத்தில் வரவழைக்கப்பட்டு பத்தரின் பேஸ்மெண்டில் தூங்கிக்கொண்டிருந்தன.
விழாவுக்குத் தலைமை தாங்குவதற்கு பத்தர் உடன்பட்டார். நூலை ஆய்வுரை செய்வதற்காக முனைவர்களைத் தேடி பத்தரும் பாஸ்கரனும் ஆலாய்ப் பறந்தார்கள். முனைவர் சிகாமணி பேச ஒத்துக்கொண்டாலும் அவரில் ஒரு பிரச்சினை இருந்தது என்பதை பத்தர் முதலிலேயே எச்சரித்திருந்தார். "முனைவர் சிகாமணி நல்லாய்ப் பேசுவார் ஆனால் மனிசன் வாறனெண்டுபோட்டு கடைசி நிமிசத்தில காலை வாரிவிட்டிடும்" என்றார் பத்தர். "வேற ஒருவரும் இல்லை. நமக்கென்ன, அவரின்ர பேரை அறிக்கையில போடுவம் இன்னும் இரண்டுபேரைப் பிடிப்பம்" தோழர் பாஸ்கரன் சமாதானம் கூறினான். "முனைவர் இல்லாட்டால் என்ன, முனைவருக்கு முனையும் செங்கோடனைக் கேட்டால் என்ன?" தோழர் பாஸ்கரன் ஐடியா தந்தான். "ஐயோ, அந்தாள் பேச வெளிக்கிட்டா நிப்பாட்ட ஏலாது. பிறகு மற்றவங்கள் தலைவரெண்டு என்னைத் திண்டிருவாங்கள். அப்பிடியெண்டா நீ வேற தலைவரைப் பார்" பத்தருக்குக் கடுப்பாகிவிட்டது. முடிவில் முனைவி தாமிரபரணியை ஒப்பந்தம் செய்தார்கள். அன்று 'மீளும் தமிழ்' புத்தகக் கண்காட்சியும் இருந்ததால் செல்வத்தாரும் பேச ஒத்துக்கொண்டார்.
கோடை ஆகஸ்ட் மூன்றாவது சனியன்று தோழர் பாஸ்கரனின் "கனவிடை வாழ்தல்" நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதெனத் தெரிவிக்கும் விளம்பரங்கள் இடியப்பக் கடைக் குந்துகளில் குந்திக்கொண்டிருந்தன.
தோழர் பாஸ்கரனுடனான ஒன்றிரண்டு ரேடியோ இண்டர்வியூக்களையும் பத்தர் ஒழுங்கு செய்திருந்தார். தமிழ்த் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், ஒரு நடனம் என புதிதாக ஆரம்பிக்கும் ஆசிரியைகளின் மாணவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. விளக்கு கொழுத்துவதற்கு தலா பத்து திரிகள் மூலம் இரண்டு விளக்குகளுக்கும் சேர்த்து இருபது பேரை ஒழுங்கு செய்தார் பத்தர். அவர்களது குடும்பங்கள் வந்தாலே மண்டபம் நிரம்பிவிடும் என்பது பத்தரின் கணிப்பு. சொந்தக்காரர், முன்னாள் தோழர்கள், வீடு விற்பனை முகவர்கள், அரசியல் அபிலாட்சை கொண்டவர்கள் எனப் பலரின் தொலைபேசி இலக்கங்களைத் தேடி எடுத்து தனிப்பட்ட ரீதியில் அழைப்புகளை விடுத்திருந்தான் தோழர் பாஸ்கரன்.
வெயில் கொழுத்தி எறிந்த ஆகஸ்ட் மூன்றாம் சனி மணி சரியாக இரண்டுக்கு கூட்டம் ஆரம்பமாவதாக இருந்தது. இரண்டரைக்கு செல்வத்தாரின் புத்தகப் பெட்டிகள் வந்திறங்கின. மண்டபத்திற்குள் தோழர் பாஸ்கரனின் 'கனவிடை வாழ்தல்' நூல் மேசையில் அடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் தேசிய உடைகளில் பத்தரும் தோழர் பாஸ்கரனும் உட்கார்ந்திருந்தார்கள். "எங்கட சனம் இப்பிடித்தான்..." என பத்தர் இழுக்கும்போது முதலாவது கமரா ஊடகவியலாளர் தோளில் சுமைகளோடு வந்து இரண்டு கிளிக்குகளைச் செய்துவிட்டு அமர்ந்தார். சுமார் மூன்று மணிக்கு மாணவிகளும் குடும்பங்களும் வந்திறங்கினர். "பிந்திப் போச்சே?" என்றபடி முனைவி தாமிரபரணியும் வந்தமர்ந்தார். முனைவர் சிகாமணியின் அசுமாத்தமே இல்லை. "காய் வெட்டிட்டான் போல" பத்தர் தோழர் பாஸ்கரனின் காதுக்குள் கூறினார். "வந்த சனத்தில அரைவாசி புத்தகக் கடைக்குள்ள வேற போயிட்டுது" தோழர் பாஸ்கரன் தலையைச் சொறிந்தான்.
சுமார் மூன்று மணிக்கு முனைவர் சிகாமணியின் வரவு இல்லாமலேயே விழா ஆரம்பித்தது. தலைமை தாங்கிய பத்தர் வாசலில் ஒரு கண்ணும் கையிலிருந்த பேப்பரில் ஒரு கண்ணுமாக வேண்டுமென்றே தனது நீண்ட உரையை மேலும் நீட்டி முழங்கினார். முனைவி தாமிரபரணியைப் பற்றி மிக நீண்ட அறிமுக உரையோடு வரவேற்பு உரையையும் ஆற்றி அவரையும் அவரை அழைத்துவந்த கணவரையும் திருப்திப்படுத்தினார். மங்கள விளக்கேற்றல், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, அக வணக்கம் இத்தியாதிகள் மிகவும் சாவகாசமாக நடைபெற்றன. ஒருவாறு நான்கு மணி மட்டும் இழுத்ததைப் பற்றிப் பத்தரும் பாஸ்கரனும் கழுத்தொருமித்துப் பேசிக்கொண்டார்கள். அடுத்து முனைவி தாமிரபரணி. புத்தகம் தனது கையில் நேற்றுத்தான் கிடைத்ததாகக் கூறி மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைபற்றி முழங்கித் தள்ளினார். சங்க இலக்கியம் பற்றி அவர் பரீட்சைக்குத் தயாராக்கிய பாடம் கைகொடுத்து உதவியது. செல்வத்தார் தோழர் பாஸ்கரனைப் பற்றிக் கேள்விப்பட்டதைக் கேள்விப்படாத வகையில் ஒப்புவித்தார். அதைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது. தோழர் பாஸ்கரனின் தூரத்து உறவினரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான 'அதிபர் சாம்பசிவம்' எதுவுமே பேசாது தட்டத்தைத் தூக்கினார். தயாராக வைத்திருந்த 20 பெயர்களை தலைவர் அழைத்தார். அதில் 18 பேர் வந்திருக்கவில்லை. வந்திருந்தவர்களின் முகங்களைப் பார்த்து பாஸ்கரன் கூற அவர்களின் பெயர்கள் திடீரெனப் பட்டியலில் இணைந்தன. மேலும் ஐந்து பேர் முன்வந்து என்வலப்புகள் இல்லாமல் வெட்கப்பட்டு ஐந்து, பத்து டொலர்களை மடித்து தட்டத்தில் சொருகிவிட்டுப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். மேசையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் மேலும் குட்டிகளைப் போட்டுவிட்டதாக தோழர் பாஸ்கரன் பிரமை கொண்டான்.
செல்வத்தார் கடையை மூடிக் காசை என்ணிக்கொண்டிருந்தார். விழா இனிதே முடிந்தது. மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. உடைக்கப்படாத புத்தகப் பெட்டிகள் நான்கும் மேசையில் குட்டி போட்ட புத்தகங்களும் தோழர் பாஸ்கரனைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. அப்போது தோழர் பாஸ்கரனுக்குப் பக்கத்தில் ஒருவர் கையில் பிளாஸ்டிக் பையோடு வந்து நின்றார். தனது புத்தகமொன்றை வாங்குவதற்கு அந்த ஐயா வந்திருப்பதாக தோழர் பாஸ்கரன் நினைத்து தனது நூலொன்றின் பிரதியை எடுத்து அவரிடம் நீட்டினான். "இல்லைத் தம்பி நான் ஏற்கெனவே வாங்கிப்போட்டன். இது நான் வெளியிட்ட புத்தகம் ஒண்டு வாங்குவீங்களோ" என அவர் தனது பையிலிருந்து ஒரு பிரதியை எடுத்து நீட்டினார். முப்பத்தொராவது நாள் நினைவுமலரை ஒத்திருந்த அப்புத்தகம் அவரது முகத்தைப் போலவே வாடி இருந்தது. "எவ்வளவு" தோழர் பாஸ்கரன் கேட்டான். "இருபது டொலர்". தனது பொக்கெட்டிலிருந்து இருபது டொலரைக் கொடுத்துவிட்டு தோழர் பாஸ்கரன் புத்தகத்தை வாங்கினான். "உங்கட புத்தகம் அருமையான புத்தகம்" எனக் கூறிக்கொண்டு ஐயா நழுவினார். பத்தரின் முகம் கோபத்தால் சிவந்தது.
அன்று மாலை பத்தரின் பேஸ்மெண்டில் பத்தரும், பாஸ்கரனும் உதவி செய்த இரண்டொரு பத்தரின் நண்பர்களுமாக பியர்களின் துணையுடன் விழா பற்றிய ஆய்வொன்றை நிகழ்த்தினார்கள். தோழர் பாஸ்கரன் கண்ணீர் விட்டு அழுததை அன்றுதான் பத்தர் முதலில் கண்டார். "இண்டையில இருந்து நான் ஒரு சபதம் எடுக்கப் போறன். அது ஒரு பழிவாங்கல் சபதம். என்னை ஏமாத்தின இந்த சமூகத்தை இனி நான் ஏமாத்தப் போறன். பொறுத்திருந்து பாருங்க" என்றான் பாஸ்கரன்.
****
தோழர் பாஸ்கரனின் கதை சுவாரசியமானது. இலங்கையின் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூர் அவனுடையது. க.பொ.த. உயர்தரம் வரை அவனை அப்பாவின் தோட்டத்து துலாவில் இல்லாவிட்டால் சனசமூக நிலையத்தில் மட்டுமே பார்க்க முடியும். வாசிகசாலை, தம்பரின் பிளேன்ரீ, தமிழீழ விடுதலை என்ற சுற்றுக்குள் முடங்கியிருந்தது அவனது பள்ளிப் பருவம். 'அப்பருக்காகப் படிச்சதால்' ஒருவாறு தட்டுத் தடுமாறிப் பல்கழகத்துக்குப் போகவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டான். பி.ஏ. பட்டத்துடன் வெளியே வரும்போது அவனது வாய் புஷ்கின், புக்காரின், தஸ்தயேவ்ஸ்கி என்று புலம்பத் தொடங்கியிருந்தது. வாசிகசாலையை எட்டிப்பார்த்தாலும் தனது நிலைக்குப் படித்தவர்களை விட வேறெவருடனும் இப்போது அவன் பேசுவதில்லை. பல்கலைக்கழகம் முடித்து வந்ததிலிருந்து துலா மிதிப்பது தம்பியிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது. அம்மா போடும் முதலாவது பிளேன் ரீ இப்போது அப்பரைத் தாண்டி அவனுக்கே கிடைக்கும். அப்பா இப்போது அவனிடம் எதையுமே கேட்பதில்லை. தானாகச் செய்தாலுண்டு. பகல் முழுவதும் உறங்கிவிட்டு மாலை புறப்பட்டானாகில் அதிகாலையில் தான் திரும்புவான். பீ.ஏ. பட்டம் அவனைச் சுற்றி அப்படியொரு சுவரை எழுப்பியிருந்தது. அதையும்விடவும் அவனது குடும்ப சந்ததிக்குள் முதலாவதாகப் பல்கலைக்கழகம் போனவன் அவன். அந்தக் கர்வம் குடும்பம் முழுவதிலுமே படர்ந்திருந்தது. அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தாலும் எதுவுமே பேசமாட்டார். ஒருநாள் அவன் மாயமாகிவிட்டான். ஒரு வாரம் கழித்து வந்த கடிதம் அவனைத் தமிழ்நாட்டில் இருப்பதாகக் காட்டியது. அம்மாவும் அப்பாவும் தலையிலடித்துக் குளறினர். இதுக்குத்தானா அவனைப் படிப்பிச்சனான் என அப்பா வீச்சுடன் குரலெழுப்பினார்.
ஆறேழு வருடங்கள் கழிந்திருக்கும். தோழர் பாசிர் என்ற நமது பாஸ்கரன் பாலஸ்தீனத்தில் பயிற்சியின்போது காயப்பட்டுத் திரும்பியிருந்தான். மத்திய குழுவில் இடம்பெற்றதுடன் தலைவருக்கு மிக நெருக்கமானவனும் ஆனான். உலக விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் அவன் மண்டைக்குள் இருந்தன. அமைப்பிற்காக வெளிவரும் வாராந்தரிக்கு அவனே ஆசிரியர். பக்கம் பக்கமாக எழுதித்தள்ளினான். இரண்டு தொகுப்புக்களும் வெளிவந்து புலம்பெயர் நாடுகளில் விற்றுத் தள்ளியது. அப்புத்தகங்களை வாங்க மறுத்த தோழர்கள் துரோகிகள் என்னுமளவுக்கு நிலமை இருந்தது.
அடுத்த இரண்டு வருடங்கள் சீராக இருக்கவில்லை. அமைப்புக்குள் புடுங்குப்பாடு தொடங்கியிருந்தது. பல தோழர்கள் விசனப்பட்டார்கள். பலர் காணாமல் போனார்கள். அவர்கள் புதைக்கப்பட்டார்களா அல்லது புலம்பெயர்ந்து விட்டார்களா என உறுதியாகக் கூறமுடியாமலிருந்தது. ஆனாலும் புலம் பெயர்நாடுகளிலிருந்த அமைப்பின் கிளைகள் விமரிசையாக இயங்கிக்கொண்டிருந்தன. பணம் புரண்டுகொண்டுதான் இருந்தது. ஏனைய இயக்கங்கள் தடல் புடலாக இயங்கும்போது பிறநாடுகளில் தமது அமைப்பும் சரிசமனாக தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமென மத்திய குழுக்கூட்டத்தில் தோழர் பாசிர் அடிக்கடி முழங்குவான். இதற்காக அவன் வீச்சான கவிதைகள் கட்டுரைகளைத் தனது பெயரிலும் புனைபெயர்களிலும் எழுதித் தள்ளினான்.
ஒருநாள் நோர்வேயிலிருந்து கடிதம் ஒன்று அவனுக்கு வந்தது. தோழர் சங்கரன் எழுதியிருந்தான்.
தோழர் பாசிருக்கு,
இக்கடிதம் உனக்கு ஆச்சரியத்தைத் தரலாம். அமைப்பும் தலைமையும் முன்னர் போலில்லை என்பது உனக்குத் தெரியும். இருந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில் நீ தொடர்ந்தும் செயற்படுகிறாய் என்பதும் தெரியும். பல தோழர்கள் அதிருப்தியில் வெளியேறிவிட்டார்கள். சொல்வதைக் கேள். தமிழீழம் சாத்தியப்படாது. அதைச் சாத்தியமாக்குவதால் உலக நாடுகள் தமக்கு எதுவித பலனுமில்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். வெளிநாடுகளுக்கு வந்த களம் கண்ட தோழர்கள் பலர் தமது சொந்த வாழ்வை முன்னேற்றுவதில் மினக்கெடுகிறார்கள். களம் காணாத அனுதாபிகள் தமது சொந்த வாழ்வை அழித்துக்கொள்வதில் மினக்கெடுகிறார்கள். இதுதான் யதார்த்தம். எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு வெளிக்கிடு. ஊரில் உன்ர கொம்மா கொப்பர் படுகிற பாட்டை நினைச்சுப்பார். நீ வெளிக்கிடுகிறதெண்டா சொல்லு. நான் மிச்ச அலுவல்களைப் பார்க்கிறன்.
இப்படிக்கு
தோழர் சங்கரன்
பாஸ்கரனுக்குத் தலை சுற்றியது. சற்று முன்தான் அவ்வாரப் பத்திரிகைக்கான தலையங்கத்தை அவன் எழுதியிருந்தான். 'மலரப் போகும் தமிழீழத்தில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு' பற்றி அவன் எழுதிய தலையங்கத்தை அவனே பல தடவைகள் வாசித்துப் புளகாங்கிதமடைந்திருந்தான். பத்திரிகை வெளிவந்ததும் தலைவர் அதை வாசித்துவிட்டு எப்படிப் பாராட்டுவார் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்திருந்தான். இப்போது சங்கரன் கடிதம் இப்படி வந்திருக்கிறது. போதாததற்கு சங்கரன் தனது குட்டி நாயின் படத்தையும் அனுப்பியிருந்தான். பின்புலத்தில் அழகிய ஏரி ஒன்றிருந்தது.
****
இரண்டு மாதங்களின் பிறகு ஒரு நாள் தோழர் சங்கரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. "மச்சான், காயைக் கொண்ணந்திட்டன். காசு வேணும்". பாரிசிலிருந்து ரமேஷ் பேசினான். ஒரு காலத்தில் தோழர் ரமேஷ் என அழைக்கப்பட்டவன். அப்படி அழைப்பது இப்போது அவனுக்கு மட்டுமல்ல இதர தோழர்களுக்கும் பிடிக்காது. ஒரு காலத்தில் சந்திச் சண்டியனாகவும் பொம்பிளைப் பொறுக்கியாகவும் இருந்த ரமேஷை துணிந்தவன் என்பதற்காக இயக்கத்தில் சேர்த்ததே தோழர் சங்கரன் தான். தொல்லை தாங்காமல் இப்போது அவனை அமைப்பே பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டது. இப்போது பாரிஸ் லாச்சப்பலில் இயங்கும் ஒரு வெட்டுக்குழுவின் தலைவர் அவன்.
தோழர் சங்கரனுக்குப் புரிந்து விட்டது. தோழர் பாஸ்கரன் பாரிசுக்கு வந்துவிட்டான். "இந்தா அவனோட கதை". போன் கை மாறியது.
தோழர் பாஸ்கரன் பேசினான். அடிக்கடி தாங்க்ஸ் சொன்னான். காசை எப்படியும் விரைவில் கட்டித் தீர்ப்பேன் எனச் சபதம் செய்தான். ரமேஷ் இலேசான ஆளில்லை. பாரிஸ் பொலிஸ் துப்புத் துலக்க மறுக்கும் இமிகிரண்ட் மேர்டர்களில் பல ரமேஷின் பேரில் பதிவாகியவை. "அதெல்லாம் பார்க்கலாம். நீ ரமேஷ் சொல்லுறதைக் கேட்டுச் செய்"
அடுத்த நாளே பாஸ்கரன் பிரபல பாரிஸ் றெஸ்டோரண்ட் ஒன்றில் கோப்பை கழுவ ஆரம்பித்தான். பாஸ்கரனின் கரிய தோற்றமும் சுருண்ட முடிகளும் பத்திரோனுக்கே அச்சத்தை ஏற்படுத்தின. அவனுக்கு வரும் கட்டளைகள் முணுமுணுப்பாகவே வரும். ஓய்வு வேளைகளில் அகதி வழக்குகளுக்குக் 'கதை' எழுதிக்கொடுக்கக் கற்றுக்கொண்டான். கள அனுபவம் அவனுக்குக் கைகொடுத்தது. படிப்படியாக அவனது வாசலில் அகதிகளின் வரிசை நீண்டது. ரமேஷும் ஆட்களைக் கொண்டுவந்து தருவான்.
பாஸ்கரனுக்கு இப்போ பாரிஸ் அத்துபடி. புழுத்து வழிந்த இலக்கியக்காரர்களில் ஒருவனாகிவிட்டான் அவன். கடலுக்கடியில் தமிழீழம் மெதுவாக இலங்கையோடு ஒட்டி உரசிக் குமிழி விட்டுக்கொண்டிருந்தது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என உரத்துப்பேச ஆரம்பித்தான். அதைக் கையில் எடுக்காவிட்டால் புலம் பெயர்ந்த நாடுகளில் பிழைக்க முடியாது என்பது இப்போது அவனுக்குத் தெரியும். தோழர் சங்கரனோடு இப்போது அடிக்கடி பேசவேண்டியதில்லை. ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் பல முற்போக்கு பிரசுரங்களில் வெளிவரும் தோழர் பாஸ்கரனின் கட்டுரைகளைப் பார்த்து தோழர் சங்கரன் சிரித்துக் கொள்வான்.
திடீரென்று ஒருநாள் தோழர் சங்கரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் தோழர் பாஸ்கரன். "தோழர் நான் இப்போது கனடாவில், நிற்கிறேன். ரூட் ஒன்று ஓடியது. ரமேஷ் தான் தலையை மாத்தி ஒருமாதிரி அனுப்பிவிட்டான். பதிஞ்சு வெல்ஃபெயரும் வரத் தொடங்கீட்டுது. நீயும் வெளிக்கிடு. பாரிஸ் என்ன பாரிஸ். இதெல்லோ நாடு". அதன் பிறகு தோழர் பாஸ்கரன் தோழர் சங்கரனோடு பேசவேயில்லை.
****
தோழர் பாஸ்கரனது பிசினெஸ் கார்ட்டில் இப்போது " Baaaas Baaaasgaran, CEO, B&B Event Promoters என்றுதான் அவனது விலாசம் இருக்கிறது. ரொறோண்டோவில் என்ன நிகழ்வு நடைபெறுவதாக இருந்தாலும் அவனது நிறுவனத்தினாலேயே நடத்த முடியும் என்னுமளவுக்கு பிரபலமாகிவிட்டான் பாஸ் என்னும் பாஸ்கரன். அவன் ஒழுங்கு செய்யும் நூல் வெளியீடுகளில் பேசுவதற்கு முனைவர்கள் தவம் கிடக்கிறார்கள். அவனது விழாக்களில் நடனமாடுவதற்கு மாணவிகளைத் தர ஆசிரியைகள் துடியாய்த் துடிக்கிறார்கள். அவனது நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பறந்தோடி வருகிறார்கள். உலகின் பிரபல நகரங்களில் எல்லாம் விழா மண்டபங்களை அவனால் குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்ய முடியும். இப்போது அவனுடைய நிறுவனம் ஒரு One Stop Shopping என இயங்குகிறது. ருது சாந்தி விழாவென்றால் என்ன அந்தியேட்டி நிகழ்வென்றால் என்ன, ஐயர் முதல் nail artist வரை அவனிடம் ஆளிருக்கிறது. On-line இல் சகலதையும் 'புக்' பண்ணிக் கொள்ளலாம். அடுத்த மாதம் முனைவர் சாருமதி கலந்துகொள்ள இருக்கும் விழாவில் கனடிய பிரதமர் கலந்துகொள்வது அவனது சாதனையின் உச்சம். கனவிடை வாழ நினைத்த அவனுக்கு நனவிடை வாழ கனடியத் தமிழர் சமூகம் கற்றுக்கொடுத்து விட்டது. ரொறோண்டோ, மொன்றியால், பாரிஸ், லண்டன், ஒஸ்லோ, பேர்லின், லொஸ் ஏஞ்சலிஸ், நியூ யோர்க் ஆகிய நகரங்களிலும் அவனது நிறுவனத்துக்கு கிளைகள் உண்டு.
****
விமானம் முகில்களுடன் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது, முகில்களினிடையே புகுந்து வெளிவரும்போது விமானம் சற்று குலுக்கியது. இந்து சமுத்திரத்தில் தமிழீழம் அமிழ்ந்துகொண்டு இன்னும் குமிழிகளை மேலே தள்ளிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவன் சிரித்தான். "எத்தினை பேரை ஏமாத்திப்போட்டம்" வாய் அவனையறியாமல் முணுமுணுத்தது.. பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்யும் தோழர் பாஸ்கரனுக்கு கிடைக்கும் கனிவான பராமரிப்புடன் பார்க்கும்போது இந்தக் குலுக்கல்கள் ஒன்றும் அவனை எதுவும் செய்துவிடாது. அவனது மனம் மீண்டும் சென்னையில் தான் சந்திக்க இருக்கும் 'சுப்பர் ஸ்டார்' முனைவர் சாருமதியில் போய் குத்தி நின்றது. அவரைக் கனடாவுக்குக் கொண்டுவந்து ஒரு நிகழ்ச்சி வெற்றிகரமாக செய்ய வேண்டுமென்பதே தோழர் பாசிரது கனவு.
****