ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

உன்மத்தம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உன்மத்தம்

இச் சொல்லுக்குப் பொருள் தெரியாமலேயே வாழ்வில் மூன்றாம் கூற்றுக்குள் வந்தாகிவிட்டது. இருள் விலகுகிறதா அல்லது ஒளி தோன்றுகிறதா என்று எதையும் அறுதியாகக் கூற முடியாத நிலை. 

இக் கனதியான சொல்லுக்கு ஆக எளிய தமிழ் 'விசர்' என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்பரந்துபட்ட தமிழ்க் கடலில் அமிழ்ந்திருக்கும் சொற்களைத் தேடி அவற்றின் அர்த்தங்களை அறிவதற்கு விரைவில் யாராவது செயற்கை விவேகத்தை (AI ) துணைக்கு அழைக்கமாட்டார்களா என ஆதங்கமாகவிருக்கிறது.

மனிதரின் படைப்பாற்றலைக் கிண்டிவிடும் விடயங்களில் ஒன்று வடிவங்கள் (patterns ) என்று நான் நினைப்பதுண்டு. வடிவங்கள் மீதான விசாரணையைக் கொண்டு விஞ்ஞானம் ஆரம்பித்திருக்குமோ என நான் சந்தேகம் கொள்வதுண்டு., இது நான் இறுகப்பிடித்திருக்கும் ஒரு நம்பிக்கை. 

ஊமத்தை என்றொரு தாவரம் நம்மூரில் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் சி.பி.சி. வானொலியில் கேட்ட ஒரு நிகழ்ச்சியில், வாழ்வின் இறுதிக் கணங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இரண்டு நோயாளிகளுக்கு ஒருவகையான போதை வஸ்துவை (psychedelic) மருந்தொன்றைப் பரிசோதனைக்காகப் பாவித்தமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். காளான்கள் (magic mushrooms) மற்றும் தென்னமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் ஒரு மரம் (பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை) ஆகியன மிக நீண்ட காலமாகப் பல பழங்குடியினரால் போதைக்காகப் பாவிக்கப்படும் மூலிகைகள் என அந்நிகழ்ச்சியில் கூறினார்கள். இதனால் விசர் கொண்ட நான் அம்மூலிகைகள் பற்றி மேலும் கூறுமாறு கூகிளாண்டவரிடம் மன்றாடியபோது அவர் எனது விசரை மேலும் அதிகமாக்கினார். 

காளான்களைப் போதைக்காகப் பயன்படுத்துவது எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது (அனுபவத்தால் அல்ல). ஆனால் அந்த தென்னமெரிக்க தாவரம்? பல அடிகள் உயரத்துக்கு வளரும் இத் தாவரத்தில் தொங்கிய வெள்ளை நிறப் பூக்கள் நம்ம ஊர் (HMV) 'லவுட் ஸ்பீக்கர்கள்' மாதிரித் தெரிந்தன. Yes! அதுவே தான்...ஊமத்தை!!. நம்மூர் ஊமத்தை அரிக்கன் சாதி, நிலத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வளரவே மறுப்பவை - அது வேறு விடயம்.

தென்னமெரிக்காவிலும் நம்மைப்போல் 'இளைஞர்கள்' பெண்களை மயக்குவதற்காக இந்த 'ஊமத்தையைப்' பாவிக்கிறார்கள் எனவும், சில திருடர்கள் மதுபான நிலையங்களில் இம் மூலிகையால் செய்யப்பட்ட மருந்துகளைப் பானங்களில் கலந்து கொடுத்து போதை ஏறியவர்களைக் கொண்டு அவர்களது வங்கி மெசின்களில் (ATM) வழித்துத் துடைத்துக்கொண்டு போய்விடுவதாகவும் அந்நிகழ்ச்சியில் கூறினார்கள். ஆஹா...அப்போதுதான் எனக்கும் ஐடியா வந்தது.

எனது தந்தையார் ஊரில் ஒரு ஆயுர்வேத வைத்தியர். யாரோ ஒருவருக்கு 'விசரை' க் குணப்படுத்தியமைக்காக அவருக்கு ஒரு புதிய 'றலி' சைக்கிள் பரிசாகக் கொடுத்திருந்தமையை - சைக்கிளுக்கு எண்ணை பூசும்போது அம்மா இரகசியமாகச் சொல்லியிருந்தார். அப்பாவின் வைத்தியத்தில் இந்த ஊமத்தை ஒரு பெரும்பங்கு வகித்தது எனக்கு நன்றாகத் தெரியும். பிடுங்கிக்கொண்டு வருபவன் என்பதனால். 

இதைபற்றி கூகிளாண்டவர் சொல்வது இன்னும் விசரைக் கூட்டியதற்குக் காரணம், தமிழ்நாட்டிலிருந்து ஊமத்தம் விதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதும் அதைச் சில கிராமங்கள் பணப்பயிராக்கியுள்ளதும் பற்றி. ஊமத்தம் விதைகளைத் தெருவில் உலர்த்துமளவுக்கு உற்பத்தி பெருந்தொகையாக அங்கு மேற்கொள்ளப்படுகிறது.

அந்த நான் சொன்ன 'ஆஹா' moment இப்போதுதான் உறைத்தது. "ஊமத்தை", உன்மத்தத்தின் மருவிய சொல்லாக இருக்க முடியுமா?  நம்ம நாயன்மார்கள் கட்வுள் மேல் கொண்ட 'விசரினால்'  பாடிய பாடல்களில் 'உன்மத்தம்' என்ற சொல் தீராத காதல் என்ற பொருளில் பாவிக்கப்பட்டிருப்பதால் அச்சொல் மருவியிருக்கச் சாத்தியமில்லை. 

நான் மேலே சொன்ன தென்னமெரிக்க போதை வஸ்துவை மூலமாகக் கொண்டு தயரிக்கப்பட்ட ஒரு psychedelic drug  தான் Psilocybin எனப்படும் மருந்து. இம் மருந்தையே சிகிச்சைக்காக அந்த இரண்டு நோயாளிகளிலும் பரிசோதித்தார்கள். 

இரண்டு வெவ்வேறு வியாதிகளினால் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய anxiety எனப்படும் தீராத மன உளைச்சலைத் தளர்த்துவதற்காகவே அவர்களில் அம்மருந்து பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைகளின் பின்னர் அந்த இருவரது வாக்கு மூலமும், கிட்டத்தட்ட ஒன்றுதான். அதாவது இரண்டுபேருமே அனுபவித்த ஒரு விடயம் ஒரு வகையான பரவசம் (bliss); ஆணவ நீக்கம் (ego  dissolution ). சகலதும் ஒன்றே என்ற உணர்வு. பரம்பொருளுடன் இரண்டறக் கலந்துவிடும் உணர்வு. 

இந் நோயாளிகளில் ஒருவர் மருத்துவர். அவரது அனுபவங்கள் மிகவும் அசாதாராணமானவை. தான் அண்ட வெளியில் பிரகாசமான ஒரு பாதையூடு பயணித்ததையும் கிரகத்துக்குக் கிரகம் தான் தாவிச் சென்றமையையும், இருளான ஒரு நரகத்துக்குள் தான் அமிழ்ந்துகொண்டு போனபோது தான் காப்பாற்றுப்பட்டமை பற்றியும் விபரித்திருந்தார். 

மொத்தத்தில் இச் சிகிச்சை அவர்கள் இருவரது anxiety என்ற மன உளைச்சலிலிருந்தும் தம்மை விடுவித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதாவது உலகின் மீதான பற்றை அவர்கள் துறந்துவிட்டிருந்தார்கள். எல்லாம் ஒன்றே என்று அவர்கள் உணரத் தலைப்பட்டிருந்தார்கள்.

***

சரி உங்களை மேலும் விசராக்க இன்னுமொரு விடயம்.

இது சமீபத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி. இது பற்றிய தகவல்கள் பெப்ரவரி 15 இல் வெளியான Neuro Image என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. 

சுருக்கமாக, அதில் கூறப்பட்டது இதுதான்.

எங்கள் மூளையில் 86 பில்லியன் நரம்புக் கலங்கள் (neurons) உள்ளன. பெரிய மூளை உள்ளவர்களுக்கு அதிக நரம்புக்கலங்கள் இருக்கலாம். எனக்கு அவ்வளவுதான். இந்த நரம்புக் கலங்கள் ஒன்றோடொன்று தகவற் பரிமாற்றங்களைச் செய்துகொண்டாலும் அவற்றின் உட் கட்டுமானம் நரம்புப் பெருந்தெருக்களால் ஆனவை. தூரங்களிலுள்ள பல பிரதேசங்களுடன் 'கிராமப்புற' நரம்பு மண்டலங்கள் தொடர்புகொள்வதில்லை. இவ் வலையமைப்பைப் பெருந்தெருக்கள் என வைத்துக்கொண்டால் அவற்றில் போகும் போக்குவரத்துத் தான் எமது மூளையின் தொழிற்பாடு என தற்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியின்போது 20 பேரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். இவர்கள் அனைவரும் முன்னர் LSD போன்ற போதைவஸ்துக்களைப் பாவித்த அனுபவசாலிகள். இரண்டு கட்டமாக இவர்களது மூளைகளை FMRI என்ற ஸ்கான் மூலம் ஆராய்ந்தார்கள். முதலாம் கட்டத்தில் அவர்களுக்கு உப்புத் தண்ணீரை அருந்தக் கொடுத்துவிட்டு ஸ்கான் செய்தார்கள். பின்னர் 75 மைக்கிரோ  கிராம் எல்.எஸ்.டி. யை உப்புத் தண்ணீரில் கலந்து கொடுத்து ஸ்கான் செய்தார்கள்.

முடிவுகள் ஆராயப்பட்டன.

எல்.எஸ்.டி. போதை வஸ்துவை எடுத்தபோது அவர்களது நரம்புப் பெர்ந்தெருக்களில் எவ்வித மாற்றத்தையும் அது ஏற்படுத்தவில்லை. முன்னர் கவனிக்கப்படாத 'பட்டி தொட்டிகளுடன்' எல்லாம் தகவல் தொடர்புகளை நரம்பு மண்டலங்கள் ஏற்படுத்தியிருந்தன. அதற்காக அவை பெருந்தெருக்களைப் பாவிக்காமல் சிறிய வீதிகளையும், குறுக்குப் பாதைகளையும் பாவித்திருந்தன. 

இவர்களும், மேலே சொன்ன இரண்டு நோயாளிகள் பெற்ற அனுபவத்தைப் போலப் பரவசத்தையும், 'எல்லாம் ஒன்றே' என்ற மனநிலையையும் அடைந்திருந்தார்கள். இதற்கு அந்த விஞ்ஞானிகள் கொடுத்த பெயர் 'ego dissolution'. 

*****

ஆணவம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒருவர் கவிஞரிடம் கேட்டாராம். கண்ணதாசன் அதற்குக் கூறிய பதில்:

நம்மிடம் எதுவுமில்லை என்று நினைப்பது ஞானம்

நம்மைத் தவிர எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்

ஞானம் பணிந்து பணிந்து வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெறுகிறது

ஆணவம் நிமிர்ந்து நிமிர்ந்து அடி வாங்கிக் கொள்கிறது


ஆணவத்தை அகற்றி சகலதும் ஒன்றே என்ற மனநிலைக்கு வரும்போது குறுக்கே நிற்கும் பாச்ம் விலகுவதால் பசுவால் பதியைப் பார்க்க முடிகிறது என்கிறது சைவ சித்தாந்தம். 

இந்த உன்மத்த (பரவச) நிலையை அடைவதற்கு நமது நாயன்மார்கள் போதை வஸ்து ஏதும் பாவித்திருந்தார்களா. சித்தர்கள் கஞ்சா புகைப்பது வழக்கமென்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாயன்மார்கள்?

போதை வஸ்து பாவிக்காமலேயே (அம்மாவாணை) எனக்கு இந்த யோசனை வருகிறது. 

தியானம் மூலமோ அல்லது மீண்டும் மீண்டும் இடையாறாது மேற்கொள்ளும் பயிற்சி மூலமோ (மூளை இதற்கு வளைந்து கொடுக்குமென்பது neuro plasticity மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்று) மூளையில் வழக்கமற்ற நரம்பு மண்டலத் தொடுப்புக்களை ஒருவரால் மேற்கொள்ள முடியுமா? எல்.எஸ்.டி. யின் விளைவுகளை ஒருவரால் சுயமாக simulation செய்ய முடியுமா. கடவுளை நினைந்து நினைந்து உருகுவதால் இந்த எல்.எஸ்.டி. விளைவுகள் மூளையில் ஏற்பட்டு அவர்களுக்கு 'கடவுள்' தோற்றமளித்திருக்க முடியுமா? அப்படியானால் எல்லோருக்கும் காட்சியளித்த இறைவன் எப்படி ஒரே  தோற்றத்தைக் கொண்டிருக்க முடியும்?

எல்.எஸ்.டி. பாவிப்பவர்களும், psilocybin  பாவித்தவர்களும் ஏறத்தாள ஒரே அனுபவத்தை எப்படிப் பெற்றிருக்க முடியும்? அவர்களில் பெரும்பாலானோர் பால்வழியால் பயணம் செய்யும் அனுபவங்கள் எல்லாவற்றிலும் ஒற்றுமை ஏன் இருக்க வேண்டும்?

அப்படியானால், அவர்களில் சிலர் சென்று வந்த உலகங்கள் உண்மையில் இருக்கின்றனவா? அவற்றை அறிவதற்கான ஞானக் கண்களை இப் போதைவஸ்துகள் திறந்துவிடுகின்றனவா? 

சர் போதை வஸ்துக்களை விடுங்கள். உயிர் பிரிவதற்கு முன்னான அனுபவங்களும் (near  death  experience) இவற்றைத் தானே சொல்கின்றன?

எனக்கு உன்மத்தம் பிடித்திருக்கலாமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

பி.கு. இதை எழுதும்போது வஸ்து எதுவும் பாவிக்கவில்லை


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

காதலர் தினம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

காதலர் தினம் 


Coroனே ஸ்வரிக்கு  என் மீது காதல் 

மன்மதனிடம் இரவல் வாங்கிய 

Spike Protein ஈட்டியோடு துரத்துகிறாள் 

இதயம் பலவீனமானது; அவளுக்கும் தெரியும் 

காவல்கதவுகளை அவள் எப்போதும் தாக்கலாம் 

Pfizeரேசுவரிடமும்  Moderணே ஸ்வரரிடமும் 

நேர்த்தி வைத்திருக்கிறேன் 

அவர்களும் working at home

தவணை தந்திருக்கிறார்கள் 

அடுத்த தினத்துக்கு 

அவளோ? நானோ?


செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

தீண்டாமை


தீண்டாமை 


வளைந்து நெளிந்து 

முதுகைச் சொறிந்தால் 

ஒரு நூல் தள்ளி நிற்கிறது பரு 

நகங்களைத் தின்று  முடித்து 

எகத்தாளமாய்ச் சிரிக்கிறது வாய் 

மதிலைத் தொலைத்த 

மாடாகிப் போகிறது வாழ்வு 

தனது உயிரைக் காப்பாற்றுவதற்காய் 

விலத்திப் போகிறது கொரோணா 

என்னடா  வாழ்க்கை ?



செவ்வாய், 31 மார்ச், 2020

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

நிலவுக் கரடி மார்ச் 31, 2020

சிவதாசன்

அதிகாலை 3:22. தூக்கம் வரவில்லை. நேற்றுப் பகல் கூடிய நேரம் தூங்கியாகிவிட்டது. கொரோனா அம்மன் உலகம் பூராவும் அட்ட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறாள். சகலரும் வீட்டுக்குள் முடக்கம்.

சென்ற வாரம் மகள் வாங்கித் தந்த நாவல் ஒன்று கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது. கன்னி கழியாதது என்றால் தவறான சொற்பதமாகிவிடும். அட்டை புரட்டப்படாமல் அப்படியே இருந்தது. தலைப்பு What Lies Between Us. நயோமி முனவீரவின் நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

நயோமி முனவீர பற்றி எங்கோ வாசித்த ஞாபகம் இருந்தாலும், அவரது படைப்புக்கள் எதுவும் என் கைகளுக்குக் கிடைக்கவில்லை. மகள் சாலிகா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்து போனது எனக்கும், மனைவிக்கும் அதிர்ஷ்டம் தான். அவளின் புண்ணியத்தில் ஊருப்பட்ட ஆங்கில நாவல்களை வாசிக்கச் சந்தர்ப்பம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது.

நயோமி முனவீர இலங்கையில் பிறந்து நைஜீரியாவில் வளர்ந்து தற்போது கலிபோர்ணியாவில் வாழ்வதாக அட்டையில் குறிப்பொன்று இருந்தது. முற்சாய்வு எதுவுமில்லாது படைப்புக்களை அணுகுவது சுவையை அதிகரிக்கிறது என்பது எனது எண்ணம்.

புத்தகத்தின் முன்னுரையை மட்டும், இரண்டு பக்கங்கள் வாசித்து விட்டு மூடி விட்டேன். நீண்ட நாட்களாக எந்தப் படைப்புகளையும் எழுதாத – நேரமின்மை – பஞ்சி – வெறுப்பு -இதர பயனற்ற சோலி என்று பல காரணங்களால் அயர்ந்து போயிருந்த என்னை இதை எழுத வைத்திருக்கிறது இந்த இரண்டு பக்க முன்னுரை.

கொறோணா வைரஸ் உலகைத் தொற்றிய நாளிலிருந்து அந்த patient zero வைப் பிடித்து ‘ நாசமாய்ப் போவானே ஏண்டா அந்த வெளவாலையோ,அல்லது அந்த எறும்புண்ணியையோ தின்றாய்’ என்று நாலு திட்டுத் திட்டவேண்டும் போல இருந்தது. அவ்வப்போ வட்ஸப் இல் சீனர் உயிரோடு விலங்குகளைக் கடித்து விழுங்குவதையும், நாய்களைத் துடிக்கத் துடிக்க கொதி நீரில் அமுக்கிக் கொல்வதையும் பார்க்கும் போது உள் மனதில் கொரோணா அம்மனுக்கு வாழ்த்துச் சொல்வதுமுண்டு.

நயோமியின் கதைக்கும் சீனருக்கும் என்ன சம்பந்தம்?. இருக்கிறதோ இல்லையோ அவரது முகவுரை எனக்குத் தந்த கதை அதுதான்.

அந்த முகவுரை என்னை உலுப்பி விட்டது. ஒரு சிறிய உபகதையைக் கொண்டது அந்த முன்னுரை. ஒரு தாயின் வலியை இவ்வளவு உணர்வோடு சித்தரித்திருக்க வேறு யாராலும் முடியாது.

முகவுரையின் ஆரம்பம் இப்படியான build-up உடன் தொடங்குகிறது.

ஒரு குழந்தை தாயின் உதிரத்திலிருந்து ஊட்டத்தைப் பெறுகிறது. அது கிராமத்தின் பஞ்ச காலமாக இருப்பின், பயிர்கள் நலிந்துபோகையில், ஆறுகள் வெந்து போகையில், தாயொருவள் கிடைத்ததை எடுத்துத் தன்னை மறுத்துத் தன் குழந்தைக்கே அனைத்தையும் கொடுத்துவிடுகிறாள். தன் குழந்தைக்கு அச் சிறிய குறைபாடுகூட இருக்கக்கூடாது என்பதற்காக அவள் பசியிருந்து, தனிமையில் வெந்து கொள்கிறாள். சகல ஜீவராசிகளுக்கும் இதுதான் சட்டம். இதுதான் இயற்கையின் வழி. வேறுவிதமாக நிகழின் அது பானைக்குள்ளிருந்து வந்த பூதம்.

இமாலயத்திலிருந்து யப்பான் ஈறகாப் பரந்திருக்கும் பிரதேசத்தில் வாழ்கிறது நிலாக் கரடி (the moon bear). அடர்ந்திருக்கும் இருண்ட அதன் வயிற்றில் நிலாவாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெள்ளைத் தோல் அதற்கு அப்பெயரை ஈட்டியிருக்கிறது. இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் கரடி இனத்தின் மூலத் தாய் இது. தன் மண்ணே போதுமென வாழ்ந்துகொண்டிருக்கும் ஜந்து. கருவாலி விதை, தேன், கறையான், செரிப் பழம், காளான் என்று உணவுகளைப் புசித்துவிட்டு மரங்களில் ஏறி ஒய்யாரமாகப் பொழுதைக் கழிப்பது அதன் தினக் கடன். அதன் ஏகாந்த உலகம் அதற்குத் திருப்தி தரும் ஒன்று.

நிலாக் கரடி தனியே அதன் தொன்மையாலும், கம்பீரத்தாலும் விரும்பப்படும் ஒன்று மட்டுமல்ல, ஒரு அரிய பொக்கிஷத்தையும் தன்னிடம் வைத்திருப்பதாலும் அது மனிதரால் விரும்பப்படுமொன்று. சீன மருத்துவத்தில், உடற் சூடு போக்குதற்கும், கண், ஈரல் நோய்களுக்குச் சிகிச்சையாகவும் இந் நிலாக் கரடியின் பித்தம் பாவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் பித்தத்தின் விலை அரைக் கிலோ தங்கத்துக்கு ஈடானது.

இக் காரணங்களுக்காக வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான நிலாக் கரடிகள் உயிரோடு பிடிக்கப்பட்டு நிமிர்ந்து நிற்கவோ, திரும்பவோ முடியாத crush cages எனப்படும் கூடுகளில் அடைக்கப்பட்டு பல வருடங்களாக வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. அவ்வப்போது கடையின் வயிற்றில் ஓட்டை போடப்பட்டு பித்தப் பையிலிருந்து பித்தம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மனிதர்கள் இந்த அரும்பத நீரைக் குடித்து தம் வியாதிகளைப் போக்குகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் இப்படியான சீன பித்தப் பண்ணையில் ஒரு தாய்க் கரடி ஒர் அபூர்வமான, அதன் இயல்புக்குப் புறம்பான காரியத்தைச் செய்தது. அயலிலிருந்து இன்னுமொரு கரடிக்கூட்டில் இருந்து அதன் குழந்தைக் கரடி அலறும் சத்தம் கேட்டது. பொறுக்க முடியாத தாய்க் கரடி தன் இரும்புக்கூட்டையும் உடைத்துக்கொண்டு தன் குழந்தையை நோக்கி ஓடி வந்தது. அச்சத்தினால் வேலையாட்கள் ஓடிவிட்டார்கள். தய்க் கரடி அவர்களை எதுவுமே செய்யவில்லை. மாறாகத் அது தன் குழந்தை இருந்த கூட்டிற்குச் சென்று அதைக் கம்பிக்கருகே இழுத்துத் தன்னோடு அணைத்து குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டது. அதைத் தொடர்ந்து தாய்க் கரடி தனது தலையைச் சுவரில் மோதித் தற்கொலை செய்துவிட்டது.

ஏனிந்தக் கதையை நான் சொல்ல வேண்டும் என்று கேட்டு நயோமி கூறுகிறார் ” ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான பாசத்தை விதந்துரைக்க இக் கதையை விட வேறு வடிவங்கள் இருக்க முடியாது”.

உங்களுக்கும் புரிந்திருக்கும்.

எல்லோரது அம்மாக்களுக்கும் இப்படியான முடிவுகள் ஏற்படக் கூடாது. அது நடைபெறின் அதற்குக் காரணம் இக் கேவலம் கெட்ட மனிதனாகத்தான் இருக்க முடியும்.

கொறோனாவுக்கு இது நன்றாகவே புரிந்திருக்கிறது. Patient Zero வைத் தாக்கிய வைரைஸ் இத் தாய்க்கரடியின் மறு பிறப்பாக இருக்க முடியுமா?

இயற்கையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இனிமேல் தான் புத்தகத்தை வாசிக்கப் போகிறேன். அச்சமாக இருக்கிறது.

அசை – மார்ச் 31, 2020

செவ்வாய், 28 மே, 2019

விளம்பரம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


அலையாகிய கேசம்
பரந்த நெற்றி
வில் புருவம்
வேல் விழிகள்
கொவ்வைச் செவ்வாய்
எண்சாண் உயரம்
உடுக்கிடை
அகன்ற மார்பு
வயதிரு பத்தைந்து
இவளது அம்மாவுக்கு
மணமகன் தேவை

சனி, 15 செப்டம்பர், 2018

திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு


திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு 


சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ' கட்டாயம் பார்க்கவும்' குறிப்போடு வந்த இப் பதிவைத் தாண்டிப் போக முடியவில்லை.

அதில் ஒரு அறிவாளி பேசிக் கொண்டிருந்தார். நல்ல பேச்சு வன்மை மிக்கவர். விடயம் இதுவரை தமிழருக்குத் தெரியாத ஒன்று. பூடகமாக நகர்த்திச் சென்ற அவரது பேச்சு பிரசார வாடையுடன் இருந்தது.

சாரம் இதுதான்.

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார்.

இந்தப் பதிவுக்கு மறு பதிவிட்டிருந்த இன்னுமொரு முகநூல் நண்பர் "எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஜி.யு. போப்  என்பவர் தான்" என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே இது பற்றிய விசாரணையை மேற்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு நான் கூகிளாண்டவரிடம் இப் பெரும்பணியை ஒப்படைத்தேன்.

அவரது தீர்ப்பு இதுதான். வேறு ஆண்டவர்கள் வித்தியாசமான தீர்ப்புக்களையும் தரலாம். விரும்பினால் 'notwithstanding clause' ஐப் பாவித்து அப்பாலும் நகரலாம்.


  1. ஒரு சாமான்யவனின் ஒழுக்க, அற நெறிமுறைகள் பற்றி திருவள்ளுவர் எனப்படும் தத்துவ ஞானியால் கி.மு. 1-3ம் நூற்றாண்டில்  எழுதப்பட்டதாகக் கருதப்படுவது திருக்குறள்.
  2. எந்த மதங்களையும் முன்னிறுத்தாது எழுதப்பட்டது.
  3. உலகில் அதிக அளவு மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்களில் , பைபிள், குரான் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் உள்ளது. 
  4. 2014 ம் ஆண்டு வரையில் 82 உலக மொழிகளில் பதிக்கப்பட்ட திருக்குறள் ஆங்கில மொழியில் மட்டும் 57 விதமான பதிப்புக்களைப் பெற்றுள்ளது.
  5. முதன் முதலாக இந்த நூல் Constantius Joseph Beschi என்பவரால் 1730 இல் இலத்தின் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மொழி மாற்றம் முழுமையானதாகவிருக்கவில்லை. 'அறம்' , 'பொருள்' என்ற இரு அதிகாரங்களை மட்டுமே பெஸ்கி மொழி மாற்றியிருந்தார். 'இன்பம்' கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களுக்கு ஒவ்வாது எனக் கருதப்பட்டு அது மொழி மாற்றப்படவில்லை.
  6. 1767 இல் பெயர் தெரியாத ஒருவரால் திருக்குறள் பிரஞ்சு மொழியில் மாற்றம் செய்யப்படடாலும் அது பதிப்பிக்கப்படவில்லை.
  7. 1800 இல் August Friedrich Caemmerer என்ற டேனிஷ் மத போதகர் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்திருந்தார்.
  8. முதலாவது பிரஞ்சு மொழியிலான திருக்குறள் 1848 இல் Monsieur Ariel என்பவரால் செய்யப்பட்டது. அதுவும் மூன்று அதிகாரங்களையும் கொண்டதல்ல.
  9. 1865 இல் Karl Graul என்பவரால் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அவரது திடீர் மரணம் பணியை இடை நிறுத்தி விட்டது.
  10. முதலாவது ஆங்கில மொழி மாற்றம் Francis Whyte Ellis என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரால் மொழி பெயர்க்கப்பட்டது 120 குறள்கள் மட்டுமே. 
  11. 1840 - 1852 இடையில் W. H. Drew என்பவர் முதலிரண்டு அதிகாரங்களையும் ஆங்கில உரைநடையில் மொழிபெயர்த்தார். அத்தோடு பரிமேலழகரது தமிழ் உரையையும் ராமானுஜ கவிராயரது விரிவுரையையும் ட்ரு அத்தோடு இணைத்திருந்தார். இங்கும் 630 குறள்களை மட்டுமே ட்ருவினால் மொழிபெயர்க்க முடிந்தது. மீதி யாவற்றையும் John Lazarus எனப்படும் சுதேச மத போதகர் தான் மொழி மாற்றம் செய்தார்.
  12. திருக்குறளின் முதலாவது முழுமையான மொழி மாற்றத்தை 1886 இல் G. U. Pope என்பவரே செய்தார். இதன் பிறகு தான் திருக்குறள் உலகின் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதில் தகவல்  பிழைகள் ஏதுமிருந்தால் சுட்டிக் காட்டவும். ஆண்டவரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறேன். ;)

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

Crazy Rich Asians (Chinese) - Movie Review


இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு - ஒன்று அரசியல்.

இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு - சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு - தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு  ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து வெள்ளையரல்லாத நடிகர்களால் நடிக்கப்பட்ட படம். அந்த வகையில் இப் படம் அவர்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறது.

இப் படத்தைப் பற்றி சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன. அதை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இப் படம் ஆரம்பத்தில் Crazy Rich Chinese எனப் பெயரிடப்படவிருந்ததாகவும் பின்னர் சந்தைப்படுத்தல் / வியாபாரம் / அரசியல் காரணமாகப் பெயர் மாற்றப்பட்டதாகவும் ஒரு கொசுறு உண்டு.

படம் கெவின் குவான் என்ற சிங்கப்பூரிய- அமெரிக்கரால் எழுதப்பட்ட Crazy Rich Asians என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. நியூ யோர்க்கைச் சேர்ந்த ஒரு சீன வம்சாவழிப்  பெண் பேராசிரியர் ஒருவர் அவளது  காதலனின் நாடான செல்வந்த சிங்கப்பூருக்கு அவனின் உறவினனர்  ஒருவரின் கல்யாணக் கொண்டாட்டத்துக்குப்  போகிறாள். அங்கு சென்றபோது தான் அவள் தனது காதலன் அதி பெரும் செல்வந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதையும் அங்குள்ள சீன செல்வந்தர்கள் செல்வக் கொழுப்பில் வாழ்வதையும் அறிகிறாள். ஆனால் அவளோ ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து தந்தையார் கைவிடப்பட்டு தாயாரால் உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண பெண். அந்தஸ்த்துக்கும் காதலுக்குமிடையான போர். வில்லன், வில்லி, தோழன், தோழி, காமெடியன் ஆகிய அத்தனை தமிழ்த் திரைப்படப் பொருளடக்கங்களும் இங்குமுண்டு. ஒரு romantic comedy genre என்று சொல்லலாம். இறுதிக் கட்டத்தில் சோகம் பிச்சுக் கொண்டு வரும். முடிவைச் சொல்ல மாட்டேன்.

இப்படியான ஒரே கதையைப்  பல தமிழ்ப் படங்களில் பார்த்த feeling உங்களுக்கு வரும். ஆனால் அதுவல்ல இந்த விமர்சனத்தின் நோக்கம்.

படம்  இப்படியான மேற்கோளுடன் ஆரம்பிக்கிறது.

'China  is a sleeping giant. Let her sleep, for when she wakes she will move the world.' - Napoleon Bonaparte 

இந்தப்படம் உலகுக்கு, குறிப்பாக மேற்கு நாடுகளுக்கும் உலகளாவிய சீன வம்சாவழியினருக்கும் வெவ்வேறு செய்திகளைச் சொல்கின்றது. இதில் அரசியல் பின்னணி இருக்கிறது. இந்த நெப்போலியனின் மேற்கோள் ஒரு எச்சரிக்கை மணியோசை. 

இப் படத்தை Warner Brothers நிறுவனம் தயாரித்திருந்தது. Black Panther ரைத் தவிர  யூத இன அல்லது வெள்ளையின மக்களின் வாழ்வு கலாச்சாரங்களைக் கொண்டாடும் படங்களையே ஹொலிவூட் தயாரித்து வந்திருக்கிறது. முழுமையாக வெள்ளையரல்லாத பாத்திரங்களைக் கொண்டு ஹொலிவூட் படங்களைத் தயாரித்து மேற்கத்திய நாடுகளில் வணிக ரீதியாக வெற்றி பெறுவது கஷ்டம். இப் படத்தின் தயாரிப்பும் ஏகப்படட எதிர்ப்பின் மத்தியிலேயே நிறைவேறியிருக்கிறது. இதன் பின்னணியில் முழு சீன இனத்தின் உழைப்பும் ஒருமைப்பாடும் இருப்பது தெரிகிறது. நவீன சீனாவின் புதிய உலக ஒழுங்கின் பெரும் கட்டளைக் கோவையின் ஒரு sub routine தான் இது என்பது என் கணிப்பு.


இப் படம் மேற்குலகுக்குச் சொல்லும் செய்தி. உங்களைவிட நாங்கள் ஒரு காலத்தில் செழிப்பான கலாச்சாரத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழ்ந்தவர்கள். நாங்கள் இழந்த அந்த பொற்காலத்தை மீட்டுக் கொண்டுவிட்டோம். [இதற்குள் ஒரு உப கதை : ஒரு காலத்தில் பலமாக இருந்த சீனாவைப் பிரித்தானியர் அபினி யுத்தத்தினால் தான் (Opium War) வெல்ல முடிந்தது. சீனர்களின் பலவீனம் போதையும் சூதாட்டமும் என்பார்கள். ]  சிங்கப்பூரின் ஒரு செல்வந்தரின் வீடு ஒன்றைக் காட்டும்போது அதைச் சுவர்க்க புரியாககே காட்ட எடுக்கப்பட்ட முயற்சியும் பொருட் செலவும் தேவை கருதியது தான். இன்று மேற்கத்தியர்களுக்கு இருக்கக்கூடிய அதியுயர் பெருமை பக்கிங்ஹாம் மாளிகை எனின் இது அதைவிடப் பன்மடங்கு பிரமாண்டமானது அது. அது செயற்கையான பளிங்கு மாளிகையேயேயாயினும் அங்கு நடமாடிய பாத்திரங்களின், அக் கொண்டாட்டங்களின் பின்னணியில் ஒரு செய்தி இருக்கிறதை உணர முடிகிறது. அது தான் We are back...என்பது.

அத்தோடு இப்படம் உலகச்  சீன இனத்தாருக்கு, சீன வரலாறு கலாச்சாரங்களைத் தெரியாது வாழும் மேற்கத்தைய கலாச்சார வெள்ளத்தில் அடிபட்டுப் போய்க்கொண்டிருக்கும் இரண்டாம், மூன்றாம், நாலாம் தலைமுறைகளுக்கு ஒரு செய்தியையும் சொல்கிறது. 'நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டாடுமளவுக்கு உங்களுக்கு ஒரு கலாச்சாரப் பாரம்பரியமிருக்கிறது. தயவு செய்து மீண்டு வாருங்கள். இந்த அறைகூவலைச் செவ்வனே செய்திருக்கிறது இப் படம். பாத்திரத் தேர்வுகள் முதல் ஆடையணி, அலங்காரம், படாடோபம், அழகு, கவர்ச்சி, இளமை, டாம்பீகம் என்று எதையுமே விட்டு விடவில்லை. திரைக் கதையின் வரிகள் சீன கலாச்சாரத்தின் செழுமையைப் பேசும் அதே வேளை அமெரிக்க கலாச்சாரத்தை ஒப்பீடடளவில் இகழ்வதும் இப் படத்தின் நோக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. இளைய தலைமுறையினருக்கு நவீன இளைஞர்களுக்கும் பண்டைய முதியவர்களுக்கும் தம் இனத்தின் மீதான ஈர்ப்பை இப் படம் அதிகரிக்கச் செய்கிறது. 

இப் படத்தை  99% Asians என்று ஆரம்பத்தில் சொன்னேன். 'இந்திய' இனமாக அடையாளம் காணப்படும் எமக்கு ஒரு sore point இப் படத்தில் உண்டு. இந்த செல்வந்த சீன வீடுகளின் காவலாளிகளாகவும் வாகன தோட்டிகளாகவும் கீழ் மட்டமெனக்  கருதப்படும் வேலைகளை பார்ப்பவர்களாக இந்தியர்கள் / தமிழர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். யதார்த்தமும் அதுவேயானாலும் மேற்கத்தைய ரசிகர்களுக்கு நாம் மூன்றாம் பட்சமாகவே காட்டப்படுவோம். வீட்டுக்காரி வெள்ளைத் தோலுள்ள சிமிதாவாகவும் வேலைக்காரி கறுப்புத் தோலுள்ள காத்தாயியாகவும் பாத்திரம் படைக்கும் தமிழர்கள் இருக்கும்போது நான் சீனரைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அந்த 1% Asians இற்காகவேனும் யாரும் படமொன்று தயாரிக்க வேண்டும். 

மன்னிக்க வேண்டும் ஒரு தவறு. இதில் ஹீரோவாக வருபவர் ஒரு அரை வெள்ளையினத்தவர், Henry Holding. Nick Young என்ற திரைப் பெயரில் நடிக்கும் இவரது தாயார் ஒரு மலேசியர்  தந்தையார் ஒரு ஆங்கிலேயர். அதனால் 98.5% சீனர்கள் நடித்தது என்பதுவே சரி.



மூவேந்தர்க்களைச் சொல்லி திராவிடம் வளர்ந்தது. திராவிடத்தைக் காட்டி தமிழரசு (கட்சி) வளர்ந்தது. தமிழரசின் நிழலில் இயக்கங்கள் வளர்ந்தன. இயக்கத்தின் பெயர் சொல்லி புலம் பெயர் தமிழர் வளர்ந்தனர். பெருமை தரும் வரலாறும் ஒரு வகையில் சொல்லப்பட வேண்டியதே என்பதை இப் படம் எனக்கு சொல்லித் தந்ததாகவே நான் பார்க்கிறேன். 

போய்ப் பாருங்கள்.