வாழ்க்கை
அபன் கனைக்க
அவள் இளிக்க
காதல் ஆரம்பம்
அவன் அணைக்க
அவள் கிளைக்க
வாழ்க்கை ஆரம்பம்
அவன் வடிக்க
அவள் துடிக்க
முதுமை ஆரம்பம்
அவன் கனக்க
அவள் அனுப்ப
பயணம் ஆரம்பம்.
ஆகஸ்ட் 1991
தேவை
காம்பைப் பிடித்துத் திருகி
கசக்கி முகர்ந்து தடவிச்
சுண்ணம் பூசி மெழுகிச் சீவல்
சுத்திச் சுருட்டி கொடுப்பில்
தள்ளி அரைத்துச் சுவைத்து
ஆறடி பாயத் துப்பி - மகிழவோர்
வெற்றிலைக்கு எங்கே போவேன்?
சேவை
கோபம் பொங்கிக் களைத்துப்
பசித்துக் கொடுவாளாய்க்
கீறிப்பிளக்கும் சினத்தோடு
இல்லம் ஏகில் - அங்கென்
சேலைக் கிழத்தி குழல் விரித்தென்
காலைப் பிடித்தோர் காதல்
சேவைக்காய்க் காத்திருப்பாள்
-ஆகஸ்ட் 1991
யுக யாத்திரை
"இது எந்த யுகம் பிரம்ம தேவரே?
அழைத்த காரணம் அறியேன்!
சொல்லுங்கள்!"
"ஹா..ஹா... வாருங்கள்!
மனிதன் சிருஷ்டித்திருக்கும்
நவ உலகைப் பாருங்கள்!
முக்கி முனகி, கட்டை ,
வண்டியில் ஏறாது
'போர்ச்சில்' வந்து
'போர்ச்சில்' இறங்கும்
புது உலகைப் பாருங்கள்!
சனம் பெருக்கச் சினம் கொண்டு
மறு பால் மணக்காது
சக பால் மணம் செய்யும்
சம உலகைப் பாருங்கள்!
ஆநிரை கவராது
அயலார் நிலம் கொள்ளும்
அற்புதத்தைப் பாருங்கள்!
மனிதப் படைப்புகளே
மனித இனம் கொல்லும்
மயவுலகைப் பாருங்கள்!"
"சற்றே பொறுங்கள் சுவாமி!
ஜெருசலேமிலிருந்து அழைப்பு வருகிறது.
"ஓம்...ஓம்...
சரி ..செய்கிறேன்.."
"மன்னிக்க பிரம தேவரே!
இந்த யுகம் அவர்களுடையதாம்..."
'டுமீல்..டுமீல்'