செவ்வாய், 17 டிசம்பர், 2013

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறதுமடித்து வைத்த பக்கங்கள் 
மார்கழி 17. 2013

எந்தவித ஆலாபரணமும் இல்லாமல் நேரே விடயத்துக்கு வருகிறேன். இது தன்மையில் எழுதப்படுவதன் காரணமே பிறருக்கு 'வகுப்பு எடுப்பதற்காக' அல்ல என்பதை வலியுறுத்தவே. தலைப்பைப் புரியாதவர்களுக்கு விடயமும் புரியாது. 

கற்றல் என்பதன் அர்த்தத்தைப் புரிய எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் பிடித்தது. அதுவும் தற்செயலாகவே அப் பாக்கியம் கிட்டியது. வாழ்க்கையில் பல விடயங்களைப் புரிந்து கொள்வதே இப்படிப் பல தற்செயல் நிகழ்வுகளின் காரணங்களினால் தான். 

எனது பல்கலைக் கழக பட்டமளிப்பின் போது நாசா விலிருந்து ஒரு விஞ்ஞானி பேச அழைக்கப் பட்டிருந்தார். அவர் கூறிய ஒரு விடயம் என்னுள் இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. 'we train engineers to think, it is up to you how to apply this in your real life'.

கற்றல் என்பதற்கு ஆங்கிலத்தில் learning  என்பார்கள். சிறுவயதில் நான் 'கற்ற' ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதல் உயர் பாடசாலையில் கற்ற தாவரவியல், விலங்கியல் வரை எல்லாமே நினைவு வங்கியில் பதியப்பட்ட விடயங்களே. 

ஆசிரியர்கள் 'புகட்டிய' இந்த விடயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு அப்போது மட்டுமல்ல பல வருடங்களுக்குப் பின்னரும் இருக்கவில்லை. மனசார ஒத்துக்கொள்கிறேன். அவற்றை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க மட்டுமே ஆசிரியர் வற்புறுத்துவார். ஆசிரியரின் பிரம்பும் பரீட்சையில் சித்தி பெறாவிடில் கிடைக்கக்கூடிய அவமானமும் தான் தரப்பட்ட விடயங்களை உட் புகுத்தின. இளமைக் கல்வி எல்லாமே பிற்காலத்திற்கென இட்ட விதைகள். 

இப் பதிவுகளை இன்று மீட்டு அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்போது ஏற்படும் பரவசம் அற்புதமாகத்தான் இருக்கிறது. கம்பராமாயணத்தின் செய்யுள்கள் மட்டுமே பதிவாகின. பொழிப்புரைகள் அல்ல. (இதற்குக் காரணமே யாப்பிலக்கணம் என்பதைப் புரிய வாழ்க்கையின் ஒரு பர்வத்தைக் கடக்க வேண்டியிருந்தது.) 

இந்த 'நினைவில் பதியும்' நடைமுறையையே நான்  கற்றல் (learning) என்று நம்புவது. கற்றவற்றைப் பிரயோகப்படுத்தும் போதுதான் அவற்றின் வழியும் மகிழ்வும் புரியவருகிறது.

நவீன கணனிச் செயன்முறைகளைத் தெரிந்துகொண்ட பின்னர் கற்றல் பற்றிய புரிதல் இலகுவாக இருக்கிறது. உயிரிகளின் படைப்பு விசித்திரமாக இருக்கிறது. ஒன்றோடு மற்றொன்றை ஒப்பிடும்போது அறிவுலகம் விரிகிறது. கணனியின் உருவாக்கத்தின் பின்னணியில் மனித உடலியக்கம் மாதிரியாக (model)  இருந்திருப்பினும் மனிதப் புதிர்களுக்கு கணனி தான் விடைகளைத் தருகிறது.

விடயத்தைப் பிரயோகப் படுத்துவதற்கு அவ்விடயத்தின் பொருளைத் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது பிரயோகத்தின் வெற்றி தோல்விகள் அறிவுறுத்தியிருக்கின்றன. 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதல்' பற்றி மாணிக்க வாசகர் சுவாமி சொன்னது இப்போதுதான் புரிகிறது.

சமூகம் எனக்குள் பல வடிகளை (filters) யும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறது. பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயர்களில் வரையறுக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட வாழ்வைப் பின்பற்றும்படியான கட்டளைகள் அவை. ஒழுக்கமான வாழ்வுக்கு அவை அத்தியாவசியாமானவை என்று சொல்லப்படுகிறது. சந்தி விளக்குகள் போல. கணனியின் கட்டளைக் கோப்புகளும் இப்படியான வடிகளை உட்கொண்டுள்ளன.

நாசா விஞ்ஞானி சொன்ன 'training to think' என்பது ஒவ்வொரு படைப்பையும் சுய விசாரணையின் மூலம் 'அறிந்து' கொள்வதற்குத் தரப்படும் பயிற்சியே. அதற்கான முதற் செயற்பாடு மேற் சொன்ன 'வடிகளை' அகற்றி விடுவது. பொறியியலாளனும் ஒரு படைப்பாளியே. எந்தவிதமான முற்சாய்வுகளும் இல்லாது உலகத்தைப் பார்ப்பது ஒரு படைப்பாளிக்கு அவசியம் என்பதையே அவர் சுட்டிக் காட்டினார். 

திறந்த மனதோடு உலகைப் பார்க்கும்போது படைப்புகள் அசாதாரண பரிமாணங்களுடன் தோற்றுகின்றன. ஒருவகையில் திருப்தி தரக்கூடிய வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு இக் 'கற்றல்' எனக்கு உதவி வருகிறது. ஆனாலும் அப்பப்போ பல 'வடிகள்' குழப்பங்களை ஏற்படுத்துவதுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
*****
சமீபத்தில் முக நூலில் நண்பர் ஒருவர் நடராஜர் சிலையின் கலைத்துவத்துக்காக அதைத் தான் முற்கூடத்தில் (living room?)  வைப்பேனே தவிர நூற்கூடத்தில் (labrary) அல்ல என்று எழுதியிருந்தார். அவரது இக் கருத்து பற்றிய குறிப்பை இங்கு எழுதுவதற்கு அடியெடுத்துத் தந்ததற்கு நண்பருக்கு நன்றிகள்.
நடராஜர் சிலையில் (சிவபெருமான் சிலை அல்ல) உள்ள அம்சங்கள் சுட்டும் கருத்துக்களை சைவம் துறை போகக் கற்றுணர்ந்த ஒருவர் அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லலாம். ஆனால் அந்த அம்சங்களைச் சிலையில் பிரதிபலிக்கச் செய்த சிற்பியின் படைப்புத் திறமையை ஒரு சமயவாதி முன்வைப்பது சிரமமானது, தேவையுமற்றது. பக்தனுக்கு சிலையின் பிரசன்னமே போதும். கலைப் பார்வையுள்ளவனுக்கு அச் சிலையிலுள்ள அம்சங்களை சிற்பி வடித்ததன் பின்னாலுள்ள காரணங்களைத் துருவியறியும் போக்கு இருக்கும். அப்படிப் பார்க்கும்போது ஒரு படைப்பாளிக்கு சிலை மூலஸ்தானத்தில் இருப்பதைவிட முற்கூடத்தில்  இருப்பதே சிறந்தது. நண்பரைத் தெரிந்தவர்களுக்கு அவரது கூற்று ஆச்சரியத்தைத் தராது.  
*******
நடராஜர் சிலையிலுள்ள அம்சங்கள் பற்றி நானும் மண்டையைக் குடைவதுண்டு. அவற்றில் இரண்டு பற்றி சமீபத்தில் அறிய முடிந்தது. சரியோ பிழையோ அது ஒருவரது கருத்து. 
நடராஜரின் தலையில் கிரீடத்துக்குக் குறுக்காக கயிற்றுத் துண்டுகள் போல இரண்டு பக்கங்களிலும் தோற்றமளிக்கும். இவை அவரது சடாமுடி (திரிசடை) என்று ஒருவர் சொன்னார். அப்படியானால் அம்முடி கீழ் நோக்கித் தூங்கிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பக்கங்களுக்குப் பறந்துகொண்டிருக்க முடியாதே. இயற்கை விதிகள் அப்படித்தானே சொல்கிறது?
அப் பறக்கும் திரிசடையின் மர்மத்தை சமீப வாசிப்பொன்று இப்படித் துலக்குகிறது. நடராஜர் சிலை தாண்டவத்தின் ஒரு படிமம். அவரது நித்திய இயக்கத்தைக் (perpertual motion) குறியிட்டுக் காட்டவே அப் பறக்கும் சடாமுடியையும் - அத்தோடு பறக்கும் இடுப்புச் சால்வையையும் - சிற்பி வடிவமைத்திருக்கிறார் என்கிறது அந்தக் குறிப்பு. கார்ட்டூன் படைப்பாளிகள் உருளும் பந்தைக் குறிப்பதற்கு இரண்டு வளைவான கோடுகளைப் போடுவது போல. பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்கும்வரை நடராஜர் சிலையின் இக் கலையம்சத்தை நான் மிகவும் ரசிப்பதை ஒப்புக் கொள்கிறேன். 
******




கருத்துகள் இல்லை: