புதன், 24 டிசம்பர், 2008

நட்பு

சுய 'கோமாவில்' தூங்குகிறது முன்னாள் நட்பு 
என் ஆத்மாவைப் பிழிந்த களைப்பு 
விழிப்புக்கு அவசரமில்லை 
என் மரணம் மட்டுமே அதற்கிப்போ அவசியம் 
என் காட்டில் மழையில்லை 
இன்று போகிறேன் 
மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது

- அசை சிவதாசன்

வெள்ளி, 19 டிசம்பர், 2008

வரம்

இறக்கும் தறுவாயில் இறைவன் வந்தான் 
'வரமென்ன வேண்டும்?' வரன் கேட்டான் 
‘தவமிருந்தும் கிடைக்காத- அழகியின் தளிரிடைபால் துயில வேண்டும்!’ 
'ஆகட்டுமென்று' அப்பாலகன்றான் 
வரமும் கிடைத்தது- சிசு-பாலனாக!

-அசை சிவதாசன்

செவ்வாய், 16 டிசம்பர், 2008

பராக் ஒபாமா: எல்லாம் அவர்கள் செயல்

Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்!

சிவதாசன்

அமெரிக்க கறுப்பின விடுதலைக்காக உழைத்த மல்கம் எக்ஸ் ஒரு தடவை சொல்லியிருந்தார் “ முதுகில் ஒன்பது அங்குலங்களுக்குக் கத்தியைப் பாய்ச்சிவிட்டுப் பின்னர் ஆறு அங்குலங்களை வெளியே இழுத்துக் கொள்வதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது” என்று. ஒபாமாவின்-அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கான-தெரிவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். புஷ் ஆட்சியின் போது ஜனநாயக உலகின் மார்பில் செருகப்பட்ட கத்தியை மக்கெயினைத் தோற்கடித்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஆறு அங்குலங்களால் இழுத்திருக்கிறார்கள். ஒபாமாவின் தெரிவு இக் கத்தி இழுப்பின் ஒரு பக்க விளைவே.
அதிசயமேதான். இந்த நூற்றாண்டில் இது நடை பெற்றிருக்க முடியாதுதான், ஆனால் நடைபெற்றிருக்கிறது. மாற்றம் வேண்டுமென்றார், மக்கள் கொடுத்திருக்கிறார்கள்-ஒரு இனத்தால், மதத்தால், நிறத்தால் கலவை செய்யப்பட்ட ஒரு மனிதரிடம். பராக் ஹுசெய்ன் ஒபாமா கலவை செய்யப்பட்ட பிறவி சரி ஆனால் கொள்கைகளாற் சலவை செய்யப்பட்டவரா? அவகாசம் வேண்டும்.

சரி பாதியாகப் பிளந்த ஜனநாயக அமெரிக்காவின் உதரத்திலிருந்து தோன்றிய இந்த மாயக் குழந்தையின் பிறப்பு இயற்கையாயின் அது நிச்சயமான மாற்றமேதான். ஆனால் பிரசவத்தின் பின்னர் உறவு முறை சொல்லிக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு முகாமிட்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது குழந்தை பரிசோதனைக் குழாயில் உருவாக்கப்பட்டதா அல்லது புஷ் குடும்பத்தின் ‘குளோனிங்’ வாரிசா என்ற சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒபாமாவின் தெரிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் குழப்பநிலை, போட்டியாளரின் தகைமை, ஒபாமாவின் திறமை இவற்றுக்கு மேலாக அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்த வரையில் ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்பதே மறுமொழி.

‘தக்கன வாழும்’ என்பது பரிணாமக் கொள்கை. இன்றய ஒரு துருவ உலகில் நவ-பழைமைவதிகளின் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்போது உலகை அழிக்க வல்ல சகல வல்லமை பொருந்திய அணுவாயுத வல்லரசின் ஆட்சியை ஒரு கறுப்பரிடம் கையளிக்க உலகம் தயாராகவிருந்திருக்குமா? ‘அமெரிக்காவை ஆழ்பவர் உலகை ஆழ்பவர். அதற்குத் தேவையான அனுபவம் ஒபாமாவிடம் இல்லை’ என்று தேர்தலுக்கு முன்னர் ஒபாமாவின் எதிர் முகாம் கர்ச்சித்தது. அதற்கு ஒரு பத்தி எழுத்தாளர் பதில் எழுதியிருந்தார் ‘ அமெரிக்காவின் கொள்கைகள் ஜெருசலெம் நகரில் வகுக்கப்படும்போது அனுபவம் வாய்ந்த ஜனாதிபதிக்கான தேவை என்ன இருக்கிறது?’ என்று. ‘அவர்கள்’ செயல் எல்லாம் புரிந்தவராக இருந்திருக்க வேண்டும் அந்த எழுத்தாளர்!

வெள்ளையரல்லாத ஒருவரிடம் உலக அணுவாயுதத்தின் பொத்தானை அழுத்தும் அதிகாரத்தைக் கொடுக்க மேற்குலகம் இன்னும் தயாரில்லை. பொக்கிசங்களிற் பாதுகாக்கப்பட்டிருக்கும் எதிர்கால வரலாற்று நூல்களில் ஒபாமா ஒரு சாதனையாளராக சித்தரிக்கப்பட்டிருக்கப் போவதில்லை. சொன்னதைச் சொன்னபடி செய்த இன்னுமொரு தலைவராகவே இவர் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும்.

தலையை அசைக்கிறீர்கள், நம்ப முடியவில்லை? கொஞ்சம் பொறுங்கள்.

“I will say, then, that I am not, not ever have been. in favour of bringing about in any way, the social and political equality of the white and black races……I, as much as any other man, am in favour of having the superior position assigned to the white race”
“My paramount object in this struggle is to save the union….If I could save the union without freeing any slaves, I would do it; if I could save it by freeing some and leaving others alone, I would also do that”

இதை யார் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அடிமைத் தளையை அறுத்தவராக வரலாற்று நூல்கள் வர்ணிக்கும், எங்கள் வீடுகளின் சுவர்களை அலங்கரித்த ஆப்ரஹாம் லிங்கன் தான்! 1858ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பான தனது எதிராளி ஸ்டீபன் டக்ள்ஸ் உடனான பிரபல விவாதமொன்றில் லிங்கன் சொன்னதே முதலாவது கூற்று. . அமெரிக்காவின் ஒருமைப்பாட்டைப் பேணுவதே தவிர அடிமைகளை விடுவிப்பது தனது முக்கிய நோக்கமல்ல என்பதை 1862ல் லிங்கனே சொல்லியிருக்கிறார். (இரண்டாவது கூற்று). ஒருமைப்பாட்டுக்காக ‘வடக்கு’ முன் வைத்த நிபந்தனையே அடிமைகளின் விடுதலை. வெள்ளை அமெரிக்கா பேரம் பேசியதின் ஒரு பக்க விளைவே அடிமைகளின் விடுதலை. 140 வருடங்களின் பின் நவீன அமெரிக்கா பேசிய பேரத்தின் பக்க விளைவே ஒபாமா. ஒன்பது அங்குல ஆழத்தில் இருந்த கத்தி ஆறு அங்குலங்கள் இழுக்கப் பட்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன்னிருந்த ஒபாமாவுக்கும் பின்னிருக்கும் ஒபாமாவுக்கும் நிரம்ப வித்தியாசம் என்கிறார்கள். ஜனாதிபதியாக வந்தே தீருவேன் என்று திட்டமிட்டு உறுதியான அத்திவாரத்தை வெறும் சாமானிய அடிமட்ட சமூகங்களினாலேயே கட்டி எழுப்பி, அதி நாணயமான தேர்தற் பிரசாரத்தைச் செய்து, கிளின்ரன் குடும்பத்தினரது குழி பறிப்புகளையும் எதிராளியின் இகழ்வுரைகளையும் தாண்டி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அந்த அரை அமெரிக்காவின் ஆனந்தக் கண்ணீரே சாட்சியாகி விட்டது. ஆனால் அந்த ஆனந்தக் கண்ணீருக்கான நன்றிக் கடனை அவர் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ‘அவர்கள்’ வழங்குவார்களா? என்பதுவே பலரது இப்போதைய சந்தேகம்.

புஷ் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும்போது சொன்னார் ‘ஒன்றும் என் கைகளில் இல்லை’ என்று. அது ஒரு பூடகமான பேச்சு. முதலாவது உலக யுத்த காலத்திலிருந்தே உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு ஒரு குறிக்கப்பட்ட குழுவினரால் அபகரிக்கப்பட்டுவிட்டது. உலகில் எந்த மூலையிலென்றாலும் இன்று நடைபெறும் மாற்றங்களின் பின்னால் இக் குழுவின் முத்திரை இருந்தேயாகும் என்கிறார்கள். நவீன அமெரிக்காவின் ஜனநாயக மரபின் நிழலாக இயங்கும் இக் குழுவின் அங்கீகாரமின்றி மேற்குலகின் அரசுகளோ அல்லது தலைவர்களோ பதவிக்கு வருவதோ ஆட்சியைத் தொடர்வதோ இயலாத காரியம். ‘இரும்புப் பெண்’ மார்கிரெட் தற்ச்சர் பதவியிறக்கப்பட்டது, ஆர்க்கன்சா மாகாணத்தில் முகமற்றிருந்த பில் கிளின்ரனை ஜனாதிபதியாக்கியது என்று உலக வரலாற்றின் உப கதைகள் பலவுண்டு. ஒபாமாவின் தெரிவும் இப்படியானதொரு பின்னணியைக் கொண்டிருக்கலாம் என்பதே சிலரது சந்தேகம்.

நவீன அமெரிக்காவின் (அல்லது உலகின் என்றும் கூறிக்கொள்ளலாம்) உள்நாட்டு / வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பவர்களில் பெரும்பான்மையினர் நவ-பழமைவாதக் குழுவிலிருந்தே பொறுக்கி எடுக்கப்படுவது வழக்கம். ‘வெளியுறவுக் கவுன்சில்’, ‘ட்றை லட்டெறல் கமிஷன்’ போன்ற அரச அங்கங்கள் மிகவும் பலம் வாய்ந்த, அதிகார வர்க்கத்தோடு நெருக்கமான உறவைப் பேணும் மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்டவை. அமெரிக்க அரசின் -ஜனாதிபதி, உப-ஜனாதிபதி போன்ற தேர்தலில் மூலம் பெற்ற பதவிகள் தவிர்ந்த- பதவிகளெல்லாம் இம் மனிதர்களாலேயே நிரப்பப்பட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி, உப-ஜனாதிபதி போன்றவர்களும் இக் குழுவின் முன்னாள் அங்கத்தவர்களாகவிருந்திருக்கிறார்கள். (பில் கிளின்ரன், டிக் சேனி, சீனியர் புஷ்). அப்படியல்லாத போது தங்கள் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டியங்கக்கூடிய ‘பலமற்ற / விவேகம் குறைந்த’ வர்களை இக் குழு பதவியிலமர்த்தும். ஜனாதிபதி புஷ் இப்படியாக ‘அமர்த்தப் பட்டவர்’ (அல் கோர் தோற்கடிக்கப்பட்டதும் இதே மர்மக் கதையின் அங்கமே தான்). ‘ஒன்றும் என் கைகளில் இல்லை’ என்று புஷ் சொன்னதன் அர்த்தத்தை இப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும்.

இப்போது ஒபாமாவின் ஆட்சியில் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்று கருதும் நம்பிக்கையீனர்களின் பக்கத்தைப் பார்ப்போம். ஒபாமாவின் எதிராளி மக்கெயின் ஒரு தீவிர வலதுசாரி, வியாபாரிகளின் நண்பன், விளிம்பு நிலை மக்களின், தொழிலாள வர்க்கத்தின் எதிரி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் முதலாளி வர்க்கத்தின் முகமான வால் ஸ்ட்றீட் முதலைகளிடமிருந்து தேர்தல் செலவுகளுக்காய் அதிக பணத்தைப் பெற்றவர் ஒபாமா (10 மில்லியன்). மக்கெயினுக்குக் கிடைத்தது 7 மில்லியன் டாலர்கள் மட்டுமே! வங்குரோத்துக்குப் போகவிருந்த வங்கிகளுக்கு மீட்புப் பணம் கொடுக்கக் கூடாது என்று அமெரிக்கப் பொது மக்கள் தமது பிரதிநிதிகள் சபை மூலம் ஏகோபித்த எதிர்ப்பைக் காட்டிய பின்னரும் அவ் வங்கிகளை மீட்டெடுப்பதில் முனைப்பாகவிருந்தவர் ஒபாமா. ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இராணுவ வெற்றியை ஈட்டியேயாகுவேன் என்று அடம் பிடித்து நிற்பவர். இன்று அவராற் பொறுக்கியெடுக்கப் பட்டிருக்கும் ‘ மந்திரிசபையில்’ அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலோர் ‘கிளின்ரன் நிர்வாகத்தோடு’ தொடர்புடையவர்கள். ‘புதிய-நூற்றாண்டு அமெரிக்கா’ வின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்களே. அனுபவமும் அதிகாரமும் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்தே வருகிறது (out sourced, as usual!). உப-ஜனாதிபதியாகத் தேர்வாகியிருக்கும் பைடன் ஒரு ‘பிரகடனப் படுத்தப் பட்ட’ ஜியோனிஸ்ட். ஒபாமாவுக்கு ‘விபத்து’ நேரின் ஆட்சி பாதுகாப்பான இடத்திலேயே இருந்து கொள்ளும். இப் பின்னணியே ஒபாமாவின் அதிகார பலத்தைச் சந்தேகத்துக்குள்ளாக்கிறது.

ஜனாதிபதி நிக்ஸனின் தெரிவிற்கு முன் அவருக்கு ‘பேச்சு’ எழுதிக் கொடுத்து ஆலோசனைகளையும் வழங்கி வந்த பற் புக்கனன் என்பவர் அப்போது சொன்னார் ‘ தேர்தலுக்கு முன்னர் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையேதான் சொல்ல வேண்டும். தேர்தலில் வென்றதும் எது நாட்டுக்கு நல்லதோ அதையேதான் செய்ய வேண்டும்’ என்று. ஒபாமாவின் விவேகத்தைக் குறைத்து எடை போட முடியாது. ஆனாலும் அவரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை அதிக பலமுள்ளது. அவர் சொன்னதைச் செய்வாரா அல்லது செய்ய முடியாததைச் சொன்னாரா?

தோழர் லெனின் கூட தனது ஆட்சிக் காலத்தில் இப்படியான மர்ம விசைகளினால் ஆட்கொள்ளப்பட்டவர் தான். “The state does not function as we desired. A man is at the wheel and seems to lead it, but the car does not drive in the desired direction. It moves as another force wishes” இதை லெனினே சொல்லியிருக்கிறார். பாவம் கோபர்ச்செவ் ‘வெள்ளை’ வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டார்!
பார்ப்போம்.

2008-12-16

உனக்கு மட்டும்...

உனது சுயம்வரத்தில் நான் தோற்றுவிட்டேன்
காலம் ஒரு தடைக் கல்லாய்
என் பிறப்பில் ஒரு கண்டம்
முற் பிறப்பில் உன் கண்ணீர் வாய்க்காலை
உடைத்ததன் பலன்..
பொழிந்த கல்லாய் நிற்கிறாய்
தாமரைக் குளம், வேனில் மாலை
தனியே விட்டுன்னைச் சென்றதன் பழி..
இனி ஒருகால் எனக்காய் அழமாட்டாய்
காணாமலே இருந்திருக்கலாம்
என்னைக் கொல்வதில் இன்பமுனக்கு
புரிகிறது…

Dec.16,2008