சமீபத்தில் றோஸ்மேறி சுலிவன் எழுதிய ஸ்ராலினின் மகள் (Stalin’s Daughter) என்னும் புத்தகத்தை வாசித்தேன். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலர், சர்வாதிகாரி எந்நும் படிமங்களுடு பார்த்திருந்த எனக்கு இன்னூல் ஒருவித சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.
சோவியத் குடியரசு பற்றி மறைக்கப்பட்ட பக்கங்கள் பல. ஸ்டாலினின் ரஷ்யா பற்றி நிறைய விடயங்களை ஸ்வெற்லானாவின் பிரதிபலிப்புக்களாக இப் புத்தகம் தருகிறது.
1926 இல் ரஷ்யாவில் பிறந்து கிரெம்லின் அரச மாளிகையில் வளர்ந்த ஸ்டாலினின் மகள் சுவெட்லானா தனது 85 வது வயதில் அமெரிக்காவில் தனிமையில் வறுமையில் மடிந்து போனார்.
ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி எனவே வரலாறு சொல்கிறது. சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள் என்றுதான் எமக்குக் கற்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதும் அப்படியொரு உண்ர்வுதான் மேல் நிற்கிறது. அதற்கும் மேலால் இந் நூலில் இன்னுமொரு நிழலுணர்வு ஸ்டாலினையும் அவர் சார்ந்த கம்யூனிச சித்தாந்தத்தையும் பின்புலத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. பிரச்சார சித்தரிப்புகள் என்று எதுவுமில்லை.
வேண்டுமானால் ஸ்வெட்லானாவின் மீதான ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அவரது தவறுகளுக்கான
காரணங்களையும் ரஷ்யா மீது சுமத்தும் முயற்சி தென்படலாம்.
தாம் வரித்துக் கொண்ட கொள்கைகளை நடைமுறைப் படுத்த ஸ்ராலின் கையாண்ட வழிமுறைகள் நாகரிக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை. 16, 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருந்த தொழிற் புரட்சி, நிலங்களை வளங்களாகக் கொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வறுமைக் கோடு, தன்நிறைவு பற்றிய பொருளாதார அளவுகோல்கள் பற்றி அறிந்திராத காலமது. நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார அணி சேர்தல் முடுக்கப்பட்ட நிலை. நகரமயமாக்கலும் இயந்திரமயமாக்கலும் மட்டுமே ஒரு நாட்டை முன்னிலையில் வைத்திருக்கும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்தது.
அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து லெனினின் நோக்கம் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான பலமான சோவியத் குடியரசை அமைப்பது. அதற்கமைய கட்சியால் நிறுவப்பட்ட விஞ்ஞாபனம் மிகவும் இறுக்கமானது. அதை நடைமுறைப்படுத்த எவர் முன்வந்திருப்பினும் அவர் சர்வாதிகாரியாகவே
இருந்திருக்க வேண்டும். ஸ்டாலின் அதைக் கட்சியின் விருப்பிற்கமையச் செய்தார். அதற்காக அவர் விரும்பி இழந்தது பல, ஒருவர் ஸ்வெட்லானா.
ஸ்டாலினுக்கு ஸ்வெட்லானாவைத் தவிர இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர். ஆனாலும் ஸ்வெட்லானா மீது அவர் மிகவும் பிரியமும் கரிசனையும் கொண்டிருந்தார். ஜார் அரசரின் காலத்தில் போலவே மேற்தட்டு வர்க்கம் கல்வி பயிலும் பாடசாலையில் தான் ஸ்வெட்லானா கல்வி கற்றார். இலக்கியம், வரலாறு, ரஷ்ய கலாச்சாரம், மேடை இலக்கியம் கட்சி சித்தாந்தம் யாவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவ்ர் ஸ்வெட்லானா. அதனால் அவருக்கு நிறைய யூத-ரஷ்ய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் இருவரைத் திருமணமும் செய்துகொண்டார். பிள்ளைகளும் உண்டு. ஆனால் ஸ்டாலின் யூதரை வெறுப்பவர். அதனால் பேரப்பிள்ளைக்ளையும் வெறுத்தார்.
நகர மயமாக்கலின் போது விவசாயிகளின் நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டன . பஞ்சம் தலைவிரித்தாடியது. பல மில்லியன் மக்கள் பட்டினியால் மரணமடைந்தனர். எதிர்த்தவர்கள்
கொல்லப்பட்டோ குளிர் வலயங்கள் அல்லது தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டோ துன்பங்களை அனுபவித்தனர். கட்சியின் பேரிலும் நாட்டின் பேரிலும் இவைகள் நியாயமாக்கப்பட்டன. ஸ்டாலின் அப்போதும் சிறந்த தலைவராகவே சோவியத் மக்களால் கருதப்பட்டார். கட்சியின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் துரோகிகளாக்கப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். சிலருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அதில் ஸ்டாலினின் மனைவியின் பெற்றோர், மனைவியின் தங்கை மற்றும் உறவினர் பலர்.
ஸ்டாலின் தனது இரண்டு ஆண் மக்களையும் போர் முனைக்கு அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஜேர்மானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட போது அவரை மீட்பதற்கு ஸ்டாலின் முயற்சி எடுக்க மறுத்துவிட்டார். கைதிகள் பரிமாற்றத்திற்கு மகனைப் பிணையாகத் தர ஜேர்மானியர்
முன்வந்தபோது “ எல்லா சோவியத் கைதிகளும் எனது பிள்ளைகள் தான்” என்று கூறித் தன மகனை விடுவிக்க மறுத்துவிட்டார்.
கட்சியின் சித்தாந்தம் புனிதமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அதை நடைமுறைப் படுத்த கொடுத்த விலை பன்மடங்கு. கட்சிக்கும் சரி கட்சியின் காவலர்களுக்கும் சரி கண்கள்
இருண்டிருந்திருக்கலாம். மருண்டவர்கள் எல்லாம் எதிர்ப்புரட்சிக்காரர்களாகப் பட்டனர்.
எதிர்ப்புரட்சிக்காரரை இனம்காணும் பொறுப்பு மத்திய குழு உறுப்பினர் லவெண்றி பெரியா விடம் இருந்தது. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் பலர் அவர் பட்டியலில் இருந்தனர். ஸ்டாலினை மாசுபடுத்தி நாட்டைச் சிதைக்க எதிரிகள் முனையலாம் அதற்கு உகந்தவர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களே என்றொரு கருத்தும் அதே வேளை ஸ்டாலினைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற பெரியா முயன்றிருக்கலாம் என்றொரு கருத்தும் இருந்ததாகத் தெரிகிறது.
எதுவானாலும் ஸ்டாலின் தான் இறுதிவரை நீதிமானாக நடந்து கொள்ள வேண்டுமென்பதனால் தான் தன் உறவினர்கள், நண்பர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் கருணை காட்ட்
மறுத்துவிட்டார் என்ற கருத்து மேலோங்கி நின்றது எனவும் கருதப்பட்டது.
ஸ்டாலினின் முடிவு சடுதியானது. முதல் நாளிரவு மத்திய குழுவின் முக்கியஸ்தர்கள், குருஸ்சேவ் பெரியா ஈறாக, ஸ்டாலினின் வீட்டில் இரவுணவு உண்டபின்னர் மறுநாள் சுகவீனமுறுகிறார். கட்சியின் நடவடிக்கை காரணமாக ரஷ்யாவின் மிகச் சிறந்த மருத்துவர்கள் எதிர்ப்புரட்சிக்காரர்களெனச் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர் (‘Doctor Plot’).
சிறந்த மருத்துவர் ஒருவருக்கு விடுதலையளிக்கப்பட்டு சிகிச்சைக்காகாக் கொண்டுவரப்பட்டார். உரிய காலத்தில் முறையான சிகிச்சையளிக்கப்படாமல் ஸ்டாலின் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது.
சில நாட்களில் பெரியா கைதுசெய்யபட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. குருஸ்சேவ் ஆட்சியில் அமர்கிறார்.
அவரது முதல் கடமை ஸ்டாலினைத் துரோகியாக்குவது. அவரால் சிறைவைக்கப்பட்டவ்ர்கள் ‘குற்றங்கள் நிரூபிக்கப்பட முடியாமையால்’ விடுதலை பெற்றனர்.
மார்ச் மாதம் 5ம் திகதி, 1953 ம் ஆண்டு ஸ்டாலின் மரணமடைந்தார். மக்கள் அவரை வெறுத்தற்கான அடையாளம் ஏதுமின்றி ஸ்டாலினின் மரணச் சடங்கு சிறப்பாக நடந்தது.
ஸ்டாலின் நாட்டுடமையெனக் கூறி அவரது சொத்துக்கள் அரசினால் எடுக்கப்பட்டன. சுவெட்லானா தெருவில் விடப்பட்டார்.
ஸ்டாலின் ஒரு புரட்சிக்காரர். சர்வாதிகாரியாக வரவேண்டுமென்று அவர் நினைத்திருந்ததற்கான தடயங்கள் தெரியவில்லை ஆனால் அவரைக் கொடுங்கோலனாக மாற்றியதற்குரிய தடயங்கள் நிறையத் தெரிகின்றன.
அதிலொன்று, சந்தேகம்.
இக் கட்டுரை ரொறோண்டோவிலிருந்து வெளிவரும் 'ஈ குருவி' பத்திரிகையின் மாசி 2016 இதழுக்காக எழுதப்பட்டு பிரசுரமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக