பரபரப்போ சலசலப்போ இல்லாது அது முடிந்தது.
'வானத்தைப் பிளந்த கதை' பற்றி மாமூலன். வெங்கட்ரமணன், திரு வேங்கட சலபதி அவர்கள் பேசினார்கள். ஈழப் போராட்டம் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழருக்கு இருந்த அறிவும் தெளிவும் அக்கறையும் பிரமிக்க வைத்தன.
இறுதிப் போராட்டத்தின்போது இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றி ஈழத் தமிழர்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தவரைக் காப்பாற்றாது கைவிட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வோடு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படித்தவர்களும் பாமரரும் இவ்விடயத்தில் ஒத்த கருத்தோடு இருக்கிறார்கள். துக்ளக் சோ கூட இப்போது புலிகளை விமர்சித்து எழுதுவது குறைவு. ஆனாலும் ரஜீவ் காந்தி விடயத்தில் புலிகள் பிழை விட்டு விட்டார்கள் என்பதையும் தமிழ்நாட்டுக்காரர் குறிப்பிடத் தவறுவதில்லை.
ஆனாலும் ஈழத்தவர் இவ்விடயத்தில் மௌனம் காப்பது சரியானதாகப் படவில்லை. அமைதிப் படை செய்த அட்டூழியங்களின் வலிகள் இன்னும் தீராதவைதான். ராஜீவ் காந்தி கொலையைத் தாண்டி எமக்காக இந்தியா செயற்பட வேண்டுமென்று கட்டாயமில்லை. ஆனால் அமைதிப்படை தந்த வலிகளைத்தாண்டிச் செயற்பட வேண்டிய தேவை எமக்கு இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறோம்.
கூட்டத்தில் நிரலில் இல்லாத ஒரு பேச்சாளரைச் சபையிலிருந்து வலிந்து அழைத்தார்கள். அவரைக் கண்டிருந்தாலும் முன் பின் அவர் பேசிக் கேட்டதில்லை. அவரைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் முற்சாய்வு உடையதாயிருந்தது உண்மை.
ஆனால் அன்றைய தினத்தின் முற்றிலும் எதிர்பாராததும் பிடித்ததுமான பேச்சு அவருடையதே.
தான் சார்ந்திருந்த இயக்கம் மட்டுமல்ல ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை இயக்கங்களினதும் ஜனநாயகமற்ற தன்மை, மக்களிடமோ இதர போராளிகளிடமோ தார்மீகம் காட்டப்படாத தன்மை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக விமர்சித்தார். தான் சார்ந்த இயக்கத்தில் நம்பிக்கை இழந்து புலிகளும் விரட்ட தானும் செழியனும் தப்பியோடி கனடாவுக்கு வந்தபடியால் உயிர் பிழைத்திருப்பதாகவும் அதற்காக புலிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார்.
அவரையும் செழியனையும்போல் இன்னும் நிறையப்பேர் பேசவும் எழுதவும் வேண்டும்.
புலிகளின் தரப்பிலிருந்து இன்னும் ஒருவரும் முன்வரவில்லை.
அவரது பெயர் டேவிட்சன் என்றார்கள்.
அவர் பேசியதை நம்பும்படி மனம் சொல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக