செவ்வாய், 13 ஜனவரி, 2009

வேண்டும் ஒரு Hard Reset!

வேண்டும் ஒரு Hard Reset!

சுமார் 70 வருடங்களுக்கு முன்னர், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில், லெனின்கிராட் நகரில் மிகக் கொடிய குற்றச் செயலொன்று இடம் பெற்றது. ‘சிவப்பு இராணுவம்’ என்றைழைக்கப்பட்ட ஒரு தீவிரவாதக் குழுவொன்று அந் நகரின் பல மில்லியன் குடி மக்களை ஆயிரம் நாட்களுக்கு மேலாக அவர்களின் விருப்புக்கு மாறாக, மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு எதிரிகளான ஜேர்மனியின் இராணுவத்தைச் சீண்டியது. மாற்று வழியேதும் இல்லாததால் ஜேர்மன் இராணுவம் மக்கள் செறிவாக வாழ்ந்த லெனின்கிராட் மீது குண்டு மழையைப் பொழிந்து பல்லாயிரக் கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணியாக இருக்க நேரிட்டது.

இதற்குச் சில காலத்துக்கு முன்னர், இதையொத்த இன்னுமொரு கொடிய செயலொன்று இங்கிலாந்தில் இடம் பெற்றது. வின்ஸ்டன் சேர்ச்சில் என்பவரைச் சூழவிருந்த குழுவொன்று மக்கள் செறிவாக வாழும் லண்டனில் அம் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக்கொண்டு ஜேர்மனியைச் சீண்டினார்கள். வேறு ஏதும் வழியில்லாது ஜேர்மனி லண்டனை அதன் குடிகளோடு சேர்த்துச் சுடுகாடாக்கியது.

2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் காசா என்னும் குறுந்தரைப் பகுதியையும் அங்கு செறிவாக வாழும் மக்களையும் மன்னதக் கேடயங்களாக வைத்துக்கொண்டு அம் மக்களிடையே இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகளை வீசினர். தன் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேறு ஏதும் வழியில்லாது காசா மீது குண்டுகளைப் பொழிந்து சுமார் 300 குழந்தகளுட்பட ஆயிரத்துக்கு மேலானோர் பலியாகினர்.

இதே போன்று 2008 , 2009 ம் ஆண்டு காலங்களில் சிறீலங்காவில் வன்னிப் பெருநிலப் பரப்பில் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதக் குழுவினர் அப்பிரதேசத்தில் வாழ்ந்த அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவித்துக் கொண்டு அந்நாட்டு இராணுவத்தின்ரைத் தாக்கியதால் வேறு ஏதும் வழியில்லாது பன்னாடுகளின் உதவியுடன் சிறீலங்கா இராணுவம் குண்டு மழையைப் பொழிந்து பயங்கரவாதிகளைத் தாக்கியபோது பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறக்க நேரிட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி வெற்றி பெற்றிருந்தால் இன்றய வரலாற்று நூல்களில் ‘வேறு வழியில்லாத காரணத்தால்’ மக்களின் இறப்பு ஏற்பட்டதாகவே (Colatteral damage) பதியப் பட்டிருக்கும். இஸ்ரவேலும் இலங்கையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ‘வேறு வழியில்லாத காரணத்தால்’ மக்கள் படு கொலை செய்யப்பட்டார்களெனவே வரலாற்றைப் பதிவு செய்திருக்கும்.

‘வேறு ஏதும் வழியில்லாதபோது’ அப்பாவி மக்கள் கொல்லப்படலாம். இருக்கின்ற வழிகளையெல்லாம் இருட்டடிப்புச் செய்து ‘இதுவொன்றே வழி’ என்று உள்ள தகவற் சாதனங்களெல்லாம் ஒத்தூத இப்படியான நாடகங்கள் உலகில் எப்போதுமே அரங்கேறியிருக்கின்றன.

நவீன போர்களின் திட்டமிடுதலில் தகவற் சாதனங்களின் பங்கு மிக முக்கியமானது. முதலாம் வளைகுடாப் போரில் ஈராக் நாட்டின் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவிற்கு வழியேதும் இருக்கவில்லை. ‘வேறு ஏதும் வழியில்லாது குவைத் நாட்டில் ஒரு மருத்துவ மனையில் ஈராக்கிய இராணுவத்தினர் தொட்டிலிற் கிடந்த ஐந்து குழந்தைகளை வெளியிலெடுத்து வெட்டிக் கொலை செய்ததைக் காரணம் காட்டி படையெடுப்பு நிகழ்ந்தது – இது வரலாறு. ஆனால் வரலாற்றில் இடம் பிடிக்காத மிக முக்கிய செய்தி என்னவெனில் அந்த குவைத் மருத்துவ மனைச் செய்தி முற்றிலும் பொய்யானது மட்டுமல்ல அச் செய்தி அமெரிக்க மண்ணில் ஒரு தகவற் தொடர்பு நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது என்பதோடு ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட காணொளித் துண்டில் குவைத் மருத்துவ மனைத் தாதியாக ஒருவர் கண்ணீருடன் சம்பவத்தை விபரிக்கும் காட்சியில் தாதியாக நடித்தவர் குவைத் தூதுவரின் மகள் என்பதும்தான்.

இதே போன்றுதான் இரண்டாவது வளைகுடாப் போரில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் அதைத் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வரும் சம்பவங்களும் வரலாற்றில் ஆழமாகப் பதியப்பட்டிருக்கும் விடயமும். பொய்களையும் புனை கதைகளையும் சுற்றியெழுப்பப்படும் செய்திகள் மக்களின் உணர்வுகளுக்குத் தீனி போட்டவுடன் வரலாற்றுக் கிட்டங்கிகளில் நிரந்தர தூக்கத்துக்குப் போய்விடுவதால் அவற்றைப் புனைபவர்கள் தொல்லைகள் ஏதுமின்றி அடுத்த புனைவுக்குப் போய்விடுகிறார்கள். உண்மை பலவீனமாக ஆடி ஆடி வந்து சேரும்போது அதை அதிகாரம் மன நோயாளர் விடுதியில் சேர்த்து விடுகிறது. இதையொரு வரலாற்றாசிரியன் கண்டு பிடித்து வெளிக் கொணரும்போது அது ‘உளவியற் போர் உத்திகளிலொன்று’ என்று கூடவே அந்த வரலாற்று ஆசிரியனையும் பித்தனாக்கி விடுவர். தகவற் சாதனத் துறையில் பெரும்பாலானவை இப் புனைவுத் தொழிற்சாலைகளின் முதலாளிகளாகவிருப்பது விபத்தல்ல.

இலங்கையின் இது கால வரலாற்றில் இப் புனைவுத் தொழிற்சாலைகளின் உற்பத்திகளிலொன்றாகவே மஹாவம்சமும் இருக்கிறது. பின்னாளில் வந்த பேராசிரியர் பரன விதான செப்புத் தகடுகளையும் அமிலத்தையும் சேரப் புதைத்து வைத்து வரலாறு புனைந்ததாகவும் வரலாறுண்டு. ஆனாலும் வரலாற்றைப் புனைவதற்கும் ஓரளவிற்கு படைக்கும் தகமையும் வேண்டும்.

சென்ற வாரம் காசா பிரதேசத்தில் உள்ள ஜபாலியா அகதி முகாமில் இயங்கிய ஐ.நா. பாடசாலையொன்றை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியழித்தன. குழந்தைகளுட்படப் பலவுயிர்கள் அழிக்கப்பட்டன. உலக நிந்தனைக்கு முகம் கொடுப்பதற்குப் பயந்து இஸ்ரேலிய இராணுவம் புனைவுத் தொழிலில் இறங்கியது. பாடசாலையின் வாசலில் இருந்து ஹமாஸ் போராளிகள் மோட்டார்களை ஏவினார்களென வான் தொலைப் பட ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டது. ஆஹா என்னே படைப்புத் திறமை! அவ் வாதாரம் (படம்) ஒரு வருடத்துக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது இரண்டொரு நாட்களிலேயே அம்பலத்துக்கு வந்தது!

அப்போதும் விட்டார்களா. தமது இராணுவச் சிப்பாய்களை ஹமாஸ் போராளிகள் பாடசாலைக்குள்ளிருந்து சுட்டதாக ஒரு கதையைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஓடித்திரிந்தார். ஒரே நாளில் அதுவும் பொய்யெனெ நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் இவ்வுண்மைகள் இஸ்ரேலிய மக்களைச் சென்றடைவதற்குள் பொய் வெகு தூரம் சென்று விட்டது. மக்களின் ஆதரவு இராணுவத்துக்கு மேலும் புதிய புனைவுகளைச் செய்வதற்கு அதிகாரம் வழங்கி விட்டது.

இலங்கையிலோ புனைவுகளுக்கான படைப்புத் தகமைகளுடன் கூடிய மூல வளங்கள் குறைவு. புனைவுகள் மக்களைச் சென்றடைவதற்குள் உண்மை முன்னே சென்று முகாமடித்து விடுகிறது. இதைத் தாங்க முடியாத அரசாங்கம் தகவற் சாதனங்களுக்கு கடிவாளத்தைப் போட்டுவிட்டது. அப்படியும் முரண்டு பிடித்த ‘குதிரைகள்’ நிரந்தர தூக்கத்திலோ அல்லது கோமாவிலோ ‘போடப்பட்டு’ விட்டார்கள். லசந்த விக்கிரமதுங்கவின் முடிவு இப்படியானதொன்றே.

உண்மை, தர்மம், தார்மீகம், அஹிம்சை, நீதி என்பனவற்றுக்கெல்லாம் கலி யுகத்தில் சாதகமான வாழ்களங்கள் இல்லையெனச் சொல்லும்படியாகவே காரியங்கள் நடைபெறுகின்றன. காந்தி விடுதலை பெற்றுக் கொடுத்த இந்தியாவில் காந்தியம் கொல்லப்பட்டு விட்டது. இராமாயண காலத்தில் வாலி வதமாயிருந்தாலென்ன, மகாபாரதத்தில் கண்ணனின் பங்கயிருந்தாலென்ன நவீன இந்தியாவில் நாராயணனாயிருந்தாலென்ன ரணிலின் ஆட்சியில் கருணாவின் பிறழ்வாயிருந்தாலென்ன சூழ்ச்சி இல்லாது ஆட்சி இல்லை என்பதுதான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டு வருகிறது. சர்வதேச நியமங்கள், தராதரங்கள், ஐ.நா. சபை இவை எல்லாமே பலவீனமான கரங்களில் விலங்குகளை மாட்டும் கருவிகள் மட்டுமே.

கணனி தொழிற்பாட்டில் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் SOFT RESET / HARD RESET என்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வருவது வழமை. அதி சிக்கலுக்குள் மாட்டியிருக்கும் இந்த உலகத்தை மீண்டும் சீராக இயங்க வைக்க ஒரு தடவை HARD RESET செய்ய வேண்டும். அதைக் கடவுள் செய்வதா? அல்லது கதிரியக்கம் செய்வதா?
அது உங்கள் நம்பிக்கையைப் பொறுத்தது. படைத்தல், காத்தல், அழித்தல் என்பதற்கும் அடுத்ததாக அருளல் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன்…

அப்போ கிளிநொச்சி? Wait for the Reset!

‘Asai’ Sivathasan
tam@veedu.com
January 11, 2009

கருத்துகள் இல்லை: