தசாவதாரம்
பிரமாண்டமான திரையரங்கில் பார்க்கும் வசதி கிடைத்தது. ஒளி வட்டு ‘நகல்’ உலா வந்தாலும் பெட்டித் திரையிற் பார்ப்பதைவிட இம்மாதிரியான படங்களைக் கெட்டித் திரையிற் பார்ப்பது பரவசமானது.
இப்படம் பற்றிய விமர்சனங்கள் சில முன்கூட்டியே வலைப் பதிவுகளில் வந்திருந்தனவென்று நண்பி அனுப்பியிருந்தாள். வாசிக்கவில்லை. எதுவித முற்சாய்வின்றியும் பார்க்கக் கிடைத்தது நல்லதாய்ப் போய்விட்டது.
தயாரிப்பு பிரமாண்டமானது. கதை chaos theory ஐ மையமாகக் கொண்டது என்று கதை சொன்னாலும் சில காட்சிகளையும் பாத்திரங்களையும் முன் தீர்மானித்து வைத்துக்கொண்டு அவைக்கேற்றபடி கதை பின்னப்பட்டிருக்கிறது என்பதே என் பார்வை.
Chaos என்பது குழப்ப நிலையைக் குறிக்கும் பதமெனவே பார்க்கப் பட்டாலும் ‘சம்பவங்களுக்கு இடையேயான உறவு’ (relationship between events) என்றே வரைவு கொள்ளலாம். பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு இடத்தில் நடந்த ஒரு மிகச் சிறிய காரியங்கூட இன்னுமொரு இடத்தில் பாரியதொரு காரியத்துக்குக் காரணமாக அமையலாம். உதாரணமாக உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகடித்த வண்ணத்துப் பூச்சி இன்னுமொரு மூலையில் சூறாவளி தோன்றவும் காரணமாக அமையலாம். அதாவது முதலாவது காரியத்துக்கும் (சிறகடிப்பு) இரண்டாவது காரியத்துக்கும் (சூறாவளி) இடையே நிச்சயமான சங்கிலித் தொடர்புறவு இருக்கும். தான்தோன்றிச் சம்பவங்கள் (random events) இவ்வுறவைப் பாதிக்காது. ‘எல்லாமே எப்போதோ முடிந்த காரியம்’ என்று யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் சொன்னதும் ‘நீங்கள் இப்போது பார்ப்பது அப்போதே நடைபெற்று விட்டது’ என்பதன் பொருள் சார்ந்ததாகவும் இருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் ஆரம்பிக்கும் உரையாடலில் மேற்கூறிய பொருளை விளக்க முற்பட்டாலும் விறு விறுப்பான ஆரம்பம், ஒலி ஒளி விளையாட்டுக்களில் மெய்மறந்திருந்த பார்வையாளர்களுக்கு உடனடியாக இப் பெருங்கருத்தைப் பகுப்பாய்ந்;து புரிந்து கொள்ள அவகாசம் இருக்க முடியாது. உருவகமாக ஒரு வண்ணத்துப் பூச்சி திரையில் வருவதும் உடனடியாக எடுபடாது.
படம் ஆரம்பிக்கும்போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குலோத்துங்க சோழனின் கட்டளையின் பேரில் வைணவ தெய்வத்தின் சிலையைக்; கடலில் அமிழ்ப்பது ஆரம்ப சம்பவமாகவும் 2004ம் ஆண்டு மார்கழியில் நடந்த ஆழிப் பேரலை இறுதிச் சம்பவமாகவும் எடுக்கப் பட்டு chaos theory யை இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள உறவைப் புரிய வைக்கும் சாதனமாகக் கையாண்டிருக்கிறாரா கமல்ஹாசன்?
அமெரிக்காவில் நடைபெற்ற நுண்ணுயிர் ஆயுத உருவாக்கப் பரிசோதனையின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் ‘விஞ்ஞானி’ கமல்ஹாசன் நுண்ணுயிர் கொல்லியின் பரவலினால் மக்கள் பாதிக்கப்படாமலிருப்பதற்காக ஆய்வுகூடத்தையே உப்பு நீரில் மூழ்க வைக்கிறார். Sodium Chloride (NaCl) எனப்படும் சாதாரண உப்பு நீரினாலேயே உலக அழிவிற்காக உருவாக்கப்பட்ட நுண்ணுயிரைக் கொல்ல முடியும் என்பதை அமெரிக்க ஆய்வு கூடத்தில் நிரூபிக்கும் அசல் கமல்ஹாசன் பின்னர் அதே உயிர் கொல்லி வெள்ளை (நகல்) கமல்ஹாசன் மூலம் உலக அழிவை ஏற்படுத்தத் தயராகும்போது ஆழிப் பேரலை உப்பு நீரைச் சொரிந்து உயிர் கொல்லியை அழிப்பதன் மூலம் உலகைக் காப்பாற்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஆழிப் பேரலை மூலம் வைணவ தெய்வத்தின் சிலை மீண்டும் கரையொதுக்கப் படுகிறது.
இவ்விரண்டு சம்பவங்களுக்குமிடையேயுள்ள உறவு சங்கிலித் தொடர்பானது என்பதை நிரூபிக்க போதுமான தடயங்கள் படத்தில் இல்லை - பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ‘வைணவ நம்பி’ கமல்ஹாசன் பல அவதாரங்களிலும் தோன்றி இறுதியாக ‘தலித்’ கமல்ஹாசனாகக் கடலில் மூழ்குவதை விட்டுப் பார்த்தால்.
பத்து வேடங்களிலும் கமல் நன்றாகச் செய்திருக்கின்றார். வெள்ளைக்கார வில்லனாக வரும் வேடத்தில் body language அசலாக இருக்கிறது. ஜோர்ஜ் புஷ் வேடம், தலித் வேடம், பாட்டி வேடம் எல்லாமே பிரமாதம். ‘நாயுடு’ பீற்றர் செல்லர்ஸ் ஐ ஞாபகமூட்டினார். ஆனால் உருமாற்றத்திற்காக நார்ப்பசையை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். முக பாவ மாற்றங்கள் முடியாமற் போனதால் வெறும் முக மூடிகளை அணிந்துகொண்டு வரும் கோமாளிகளாகவே எனக்குப் பட்டது.
இப் படத்தில் கமலின் முத்திரை அவரது வசனங்கள். இரட்டை அர்த்தக் குத்தூசிகள் சிரிப்போடு குத்திக் கும்மாளப்படுத்தின. அரசியல் ரீதியாக எல்லாச் சமூகத்தாரையும் (ஐயங்கார்?), எல்லா அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தியிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பல நுணுக்கப் பிறழ்வுகள் (trying to be politically correct!) தெரிந்தன. Telescopic lens இனுள் microscopic organisms தெரிவது கொஞ்ச(மு)ம் பொருத்தமில்லை. காரோட்டத்தின் வேகத்துக்குப் படமோட்டமும் இருந்திருந்தால் நன்றாக் இருந்திருக்கும்- bit of dragging. ஆழிப் பேரலை காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தாலும் வெட்டி ஒட்டிய காட்சிகளைத் தவிர்த்து ஏனையவை செயற்கயாகத் தெரிந்தன. கரையை வந்தடைந்த அலை கருந்தாராக இருந்ததாகக் கேள்வி. ‘தலித்’ கமல் மிகவும் தெளிவான நீரில் மிதக்கிறார்.
பொழுது போக்கு அம்சம் நிறைய இருக்கிறது. பார்க்கலாம். வசூலைத் தவிர ‘சிவாஜி’ யோடு ஒப்பிட்டுப் பார்க்க….?
Chaos theory inapplicable – the movie is full of random events
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் ப...
-
இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை ...
-
திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ' கட்டாயம் பார்க்கவும்' குறிப்போடு வந்த இப் பதிவைத் த...
2 கருத்துகள்:
உங்கள் பதிவில் உள்ள படம் கடல் கோள் அல்ல
அது புயல்
http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_4102.html
நன்றி புருனோ. என் வலைப்பதிவு வாசிப்பிற்கு.
உங்கள் பதிவிலும் இதே படத்தைப் பார்க்க முடிந்தது. ரசனையில் இசைவு பற்றி மகிழ்ச்சி.
இருப்பினும் இப் படம் புயலைக் குறிப்பதான உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. இப் படம் கூகிள் படப் பதிவுக் களஞ்சியத்தில் இருக்கிறது. சான்றுக்கு அதன் கீழ் தரப்பட்ட விவரணையை இங்கு ஒட்டியிருக்கிறேன்.
1/2 a second before tsunami
The last picture! There are people who believe in God, there are others who don't believe, but we must understand that we are small when nature hits...
This picture was taken on the banks of Sumatra Island (the height of waves was of approx. 32 m = 105 ft). It was found saved in a digital camera, 1 1/2 years after the disaster.
We cannot know for sure, but very likely the one who took the picture is not alive any more (it was just a matter of seconds). Today we can see the last image he/ she saw before ending life on Earth!
கருத்துரையிடுக