ஞாயிறு, 6 மே, 2007

பிசத்த்ப் போவது யார்?

பிசத்தப் போவது யார்?

மூன்றாவது தடவையாக விடுதலைப்புலிகளின் வான்படையினர் சிறீலங்காவின் இராணுவ இலக்குகளின்மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்பியிருக்கின்றனர்.

முதலாவது தடவையாக வான் தாக்குதல் நடத்தப்பட்டபோது அதன் எதிர்வினைகள் பல முகாம்களிலிருந்தும் பல வடிவங்களிலும் வந்திருந்தன. புலிகளை விமர்சிப்பவர்களால் அது பூச்சாண்டியெனவும் ஆதரவாளர்களால் அது போராட்டத்தின் புதிய பரிமாணம் எனவும் கருத்துரைக்கப்பட்டது.
மூன்று தடவைகள் அதுவும் வெற்றிகரமாகப் புலிகள் எதிரியின் அதிபாதுகாப்புக் களங்களுக்கு இலகுவாகச் சென்று காரியங்களைக் கச்சிதமாக முடித்துவிட்டுத் திரும்பியிருப்பது நி;ச்சயம் பூச்சாண்டி ரகத்தில் பொருந்தாது.

கட்டுநாயக்கா வான்படைத் தளம், பலாலி கூட்டுப்படைத் தளம், கொலன்னாவ எரிபொருட் களஞ்சியம் என்று எல்லாமே ஒரு வகையில் இராணுவ இலக்குகள்தான். இந்த மூன்று தாக்குதல்களின்போதும் பொது மக்களின் உயிர்களோ உடமைகளோ தாக்கப்படவில்லை. இதிலிருந்து பல விடயங்கள் உய்த்துணரப்படலாம்.

முதலாவதாக, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வதுபோல புலிகளின் போராட்டத்தில் இது ஒரு நிச்சயமான பரிணாம வளர்ச்சியேதான். பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் புலிகள் சர்வதேசங்களின் தரங்களுக்கு அல்லது அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டனர். சிறார்களைப் படையில் சேர்த்தல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களில் புலிகளின் மீது சர்வதேசங்கள் முன்வைத்த அழுத்தங்களைப் புலிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தங்கள் களநிலவரங்களுக்கேற்ப அமைப்பின் நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினர். போராட்ட இயக்கமாக இருந்தபோது எந்த ஒரு வெளிநாட்டினதும் அறிவுறுத்தலை அவர்கள் ஏற்றுக் கொணடதில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செய்துகொண்டதற்குப் பின்னர் சர்வதேசங்களினதும் அவைசார்ந்த அமைப்புகக்களினதும் பரிந்துரைகளை அவர்கள் பரிசீலனை செய்ததன் காரணம் தாம் இப்போது போராட்ட அமைப்பில்லை மாறாக தாம் ஒரு நாட்டை ஆள்கிறோம் என்ற நினைப்பில்தான். சர்வதேசங்கள் சில பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதுவும் ஒருவகையில் ஒரு நாட்டிற்கு விடப்படுகின்ற வேண்டுகோள்களெனவே பார்க்கப்பட்டது.
எனவே, சர்வதேசங்களின் வேண்டுகோள்களோ, கட்டளைகளோ, பரிந்துரைகளோ எதுவாகவிருந்தாலும் அதை முன்வைப்பதும் அதைப் பரிசீலிப்பதும், நடைமுறைப்படுத்துவதும்கூட ஒருவகையில் தேசமொன்றைச் சர்வதேசங்கள் அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளே. அந்த வகையில் புலிகள் நிச்சயம் மாறியிருக்கிறார்கள். அது ஒரு படிமுறை வளர்ச்சி.

இரண்டாவதாக, புலிகளின் இவ்வான் தாக்குதல்கள் அவர்களது பலத்தை எடுத்துக்காட்டியது மட்டுமல்ல இலங்கை ஆட்சியாளரினதும், இராணுவத்தினதும் பலவீனங்களை மிகவும் துலாம்பரமாக தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேசங்களுக்கும் எடுத்துக் காட்டியிருக்கிறது. 13000 கோடி ரூபாக்களை ஒதுக்கி நாட்டின் வரவு செலவில் பெரும்பகுதியைப் போருக்காகச் செலவு செய்து கொண்டு மேலும் மேலும் அபிவிருத்திக்கென உலக நாடுகளிடம் கையேந்திப் பெறும் பணத்தை வாரியிறைத்து உலகின் அதி பெரிய அமைச்சரவையைக் கொண்ட ஆட்சியினாலேயே சிறிய ரக விமானங்களாலான விமானப்படையைக் கண்டுகொள்ள முடியாமற் போனது, அதுவும் மூன்று தடவைகள், வெட்கப்படும் விடயம். சர்வதேசங்களின் முற்றங்களில் இலங்கை ஆட்சியாளர் அவமானப்பட்டுப் போயிருக்கின்றனர்.
மூன்றாவதாக, சமீப காலங்களில் சிறீலங்காவின் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தன்னைச்சுற்றி உருவாக்கிய ‘கைமுனு’ பிம்பம், தானே சிங்கள இனத்தைக் காப்பாற்றப் பிறந்த ஒரே தலைவர் என்று தன்னைச்சுற்றி அவர் உருவாக்கிய செயற்கை ஒளிவட்டம் எல்லாமே கண் முன்னால் தகர்க்கப்படும் நிலைமை. தனது பரிவாரங்களின் பரப்புரைகளில் தானே மயங்கி புது வருடத்தில் கிழக்கையும் அதன் பிறகு மூன்று வருடங்களுக்குள் வடக்கையும் பிடித்து புலிகளைக் கொன்றொழித்து விடுவதாக அவர் செய்த சவால்கள் எதுவுமே நிறைவேறாமற் போகும் நிலைமை. தென்னிலங்கை மக்களால் விரைவிலேயே தூக்கியெறியப்படும் அபாயம் என்று பலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாபம் மஹிந்தவுக்கு.

இவற்றுக்கு அப்பால் பல இராணுவ மேதைகளே ஆச்சரியப்படுமளவுக்கு உலக நாடுகளால் அதி சிறந்த திட்டமிடலாளர் (the best strategist) என்று வர்ணிக்கப்படும் புலிகளின் தலைவர் பேச்சிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது செயலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே புலிகளின் இன்றய விமானப்படை. மாறாக தென்னிலங்கை அரசியல்வாதிகளுஞ்சரி இராணுவ அதிகாரிகளுஞ்சரி செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட பேச்சுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் வடிவமே பலம் குன்றிப் போயிருக்கும் அவர்களது மொத்த இராணுவம்.

புலிகள் சமீப காலங்களில் பல களங்களிலிருந்து பின்வாங்கியபோது அதை அவர்களது பலவீனமாக அரசும் அதன் சாதனங்களும் நம்பித் தென்னிலங்கை மக்களைத் தமது பரப்புரைகளால் வென்றெடுத்திருந்தனர். அதே வேளை புலிகளும் தம்மிடமிருக்கும் நவீன ஆயுதங்கள் எதையும் பாவிக்காது பலவிடங்களில் தாம் பலவீனப்பட்டுவிட்டோம் என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டைத் தமிழ் மக்களிடமும் பரவ விட்டிருந்தார்கள். ‘ஏன் இன்னும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திருப்பித் தாக்குவதற்கு முடியவில்லைப் போலிருக்கிறது’ என்று மக்கள் நம்புமளவுக்கு காரியங்கள் நடைபெற்றன. இவையெல்லாமே வியூக மாற்றத்தின் போதான நடவடிக்கைகள் என்பதை இப்போது புலிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
புலிகளின் முதலாவது விமானப்படையின் தாக்குதலின் பின்னர் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனாலும் அதன் பின்னரே பலாலி கூட்டுப்படைத் தலைமையகமும், இப்போது கொழும்பு தலைநகர் மற்றும் சுற்றுப்புறங்களும் தாக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு எந்தவகையிலும் அதிகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதமான ரேடார்களோ, விமான எதிர்ப்புச் சாதனங்களோ வான் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படவில்லை. நகரம் இரண்டு தடவைகள் விமானத் தாக்குதலைச் சந்தித்திருந்தும் இரண்டு தடவைகளிலும் மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தும் பிரத்தியேக ஜெனறேட்டர்கள் தாராளமாகப் பாவனையிலிருந்தன என்கிறார்கள். மேற்கு நாடுகளிற் கையாளப்படும் போர்க்கால ட்றில்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பின் இந்த மாதிரியான விடயங்கள் அறியப்பட்டு தவிர்க்கப்பட்டிருக்கும். அது நடைபெறவில்லை.

மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்ட பி;ன்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அமெரிக்கா இந்தியா Nபுhன்ற நாடுகள் வலியுறுத்தியிருந்தன. நவீன ஆயுதங்களை மிகவும் மலிவாகத் (இலவசமாக?) தருவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் முண்டியடித்துக் கொண்டு வந்தன. கட்டுநாயக்காவில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடார் சரியாகத் தொழிற்படவில்லை என்ற குற்றச்சாட்டை அரசு முன் வைத்தாலும். அது இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை பின்னர் ரணில் விக்கிரமசிங்கவினால் தரப்பட்டது. சிறீலங்காவிடம் தற்போதுள்ள விமானங்கள் இரவு நேரப் பறப்புக்களைச் செய்யவல்ல பார்வைக் கருவிகள் பொருத்தப்படாததால் அவற்றினால் புலிகளின் வான்கலங்களை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறது. விண்ணிலிருந்து விண் தாக்கும் வல்லமையுள்ள விமானங்கள் அரசிடம் இல்லை. நிலத்திலிருந்து விண்ணைத் தாக்கும் பீரங்கிகள் குறிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிலைகொண்டுள்ளன. அவையும் இயங்கு நிலையில் வைக்கப்படவில்லை எனவும் வதந்திகள் கிடைத்தன. இப்படியான பல விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்தனர் என்பது மட்டுமல்ல படையினரின் அசமந்தப் போக்கு, உஷார் இல்லாமை போன்ற விடயங்களைப் புலிகள் அறிந்து வைத்திருந்ததுடன் சரியான தருணங்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தும் விவேகத்தையும் அவர்கள் கொண்டிருப்பதே தொடரும் அவர்களது வான்படை வெற்றிகளுக்குக் காரணம். அத்தோடு அதி நவீன பாதுகாப்பு, போர்ச் சாதனங்களைப் பற்றிய அறிவும் அதை எங்கிருந்தும் பெற்றுக் கொண்டு சுய பயிற்சிகளின் மூலம் அவற்றை வெற்றிகரமாகக் கையாளப் பழகிக் கொள்வதும் புலிகளின் சிறப்புப் பண்பு. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளின் அலுவலகத்துக்குச் சென்ற ஒரு ஊடகவியலாளர் கூறிய கூற்று. நவீன போர்க கருவிகளின் சந்தை வருகை பற்றியும், மற்றும் உலக இராணுவங்கள் பற்றிய சமகால ஆய்வுகள் பற்றியும் விபரங்களைத் தரும் ‘ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி’ (Jane's Defence Weekly) என்ற வாராந்தர சஞ்சிகையின் பல பிரதிகள் புலிகளின் அலுவலகத்தில் பெருந்தொகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்று அந்த ஊடகவியலாளர் எழுதியிருந்தார்.

அதே வேளை உலகில் நடைபெறும் பெரும்பாலான போராட்டங்கள் பற்றியும் உலகப் போர்கள் நடாத்தப்பட்ட முறைகள் பற்றியும் தலைவர் பிரபாகரன் பல நூல்களையும் வீடியோக்களையும் தருவித்து அறிந்துகொள்பவர் என்கின்ற கருத்து பொதுவாகவே உண்டு. அத்தோடு சாண்டில்யனின் கடற்புறா போன்ற நூல்களிலிருந்து பெறப்பட்ட சில போர்த்தந்திரங்கள் புலிகளின் பல போர்களில் பிரயோகிக்கப்பட்டது. ஆனையிறவு தரையிறக்கத்தின் காலத் தெரிவின் பின்னணியில் சாண்டில்யனின் கடற்புறா இருந்திருக்கிறது.
தற்போதய வான்படையின் உருவாக்கத்தின் பின்னணியிலும் பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. வான் கலங்களை இறக்குமதி செய்தது முதல் அவற்றின் ஓட்டிகளைப் பயிற்றுவித்தது வரை பல ஆச்சரியமான விடயங்கள் புலிகளிடமுண்டு. புலிகள் நவீன கருவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதோடு இருந்துவிடுவதில்லை. அக்கருவிகளைத் தமது கள நிலைகளுக்கேற்ப மாற்றியமைப்பது முதல் அவற்றின் திறன்களை அதிகரிக்கச் செய்வதுவரை பல தொழில் நுட்ப சாதனைகளை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். (சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இரவுப் பார்வைக் கருவிகளை வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றத்தில் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.) இக்கருவிகளைக் கொண்டே இரவுநேரப் பறப்பு மேற்கொள்ளப்படுகிறது. புலிகளின் வான் கலங்களிற் பெரும்பாலானவை உள்நாட்டு உற்பத்தியாகவிருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு நாடுகளில் சாதாரண சிறியரக மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைப் பாவித்து பொழுபோக்கு பறப்புக்கான சாதனங்களை உருவாக்குவது வழக்கம். அதே போன்று இயக்கங்கள் ஆரம்பித்த காலத்தில் வெளி நாடுகளில் தங்கியிராத சுதந்திரப் போராட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற கொள்கையோடு பல இயங்கின. புலிகள் இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

தற்போதய நிலையில் இலங்கை அரசுக்கு பல வழிகளிலும் பண உதவியும், ஆயுத உதவியும், ஆளுதவியும் தரப் பலநாடுகளும் முன்வருகின்றன. ஆனால் புலிகளுக்கு இப்படியான உதவிசெய்வதற்காக விரும்பனாலும் செய்ய முடியாத நிலைக்கு பல நாடுகள் தளள்ப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் நியாமான பல போராட்டங்கள் முடக்கப்பட்டு விட்டன. இவற்றின் பெரும்பாலான அழிவுக்குக் காரணம் அவை வேறு நாடுகளின் தயவில் வாழ்ந்தமையே. அந்த வகையில் புலிகள் தமது போராட்டத்தைத் தமது கள நிலவரங்களுக்கேற்ப சுதேச வளங்களுக்கு இசைவாக்கப்பட்ட வகையில் வடிவமைத்துக் கொள்கிறார்கள். பல மாற்று வழிகளையும் உத்திகளையும் கண்டுபிடிப்பதன் மூலம் (inழெஎயவiஎந) தமது போரியல், வாழ்வியல் முறைகளை உள்ளுர்க்களநிலைகளுக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். கடற்புறா, பொன்னியின் செல்வன் போன்ற நூல்களின் பங்கும் இவற்றுக்குத் துணைபோயிருக்கிறது என்பதே புலிகளின் சுயநம்பிக்கையின் எடுத்துக்காட்டு.

அதே வேளை புலிகள் பல நாடுகளால் ‘புறக்கணிக்கப்’ படுவதற்கும் அவர்களது சுதேசிய மனப்பான்மையே காரணம். உலகில் நடைபெற்ற பல (சுதந்திரப்) போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமைக்கும் வெற்றிகளற்று முடித்து வைக்கப் பட்டமைக்கும் வெளி நாடுகளே காரணம். தமது நோக்கம் நிறைவேறும் வரைக்குமே அவர்களது உதவி நிலைத்திருக்கும். வெற்றிகரமான தீர்வுக்கு உதாரணமான தென்னாபிரிக்காவின் சுதந்திரம் ஒரு உள்நாட்டு உற்பத்தி. துணிச்சலான தலைமைக்கு அது ஒரு எடுத்துக்காட்டு. இந்த உண்மையை முற்றாக உணர்ந்து புலிகள் ஆரம்பத்திலிருந்தே தமது போராட்டத்தைத் தாமே வடிவமைத்து, நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். முற்று முழுதாக ஈழத் தமிழர்களை மட்டுமே நம்பி இப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. வெளிநாடுகளின் பார்வையில் நிலை குத்தி நின்று கொண்டிருக்கும் ஈழ தேசத்தின் வளங்களைத் தாரை வார்த்துக் கொடுக்க புலிகள் தயாரானால் நாளையே ஈழம் பெற்றுக் கொடுக்கப்படும். இன்றய புலிகளின் தலைமையில் அது நடக்காது. அதுவே புலிகள் இன்று தனிமைப் படுத்தப்பட்டமைக்குக் காரணம். அதுவே அவர்களது வெற்றியும் தோல்வியும்.
ஈழ தேசம் உருவாகுவதானால் அதற்கு இந்திய அங்கீகாரம் வேண்டும். காரணம் அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் ஈழத்திற்குப் பாதுகாப்புத் தரவேண்டியதுமல்ல. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்னுமொரு வல்லரசு நுழைவதற்கு ஈழம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே. ஈழ தேசம் தன் மக்களைத் தானே பார்த்துக்கொள்ளும். பிராந்தியத்தைப் பாதுகாப்பதே இந்தியாவின் தேவை. ஈழத்தால் இந்தியாவுக்கோ அல்லது பிரிந்து போன பின்னர் சிறீலங்காவிற்கோ அல்லது வேறெந்த நாடுகளுக்கோ ஆபத்து ஏற்படுமென்று யாராவது கூறின் அது முட்டாளின் கூற்றாகவே இருக்கும். சிங்கப்பூரைப் போல அயல் நாடுகளோடு ஒற்றுமையாக இருக்கும் ஒரு நாடாகNவு ஈழம் இருக்கும்.

எனவே இனிவரும் வாரங்கள், மாதங்கள் ஒரு தீர்வுக்கான இறுதிப் போராட்டத்தைக் காணும் காலங்களாகவே அமையும். போராட்டம் நாடெங்கும் விரிவுபடுத்தப்படும். அது சிங்கள மக்கள் மீதான நேரடியான தாக்குதலாக இருக்காது. அரசியல், பொருளாதார, இராணுவ இலக்குகளையே குறி வைத்து புலிகள் போராட்டத்தைத் தொடர்வார்கள். ஆனால் கிழக்கில் நிலைமை வேறுவிதமானதாக அமையலாம். பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக அமையலாம். புலிகள் அதற்குக் காரணமாக இருக்க மாட்டார்கள்.

இதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை தென்னிலங்கை மக்களிடம்; மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளை நிதானமாகச் சிந்திக்க வைக்குமளவுக்கு சிங்கள மக்களிடமிருந்து போதுமான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும ஆனால் அரசியல்வாதிகளை ஊக்குவிப்பது போலவே அவர்கள்; செயற்படுகிறார்கள். இன்றுவரை எந்தவொரு அரசியற் தீர்வுக்காகவும் நம்பிக்கை வைத்து உழைக்காதவர் என்ற வகையில் மஹிந்தவிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அதற்கு மாற்றீடான ரணில் அரசு நாட்டையே அடகு வைத்து விடும். அது வரையில் இந்தியாவினால் அனுராதபுரத்தில் பூசைபோட்டு ஆரம்பித்து வைத்த இரத்தக் களரி தொடரவே செய்யும். துணிச்சலான ஒரு னந ஊடநசம தென்னிலங்கையில் உருவாகும் வரை.
இதற்கு ஒரே முடிவு ஈழம் தான். அது சிசேரியனா அல்லது இயற்கைப் பிறப்பா என்பது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது.

அது வரையில் (அடுத்ததாகப்) ‘பிசத்தப் போவது யார்?’

(எனது இக் கட்டுரை மே மாத 'தாய் வீடு' பத்திரிகையில் பிரசுரமானது)

கருத்துகள் இல்லை: