
கவிஞர் சு.வில்வரத்தினம்
நினைவுரை மார்கழி 23, 2006 ரொறொண்டோ, கனடா
நான் அமரர் சு.வில்வரெத்தினத்தைச் சந்தித்தபோது அவருக்கு 10 அல்லது 11 வயதிருக்கலாம். வில்வன் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். மிக நன்றாகப் பாடுவார். ஒரு தடவை அந்நாள் தீவுப்பகுதி தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.ஏ .கந்தையா அவர்கள் புங்குடுதீவு சந்தையடியில் (இதுவே எங்களூரின் வர்த்தக மையம்) இருந்த சு.வி. யின் தந்தையார் சுப்பிரமணியத்தின் கடைக்கு (சு.வி.யின் குடும்பம் அப்போது தீவிர தமிழரசு ஆதரவாளர்) வருகை தந்திருந்த போது அந்த பா.உ. வின் வேண்டுகோளுக்கிணங்கி சு.வி. ஒரு தமிழுணர்வுப் பாடலைப் பாடினார். பாடி முடிந்ததும் திரு கந்தையா அவர்கள் ஒரு பண நோட்டை வில்வனின் கைகளில் திணித்தார். பின்னர் தான் எனக்குத் தெரிந்தது புங்குடுதீவுக்கு வரும் போதெல்லாம் அவர் வில்வனின் பாட் டைக் கேட்பதற்காக அவரது தந்தையாரின் கடையில் தரித்துச் செல்வது வழக்கம் என்று.
நேற்று முன்தினம் கவிஞர் சேரன் அழைத்து சு.வி. யின் பாடல்களை இன்றய தினத்தில் ஒலிபரப்பினால் நன்று என்று கூறினார். என்னிடம் அவரது பாடல்கள் எதுவுமே இருக்கவில்லை. இருப்பினும் அவர் கவிதைகளைப் பாட இங்கு பலர் இருக்கிறார்கள்.
ஒரு பாடகனாக நான் அறிந்த வில்வனைப் பின்னர் உலகப் புகழ் பெற்ற கவிஞனாக நான் அறிந்தது கனடா வந்த பிறகுதான். அது எனது இருண்ட காலம். அவருடைய மருமகன் ஒருநாள் எதேச்சையாக எனக்குத் தந்த கவிதைத் தொகுப்பை வாசித்த பிறகே வில்வனது மற்றய நூல்களை நான் வாங்கிப் படித்தேன்.
இப்படியான கவிஞன் ஒருவன் எம்மத்தியில் வாழ்ந்தான். அவனை நீண்ட காலம் வாழ வைக்க எம்மால் முடியாமற் போனது நாம் செய்த துர்ப்பாக்கியமே.
சந்தையடி மணியத்தின் பெடியன் சண்டியனாகவே வளர்ந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே எனக்கு அப்போதிருந்தது. மணியத்தார் குடும்பம் அரசியல், சமூக ஈடுபாடுடையவர்கள். சண்டை என்று வந்தால் வில்வனின் அண்ணன்மார் திருநாவுக்கரசு, கருணாகரன், கோபாலபிள்ளை மற்றும் தியாகராஜா ஆகியோர் சளைத்தவர்களும் அல்ல. இந்தப் பின்னணியில்தான் வில்வனை நான் ஒரு கவிஞனாகப் பார்க்க முடியவில்லை, ஒரு சண்டியனாகவே வந்திருப்பார் எனவே எதிர்பார்த்தேன்.
இங்கு தான் ஒரு குருவின் மகா சக்தி புலப்படுகிறது. புங்குடுதீவில் வில்வன் வாழுங் காலத்தில் அங்கு அவரது ஆசிரியரும் வழிகாட்டியுமான அமரர் மு. தளையசிங்கம் வாழ்ந்தார். வில்வன் என்ற உன்னத கவிஞனைச் செதுக்கித் தந்தது அமரர் தளையசிங்கத்தின் உறவே.
"எனக்குரிய பார்வை வெளிச்சம் என்பது அவரின் (அமரர் தளையசிங்கத்தின்)அறிவாற்றலாலும் அர்ப்பணிப்பு நிறைந்த உதாரண வாழ்வாற்றலாலும் துண்டப் பெற்றது. ஆத்மீகம், கலை, இலக்கியம், சமூகப் பணி என்று பன்முகப்பட்ட அவரது ஈடுபாடு என்னிலும் சுவறியுள்ளதெனின் அவர் மீதென் கடப்பாடு மிகவும் பெரியது" என்று மு.த. பற்றி சு.வி. தனது 'உயிர்த்தெழும் காலத்திற்காக' என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
சு.வில்வரத்தினம் என்ற மகத்தான கவிஞனின் உருவாக்கத்தில் மு.த. வைப் போலவே அவருடைய சகோதரரும் இலக்கியவாதியுமான மு.பொன்னம்பலமும் பணியாற்றியிருக்கிறார். பல வாசிப்புத் தளங்களை சு.வி. முன் விரித்து வைத்த பொறுப்பு மு. பொ . வினுடையது. இவர்களுடன், இங்கிருக்கும் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் போன்ற பலரும் புங்குடுதீவில் முதல் முறையாக ஆத்மீக அத்திவாரத்தில் உருவான சமூகப் பணிகளை செய்தவர்கள். உணர்ச்சி வசப்பட்ட கோஷ அரசியலை ஒதுக்கி சத்தியத்தின் மீதான சமூகத்தை உருவாக்க அரும்பாடு பட்டவர்கள். பண்படுத்தப்படாத எங்கள் நிலத்தில் சத்தியம் என்றோரு புதிய விதையை விதைத்தவர்கள். இந்த விதையை முளைக்கச் செய்யம் முயற்சியில் இந்த நிலம் மு.த ., சு.வி. போன்றவர்களைப் பெருமளவில் காயப்படுத்தியது. இந்த சத்திய விதையின் சரியான அறுவடை இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை. அது இன்னும் உறங்கு நிலையில்தான் இருக்கிறது. ஒருநாள் முளைத்து விருட்ஷமாகும் என்ற நம்பிக்கை இன்னும் தளர்ந்து போகவில்லை. அந்த உயிர்த்தெழும் காலத்துக்காக எங்கள் கவிஞன் உரம் போட்டுப் போயிருக்கிறான்.
சு.வி. யின் கவிதைகளில் எதை எடுத்தாலும் அதை மீட்டு மீட்டு உரத்துச் சொல்ல வேண்டுமென்றே தோன்றும். போர்க்கால அவலங்களை அவர் உயிரோவியங்களாக்கி எங்களுக்குத் தந்திருக்கிறார். குறிப்பாக என் போன்றவர்களுக்கு, கந்தகக் காற்றைச் சுவாசித்திருக்காத, நிணத்தின் மணத்தை அறிந்திருக்காத என் போன்றவர்களுக்கு, 'தொலைவில் மயான வெளியில் ஒற்றைப் பிணமென எரிந்து கொண்டிருந்தது எங்களூர்' என்ற அந்தப் படிமத்தை நாடிகளிற் செருகிவிட்டுச் சென்றிருக்கிறான் அந்தக் கவிஞன்.
'இனியும் எங்களாற் தாக்குப் பிடிக்க முடியாது
இரத்தத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை
வாசிப்பது பேரரசருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்குமானால்
இழுக்கற்றதாகக் கிடக்கட்டும் எங்கள் பிணங்கள்'
கவிஞனது பூடகம் புரிகிறது.
'தொழுகைக்குக் குனிந்த தலைகளை,
கூப்பிய கையோடு மன்றாடிகளை,
பூக்கலையாத கூந்தலுடைப் புனிதங்களை,
அவர்களுந்தான்
இவர்களுந்தான்
முடிவற்று வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள்,
கை சலிக்காமல்'.
மனிதம் இந்தக் கவிஞனைக் கை பிடித்து நடந்து வந்திருக்கிறது.
நம்பாதே வார்த்தைகளை முற்றாக,
வீரர்களுள்
மாற்றானின் படை வலியைச் சிதைத்தவர்கள் உள்ளார்கள்
அப்பாவி மக்களது சிரமரிந்து முலையரிந்து
குருதி முகம் நனைய இரவிரவாய் முகம் துடைத்து
வழி மாற்றி மொழி மாற்றி விழி மாற்றி
வெற்றியோடு மீண்டவரும் உள்ளார்கள்
வரலாற்றில் வீரர்கள் இல்லை!
இங்கு தான் எங்கள் சத்தியக் கவியின் கவி வாள் சுழல்கிறது. தன முன் நடை பெறும் அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு.
' ...ஏன் வந்தாய் என்கிறார்
அக்கிரமம் தலை தூக்கி
அன்பு தணிந்த காலத்தில்
பிறந்தவன் ஐயா, என்றேன்
கல்லாகிப் பொல்லாகி இரும்பாகிக்
கலிபர் ஐம்பதான காலத்தில் வாழ்ந்தவன் '
போர்க்கால அவலங்களை இவ்வளவு துல்லியமாகப் பதிய வேறு யாரிருந்தார் ஈழத்தில்?
முற்றத்து வேம்பின்
முறுகப் பிணைந்திருந்த வேர்கள்
மேலெழுத திரண்ட முடுக்கில் அமர்ந்தபடி
எடுத்து விடுகிறான் எந்தை ஒரு பாட்டு
முழு நிலாக் காய்ந்தபடி
நீள விரித்த களப்பாயில்
சூடடித்த நெல்லின்னும் தூற்றாமல்
காற்றெழட்டுமெனக் காத்திருந்த இடைவெளியே
பாட்டெழவும் அதை பண்ணோடு வாங்கியவர்
தம் பங்குக்கு வாய் திறந்து
கூட்டுக்களி\இசைக்கையிலே காற்று வரும் ...
(காற்று வழிக் கிராமம்)
எதை விட்டான் எம் கவிஞன். காற்றையும் கடைந்து கவி படைத்தான்.
'இயல்பாக நிகழ்தல் வேண்டும்
என் உதிர்வு
அந்தப் போதி மரத்தின் இலையை
ஏந்தி வந்து காற்று
புற்றரையில் மெத்தென்றிறக்கியது போல!
எதிர்பார்த்த படியா எல்லாம் நிகழ்கிறது?
கவிஞ, உன் இழப்பு எதிர்பார்த்தபடி நடக்கவில்லை ஆனால் நீ எழுதியபடி நடந்திருக்கிறது, உன் குருவைப் போலவே.
இருப்பினும்,
நீ நடந்த தடம் நிலைத்திருக்கும்
கந்தகத்தின் நெடியகலும் காலையொன்றில்
நீயிடட சத்திய விதை மெல்லக் கண் விழிக்கும்
அப்போதும் முற்றத்து வேம்பின்
முறுக்கிய வேர் முடுக்கில்
மைக்கோலும் காகிதமும் மனதுள் குதூகலமாய்
வேனிற் பொழுதை விபரிப்பான் உன் பேரன்-
சந்தை மணியத்தின் பூட்டன்
- சிவதாசன் மார்கழி 23, 2006